''ஸ்ஸ்ஸ்...
அப்பாடா... என்னமா அடிக்குது வெயில்! இந்த வருஷம் ரொம்ப அதிகம்தான்.
சித்திரையிலேயே வெயில் இப்படிச் சுட்டெரிக்குதே!'' என்பது போன்ற வசனங்கள்
வீடுகள், அலுவலகங்கள், பேருந்து நிறுத்தங்கள் என எல்லா இடங்களிலும் கேட்கத்
தொடங்கிவிட்டன. இப்படி, வறுத்தெடுக்கும் வெயிலிலும், அலுத்துக்கொண்டே நம்
அன்றாட வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிடுகிறோம்.
ஆண்டுதோறும் கோடை வருவது வழக்கமானதுதான் என்றாலும், அதை
எதிர்கொள்ளவும் அதன் கடுமையிலிருந்து தப்பிக்கவும் சில, பல சிம்பிள்
வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் போதும்! எரிச்சல் எட்டடி தள்ளியே இருக்கும்.
உஷ்ணம் உபத்திரவம் பண்ணாது!
அந்த வழிமுறைகளில் மிகவும் முக்கியமானவை தண்ணீரும்
உணவும்தான்! தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவையே, கோடைக்கான சில
மாற்றங்களுடன் சாப்பிடும்போது, உடலுக்குக் குளிர்ச்சியும், ஆரோக்கியமும்
கிடைப்பதுடன், கோடையில் தாக்கும் சில நோய்களில் இருந்தும் நம்மைக்
காத்துக்கொள்ளலாம்.
தண்ணீர் குடிப்பதில் தொடங்கி, உண்ணும் உணவு வரை
அனைத்தையும், கோடைக்கேற்ற வகையில் நெறிப்படுத்தித் தந்திருக்கும் இந்த
இணைப்பிதழ், உஷ்ணத்தை விரட்டி, உடலைக் குளுமையாக வைத்திருக்க உதவும் என்பது
நிச்சயம்!
சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்
மீனா ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை சங்கரா கல்விக் குழுமத்தின், கேட்டரிங்
அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவர் எஸ். பெர்னார்ட் எட்வர்டு
ஆகியோர், சம்மர் ஸ்பெஷல் உணவு ரெசிப்பிக்களை இங்கே வழங்கியுள்ளனர்.
கொசுறாகச் சில குறிப்புகளையும் கொடுத்துள்ளார் மீனா.
இனி, 'ஜம்’மென்று கடக்கலாம் சம்மரை...!
தண்ணீர்ப்பந்தல் நீர் மோர்
தேவையானவை: தயிர்
- அரை கப், தண்ணீர் - 2 கப், துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய்
- 1, வறுத்துப் பொடித்த சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை,
பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய்,
கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயம் - ஒரு
சிட்டிகை.
செய்முறை: ஒரு
மண்பானையில், தயிர், தண்ணீர், உப்பு கலந்து நன்கு அடித்துக்கொள்ளவும்
(தயிருடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அடித்தும், பானையில்
ஊற்றலாம்). பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, மற்ற பொருள்களுடன் சேர்த்து
(தாளிதம் தவிர்த்து) மோரில் கலக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை,
பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
பலன்கள்: பானையில்
நீர் மோர் கலந்து ஊற்றி வைத்துவிட்டால், தாகம் எடுக்கும்போதெல்லாம்
தண்ணீருக்கு பதிலாக மோரை அருந்தலாம். உடல் சூட்டைக் குறைத்துக்
குளுமையாக்குவதுடன், செரிமானக் கோளாறு மற்றும் வயிற்றுப் பொருமலுக்கும்
நல்லது.
வாழைத்தண்டு ஜூஸ்
தேவையானவை: பொடியாக
நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், புளித்த மோர் - 2 கப், உப்பு -
சுவைக்கேற்ப, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள்தூள் - தலா ஒரு
சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
வாழைத்தண்டுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் அரைத்து வடிகட்டவும்.
இதனுடன் மோர், மிளகுத்தூள், பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து
நன்றாகக் கலக்கவும். கொத்துமல்லித் தழை சேர்த்து, குளிரவைத்துப்
பரிமாறவும்.
புதினா லஸ்ஸி
தேவையானவை: தயிர்
- ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - 2 டேபிள்ஸ்பூன், வறுத்த
சீரகம் - அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - அரை கப், ஐஸ்கட்டிகள் -
சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை: தயிரை
