யோகா -- ஆசனம்,
யோகா பெண்கள் இருமும்போதும், தும்மும்போதும், சில நேரங்களில் சிரிக்கும்போதும்கூட அவர்களையே அறியாமல் சிறுநீர...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_2.html
யோகா
பெண்கள் இருமும்போதும், தும்மும்போதும், சில நேரங்களில்
சிரிக்கும்போதும்கூட அவர்களையே அறியாமல் சிறுநீர் வெளியாகிவிடும். இன்னும்
சில பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு தோன்றும்.
அப்படித் தோன்றும்போதே அவர்களால் சிறுநீரை அடக்க முடியாது. இதற்குக் காரணம்
கருப்பை தன்னுடைய இடத்தில் இருந்து சற்றுக் கீழ் இறங்கிவிடுவதுதான்.
பிரசவத்தின்போது கருவின் வளர்ச்சிக்கு ஏற்பக் கருப்பை விரிந்தும்
முன்நகர்ந்தும் விடுகிறது. மேலும் பிரசவத்தின்போது குழந்தையின் தலை
கொடுக்கும் அழுத்தம், இடுப்பு எலும்பைச் சுற்றி உள்ள அடித்தளத் தசைகளைப்
பலவீனப்படுத்துகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டாலே
கருப்பை இயற்கையாகவே சுருங்கி, தன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
இதற்குக் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் ஆகலாம். ஆனால் சில பெண்கள் பிரசவம்
முடிந்த சில நாட்களிலேயே வேலைக்குத் திரும்பிவிடுவார்கள். இன்னும் சிலர்
இடை அழகு திரும்பக் கிடைக்கக் கடுமையான உடற்பயிற்சி செய்வார்கள்.
அவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சி
செய்யலாம், ஆனால் எந்த விதமான பயிற்சிகளைச் செய்தால் கருப்பை இயல்பு
நிலைக்கு வரும் என்பதை அறிந்து, நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னரே செய்ய
வேண்டும்.
சிறுநீர் வெளியேறும் பிரச்னையைப் பெண்கள் வெளியில்
சொல்லக் கூச்சப்படுவார்கள். ஆனால், ஆரம்பக் கட்டத்திலேயே இதற்குத் தீர்வு
இருக்கிறது.
சிறுநீர் வெளியேறும் பிரச்னையை நான்கு நிலைகளாகப்
பிரிக்கிறோம். சிறுநீர் வருவதுபோன்ற உணர்வை அடக்க முடியாத நிலையை முதல்
இரண்டு நிலையாகப் பிரிக்கிறோம். மூன்றாவது நிலையில் கர்ப்பப்பை கீழ் இறங்கி
சிறுநீர், குழாயின் நுனி வரை வந்திருக்கும். இந்த நிலையில் இயல்பாக உட்கார
முடியாது. நடக்க முடியாது. உடை நனையும் அளவுக்கு பிரச்னை
முற்றியிருந்தால், அது நான்காவது நிலை. இதைச் சீராக்க அறுவைசிகிச்சை
தேவைப்படலாம்.
இந்தப் பிரச்னையின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு
யோகாவில் தீர்வு இருக்கிறது. அடிவயிற்றை உள் இழுத்து, மூச்சை வயிற்றில்
இறுக்கும்படியான ஆசனங்களைச் செய்வதால், நல்ல பலன் கிடைக்கும். எனவே ஆரம்பக்
கட்டத்தில் இந்தப் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக யோகா பயிற்சியாளர்களை
அணுகி, அவர்களின் பரிந்துரையின்படி ஆசனங்களைச் செய்வதன் மூலம் கருப்பையை
இயல்பான நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம்.
கவனம் :
பிரசவத்துக்குப் பிறகு நல்ல ஓய்வு தேவை. குறைந்தது
மூன்று மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும். இந்தச் சமயத்தில் அதிக சுமை
தூக்கக் கூடாது. மாடிப்படிகள் ஏறி இறங்கக் கூடாது. தண்ணீர்க் குடம் தூக்க
வேண்டாம். அடி பம்ப்பில் தண்ணீர் அடிக்கக் கூடாது.
Post a Comment