கைநிறையப் பணம், வீடு, கார், நகைகள், குடும்பம், குழந்தைகள் வசதியான வாழ்க்கை... எல்லாம் சரியாக அமைந்தும் கூட, ‘‘ஹ§ம்! என்னங்க லைஃப் இது... எரி...
கைநிறையப் பணம், வீடு, கார், நகைகள், குடும்பம், குழந்தைகள் வசதியான வாழ்க்கை... எல்லாம் சரியாக அமைந்தும் கூட, ‘‘ஹ§ம்! என்னங்க லைஃப் இது... எரிச்சலா இருக்கு’’ என்று சலிப்போடு சொல்பவர்கள் இருக்கிறார்கள். கடவுள் கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழாமல், இப்படி அலுத்துக் கொண்டால் எப்படி?
‘‘அவங்களுக்கு இருக்குற பிரச்னைகளுக்கு, ஜாலியா இருக்கணுமாமே... ஆளைப் பாருங்க...’’ என்று நீங்கள் கோபமாய் முணுமுணுப்பது காதில் விழுகிறது. நோ டென்ஷன் ஃபிரெண்ட்ஸ்! பிரச்னைகளுக்கு இடையிலும் எப்படி மகிழ்ச்சியாய் இருப்பது என்கிற சூட்சுமத்தைச் சொல்லித் தரத்தானே நாங்கள் இருக்கிறோம்....
எதற்கெடுத்தாலும் கவலைப்படாதீர்கள்!
ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், அந்தக் கவலை உங்களை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும்.
கமலா ஒரு குடும்பத் தலைவி, ‘‘வடாம் பிழிந்தேன்... சரியா வரலை... மனசுக்குக் கஷ்டமா இருக்கு... அரசி சீரியல்ல, அரசியோட பொண்ணை அந்தப் படுபாவி லவ் பண்றதா சொல்லி ஏமாத்துறானே’’ என்கிற ரீதியில் ஆரம்பித்து, ஏதாவது ஒன்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பார். ஒருநாள் அவரின் கணவர் கிழங்கு சாப்பிட்டதால், கேஸ் டிரபிள் என்று சற்று படுத்திருக்க... ‘‘ஐய்யய்யோ... இது ஹார்ட் பிராப்ளமா இருக்குமோ? கருமாரி, என் புருஷனைக் காப்பாத்துமா’’ என்று அழுது அரற்ற, அதுவரை சாதாரணமாகப் படுத்திருந்த மனுஷன் டென்ஷனாகி, ‘‘நம்ம ஒய்ஃப் சொல்ற மாதிரி இது ஹார்ட் பிராப்ளமா இருக்குமோ’’ என்று பயந்து ஹாஸ்பிடலுக்கு ஓட, குடும்பமே கமலாவின் வீண் கவலையால் ஆடிப் போய்விட்டது. அநாவசியமாக, டாக்டருக்குத் தண்டம் அழுததுதான் மிச்சம்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? மிகவும் சந்தோஷமான, உற்சாகமான மனநிலையில் இருப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகுமாம்! அதனால்தான் கவலையான மனநிலையில் இருக்கும் போதெல்லாம் நமக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. (கவலை, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடும்.)
நெகடிவ் எண்ணங்களைத் தலைதூக்க விடாதீர்கள்.
என் பக்கத்து வீட்டில் ஒரு அக்கா இருக்கிறார். குடும்பத்தில் கடுமையான பணக் கஷ்டம், கணவருக்கோ இதயத்தில் பிரச்னை, குழந்தைகளின் படிப்புச் செலவு வேறு. உடல்நிலை சரியில்லாத மாமனார், மாமியார்... என இவரைச் சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள். ஒரு முறை இவரது மாமனாரை ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வேறு! ஆனால், இந்த எக்ஸ்ட்ரா வேலையை கமலா எதிர் கொண்ட விதம் இருக்கிறதே... சிம்ப்ளி சூப்பர்! தன் மாமனாருக்கு சாப்பாடு கொண்டு போகும் போதெல்லாம் பக்கத்து படுக்கையில் இருப்பவருக்கும் சேர்த்துச் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவார். மாமனாரிடம் இதமாகப் பேசி, வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவார்.
ஹாஸ்பிடலில் இருப்பவர்கள் எல்லோரிடமும் (நர்ஸ், வார்ட் பாய், நோயாளிகள் என ஒருவரைக்கூட விடுவதில்லை) இவர் அன்பாகவும், கலகலப்பாகவும் பேசுவதைப் பார்த்து ஹாஸ்பிடல் முழுக்கவே இவருக்கு ஃபிரெண்ட்ஸாகி விட்டார்கள்! தினமும் சலித்துக் கொண்டே ஹாஸ்பிடலுக்குப் போவதற்குப் பதிலாக படு ஜாலியாக ஃபிரெண்ட்ஸ்களைப் பார்க்கப் போகும் இடமாக ஹாஸ்பிடலை மாற்றிக் கொண்டு விட்டார். இது ஒரு உதாரணம்தான். இது போல, எல்லாப் பிரச்னைகளையும் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் அவரது ட்ரிக்ஸைப் பார்த்து நான் பிரமித்துப் போவேன்.