மிக்ஸி பிளெண்டரில் போட்டு, புதினா, ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்கு
அடிக்கவும். மேலும், இதில் தண்ணீர், உப்பு, சீரகம் சேர்த்து ஒரு சுற்றுச்
சுற்றி, 'ஜில்’ என்று பரிமாறவும்.
பலன்கள்: புதினா,
உடலுக்குப் புத்துணர்ச்சி தரும். வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு,
காபி, டீக்குப் பதிலாக இந்தப் புதினா லஸ்ஸியைக் குடிக்க கொடுக்கலாம்!
பானகம்
தேவையானவை: பொடித்த
வெல்லம் - அரை கப், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் -
3 கப், சுக்குப் பொடி - அரை டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை,
துளசி இலைகள் - 2.
செய்முறை: வெல்லத்தை
தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழச் சாறு, சுக்குப் பொடி,
ஏலக்காய்ப் பொடி எல்லாவற்றையும் நன்கு கலந்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
பலன்கள்: எளிமையான
இந்தப் பானம், தாகத்தைத் தணிக்கும். இயற்கையான சர்க்கரை நிறைந்திருக்கும்
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். சுத்திகரிக்கப்படாமல் இருப்பதால்,
வெல்லத்தில் இயற்கையான வைட்டமின்களும் தாதுக்களும் கூட உள்ளன.
எனவே, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
மிராக்கிள் டிரிங்க்
(ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ்)
தேவையானவை: ஆப்பிள், பீட்ரூட் - தலா 1, கேரட் - 2, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஆப்பிள்
மற்றும் காய்களைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் போட்டு,
சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, ஜூஸாகச் செய்துக்கொள்ளவும்.
எலுமிச்சம்பழச் சாறைச் சேர்க்கவும். விருப்பப்பட்டவர்கள், மிளகுத்தூள்
சேர்க்கலாம். நன்றாகக் கலந்து அருந்தவும்.
குறிப்பு: பீட்ரூட்டில் இயற்கைச் சர்க்கரைகள் நிறைந்திருப்பதால், சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.
பலன்கள்: குறிப்பிட்ட
இந்தப் பானத்தில் உயிரைக் காக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள்
நிறைந்திருப்பதுடன், வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின்
கே, பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், தாமிரம், மெக்னீஷியம் போன்ற
சத்துகள் அபரிமிதமாக உள்ளன. உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும், பார்வைக்
கூர்மைக்கும், எடையைக் குறைப்பதற்கும் இந்தப் பானம் உதவுகிறது. சளியால்
வரும் காய்ச்சல் மற்றும் தொண்டைத் தொற்றுக்கும் இந்தப் பானம் நல்லது.
தினமுமே, பெயருக்கு ஏற்ற இந்த அற்புத பானத்தைத் தொடர்ந்து அருந்தி வந்தால்,
ஆரோக்கியத்துக்கும் அருமையான காவலனாக இருக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ்
தேவையானவை: ஃப்ரெஷ் நெல்லிக்காய் - 4 அல்லது 5, தேன் - 3 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - அரை கப், ஃப்ரெஷ் புதினா இலைகள் - சிறிதளவு.
செய்முறை: நெல்லிக்காயைச்
சிறு துண்டுகளாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து,
வடிகட்டவும். இதில் தேன் சேர்த்துப் புதினா இலைகளுடன் பரிமாறவும்.
பலன்கள்:
ஊட்டச்சத்து மிகுந்த பானம் இது. வைட்டமின் சி நிறைந்தது. சிறுநீரகக்
கோளாறுகள், நீரிழிவு நோய், வயிற்றுப் புண், அசிடிட்டி, ஜலதோஷம், இருமல்
மற்றும் கண் பிரச்னைகளைத் தீர்க்க நெல்லிக்காய் உதவுகிறது. மனம் மற்றும்
உடல் பலவீனத்தைப் போக்குவதுடன் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் செய்கிறது.
தர்பூசணி சாலட்
தேவையானவை: விதை
நீக்கப்பட்டு, சதுரமாக நறுக்கப்பட்ட தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், பொடியாக
நறுக்கப்பட்ட புதினா இலைகள், எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
பாகு வைக்க: சர்க்கரை - அரை கப், தண்ணீர் - கால் கப்.
