சுட்டிகளைச் சுண்டியிழுக்க... சுவையான ரெசிப்பி!
குழந்தைகளைச்
சாப்பிடவைப்பது உலகின் கஷ்டமான விஷயங்களில் ஒன்று. 'என் குழந்தை சரியாவே
சாப்பிடவே மாட்டேங்குது’ என்பது உங்கள் ஆதங்கமா? கவலையை விடுங்கள்!
டயட்டீஷியன் அம்பிகா சேகர் சொல்லும் இந்த சமையல்களைச் செய்து அசத்துங்கள்.
கத்தரிக்காய் சப்ஜி
தேவையானவை:
கத்தரிக்காய் கால் கிலோ, பச்சைமிளகாய் 3, பூண்டு 10 பல், தக்காளி 2,
வெங்காயம் 1, , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கடுகு, சீரகம், பெருங்காயம் தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2.
செய்முறை: கத்தரிக்காய்,
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பூண்டுப்பல்லை
தோல் உரித்துக்கொள்ளவும். இவற்றை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். ஒரு
டீஸ்பூன் எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, எல்லாவற்றையும்
கல் சட்டியில் போட்டு, நன்றாகக் கடையவும்.
சூடான சாதத்தில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, பிசைந்து
குழந்தைகளுக்குத் தரலாம். இட்லி, சப்பாத்திக்குக்கூடத் தொட்டுச்
சாப்பிடலாம். கத்தரிக்காயில் செய்தது என்பதே தெரியாத அளவுக்குச் சுவையாக
இருக்கும்.
பலன்கள்: கத்தரிக்காயில்
ஊட்டச்சத்துப் பலன்களைவிட, மருத்துவப் பலன்களே அதிகம், புண்களை ஆற்றும்.
ரத்தத்தைச் சுத்திகரிக்கும். கத்தரிக்காயில் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது.
ஃபோலிக் ஆசிட், பாஸ்பரஸ், வைட்டமின் சி, தாது உப்புக்கள்
நிறைந்திருக்கின்றன.
==========================================================================
வாழைப்பூ பக்கோடா
தேவையானவை:
வாழைப்பூ, வெங்காயம் தலா 1, கடலைப்பருப்பு 50 கிராம் (ஊறவைக்கவும்),
பச்சரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பச்சைமிளகாய் 3,
கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி,
கறிவேப்பிலை தலா சிறிதளவு, எண்ணெய் 3 டீஸ்பூன்.
செய்முறை:
வாழைப்பூவை ஆய்ந்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் ஊறவைக்கவும்.
கடலைப்பருப்பை உப்புடன் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். இதில் வெங்காயம்,
இஞ்சி, பச்சைமிளகாய், கரம் மசாலாத்தூள், பச்சரிசி மாவு, பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பக்கோடா பதத்துக்கு வாழைப்பூவுடன்
சேர்த்துப் பிசையவும். குழிப்பணியாரக் கடாயில் எண்ணெய் விட்டு, சிறு சிறு
உருண்டைகளாகப் பொரித்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
பலன்கள்: வாழைப்பூ
நார்ச்சத்து நிறைந்தது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தும் உள்ளன. வளர்
இளம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.
வயிற்றில் இருக்கும் பூச்சியை அழிக்கும்.
===========================================================================
கொத்தவரங்காய் புட்டு
தேவையானவை:
கொத்தவரங்காய் கால் கிலோ, பொட்டுக்கடலை மாவு 50 கிராம், கடுகு, மிளகாய்்
தூள் தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: கொத்தவரங்காயைப்
பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு
தாளித்து, நறுக்கிய கொத்தவரங்காயைப் போட்டு லேசாக வதக்கி, பெருங்காயத்தூள்
சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதில், அரை கப் நீர் விட்டு உப்பு,
மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து மூடி போட்டு வேகவைக்கவும். 10
நிமிடங்கள் கழித்துத் தண்ணீர் வற்றியதும், கடலை மாவு தூவி நன்றாகச்
சிவக்கும் வரை கிளறி இறக்கவும்.
பலன்கள்:
கொத்தவரங்காயில் வைட்டமின் ஏ மற்றும் இரும்பு, கால்சியம் சத்து,
நார்ச்சத்து நிறைந்துள்ளன. அமினோ ஆசிட் நிறைவாக உள்ளதால் கொழுப்பைச்
சேரவிடாது. பொட்டுக் கடலை மாவு சேர்த்துச் செய்வதால் குழந்தைகளுக்குத்
தேவையான புரதச் சத்தும் கிடைக்கும்.
===========================================================================
கோவைக்காய் ஃப்ரிட்டர்ஸ்
தேவையானவை:
கோவைக்காய் கால் கிலோ, கடலைமாவு 50 கிராம், அரிசி மாவு 25 கிராம்,
மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், சீரகத்தூள் கால் டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு, எண்ணெய் 5 டீஸ்பூன்.
செய்முறை: கோவைக்காயை
நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் ஐந்து நிமிடங்கள்
வேகவைத்து ஆறவிடவும். கடலைமாவு, அரிசிமாவு, மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு
இவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெந்த கோவைக்காயை சேர்த்து நன்றாகப் பிரட்டி
சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். (ஃப்ரிட்ஜில் வைப்பதால் ஒன்றுடன்
ஒன்று ஒட்டாமல் மொறுமொறுப்பாக இருக்கும்). தயாரித்துவைத்துள்ள கோவைக்காயை,
நான்ஸ்டிக் கடாயில் பரப்பிச் சுற்றிலும் எண்ணெய் விட்டு சிறு தீயில் வைத்து
மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும். குழந்தைகள் ஃபிங்கர் சிப்ஸ் என்று
நினைத்துச் சாப்பிடுவார்கள்.
பலன்கள்: கோவைக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.
===========================================================================
பீரக்கங்காய் பஜ்ஜி
தேவையானவை: பீர்க்கங்காய் கால்
கிலோ, கடலைப் பருப்பு 100 கிராம், காய்ந்த மிளகாய் 5, சோம்பு ஒரு
டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, மஞ்சள்தூள் சிறிதளவு, எண்ணெய் 5
டீஸ்பூன்.
செய்முறை: பீர்க்கங்காயை
தோல் சீவி, வட்டமாக வெட்டிக்கொள்ளவும். கடலைப் பருப்பை 30 நிமிடங்கள்்
ஊறவைத்து மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதை, பஜ்ஜி
மாவை விடச் சற்று நீர்க்க கரைத்துக்கொள்ளவும். பீர்க்கங்காய் வில்லைகளைக்
கரைத்த மாவில் தோய்த்து நான்ஸ்டிக் தவாவில் இருபுறமும் திருப்பிப் போட்டு,
சுற்றி லேசாக எண்ணெய்விட்டுப் பொரித்து எடுக்கவும்.
பலன்கள்: பீர்க்கங்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி, தாது உப்புகள் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தது.
டிப்ஸ்: பருப்பை
வேகவைக்கும்போது பருப்புடன் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து
நன்றாகக் குழைய வேகவைத்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து
குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சுவை நன்றாக இருக்கும்.
Post a Comment