சிறுதானிய கேக்!
சிறுதானிய கேக்! க டையில் கிடைக்கும் கேக்குகளை விட சத்துக்கள் நிரம்பிய சிறுதானியத்தில் நமக்காக கேக்குகளைச் செய்து காட்டியிருக்கி...

கேக் க்ரீம் தயாரிக்க
50 கிராம் ஃப்ரெஷ் க்ரீம் (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) பவுடருக்கு 50 மில்லி ஐஸ் தண்ணீர் சேர்த்து, இருபது நிமிடங்களுக்கு அடித்து கெட்டியானவுடன் ஃபிரிட்ஜில் 6 மணி நேரத்துக்கு வைத்து தேவையானபோது எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த கேக் க்ரீம் தயாரிக்க முடியாதவர்கள் கடைகளில் ரெடிமேடாக விற்கும் வைப்பிங் (whiping) க்ரீமை வாங்கி வைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்து (50 கிராம்) இருபது நிமிடங்களுக்கு அடித்துக் கெட்டியாக்கி கேக்கின் மீது தடவி விடவும்.
குறிப்பு: கேக் செய்வதற்கு தேவையான ஸ்பூன், கப்புகள் எல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து கொண்டால் தண்ணீர், பால், என எல்லாவற்றையும் அளந்து எடுப்பது எளிது.
தினை மாவு - 35 கிராம் கோதுமை மாவு - 35 கிராம் உப்பில்லாத வெண்ணெய் - 30 கிராம் சர்க்கரை - 60 கிராம் பேக்கிங்பவுடர் - கால் டீஸ்பூன் உப்புத்தண்ணீர் - 1 டீஸ்பூன் (ஒரு டீஸ்பூன் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைக் கரைக்கவும்) எண்ணெய் - 1 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன் முட்டை - 1
தினையை 4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீர் இறுத்து வெயிலில் லேசாக உலர்த்தி எடுக்கவும். இதனை வாணலியில் சேர்த்து ஈரம் போக லேசாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இனி, தினைமாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்கு நன்றாகக் கலக்கவும். பிறகு முட்டை சேர்த்து ஹேண்ட் பீட்டரால் நன்கு அடிக்கவும். இத்துடன் உப்புத்தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி சலித்த மாவை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும் வரை கலக்கவும். பின்னர் வெனிலா மற்றும் பைனாப்பிள் எசன்ஸை இதனுடன் ஊற்றி விடவும். கலவை தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன், கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணைத் தடவி அதன் மேல் சிறிது கோதுமைமாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். அதன் மேல் கேக் மாவைக் சமமாக ஊற்ற வேண்டும். இதை குக்கரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் க்ரீம் தடவி அழகுபடுத்த வேண்டும்.
வரகரிசி மாவு - 150 கிராம்
கோதுமை மாவு - 150 கிராம்
வெண்ணெய் (உப்பு இல்லாதது) - 100 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
பால் - 200 மில்லி
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
ஃப்ரூட் மிக்ஸ்டு எசென்ஸ் - 1 டீஸ்பூன்
உலர்பழங்கள் - அரை கப் (திராட்சை, டூட்டி, அத்தி, பேரீச்சை)
முட்டை - 5
வரகரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இறுத்து வெயிலில் லேசாக உலர்த்தி எடுக்கவும். முழுவதும் காய்ந்து விடாமல் லேசாக ஈரப்பதம் இருக்கும்போதே எடுத்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் வரகரிசியை ஈரம் உலரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும். அதிகம் வறுத்து விடவேண்டாம். இதனை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்து வைக்கவும். இனி வரகு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடரை ஒன்றாகக் கலந்து நன்கு சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்கு நன்றாகக் கலக்கவும். பின் இதனுடன் முட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து ஊற்றி, நன்றாகப் பொங்கி வரும் வரை அடிக்கவும். இப்படிச் செய்யும்போது சர்க்கரை முழுவதும் கரையும். இத்துடன் பாலைச் சேர்த்து நன்றாகக் கலக்கி விட்டு சலித்து வைத்துள்ள மாவுகளை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இப்போது எசென்ஸை இதில் ஊற்றி, தனியாக வைத்து விடவும். ஒரு கிண்ணத்தில் உலர் பழங்கள், கால் ஸ்பூன் வெண்ணெய், ஒரு சிட்டிகை வரகரிசிமாவு போட்டு உலர்பழக் கலவையை ரெடி செய்து, அதில் பாதியளவு கேக் மாவுடன் கலந்து கலக்கிவிட்டு மீதியை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இவை எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன் கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். (பாத்திரத்தின் மீது எண்ணெய் மற்றும் கோதுமை சேர்ப்பதால், கேக் பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளாமல் அழகாக வந்து விடும்). இப்போது கேக் மாவு மிக்ஸை இந்தப் பாத்திரத்தில் கொட்டி மீதமுள்ள உலர்பழங்களை மேலே தூவிவிடவும். கேக் பாத்திரத்தை தரையில் லேசாக தட்டி, மாவின் அளவை ஒரே அளவில் இருக்குமாறு சமன்படுத்தி விடவும். இதை குக்கரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்தால், அசத்தலான சுவையுடன் வரகரிசி உலர்பழ கேக் தயார்.