செய்முறை: தண்ணீரில்
சர்க்கரையைக் கரைத்து, அடுப்பில் வைத்து இளம் பாகு வைத்து இறக்கி,
ஆறவிடவும். இதில் புதினா இலைகளையும், எலுமிச்சம்பழச் சாறையும் கலந்து
வைக்கவும். சின்ன கிண்ணங்களில், தர்பூசணி சதுரங்களைப் போட்டு,
பரிமாறுவதற்கு முன்பு, எலுமிச்சை 'டிரெஸ்ஸிங்’-ஐ சேர்த்துப் பரிமாறவும்.
ஆம் கா பானா
(மசாலா மாங்காய் ஜூஸ்)
தேவையானவை: மாங்காய் - 1, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, குளிர்ந்த தண்ணீர் - இரண்டரை கப், புதினா இலைகள் - சிறிதளவு.
மசாலாத் தூளுக்கு: வறுத்த சீரகப் பொடி - 2 டீஸ்பூன், கருப்பு உப்பு - 2 டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன்.
செய்முறை:
மாங்காயை வேகவைத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் போட்டு கூழாக்கவும். ஒரு
ஜாடியில் மாங்காய் விழுதைப் போட்டு, மசாலாத் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு
கலக்கவும். இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மீண்டும் நன்கு கலந்து,
தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து, புதினா இலைகள் சேர்த்துப்
பரிமாறவும். வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பானம் இது.
சப்ஜா விதை ரோஸ் மில்க்
தேவையானவை: குளிரவைத்த
பால் - 2 கப், தரமான ஆர்கானிக் பன்னீர் - ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர்
பிங்க் (தேவைப்பட்டால்) - 1 அல்லது 2 துளிகள், பன்னீர் ரோஜா இதழ்கள் (நன்கு
கழுவியது) - சிறிதளவு, சப்ஜா விதைகள் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு
டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சப்ஜா
விதைகளை, கால் கப் தண்ணீரில் 10, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். விதைகள்
நன்றாக ஊறி, பெரியதாக உப்பியிருக்கும். சர்க்கரை, பால், பன்னீர்...
மூன்றையும் சேர்த்து நன்றாக அடித்துக் கலந்து வைக்கவும். (விருப்பப்பட்டால்
பிங்க் ஃபுட் கலர் ஓரிரு துளிகள் சேர்க்கலாம்). உயரமான கிளாஸ்களில் ரோஸ்
மில்க்கை ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மேலே சப்ஜா விதைகள் மற்றும் ரோஜா
இதழ்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.
பலன்கள்: டைப் 2
சர்க்கரை நோயில், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்,
சப்ஜா விதைகளுக்கு உண்டு. எப்போதும் எதையாவது கொரிப்பதைக்
கட்டுப்படுத்தும். நார்ச்சத்து நிறைந்த இந்த விதைகள், மனநிலையை
உற்சாகப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும்.
வெட்டிவேர் டிரிங்க்
தேவையானவை: வெட்டிவேர் - ஒரு சிறு கொத்து, தண்ணீர் - 4 டம்ளர், எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், தேன் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: 2
டம்ளர் தண்ணீரில், வெட்டிவேரைப் போட்டுக் கொதிக்கவைத்து, இறக்கி, அரை மணி
நேரம் வைத்திருக்கவும். பிறகு, வடிகட்டி, மீதம் இருக்கும் 2 டம்ளர்
தண்ணீர், பழச்சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். உயரமான கிளாஸ்களில்
ஊற்றிப் பரிமாறவும்.
பலன்கள்: வெட்டிவேருக்குத்
தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் திறன் உள்ளது என்றும், ஆன்ட்டிபயாடிக் போல
அது செயல்படுவதாகவும் அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு
தெரிவித்துள்ளது. மனதை அமைதிப்படுத்தக்கூடிய சக்தி வெட்டிவேருக்கு உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.
கசகசா அல்வா
தேவையானவை: கசகசா
- ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ -
சில இழைகள், ஜாதிக்காய் தூள் ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
கசகசாவை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்தெடுக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யைச் சுடவைக்கவும். அரைத்த விழுதை நெய்யுடன்
