ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும்-13
பிரியமான பிரியாணி!
வீடு முழுவதும் மணக்கும் பிரியாணியின் வாசனையைப் பிடித்துக் கொண்டே உள்ளே வந்தாள் ஷைலு.
'என்ன பாட்டி இது..! பிரியாணியில், நட்சத்திரம் நட்சத்திரமா என்னமோ அழகா இருக்குது..?''
'இதுக்குப் பெயர் அன்னாசிப்பூ... இன்னொரு பெயர் தக்கோலம்.'
'அன்னாசிப்பழத்துல இருக்கிற பூவா இது?'
'இல்லை... அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்துல விளையும்
ஒருவித மணமூட்டி. அன்னாசிப்பூ வெறும் மசாலா மணத்துக்காக மட்டுமல்ல. உணவை
அழகுபடுத்துறதுக்கும், மருந்தாவும் பயன்படுது. வைரஸ் கிருமியை
அழிக்கக்கூடிய மருந்தான 'ஷிகிமிக் அமிலம்’ (Shikimic acid) இதில் இருக்கு.
சாதாரணக் காய்ச்சலில் தொடங்கி, பறவைக் காய்ச்சல் வரைக்கும் பல நோய்களைப்
போக்கக்கூடிய தன்மை இந்த அன்னாசிப்பூவுக்கு இருக்கிறதா சமீபத்துல
கண்டுபிடிச்சிருக்காங்க.'
'அடேங்கப்பா, மணம் வீசுற அன்னாசிப்பூவுக்குள்ள, ஆச்சர்யம் அன்லிமிட்டடா இருக்கே பாட்டி! '
'இதே பிரியாணியில் போடற, இன்னும் ரெண்டு வாசனைப் பொருள்
களும் கூட பிரமாதமான மருந்துகள்தான் தெரியுமோ? மசாலா
மணம் வீடெங்கும் வீசுதே... அதுக்குக் காரணமான பட்டையைத் தேநீரில் போட்டு,
மசாலா டீயாகக் குடிச்சிட்டு வந்தால் சர்க்கரையோட அளவுகூட கட்டுப்படும்.'
'இன்னொரு பொருள் என்ன பாட்டி?'
'பெருஞ்சீரகம்தான்...ஜீரணிக்கத் தாமதமாகும் எண்ணெய்
கொழுப்பு சேர்ந்த பிரியாணி மாதிரியான உணவில் அவசியம் இது இருக்கணும். இது
ஜீரணத்தைத் தூண்டவும், பித்தம் அதிகரிக்காமல் இருக்கவும் பயன்படுது.
'சரி... இப்ப தயாரிக்கிற பிரியாணியோட, பனீர் பட்டர் மசாலானு சேர்த்து சாப்பிடறாங்களே... அதெல்லாம் சாப்பிட்டால் வர்ற அஜீரணத்துக்கு என்ன செய்ய முடியும்?'
'நாக்கை யாராலடி கட்டுப்படுத்தமுடியும்? சாப்பிட்டு முடிச்சதும் கடைசியா, மோரில் கொஞ்சம் பெருங்
காயத்தூள் போட்டுக் குடிச்சாப் போதும்.'
'பெருங்காயமா? வாயே வாசம் வீசுமே பாட்டி?'

'ஆமாம்... அமெரிக்கர்கள் முதல்ல இந்த வாசனையை
முகர்ந்திட்டு, பிசாசு மலம்னு கூட நக்கலா பெயர் வைச்்சதா ஒரு வரலாற்றுச்
செய்தியே உண்டு. அதே அமெரிக்காவில், ஸ்பானிஷ் ஃப்ளூ வந்து லட்சக்கணக்கான
மக்கள் இறந்தப்ப, பெருங்காயம்தான் அந்தக் காய்ச்சலில் இருந்து பெருவாரியான
மக்களைக் காப்பாத்திச்சாம். ஒவ்வொரு அமெரிக்கனும், பெருங்காயத்தைத்
சின்னத் துண்டில் முடிஞ்சு, கழுத்துல சங்கிலி மாதிரி கட்டிட்டே
திரிஞ்சாங்களாம். அப்போ, பெருங்காயத்துக்கு அவங்க வைச்ச பெயர்

கடவுளின் மணம்.'
'அடடா! 'பெருங்காயத்துக்குப் பின்னாடி.. இத்தனை பெருங்கதையா?'
'மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம்,
சுக்கு, வெந்தயம்னு எட்டு வாசனைப் பொருட்களும் தினமும் உணவில் சேர்க்கப்பட
வேண்டிய பொருள்கள்னு நம்ம ஊர் சித்த மருத்துவம் சொல்லுது. திரிதோஷ
சமப்பொருள் என்கிற இந்த எட்டும் உணவில் இருந்தால் எந்த நோயும் எட்டிக்கூட
பார்க்காது.'
'பிரியாணியில நிறைய புதினா இலை போடுறோமே... அதுல என்ன ஸ்பெஷல்?'
'வயிற்றுப்புண், வாயுக் கோளாறு தீரவும் புதினா இலையோட
எண்ணெய் ரொம்ப நல்லது. புதினாவை ரொம்ப சூட்டில் வதக்கக் கூடாது. மருத்துவ
எண்ணெய் ஆவியாப் போயிடும். உணவு தயாரானதும், கிளறி இறக்குறப்போ புதினாவை
சேர்த்தால் போதும். புதினாவை அரைச்சு சட்னி, மோரில் இரண்டு புதினா இலை
போட்டு சாப்பிட்டாலும், அஜீரணக் கோளாறு இருக்காது. குடல்புண்ணும்
ஆறிடும்.'
'சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, மாரடைப்பு,
புற்றுநோய்னு நாள்பட்ட வாழ்வியல் நோய் எல்லாத்துக்கும், நம்ம ஊர்
நறுமணமூட்டிகள்தான் மருத்துவ உணவாக இருக்கு. சமீபத்திய ஆய்வுகள் இந்திய
நறுமணமூட்டிகளை, தலையில் வெச்சுக் கொண்டாடு்து. ஆடி, ஆவணி மாதத்தில்
மட்டும் கிடைக்கிற, ஆதொண்டை வற்றலை, மோர் சாதத்துக்குத் தொட்டுக்கலாம். அதே
மாதிரி மணத்தக்காளி வற்றல், பிரண்டை வற்றல்... இப்படி, எல்லாமே
பசியாற்றுவதைத் தவிர்த்து, ஜீீரணத்தைச் சரியாக்கவும், எதிர்ப்பாற்றலைக்
கூட்டவும், சுண்ணாம்புச் சத்துக்களைக் கொடுக்்கவும் உணவுகளா இருக்கு.'
'உணவுல... இவ்வளவு விஷயம் இருக்கே... இனிமே,
ஹோட்டலுக்கு அதிகமாப் போக மாட்டேன் பாட்டி... ஆரோக்கியம் என்றாலும்... அது
நம் ஊரைப் போல வருமா?''
''கமகம பிரியாணி ரெடி பண்ணிடறேன் கண்ணு!'
Post a Comment