குஜராத்தில் ஜூ.வி.! இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!

குஜராத்தில் ஜூ.வி.! குஜராத் என்று நினைத்ததும் எரியும் ரயிலும் துள்ளத்துடிக்கக் கொல்லப் பட்ட உயிர்களும்தான் நினைவுக்கு வரும். 2002-ம் ...

குஜராத்தில் ஜூ.வி.!
குஜராத் என்று நினைத்ததும் எரியும் ரயிலும் துள்ளத்துடிக்கக் கொல்லப் பட்ட உயிர்களும்தான் நினைவுக்கு வரும். 2002-ம் ஆண்டு நடந்த கோரக் கொலைகள், மோடி முதல்வர் ஆன சில மாதங்களில் நடந்தன. அந்தச் சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அந்தப் பீதியும் பயமும் அந்த மாநிலத்தின் சில பகுதிகளுக்குள் உலா வரும்போது உணர முடிகிறது.

 ''நான் வளர்ச்சி குறித்து விவாதிக்க அழைத்தால், மாற்றுக்கட்சியினர் 'மத வாதம்’ பற்றி பேசுகிறார்கள். ஊழலற்ற அரசு அமைப்பது பற்றி பேசினால்...  அப்போதும், 'மதச்சார்பின்மை’ என்று கூச்சலிடுகிறார்கள். போலியான மதச் சார்பின்மை வேண்டுமா அல்லது ஊழலற்ற, திறமையான, வளர்ச்சியை நோக்கி நாட்டை நடைபோட வைக்கும் அரசு வேண்டுமா?'' என்று கேள்வி கேட்கிறார் மோடி.

குஜராத்தின் தொழில் வளர்ச்சி, மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு வசதிகள் இதைப்பற்றி எல்லாம் மோடி பேசும்போது, அவருக்கு முன்னால் இவை பூதாகாரமாகப் பேசப்படுவதற்குக் காரணம், சுமார் 2 ஆயிரம் பேரைக் காவுவாங்கிய அந்தச் சம்பவம்தான்!
சத்பாவனா யாத்திரை!
தனது அரசியல் இன்னும் பரந்து விரிய வேண்டுமானால், முஸ்லிம்களின் எதிரி என்ற அடையாளம் அழிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்த மோடி, குஜராத்தில் சத்பாவனா (நல்லெண்ணம்) யாத்திரையைத் தொடங்கினார். படு விமரிசையாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சிகளில், அதிக முஸ்லிம்கள் பங்கெடுக்க ஏற்பாடு செய்தார்கள். அப்படி அந்த நிகழ்ச்சிக்கு வந்த இஸ்லாமியர் ஒருவர், மோடிக்கு தங்கள் மதத்தின் அடையாளமான குல்லாவைக் கொடுக்க... மோடி அதை அணிந்துகொள்ள மறுத்து விட்டார். ''இந்த மாதிரியான போலியான நடிப்பை மோடி வெறுக்கிறார். குஜராத் வளர்ச்சியைப் பற்றித்தான் அவர் கவலைப்படுகிறார். குஜராத்தின் வளர்ச்சி என்றாலே, அது முஸ்லிம் சமூக மக்களையும் உள்ளடக்கியதுதானே!’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.  36 இடங்களில் மோடி இந்த சத்பாவனா யாத்திரையை மேற்கொண்டார். இது அந்த சிறுபான்மையினர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியது.

சச்சார் கமிட்டி சொல்வது என்ன?
கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நிலை... என்று பல கோணங்களில் இருந்தும் நாட்டில் இருக்கும் முஸ்லிம்களின்  நிலையை ஆராய பிரதமர் மன்மோகன் சிங் 2005-ம் ஆண்டு சச்சார் கமிட்டியை அமைத்தார். நீதிபதி ராஜேந்திர சச்சார் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் புள்ளிவிவரங்களை பி.ஜே.பி-யினர் தங்களுக்குச் சாதகமாகச் சொல்கிறார்கள். மற்ற மாநிலங்​களுடன் ஒப்பிடும்போது குஜராத் முஸ்லிம்களின் வாழ்க்கை ஓரளவு பரவாயில்லை என்ற நிலைமையில் இருப்பதாக சச்சார் கமிட்டி சொல்கிறது.
''குஜராத் மக்கள்தொகையில் 9.1 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள். இந்திய அளவில் 59.1 சதவிகித இஸ்லாமியர்கள்தான் எழுதப்படிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், குஜராத்தில் 73.5 சதவிகித முஸ்லிம்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை இந்தி​யாவில் நகர்ப்புறங்களில் இருக்கும் முஸ்லிம்களின் சராசரியான மாத வருமானம் 804 ரூபாய். ஆனால், குஜராத்தில் இந்தத் தொகை 875 ரூபாய். கிராமப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் மாத வருமானம் இந்திய அளவில் சராசரி 553 ரூபாய். ஆனால் குஜராத்திலோ இந்தத் தொகை 668 ரூபாய்'' என்கிறது சச்சார் கமிட்டி அறிக்கை.