மல்டிகிரைன் மாவு - 35 கிராம்
தினை, வரகு, குதிரைவாலி, சாமை கலந்தது)
கோதுமை மாவு- 30 கிராம்
வெண்ணெய் - 40 கிராம்
சர்க்கரை - 60 கிராம்
பேக்கிங்பவுடர் - கால் டீஸ்பூன்
பால் - 40 மில்லி
பிஸ்தா அல்லது பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் - அரை டீஸ்பூன்
முந்திரி மற்றும் பாதாம் - தேவையான அளவு
மிதமான சூட்டில் அடுப்பை வைத்து வெண்ணெயை ஒரு நிமிடத்துக்்கு மட்டும் உருக்கி எடுக்கவும். இதனுடன் பால் சேர்த்து, சூடு ஆறியவுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்றாகக் கலக்கவேண்டும் (வெண்ணெய் சூடாக இருக்கும்போது சர்க்கரையைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் சர்க்கரை கெட்டியாகி விடும்). இதனுடன் சலித்து வைத்துள்ள மல்டிகிரைன் மாவு , கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும்வரை கலக்கவும். இப்போது எசென்ஸை இதில் ஊற்றி விடவும். கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி பாத்திரம் முழுக்கப் பரவ விடவும். அதன் மேல் கேக் மாவைக் கொட்டவேண்டும். கேக் பாத்திரத்தை லேசாக தரையில் தட்டி சமன்படுத்தவேண்டும். இதை குக்கரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் முந்திரி பாதாம் பருப்புகளைத் தூவி அழகுபடுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு:
குக்கருக்கு பதிலாக கேக் செய்வதற்கு, ‘மைக்ரோ வேவ் அவன்’ பயன்படுத்துபவர்கள் அவனை 180 டிகிரியில் 25 நிமிடங்களுக்கு வைத்தும் கேக் தயரிக்கலாம்... சர்க்கரை சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் மாவாக்கப்பட்ட பனங்கற்கண்டையும் கூட பயன்படுத்தலாம்.
கேக் தயாரிக்க மைதாவை விட இந்தச் சிறுதானியங்களைப் பயன்படுத்துவதால் உடலில் அதிக கார்போ-ஹைட்ரேட் சேருவதைத் தவிர்க்கலாம். அத்துடன் இந்த சிறுதானிய கேக்குகள் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தும் நிறைந்தவை.
கேழ்வரகு மாவு - 35 கிராம்
கோதுமை மாவு- 35 கிராம்
வெண்ணெய் - 40 கிராம்
சர்க்கரை - 65 கிராம்
பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
கோக்கோபவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்புத் தண்ணீர் -ஒன்றேகால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒன்றேகால் டீஸ்பூன்
சாக்லெட் எசென்ஸ் - 1 டீஸ்பூன்
முட்டை - 1
சாக்லெட் துகள்கள் - தேவையான அளவு (பார் சாக்லெட்டை வாங்கி துருவி கொள்ளவும். உடைத்துக் கொள்ளவும்)
கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்துக் சலித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் தனியாக எடுத்து சிறிது நேரத்துக்்கு நன்றாகக் கலக்கவும். முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும். இதனுடன் உப்புத்தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்துக் கலக்கி உடன் சலித்த மாவுகளை ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பொங்கி வரும்வரை கலக்கவும். சாக்லெட் எசென்ஸை இதனுடன் ஊற்றி கலக்கி விடவும். இது எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன் கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி, பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும். அதன் மேல் கேக் மாவைக் கொட்டவும். கேக் பாத்திரத்தை லேசாக தரையில் தட்டி சமன்படுத்தவும். இதை குக்கரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து இறக்கி விடவும். கேக் ஆறியதும் நாம் ஏற்கெனவே ரெடி செய்து வைத்த க்ரீமை தடவி சாக்லெட் துகள்களைத் தூவி அழகுபடுத்தி பரிமாறவும்.
2 comments
இதில் சர்க்கரை என்பது சீனியா இல்லை நாட்டு சர்க்கரையா. நாட்டு சர்க்கரை சேர்க்கலாமா?
இதில் சர்க்கரை என்பது சீனியா இல்லை நாட்டு சர்க்கரை!
Post a Comment