சிறுநீரக நோயாளிகளின் நன்மைக்காக உதவ முன்வருவீர்களா?
சென்னையின் மையப் பகுதியான மகாலிங்கபுரத்தில், பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாகச் செயல்பட்டு, ஏழை சிறுநீரக நோயாள...
சென்னை, லயோலா கல்லூரி அருகே, சாஸ்தாலயா மருத்துவமனையில் அமைந்துள்ள இம்மையத்தில், மாதந்தோறும், 450 டயாலிசிஸ் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
சிறுநீரகம் செயலிழந்தவர்கள், தொடர்ந்து உயிர்வாழ, வேறொருவரின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, ரத்த வழி உறவினர்கள் மட்டுமே, சிறுநீரகத்தை தானம் செய்ய முடியும். எனவே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் குறைவாகவே செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும், 1.5 லட்சம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு, "டயாலிசிஸ்' எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தான் ஒரே தீர்வு. ஆனால்,"டயாலிசிஸ்' சிகிச்சை இன்றுவரை ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. நோயின் தன்மையைப் பொறுத்து, வாரத்துக்கு, ஒன்று முதல் மூன்று முறை, "டயாலிசிஸ்' செய்யப்பட வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில், "டயாலிசிஸ்' சிகிச்சை வசதிகள் இருந்தாலும், நாள்தோறும், நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு, "டயாலிசிஸ்' செய்ய வேண்டியுள்ளதால், இங்குள்ள வசதி போதுமானதாக இல்லை. பணம் படைத்தவர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில், "டயாலிசிஸ்' சிகிச்சை செய்ய முடியும். தனியார் மருத்துவமனைகளில், ஒரு முறை, "டயாலிசிஸ்' சிகிச்சை பெற, 1,500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஏழை, நடுத்தர மக்கள், தனியார் மருத்துவமனைகளில், "டயாலிசிஸ்' சிகிச்சை பெறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காத்திருந்தால், உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில், "டயாலிசிஸ்' சிகிச்சை அளிப்பது அவசியம் என்பதை உணர்ந்தார் நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் நிறுவனர் மதியொளி சரஸ்வதி. இதைத் தொடர்ந்து அவரது சிந்தனையில் உதித்த திட்டம் தான், "சுரக்ஷா டயாலிசிஸ் திட்டம்!'
இதுகுறித்து, நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை உறுப்பினர், முத்துகிருஷ்ணன் கூறியதாவது: நல்ல உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களின் கருணையால், கடந்த 2005, அக்டோபர், 12ம் தேதி உதயமானது சுரக்ஷா டயாலிசிஸ் மையம். முதலில், 5 கருவிகள் வாங்கப்பட்டன. தற்போது, 9 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. ஒரு கருவியின் விலை, 8 லட்சம் ரூபாய். ஒரு முறை சிகிச்சை பெற, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. "டயாலிசிஸ்' சிகிச்சைக்கு தேவைப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்காக தண்ணீர் சுத்திகரிப்பு முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், 5,400 டயாலிசிஸ் செய்யப்படுகின்றன. இங்கு வரும் நோயாளிகளுக்கு, சிறுநீரக மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார். லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையோடு செய்யப்படும், "டயாலிசிஸ்' சிகிச்சையால், மேலும் பலர் பயனடைய விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது. தற்போது வாடகை கட்டடத்தில் தான் இயங்கி வருகிறோம்.
"டயாலிசிஸ்' கருவிகளைப் பராமரிக்க, அதிகம் செலவாகிறது. டெக்னீஷியன்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. எனவே, நிதி சுமையால் சிரமப்படுகிறோம். இரக்க சிந்தனையாளர்கள், நல்லெண்ணம் கொண்டோர் உதவி செய்தால், இன்னும் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியும். நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை மூலம், பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை மதியொளி சரஸ்வதியால், 1988ல் துவங்கப்பட்டது. அதன் ஒரு பிரிவாக, நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு முன்னாள் கமிஷனர் விட்டல், அறக்கட்டளையின் ஆலோசகராக உள்ளார். அறக்கட்டளை மூலம், பெங்களூரு, டில்லி உள்ளிட்ட நகரங்களில், ஏழை குழந்தைகளுக்கு, இலவசமாக பால் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறோம். இவ்வாறு முத்துகிருஷ்ணன் கூறினார்.
Post a Comment