குஜராத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பிட்ட ஒருசில பிரிவினர் மட்டுமே வணிகம் செய்து வசதியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் கூலித் தொழிலாளிகளாகவும் சிறு வணிகர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களிடம் குஜராத் வளர்ச்சியைப் பற்றிக் கேட்டால் இரண்டு விதமான பதில்கள் கிடைக்கின்றன. 'மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ந்துள்ளது’ என்று வசதி படைத்த முஸ்லிம் வர்த்தகர்களும், 'வளரவில்லை, நாங்கள் அப்படியேதான் இருக்கிறோம்’ என்று ஏழை முஸ்லிம்களும் சொல்​கிறார்கள். ஆனால் அவர்​கள் அனைவரும், ''2002-க்கு முன்புவரை இங்கே இந்துக்களுக்கும் முஸ்லிம்​களுக்கும் இடையே அடிக்கடி கல்வீச்சு, கத்திக்குத்து என்று  தகராறு நடக்கும். ஆனால், கடந்த 12 வருடங்களாக எந்தக் கலவரமும் இல்லை. ஊர் அமைதியாக இருக்கிறது'' என்கிறார்கள்.  

மினி பாகிஸ்தான்!
அகமதாபாத்தின் ஒதுக்குப்​புறமான பகுதிகளில் ஒன்று ஜுஹாபுரா. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால்... இது மினி பாகிஸ்தான் என்றே பலரும் சொல்​கிறார்கள். பளபளக்கும் சாலைகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் இருக்கும் இந்தப் பகுதியின் சாலைகளில் பைக்கில் செல்வதே பெரிய சவாலாக இருந்தது. கழிவுநீர் வசதி, குடிநீர் வசதி என்று எதுவும் இல்லாமல் பரிதவிக்கும் பலரிடமும் பேசினோம். ''2002-க்குப் பிறகு கலவரம் இல்லை என்பது உண்மைதான். சட்டம் ஒழுங்கை கண்காணித்தால் மட்டும் போதுமா? நாங்கள் இன்னும் பயத்துடன்தான் இருக்கிறோம். 

அந்த பயத்தை அரசு போக்கவில்லை. முஸ்லிம் என்றால் அரசாங்கத்தில் வேலை கொடுக்க மாட்டார்கள். என்னைப்போல என் சந்ததியினரும் பூண்டு விற்றுத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் போலிருக்கிறது'' என்று ஷேக் அப்துல் மஜித் என்ற பெரியவர் தன் விதியை நொந்துகொண்டு சொன்னார்.
நடுத்தர வயதில் இருந்த இமாரத்தே ஷ்ரியாவின் குரலில், அவர் வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடாத எல்லாத் துயரங்களையும் அனுபவித்த வேதனை தெரிந்தது. ''2002 கலவரத்தின்போது போலீஸும் கொலையாட்டம் ஆடியது. திடுதிப் என்று எங்கள் வீட்டுக்குள் புகுந்த போலீஸ், என்னுடைய கணவரை மொட்டை மாடிக்கு அழைத்துக் கொண்டுபோய் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துச் சுட்டது. என்னுடைய நான்கு குழந்தைகளோடும் பாதுகாப்புத் தேடி இந்தப் பகுதிக்கு ஓடிவந்துவிட்டேன். என்னுடைய தம்பிதான் செக்யூரிட்டி வேலைபார்த்து எங்களைக் காப்பாற்றுகிறான்'' என்று கலங்குகிறார்!பாம்பே ஹோட்டல்!
2002-க்குப் பிறகு அங்கு கலவரம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்டு குடியிருந்த வீட்டை விட்டு விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களில்   300  குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 பேர்  இன்னமும் அகதிகள் முகாம் போன்ற ஒரு இடத்தில்தான் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டோம். 'பாம்பே ஹோட்டலில்!’ என்று பதில் வந்தது. 'அவ்வளவு காஸ்ட்லியான பகுதியிலா அவர்கள்  இருக்கிறார்கள்?’ என்று ஆச்சர்யப்பட்டபடி அந்த இடத்துக்குக் கிளம்பினோம்.