உங்களுக்குள் இருக்கும் குழந்தையைக் கொண்டாடுங்கள்!
எப்போதும் ஃபார்மலாக இருந்து கொண்டு, சிரிக்காமல், இயல்பாக இருக்காமல் உங்களை ஜீனியஸாகவும், பக்குவமான ஆளாகவும் காட்டிக் கொள்ள முயற்சித்தால் பி.பி.தான் ஏறிப்போகும். உங்களுக்குள் இருக்கிற குழந்தைத்தனத்தை அவ்வப்போது வெளிக்காட்டுங்கள். எல்லா விஷயங்களையும், தீர ஆலோசித்து, திட்டமிட்டு திட்டமிட்டு வாழ்ந்தீர்கள் என்றால், வாழ்க்கை போராடித்து விடும். கொட்டுகிற மழையை குழந்தையைப் போல கைகொட்டி ரசிப்பது, பிடித்த பாடலை அனுபவித்துப் பாடுவது, கூட்டம் மிகுந்த பஸ்ஸில் ஜன்னலோர சீட் கிடைத்தால் குஷியாவது, தூங்கப் போகும் முன் குடும்பத்துடன் ஜாலியாக அரட்டையடிப்பது, ஏதாவது சின்ன விஷயத்தைச் சாதித்தால்கூட, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது... எல்லாமே உங்களை குதூகலப்படுத்தும். வாழ்க்கை மேல் பிடிப்பை ஏற்படுத்தும்.
உங்கள் வயதை ஒட்டிய ஆட்களிடம் மட்டும் பழகாமல் வயதானவர்களிடமும் நெருக்கமாகப் பழகுங்கள்.
‘‘பாட்டி... சிவாஜி படம் ரிலீஸாகப் போகுது தெரியுமா? ‘சென்னை_28’ படம் சூப்பர்! தில்லானா மோகனாம்பாள் படத்துல ‘நலம் தானா பாட்டு’.... சான்ஸே இல்லை! எத்தனை அற்புதமான டான்ஸ்!’’ என்று எல்லா விஷயங்களையும் வயதானவர்களிடம் ஷேர் பண்ணிக் கொள்ளுங்கள். பிறகென்ன, பாட்டியும் தாத்தாவும் உங்களிடம் தங்கள் அனுபவங்களை ஷேர் பண்ணிக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
நன்றாகத் தூங்குங்கள்.
தூங்கிய பிறகு பாருங்கள் உங்கள் எனர்ஜி லெவல் கன்னாபின்னாவென்று ஏறும் மாயாஜாலத்தை! சரியாகத் தூங்காவிட்டால் உங்கள் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும். விளைவு, கோபம், சோர்வு, எரிச்சல் எல்லாம் சூழ்ந்து உங்களை ஒரு வழி பண்ணி விடும்.
சின்னப் புன்னகையோடு வளைய வந்து பாருங்களேன்.
உங்களை அறியாமல் ஒருவித உற்சாகம் உங்களைத் தொற்றிக் கொள்ளும். விளைவு, எல்லாமே நல்ல விதமாய் நடக்க ஆரம்பித்துவிடும். அதனால், என்னதான் பார்த்துப் பார்த்து, டிரெஸ், மேக்கப் எல்லாம் பண்ணிக் கொண்டாலும், முகத்தில் சிரிப்பு இல்லை என்றால், ஸாரி... எல்லாமே சொதப்பலாகிவிடும்.
செய்கிற வேலையை ரசித்துச் செய்யுங்கள்
ஆபிஸ், வீடு என்று கடுமையான வேலைப் பளு பல பெண்களுக்கு எரிச்சல் மூட்டலாம்... மனசு எரிச்சலானால் உடம்பும் களைப்பாகி விடும். இதைத் தவிர்க்க முதலில் வேலையை, கடனே என்று செய்யாமல் விருப்பப்பட்டு சந்தோஷமாகச் செய்யுங்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நினைக்கிறீர்களா? ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருக்கும். வேலையின் மீது ஒரு விருப்பத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொண்டால், நாளடைவில் அதுவே உங்களுக்கு ஒரு வித அனிச்சையான பிரியத்தை ஏற்படுத்தி விடும். ஈடுபாட்டுடன் வேலையைச் செய்யும் போது மனசு எரிச்சலடையாது. உங்களது ஈடுபாட்டைப் பார்த்து உங்கள் அலுவலகத்திலும் உங்களுக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் சேர்த்துக் கிடைக்கலாம்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
நீங்கள் வேலை செய்கிற சூழல் சரியாக இல்லையென்றால், உங்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது.
அலுவலகத்தில் நல்ல காற்றோட்டமான அறை, சரியான வெளிச்சமான அறையாக அமைந்திருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லையென்றால், உங்கள் மேனேஜ்மென்ட்டில் பக்குவமாகச் சொல்லி அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையும், உற்சாகமும் தரும் வாசகங்களை, உங்கள் அலுவலக அறையில் ஒட்டி வைத்துக் கொண்டால், ஜலியான மனநிலை உங்களை அறியாமல் உங்களுக்கு வந்து விடும்!
