பாசிப்பருப்பு தேங்காய்பால் முறுக்கு தேவையானப் பொருட்கள் பச்சரிசி - 4 கப் பாசிப் பருப்பு - ஒரு கப் எள்ளு - ஒரு தேக்கரண்டி தேங்காய் பால் - 2...
பாசிப்பருப்பு தேங்காய்பால் முறுக்கு
தேவையானப் பொருட்கள்
பச்சரிசி - 4 கப்
பாசிப் பருப்பு - ஒரு கப்
எள்ளு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
கல் உப்பு - 2 மேசைக்கரண்டி
சீனி - 3 தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு லிட்டர்
பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீரை வடித்து வெய்யிலில் காயவைத்து மெஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். எள்ளை தூசியில்லாமல் சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் பாசிப் பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பருப்பை குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலும் அதிகமாக 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை நன்கு குழைய வேக வைக்கவும்.
வெந்த பருப்பில் உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் போட்டு குழைய அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவை போட்டு அதனுடன் வேகவைத்து அரைத்த பாசிப்பருப்பு மற்றும் சுத்தம் செய்த எள்ளை தண்ணீரில் அலசி அதில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து அரிசி மாவில் ஊற்றி பிசையவும். மாவு முழுவதும் உப்பு சேரும்படி நன்கு பிசையவும்.
ஒரு பெரிய தேங்காயை துருவி எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு தேங்காய்க்கு 2 கப் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் பாலுடன் சீனியை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு அரிசி மாவில் தேங்காய் பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து பிசையவும்.
பிறகு ஒரு கப் தண்ணீர் எடுத்து, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு தளர முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். எள்ளுக்கு பதிலாக சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.
முறுக்கு உரலில் ஸ்டார் வடிவில் உள்ள அச்சியை போட்டுக் கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை ஆரஞ்சு பழ அளவில் உருண்டையாக உருட்டி முறுக்கு உரலில் வைத்து நிரப்பிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவு நிரப்பி வைத்திருக்கும் உரலை வைத்து எண்ணெய் முழுவதும் முறுக்கு பிழியவும். தனியாக ஒரு தட்டின் பின்புறத்திலோ அல்லது ப்ளாஸ்டிக் கவரிலோ பிழிந்து எடுத்து எண்ணெயில் போடலாம்.
முறுக்கு பிழிந்த சில நொடிகளில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க ஒரு மெல்லிய கம்பி அல்லது கரண்டியை வைத்து முறுக்கை நகற்றி விடவும். ஒரு நிமிடம் கழித்து முறுக்கை திருப்பி போட்டு வேக விடவும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் திருப்பி போட்டு வேக விடவும்.
எண்ணெய் அடங்கி முறுக்கு வெந்து பொன்னிறமானதும் முறுக்கில் உள்ள எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.
சுவையான பாசிப்பருப்பு தேங்காய் பால் முறுக்கு தயார்.
-------------------------------------------------------------------------
கார முறுக்கு
தேவையானப் பொருட்கள்
முறுக்கு மாவு - ஒரு கப்
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி உப்பை போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முறுக்கு மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மிளகாய் தூள், சீரகம் சேர்த்து கலந்து வைத்திருக்கும் முறுக்கு மாவுடன் உப்பு கரைத்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசைந்துக் கொள்ளவும். மாவு நன்கு மிருதுவாக இருக்க வேண்டும்.
ஒரு தட்டின் பின்புறத்தில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு பிறகு முறுக்கு பிழியும் உரலில் மாவை வைத்து தட்டில் பிழிந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை போடவும். ஒரு முறைக்கு 3 அல்லது 4 முறுக்குகள் போடலாம்.
2 நிமிடம் கழித்து திருப்பி விடவும். முறுக்கு வெந்ததும், எண்ணெய் அடங்கிய பின்னர் ஒரு நீளமான குச்சியைக் கொண்டு எடுக்கவும். சுவையான காரமான முறுக்கு தயார்.
---------------------------------------------------------------------------------------
பூண்டு கார சேவு
தேவையானப் பொருட்கள்
பூண்டு - 12
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒரு கப்
பொட்டுகடலை மாவு - ஒரு கப்
தனி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 1 1/2 கப்
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் சலித்து எடுத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பூண்டு பற்கள், மிளகாய் தூள், உப்பு மூன்றையும் ஒன்றாக போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுகடலை மாவு ஆகியவற்றை போட்டு அதனுடன் அரைத்த விழுதை போடவும்.
அதில் அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த பிறகு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். மாவை பிசைந்த பிறகு காரசேவு கரண்டியில், ஒரு முறை தேய்த்து பார்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதிலிருந்து ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெயை எடுத்து பிசைந்து வைத்திருக்கும் மாவுடன் ஊற்றி ஒரு முறை நன்கு பிசைந்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் காரசேவு கரண்டியை எண்ணெயின் மேல் புறம் பிடித்து கொண்டு அதில் மாவை வைத்து உள்ளங்கைகளால் அலுத்தி தேய்த்து விடவும். கம்பி போல் விழ வேண்டும்.
பின்னர் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் சத்தம் அடங்கி, பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும்.
கார சேவை எண்ணெய்யிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் எண்ணெய் வடிகட்டியை வைத்து அதில் போடவும். எண்ணெய் வடிந்ததும் எடுத்து விடவும்.
Post a Comment