'நரோல் ரோடு’ பகுதியில் சென்று  'பாம்பே ஹோட்டல் எங்க இருக்கு?’ என்று கேட்டால், ' அதோ தெரியுது பாருங்க குப்பை மலை. அதான்!’ என்று ஏரியாவாசிகள் வழி சொல்கிறார்கள்.  பாம்பே ஹோட்டல் என்று கவர்ச்சியாகப் பெயர் இருந்தாலும் அங்கே ஹோட்டல் எல்லாம் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக  குப்பைக்கூளங்களால் ஆன மலைகள்தான் இருக்கின்றன. ராட்சத கிரேன்கள் அந்தக் குப்பை மலைகளை ஒன்றைவிட ஒன்று உயரமாகவோ, பள்ளமாகவோ ஆகிவிடாதபடி சமமாக்கும் வேலையை ஓயாமல் செய்துகொண்டிருந்தது. ஒரு பக்கம் குப்பை மலையை எரிக்கும் காரியத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தக் குப்பைமேட்டுக்கு நடுவே கொத்துக்கொத்தாக பல முஸ்லிம் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதை அறிந்து, குப்பைமேடுகள் வழியாக உள்ளே சென்றோம். குடலைப் புரட்டிக்கொண்டு வாந்தி வருகிறது. ஆனால், அங்கே இருப்பவர்களுக்கு அதுதான் வீடு. அவர்களின் வீட்டுக் குழந்தைகள் அந்தக் குப்பை மேட்டில்தான் சிரித்து மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். 

தன் குழந்தைக்கு தலைவாரிக்​கொண்டிருந்த ரேஷ்மா பானுவிடம், ''ஏன் இன்னமும் இங்கேயே இருக்கீங்க. இப்பதான் கலவரம் எதுவும் நடப்பதில்​லையே. நீங்க முன்பு வசித்த பகுதிக்கே சென்றுவிடுவதுதானே?’ என்று ஆதங்கத்தோடு கேட்டோம். நம்மை மேலும் கீழும் பார்த்த அவர், ''என்னுடைய சொந்தங்கள் பலரையும் ஓட ஓட விரட்டிக் கொன்ற எல்லோரும் அந்தப் பகுதியில்தான் இன்னமும் இருக்கிறார்கள். அதனால், எங்களால் அங்கே செல்ல முடியாது!'' என்றார் ஒருவித பயத்துடன். கணவனை இழந்த பெண்கள், ஊனமுற்றவர்கள், அப்பா, அம்மாவை இழந்து அனாதையான குழந்தைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. தினமும் கிடைக்கும் கூலி வேலையை வைத்து இவர்கள் காலம் தள்ளுகிறார்கள்.
''இந்த இடம் முஸ்லிம் பெரியவர் ஒருவருக்குச் சொந்தமானது. அவர்தான் இங்கு சிறு வீடுகள் கட்டி வாழ்வதற்கு அனுமதி தந்தார். எங்களுக்கு வீடு கட்டித் தராவிட்டாலும் பக்கத்தில் குப்பை கொட்டுவதையாவது நிறுத்துங்கள் என்று சொல்லிப் பார்த்தோம். ஆனால், நாளுக்கு நாள் இங்குதான் குப்பையைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். எங்களை இந்த இடத்தை விட்டும் விரட்டும் தந்திரமாகவே இதைப் பார்க்கிறோம்'' என்று  காத்தூன் பீவி சொல்கிறார். அரசு அதிகாரிகளைக் கேட்டால், ''இதுதான் ஒதுக்குப்புறமான இடம். அங்குதான் குப்பையைக் கொட்ட முடியும்'' என்கிறார்கள். ''இந்த மக்களை யாரும் ஊருக்குள் வரக் கூடாது என்று சொல்லவில்லை. அவர்களாகத்தான் அங்கு தங்கி இருக்கிறார்கள்'' என்றும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