சேர்த்து, அதன் நிறம் மாறும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். சர்க்கரையைச்
சேர்த்து, மீதி இருக்கும் நெய்யையும் விட்டு, நன்றாகச் சுருண்டு வரும் வரை
கிளறவும். பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி, ஏலக்காய்,
ஜாதிக்காய்த் தூளைச் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
பலன்கள்: உடலைக் குளுமையாக்குவதில் கசகசா சிறந்தது. மனதை ஆசுவாசப்படுத்தும். வயிறு மற்றும் தொண்டைப் புண்களைக் குணமாக்கும்.
குறிப்பு: இந்த அல்வாவை 1 அல்லது 2 டீஸ்பூன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவல் பூசணிக்காய் சாலட்
தேவையானவை: அவல் -
ஒரு கப், துருவிய பூசணிக்காய் - அரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப்,
பச்சை மிளகாய் - 1, மாங்காய்த் துண்டுகள் - கால் கப், கொத்துமல்லித்தழை - 2
டேபிள்ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - ஒரு சிட்டிகை.
செய்முறை:
அவலைக் கழுவி, தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை
வடித்துவிட்டு ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும். பூசணிக்காய்த் துருவலைப்
பிழிந்து அவல், மற்ற பொருள்களையும் சேர்த்துக் கிளறவும். விருப்பப்பட்டால்,
வறுத்த முந்திரி, வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளை மேலே தூவி
அலங்கரிக்கலாம்.
பலன்கள்: மிகுந்த சத்தான ஸ்நாக்ஸ் இது. மிக எளிதாகச் செய்யக்கூடிய இந்த சாலட், வயிற்றுக்கு உகந்தது.
குகும்பர் லெமனேட்
தேவையானவை: சிறிய
வெள்ளரிக்காய் - 2, எலுமிச்சம்பழச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழத்
தோல் துருவல் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை/தேன் - முக்கால் கப், உப்பு - 3
அல்லது 4 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - சிறிதளவு.
செய்முறை: வெள்ளரிக்காயைக்
கழுவி, தோல் சீவி, பெரிய ஸ்லைஸ் ஒன்றை வெட்டித் தனியே வைக்கவும்
(அலங்கரிக்க). மீதியைத் துருவி சர்க்கரை சேர்த்து அரைத்து, வடிகட்டவும்.
இதனுடன், மீதி இருக்கும் தண்ணீரைச் சேர்த்து, ஐஸ் கட்டி, எலுமிச்சம்பழத்
தோல் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உயரமான கிளாஸில் ஊற்றி,
வெள்ளரிக்காய் ஸ்லைஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். சம்மருக்கு மிகச்
சிறந்த விருந்து!
பைனாப்பிள் ஆரஞ்சு ஸார்பெ
தேவையானவை: தண்ணீர்
- அரை கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரைக் கட்டிகள் -
அரை கப், நசுக்கிய அன்னாசித் துண்டுகள் - அரை கப், ஆரஞ்சுப் பழச்சாறு - 2
கப்.
செய்முறை:
தண்ணீரில் சர்க்கரையைக் கலந்து, அடுப்பில் வைத்துக் கரைய விடவும்.
அன்னாசிப் பழத்தைக் கூழாக்கி, அதனுடன் சர்க்கரைப் பாகு, எலுமிச்சம்பழச்
சாறு, ஆரஞ்சு சாறு எல்லாவற்றையும் கலந்து வைக்கவும். இந்தக் கலவையை
ஃப்ரீஸரில், பாதி அளவு திடமாகும் வரை (semi solid) வைத்திருக்கவும்.
மீண்டும், எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து, ஃப்ரீஸரில்
வைத்துவிடவும். 2 மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறவும்.
பலன்கள்: ஐஸ்கிரீம்
பிரியர்களுக்கு இந்த 'ஸார்பெ’யை தாராளமாகச் செய்து கொடுக்கலாம். ஏனெனில்,
இதில் உடல் எடையைக் கூட்டும் கொழுப்பு சார்ந்த விஷயங்கள் எதுவும் இல்லை.
மேங்கோ ஐஸ் டீ
தேவையானவை: நல்ல
தரமான மாம்பழங்கள் - 2, பிளாக் டீ பைகள் (tமீணீ தீணீரீs) - 2, தண்ணீர் - 4
கப், எலுமிச்சம்பழச் சாறு - அரை டீஸ்பூன், பனங்கல்கண்டு - தேவையான அளவு,
புதினா இலைகள் - சிறிதளவு.
செய்முறை: மாம்பழங்களைத்
தோல் சீவி, நறுக்கவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, டீ பைகளை அதனுள்
போட்டு, பத்து நிமிடம் வைக்கவும். டீத்தூள் சாயம் இறங்கியதும், அந்த டீ
தண்ணீருடன், மாம்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