மிகவும் களைப்பாக உணருகிறீர்களா?
சுத்தமான பாதாம் எண்ணெயைச் சிறிது எடுத்து உங்களுடைய புருவமும் மூக்கும் சந்திக்கும் இடத்தில் மென்மையாகத் தடவுங்கள். களைப்பு பறந்து, தூக்கம் கண்களைச் சுழற்ற ஆரம்பித்து விடும். இன்னொரு விஷயம், ஜலதோஷத்தால் ஏற்படும் மூக்கடைப்பும் இந்த ட்ரீட்மெண்டால் சரியாகி விடும்.
பரபர... வென்று எப்போதும் வேலை பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள்.
காற்றோட்டமுள்ள ஒரு இடத்தில் அவ்வப்போது ஒரு அரை மணி நேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள். இது உங்களது ஸ்டிரெஸ் ஹார்மோன்களை ரெகுலேட் செய்து, உங்களது எனர்ஜி லெவலை அதிகப்படுத்திவிடும்!
நெகடிவ்வாகப் பேசும் மனிதர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
குறிப்பாக சில ஃபிரெண்ட்ஸ்! ‘‘உன்னால அதெல்லாம் முடியாதுடி...’’ ‘‘போச்சு... பெரிய பிரச்னை ஆகப் போகுது பாரு...’’ என்கிற ரீதியில் பேசி உங்களை உற்சாகமிழக்க வைக்கும் பிரெண்ட்ஸ்களுக்கு உடனே டாட்டா சொல்லுங்கள்!
உங்கள் தாம்பத்யம் இனிக்க
எப்போதுமே இருக்கவே இருக்கிறது, வேலைகளும் பிரச்னைகளும். நீங்கள், உங்கள் கணவர் இருவர் மட்டும், எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இரண்டு முழு நாட்கள் எங்காவது தூரமாக வெளியே சென்று விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். சந்தோஷமாக உணர்வீர்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒருவரை ஒருவர் மட்டும் நம்பி வெளியே செல்லும்போது, உங்களுடைய அந்நியோன்யம் அதிகரிக்கும். இருவரும் சகஜமாக உணர்வீர்கள்.
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் நல்ல அன்டர்ஸ்டாண்டிங் வந்துவிட்டதா? ஓ.கே. தாம்பத்திய நெருக்கத்தில் உங்கள் கணவர் உங்களிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும். (உதாரணத்திற்கு, உங்களை அணைப்பது, முத்தமிடுவது போன்ற உங்கள் எதிர்பார்ப்புகளை டாப்-10 ஆகப் பட்டியலிட்டு உங்கள் கணவரிடம் கொடுத்து விடுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் பட்டியலிட்ட ஒவ்வொரு முறையில் அவர் உங்களிடம் அந்நியோன்யமாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள். இது மாதிரியான விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை இன்னும் ரொமாண்டிக்காக மாற்றும்.
பொருளாதாரப் பிரச்னை, அலுவலகத்தில் வேலை, குழந்தைகளின் படிப்பு என்று உங்களைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளுக்காக, உங்கள் கணவருடனான செக்ஸ§வல் உறவைத் தள்ளிப் போடாதீர்கள். சீரான தாம்பத்ய உறவு, உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ஹார்ட் பிராப்ளம் வரும் வாய்ப்பையும் தடுக்கும்.
விஷயம் சின்னது... சந்தோஷம் பெரிசு!
மாதம் ஒரு முறையாவது ஷாப்பிங் செல்லுங்கள். பார்க்கிற பொருளையெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைக்காமல், கடைகளையெல்லாம், கேஷ§வலாக நோட்டம் விட்டபடி ஒரு ஜாலி வாக் செல்லுங்கள். தலைக்கு மாட்டும் கிளிப், மலிவான விலையில் கிடைக்கும் பைஜாமா, குர்தாக்கள் என்று சில பொருட்களை வாங்கலாம். மணி பிளாண்ட், ரோஜாச் செடி என்று அவ்வப்போது செடி வகைகளைக் கூட வாங்கலாம். நாமும் வாழ்க்கையை அனுபவித்துத் தான் வாழ்கிறோம் என்கிற உணர்வு, இது சின்னச் சின்ன மலிவான ஷாப்பிங்குகளால் அதிகம் கிடைக்கும்.
அரக்கப் பரக்க சாப்பிட்டு, அரக்கப் பரக்க குளித்து... ஸ்டாப்! ஒரு நாளாவது ரிலாக்ஸ்டாக அம்மா செய்த இட்லியை ரசித்து ரசித்து சாப்பிடுங்கள். ரசித்து ரசித்து குளியுங்கள். (பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே குளிப்பது இன்னும் சுகம்) உங்களுக்குப் பிடித்த ஐஸ்க்ரீமை நாக்கைச் சப்புக் கொட்டியபடி சாப்பிடுங்கள்... ரசித்து, ரசித்து வாழ்வதில் சொர்க்கம் தெரியும்!
Post a Comment