''இன ஒதுக்கல் இருக்கிறது!''
 'மோடி அஞ்சுகிற நபர்களில் முதன்மையானவர்’ என்று பெயர் எடுத்தவர் ஷப்னம் ஆஸ்மி. வீதி நாடகம் நடத்தியபோது கொலை செய்யப்பட்ட சஃப்தர் ஆஸ்மியின் சகோதரியான இவர், 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். அவரிடம் பேசினோம். ''முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட நாட்களுக்குப் பிறகு, குஜராத்தில் பல இடங்களில்,  'இந்து ராஜ்ஜியத்துக்கு வாருங்கள்’ என்ற பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. இப்போது இந்த பலகைகள் பலவும் காணாமல் போய்விட்டன. பெயர் பலகைகள் இல்லையே தவிர, இந்தப் பலகை யாரால் எந்த அர்த்தத்தில் வைக்கப்பட்டதோ அந்த அர்த்தப்படிதான் குஜராத் இப்போது இருக்கிறது.
'இன ஒதுக்கல்’ அமலில் இருக்கிறதோ என்று சந்தேகப்படும்படிதான் முஸ்லிம்கள் இங்கே தனித்தீவுகளாக தனிப் பகுதிகளில் வசிக்கிறார்கள். 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் வீடு, வாசல், சொந்தங்கள் என்று அனைத்தையும் இழந்து ஓடி உயிர்பிழைத்த முஸ்லிம்கள் வாழும், 'நரோல் ரோடு’ பகுதி ஒன்று போதும்... இந்த ஆட்சியின் அவலத்தைக் காட்ட. சபிக்கப்பட்ட கால்நடைகளைப்போல முஸ்லிம்கள் அங்கே வாழ்வதைப் பார்ப்பீர்கள். அதுவும் மழைக்காலங்களில் அந்தப் பகுதியின் நிலைமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. தண்ணீரில் வீடுகள் மூழ்கிவிடும். மழை நீர் குப்பைமேட்டைக் கரைத்து எடுத்துவந்து, வீட்டில் மார்பு உயரத்துக்கு சேர்த்துவிடும். கணவர்களை இழந்த அந்த விதவைகளின் காலனியில், குழந்தைக் குட்டிகளும் தள்ளாத வயதினரும் காலம் தள்ளுவதைப் பார்த்தால், யாராக இருந்தாலும் மனம் பதைபதைக்கும். உயிர் வாழ்வதே இத்தனை சவாலான விஷயம் என்றால், அவர்களுக்கு எங்கிருந்து பள்ளிக்கூடம், சாலை வசதி... எல்லாம்?'' என்று கேட்கிறார்.
''காப்பாற்ற முயலவில்லை!''
இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, ''2002-ம் ஆண்டு சம்பவம் துரதிருஷ்டவசமானது. உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் தலா 1.50 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடும் தரப்பட்டது. அகதிகள் முகாம் அமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட வீடுகளைப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்​பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. சுமார் 4,300 வழக்குகள் பதியப்பட்டன. பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 300 பேர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். சர்தாபூரா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை தரப்பட்டுள்ளது. யாரையும் காப்பாற்ற அரசு முயல​வில்லை'' என்கிறார்கள்.
நம்முடைய பயணத்தின் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளோம். குஜராத்தின் வளர்ச்சி என்பதை மோடிக்கு முன், மோடிக்குப் பின் என்று பிரித்துப் பார்த்து   உண்மையை விளக்க வேண்டும் என்று நமது வாசகர்கள் தங்களது விருப்பங்களைப் பதிவு செய்துள்ளார்கள். அந்தப் பகுதி அடுத்த இதழில் இடம்பெறும். குஜராத் அரசியல் சூழ்நிலை, மோடி பிரதமர் ஆகிச் சென்றுவிட்டால் அவருக்குப் பிறகு யார் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற கள நிலவரங்களையும் சேர்த்துப்  பார்ப்போம்!

 முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள்!
பி.எம்.டபிள்யூ கார் டீலரான பார்சோலி மோட்டார்ஸின் உரிமையாளர் தல்ஹா சரெஷ்வாலாவிடம் பேசினோம். ''12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தை நினைத்தால், இன்றும் நெஞ்சு நடுநடுங்கும். ஆனால், எதிர்கால வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அதையே இப்போதும் நினைத்துக்கொண்டிருக்க முடியாது. 'அடுத்தது என்ன?’ என்று வருங்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். அப்படித்தான் இங்கே பல முஸ்லிம்களும் யோசிக்கிறார்கள்.
இந்த அகமதாபாத் நகரின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், 12 வருடங்களில் நடந்திருக்கும் மாற்றங்களைப் பார்க்க முடியும். இதோ நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோமே... இந்த சாலையில் எதிர் முனையைக் கடப்பதற்கு, முன்பு சுரங்க நடைபாதை இல்லை. இதோ... இப்போது இங்கே அது வந்திருக்கிறது. இதே சாலையில் இன்னும் கொஞ்சம் தூரத்தில் ஒரு மேம்பாலம் வந்திருக்கிறது. இப்படி... ஒட்டுமொத்த மாநிலமும் நான்கு கால் பாய்ச்சலில் வளர்ச்சியடையும்போது நாங்கள் மட்டும் எப்படி பின்தங்கி இருக்க முடியும். எங்கள் சமூகமும் வளர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தைவிட இங்கே முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள். அவர்களது வாழ்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்விச்சாலைகள், மருத்துவமனைகள்... என்று எதுவுமே முஸ்லிம்கள் நடத்தவில்லை. ஆனால், இப்போது இவை இங்கே ஏராளமாக வந்திருக்கின்றன.

