அம்பேத்கர் மீது மோடிக்குப் புதுக்காதல் ஏன்?: கி.வீரமணி கேள்வி! இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!
சென்னை: அம்பேத்கர் மீது மோடிக்குப் புதுக்காதல் ஏன்? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ...

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேர்தல் நெருங்க நெருங்க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் வித்தைகள் புதுப்புது வகையாகக் காட்டப்படுகின்றன. ஏப்ரல் 14 என்றவுடன் முன்பு எப்போதும் இல்லாத அம்பேத்கர் 'பக்தி-அவர் மீது திடீர்க் காதல்' எல்லாம் வெள்ளமெனப் பெருகி ஓட ஆரம்பித்துவிட்டது! அம்பேத்கர் போன்றவர்களால் தான் தாம் இந்த அளவுக்கு-பிரதமர் வேட்பாளர் அளவுக்கு வந்துள்ளதாக மிகப்பெரிய பிரசார பலூனை-திட்டமிட்டே செய்துள்ளார் மோடி. தாழ்த்தப்பட்ட சமூகத்துச் சகோதர, சகோதரிகள் இந்த 'கண்ணிவெடி' பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; நிச்சயம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு-ஏமாறமாட்டார்கள். அண்ணல் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டத்தை பா.ஜ.க. தான் அளித்தது போலவும், ஒரு செய்தியை இரண்டு நாட்களுக்கு முன் மோடி கூறி, காங்கிரஸ் எதிர்ப்பைத் தம் பக்கம் திருப்பி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை மயக்கிட முயன்றுள்ளார்-உண்மை என்ன? 18 வயது நிறைந்த புதிய இளைஞர்களான வாக்காளர்கள்-வெறும் இணையதளம் அல்லது மோடி ஆதரவு தொலைக்காட்சிகள், ஊடகங்களான ஏடுகளை மட்டுமே பார்த்து முடிவு செய்ய முனைவர் என்பதால், உண்மைகளைக் கூறுதல் அவசர, அவசியமாகும்! பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம்பெற வைத்ததும், சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தான்! அது ஆர்.எஸ்.எஸ்.ஸோ அல்லது பா.ஜ.க.வோ முன்மொழிந்த செயல் அல்ல! அது முழுவதும் பிரதமர் வி.பி.சிங் 9 மாத ஆட்சியின் சாதனை! பா.ஜ.க. வெளியிலிருந்து ஆதரவு கொடுத்ததே என்று சிலர் கூறி, இந்த 'மோடி வித்தைக்கு' நியாயம் கற்பிக்க எண்ணலாம்! அம்பேத்கரின் உயிர்க்கொள்கையான சமூகநீதிக் கொடி பறக்கச் செய்த மண்டல் கமிஷனின் பரிந்துரையை வேலை வாய்ப்பில் முதல் கட்டமாக 16(4) அரசியல் சட்டப் பிரிவுப்படி - மத்திய அரசில் 1990ல் செயல்படுத்தியமைக்காகவே, அவரது அரசுக்குத் தந்த ஆதரவினை விலக்கிக் கொண்டு, 9 மாதங்களில் கவிழ்த்தவர்கள் இந்த மோடியின் கட்சி அல்லவா? 'மண்டலுக்கு எதிராக கமண்டல்' என்று பொருத்தமாக, வி.பி.சிங் அன்று கூறினாரே! மறந்துவிட்டதா? மண்டல் vs மந்திர் என்பதில் ராமன் கோவில் பிரச்னையைக் கிளப்பி, 1992ல் மண்டல் காற்றைத் தடுக்க நாட்டில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தி, வன்முறை வெறியாட்டம் நடைபெறத் தூண்டியவர்கள் யார்? பாபர் மசூதி இடிப்புக்காக ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. உள்பட சங் பரிவாரங்கள் தேர்வு செய்த நாள் எது தெரியுமா? 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களான இளைய நண்பர்களே, 1992 டிசம்பர் 6 ஆம் தேதி-அண்ணல் அம்பேத்கர் மறைந்த நாளே! நினைவு நாளையே திட்டமிட்டுத் தேர்வு செய்தவர்கள், இப்போது இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார்கள்! என்னே விந்தை! விசித்திரம்! அதுமட்டுமா? அம்பேத்கர் புத்தர்பற்றி எழுதிய புத்தகத்தைக்கூட வாங்காமல் அவரை அவமதித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்று கூறுகிறார். அந்த நூல் 'புத்தமும், தர்மமும்’ (Buddha & Dhamma) என்ற மிகப்பெரிய ஆய்வு நூல்; அவர் எழுதிய கடைசி நூலும் அதுதான்! முன்னுரை எழுதினார் முன் இரவில். விடியற்காலை அவர் இயற்கை எய்தினார் (டிசம்பர் 6, 1956). அவர் எழுதிய இந்த நூலின் முதற்பதிப்பு வெளிவந்ததே 1957ல்; அவரது கல்லூரியான பம்பாய், சித்தார்த்தா கல்லூரியின் வெளியீடாக வந்தது! மோடியின் கூற்றுக்கு ஆதாரம் காட்ட முடியுமா? இதேபோல்தான் அம்பேத்கரே ஆர்.எஸ்.எஸ்ஸைப் பாராட்டினார் என்று எங்கே, எந்தத் தேதியில், எந்த நிகழ்வில் பேசினார் என்று ஆதாரபூர்வமாகக் கூறாமல், பொத்தாம் பொதுவில் போகிற போக்கில் பேசுவது, எழுதுவது இந்த நவீன கோயபெல்சுகளின் நளினங்களில் ஒன்று! எனவே, பொய்த் திரகைளைக் கிழித்து, உண்மையை உணரத் தொடங்குங்கள்! இராமனையும், கிருஷ்ணனையும், இந்து மதச் சடங்குகளைவும் மறுத்து 21 உறுதிமொழிகளைக் கூறி, புத்தம் தழுவினார் நாகபுரியில் அம்பேத்கர். அவரையும், தேர்தல் துருப்புச் சீட்டாக்க முயற்சிக்கிறார் மோடி! எச்சரிக்கை! ஏமாறாதீர்கள்!!" என்று கூறியுள்ளார். Thanks to vikatan.com |
Post a Comment