எலுமிச்சம்பழச் சாறைச் சேர்த்து, உயரமான கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள்,
புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.
மேங்கோ டெஸர்ட்
தேவையானவை: பால் - அரை லிட்டர், பழுத்த, பெரிய மாம்பழம் - 1, ஊறவைத்த பாதாம் - 10, பனங்கல்கண்டு - 4 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சில இழைகள்.
செய்முறை:
ஊறவைத்த பாதாமை விழுதாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரையையும்
பாதாம் விழுதையும் சேர்த்து, சிறிது வற்றும் வரை கொதிக்கவிடவும். பிறகு
அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து, பிறகு ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம்
வைக்கவும். மாம்பழத்தைத் தோல் சீவி, சிறு தூண்டுகளாக நறுக்கவும். பால்
கலவையில் மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து, குங்குமப்பூ இழைகளைத் தூவி
அலங்கரித்து, பரிமாறவும்.
மாங்காய் சாதம்
தேவையானவை: உதிராக
வடித்த சாதம் - 3 கப், மாங்காய்த் துருவல் - 3 கப், கீறிய பச்சை மிளகாய் -
2, காய்ந்த்த மிளகாய் - 1, நெய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 8,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் -
கால் டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், அரை உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
தேங்காய்துருவல் (விருப்பப்பட்டால்) - அரை கப், உப்பு - சுவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கடாயில்
நெய்யை விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்துத் தாளித்து,
காய்ந்த மிளகாய் சேர்கவும். பச்சை மிளகாய், மஞ்சள்தூள் போட்டுக்
கிளறிவிட்டு, முந்திரிப்பருப்பைப் போட்டு வறுக்கவும். பிறகு, மாங்காய்த்
துருவலைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும்படி வதக்கவும். அதில்
உப்பையும் கறிவேப்பிலையையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறவைத்த சாதத்தை,
மாங்காய்க் கலவையில் சேர்த்து, உடையாமல் கிளறவேண்டும். விருப்பப்பட்டால்
தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறலாம். சுவையாக இருக்கும். சூடாக,
துவையல், அப்பளம், வடகத்துடன் பரிமாறலாம். சம்மர் ட்ரிப்புகளுக்கு உகந்த
சாதம்!
கார்ன் பாஸ்தா சாலட்
தேவையானவை:
வேகவைத்து உதிர்த்த சோள மணிகள், வேகவைத்த மேக்ரோனி - தலா அரை கப்,
குடமிளகாய் (மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில்) - தலா 1, க்ரீம் - ஒரு
கப், உப்பு - சுவைக்கேற்ப, மிளகுத்தூள் - காரத்துக்கு ஏற்ப.
செய்முறை: குடமிளகாய்களை மிகப் பொடியாக நறுக்கவும். எல்லாவற்றையும் கலந்து, குளிரவைத்துப் பரிமாறவும்.
கறிவேப்பிலை பனீர் வறுவல்
தேவையானவை: பனீர்
துண்டுகள் - 10, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 75 கிராம், அரிசி மாவு - 100
கிராம், மிளகாய்த் தூள் - 25 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - ஒரு
டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 50 கிராம், கரம் மசாலாத்
தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு -
சுவைக்கேற்ப.
செய்முறை: பனீர்
துண்டுகளில் இஞ்சி பூண்டு விழுதைப் பிசறி வைக்கவும். கார்ன்ஃப்ளார், அரிசி
மாவு, மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், கறிவேப்பிலை, உப்பு
எல்லாவற்றையும் சேர்த்துப் பிசறி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
பிறகு, எண்ணெயைக் காயவைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
நிலக்கடலை கோவைக்காய் சாதம்
தேவையானவை: உதிராக
வடித்த சாதம் - 3 கப், பொடியாக நறுக்கிய கோவைக்காய் - 2 கப், பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், நிலக்கடலை - அரை கப், காய்ந்த மிளகாய்
- 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு
- கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - கால் கப்.
செய்முறை: கடாயில்
நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த
மிளகாய் போட்டுத் தாளிக்கவும். சின்ன வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும்
சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். கீறிய பச்சை
மிளகாயையும் கோவைக்காயையும் சேர்த்து வதக்கவும். தனியாக ஒரு கடாயில், துளி
எண்ணெய் விட்டு, நிலக்கடலையை வறுத்து, கோவைக்காய் கலவையில் சேர்க்கவும்.
சாதத்தைக் கொட்டி, உதிராமல் கிளறி, சூடாகப் பரிமாறவும்.
பயன்கள்:
கோடைகாலத்தில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பது நல்லது. உடலைக்
குளிர்ச்சியாக்கும். கறிவேப்பிலை, கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், இதய நோயில்
இருந்து காக்கும்.
மெலன் கூலர்ஸ்
தேவையானவை: தர்பூசணி
பழச் சாறு - முக்கால் கப், எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ்
புதினா இலைகள் - 5 அல்லது 6, சர்க்கரை (தேவைப்பட்டால்) - சுவைக்கேற்ப,
சுக்குப் பொடி - ஒரு சிட்டிகை.
செய்முறை:
புதினா இலைகளை நசுக்கி, கிளாஸில் போட்டு, அதனுடன் எலுமிச்சம்பழச் சாறைக்
கலக்கவும். அதில் தர்பூசணி அரைத்த சாறையும் கலந்து, விருப்பப்பட்டால்
சர்க்கரை சேர்த்து, சுக்குப் பொடியைத் தூவிப் பரிமாறவும்.
வசந்த நீர்
தேவையானவை: இளநீர் - முக்கால் கப், தேன் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - சிறிதளவு.
செய்முறை: இளநீரில் தேன் சேர்த்து, புதினா இலைகளைக் கலந்து அருந்தவும்.
பனங்கல்கண்டு அல்வா
தேவையானவை: பனங்கல்கண்டு
- ஒரு கப், அரிசி மாவு - அரை கப், கார்ன்ஃப்ளார் - 75 கிராம், சர்க்கரை -
அரை கப், நெய் - 200 மி.லி, முந்திரிப் பருப்பு - 50 கிராம், திராட்சை - 25
கிராம்.
செய்முறை:
கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி, பனங்கல்கண்டைச் சேர்த்துக் கரையவிடவும்.
கல், மண் இருந்தால் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, அரிசி மாவைச்
சிறிது சிறிதாகத் தூவிக் கிளறவும். அதிலேயே, கார்ன்ஃப்ளாரையும்,
சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய் சேர்த்து, ஒரு மணி நேரம்
கிளறவும். கடாயில் ஒட்டாமல் மாவு சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஒரு
தட்டில் சிறிது நெய் தடவி, அதன் மேல் அல்வாவைக் கொட்டிப் பரத்திவிட்டு,
முந்திரி, திராட்சையை அதன் மேலே தூவவும்.
நுங்கு பாயசம்
தேவையானவை: நுங்கு - ஒரு கப், கெட்டியான பால் (கண்டன்ஸ்டு மில்க்) - அரை கப், காய்ச்சிய பால் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய் - 3.
செய்முறை:
நுங்கு, கண்டன்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து
விழுதாக்கவும். இதனுடன் காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்துக் கலந்து,
ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். நன்றாகக் குளிர்ந்ததும்
எடுத்துப் பரிமாறவும். அடிக்கிற வெயிலுக்கு அசத்தலான டிஷ் இது.
கோவைக்காய் ஃபிங்கர்ஸ்
தேவையானவை: விரல்
நீள கோவைக்காய் - கால் கிலோ, கார்ன்ஃப்ளார் - 75 கிராம், அரிசி மாவு - 100
கிராம், எலுமிச்சம்பழச் சாறு - 4 டீஸ்பூன், மிளகாய்தூள் - காரத்துக்கேற்ப,
கரம் மசாலா தூள் - 3 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை
லேசாகக் கீறிவிட்டு, இஞ்சி பூண்டு விழுதைப் பிசறி வைக்கவும். அரிசி மாவு,
கார்ன்ஃப்ளார், எலுமிச்சம்பழச் சாறு, கரம் மசாலா தூள், மிளகாய்தூள், உப்பு
எல்லாவற்றையும் கலந்து பிசறவும். கோவைக்காய்களை இந்த மாவுக் கலவையில்
கலந்து பிசறி, எண்ணெயில் பொரிக்கவும். விடுமுறையில் வீட்டை அதகளம் செய்யும்
வாண்டுகளுக்கு நல்ல ஸ்நாக்ஸ் இது.
கோடை வெயில்... குளிர்விக்க சில குறிப்புகள்
- ஊட்டச்சத்து நிபுணர் மீனா ராதாகிருஷ்ணன்