இந்த ஷோரூமில் நாங்கள் விற்பனை செய்யும் கார்களில் இரண்டு சதவிகித கார்களை முஸ்லிம்கள்தான் வாங்குகிறார்கள். இன்று நம் நாட்டில் பல மாநிலங்களில் முஸ்லிம்கள் இந்த குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடையவில்லை'' என்றார் உறுதியான குரலில்.

 எப்போதும் பிரச்னை - இப்போது அமைதி!
எப்போதுமே இந்து, முஸ்லிம் பிரச்னை தலைதூக்கி இருக்கும் பகுதியாக இந்தியாவின் மேற்குப் பகுதி அமைந்து இருந்தது. முகமது கஜினி காலம் தொட்டு இரு சமூகங்களுக்கும் இடையே நடந்த இந்தப் போராட்டம் பல நேரங்களில் வரலாற்றின் ஆழமான ரத்தக்கறையை விட்டுச் சென்று இருக்கிறது. இதனுடைய உச்சமான ஆண்டுகளாக 1714,1750, 1927, 1946 ஆகிய ஆண்டுகளைச் சொல்லலாம்.

குஜராத் தனி மாநிலமாக உருவெடுத்த முதல் 10 ஆண்டுகளில் மட்டும் (1961 - 71) ஆண்டுகளில் மட்டும் அங்கே இரு சமூகங்களுக்கு இடையே நகர்ப்புறங்களில் 685 மோதல்களும், கிராமப்புறங்களில் 114 மோதல்களும் நடைபெற்றன. இதில் மிகப்பெரிய கலவரமாக மாறியது 1969-ம் ஆண்டு நடந்த கலவரம்: இந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி மாலை ஜெகன்நாதர் ஆலயத்தை ஒட்டியிருக்கும் கோஷாலாவுக்கு திரும்பிக்கொண்டிருந்த பசுக்கள் தங்களின் பண்டிகையை பாழ்படுத்தியதாக சிலர் ஆத்திரப்பட்டதுதான் இந்தக் கலவரத்துக்கான முதல் பொறி. 1982 விநாயகர் சதுர்த்தி கலவரம், 1985-ல் இட ஒதுக்கீடுக்கு எதிரான சாதி கலவரங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீர் என்று நிகழ்ந்த மத கலவரம், 1987, 1991 கலவரங்கள் என்று குஜராத் வரலாறே ரத்தச் சரித்திரமாக இருந்தது.


இதன் உச்சகட்டமாக 2002 கலவரம். ஆனால், அதில் இருந்து இன்றுவரை 12 ஆண்டுகளாக அமைதியான மாநிலமாக குஜராத் மாறிவிட்டது என்பதுதான் அங்கு வாழும் முஸ்லிம், இந்து மக்களின் சந்தோஷமாக இருக்கிறது! 

 ''எனக்கு சிரிப்புதான் வருகிறது!''
சஞ்சய் பட்: (கோத்ராவில் எரிக்கப்பட்ட கரசேவகர்களின் உடல்களை அகமதா​பாத் கொண்டுவந்தால் நிலைமை விபரீதமாகும் என்று மோடியிடம் நேருக்கு நேராக எடுத்துச் சொன்ன இந்த போலீஸ் அதிகாரி சிறப்பு புலனாய்வுக் குழு தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை மோடிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தவர்.
(இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் இந்த ஐ.பி.எஸ்.):

''குஜராத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக மோடி தனக்குத்தானே பாராட்டு தெரிவித்துக்கொள்கிறார். இந்த மாநிலத்தைச் சேர்ந்த 27 மூத்த போலீஸ் அதிகாரிகள் சிறைச்சாலையில் இருக்கும் நிலையில் சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கிறது என்று அவர் சொல்வதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

குஜராத் அமைதியாகத்தான் இருக்கிறது. முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதாகத்தான் பிரசாரம் செய்யப்படுகிறது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எல்லாம் கொட்டி அழக்கூட வழியில்லாமல் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் இந்த மாநிலத்தில் மௌனமாக அழுது​கொண்டிருக்​கிறார்கள்.''

Related

இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! 3712572390992563955

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item