உடலில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க, சீரான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர்

குடிப்பதுடன்,
தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சம்பழச் சாறு விட்டுக் கலந்து குடிக்கலாம்.
(வைட்டமின் சி இருப்பதால்) உடலின் உள்ளேயும், வெளியேயும் புத்துணர்ச்சியைத்
தரும்.

ஃப்ரிட்ஜில்
இருந்து குளிர்ந்த நீரை அப்படியே எடுத்து அருந்துவது ரத்தக் குழாய்களைச்
சுருக்கிவிடும். மண்பானைத் தண்ணீர் உடலுக்கும் நல்லது. தாகமும் தணிக்கும்.

100
சதவிகிதம் பருத்தி உடைகளும், கண்களுக்குக் குளிர் கண்ணாடியும்
சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்
காவலர்கள்.

நிறையத்
தண்ணீர், ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், சுத்திகரிக்கப்படாத
கடல் உப்பு மற்றும் மருத்துவக் குணம் கொண்ட மசாலாக்கள் (இஞ்சி, பூண்டு,
மிளகும் போன்றவை) அடங்கிய முழுமையான சரிவிகித உணவு அவசியம் தேவை.

புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்து அதிகம் நிரம்பிய தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய், திராட்சை போன்ற பழங்கள் கோடைக்கு உகந்தவை.

காரம்,
மசாலா மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவும். வெதுவெதுப்பான
சீதோஷ்ணம் பாக்டீரியாக்கள் வளரத் தோதானது. பாக்டீரியாக்களால் ஏற்படும்
'ஃபுட் பாய்ஸனிங்’ என்பது, இந்த சீஸனில் பொதுவாகக் காணப்படும் பிரச்னை.
எனவே, உணவில் கவனம் தேவை.

சுறுசுறுப்பான
வேலைகளுக்கு இடையில் அவ்வப்போது நல்ல ஓய்வும் தேவை. உங்கள் உடலால் முடிந்த
எல்லைக்கு மேலாக, வேலையோ அழுத்தமோ கொடுக்க வேண்டாமே!

எப்போதெல்லாம்
வெளியே சென்று வீடு திரும்புகிறீர்களோ, அப்போதெல்லாம் உடனே முகம் கழுவி
விடுங்கள். ஒரு நாளைக்கு இரு முறை குளிப்பது கூட கோடையில் நல்ல இதம் தரும்.

முதல்
நாள் இரவே சிறிது வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள்
மோரில் கலந்து குடிக்கலாம். நம் கையில் இருக்கும் கண்கண்ட மருந்து அது.
உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரும்.
மாதவிலக்குப் பிரச்னைகள் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும்.
மேலும், முடி உதிர்தலைத் தடுக்கும். புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதோடு,
ரத்த சர்க்கரை அளவையும் சீராகப் பராமரிக்கும். வெந்தயத்தின் பலன்களில் இது
மிகச் சிலதான் இவை. இன்னும் பல இருக்கின்றன. வெந்தயத்தை விடாதீங்க!

மற்றொரு மருந்து, விளக்கெண்ணெய். அதிக சூட்டினால் வலி ஏற்படும்போது,
தொப்புள் பகுதியைச் சுற்றி விளக்கெண்ணெயைத் தடவிக்கொள்ளலாம். மேலும், கண்
இமைகளின் மேலும் பாதங்களின் அடிப்பகுதியிலும் இதைத் தடவிக்கொண்டால்
உடம்பின் உஷ்ணம் குறைந்துவிடும்.

வியர்க்குருவைச் சமாளிக்க தூய சந்தன விழுதைத் தடவலாம். குளிர்ச்சி தருவதுடன், வியர்க்குருவும் மறையும்.

குளிக்கும்போது,
வெட்டிவேர் தேய்ப்பான் உபயோகிக்கலாம். அழுக்கைப் போக்குவதுடன், உடலில்
உண்டாகும் வியர்வை நெடியைப் போக்கி, மணமிகு குளியல் அனுபவத்தைத் தரும்.
Post a Comment