மனித இயல்பின் தேட்டத்தில் உள்ள, ஷரீஅத் அங்கீகாரம் அளித்த உரிமைகள் - கடமைகள்!
மனித இயல்பின் தேட்டத்தில் உள்ள, ஷரீஅத் அங்கீகாரம் அளித்த உரிமைகள் - கடமைகள் முஹம்மத் பின் ஸாலிஹ் உஸைமீன் (ரஹ்) பதிப்புரை _____________...

மனித இயல்பின் தேட்டத்தில் உள்ள, ஷரீஅத் அங்கீகாரம் அளித்த
உரிமைகள் - கடமைகள்
முஹம்மத் பின் ஸாலிஹ் உஸைமீன் (ரஹ்)
பதிப்புரை
________________________________________
இஸ்லாம் ஓர் நிறைவான (தீன்) இறைமார்க்கம். மனித வாழ்க்கையின் எல்லா விவகாரங்களுக்கும் அது வழிகாட்டுகிறது.
இறைவனுடன் நமக்குள்ள தொடர்பு என்ன? மனிதர்கள் உள்ளிட்ட அவனுடைய அனைத்துப் படைப்புகளுடனும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் நேர்வழியின் அடிப்படை. இந்த ரீதியில் இறைவன், இறைத்தூதர், பெற்றோர்கள், உற்றார்கள், கணவன் - மனைவி, பிள்ளைகள், அண்டை வீட்டார்கள், ஆட்சியாளர்கள், முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோரின் உரிமைகளும் ஏன் முஸ்லிமல்லாதாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் கூட இஸ்லாமிய சன்மார்க்கத்தில் தெளிவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இத்தகைய அடிப்படை உரிமைகள் - கடமைகளைத் தான் இந்நூல் சுருக்கமாக எடுத்துரைக்;கிறது.
இவ்வுரிமைகள் மனித இயல்பிலேயே உள்ளவை என்பதற்கு ஏற்ப இந்நூலாசிரியர் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களின் விளக்கும் பாணியும் ஆங்காங்கே இறைவசனங்களையும் நபிமொழிகளையும் தொகுத்துத் தரும் பாங்கும் இதயத்தை இளகச் செய்யும் வகையில் அமைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக இறைவன், இறைத்தூதர், தாய் தந்தையர் ஆகியோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எளிய நடையில் அழகாக, ஆழமாக வலியுறுத்துகிறார்கள். அவற்றைப் படிக்கும் போது இறைநினைவு இதயத்தை ஆட்கொள்கிறது., கருணைமிக்க ஏகனாகிய அல்லாஹ்வை வணங்கி அவனுடைய ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும்., அப்பொழுதுதான் அவனுடைய அருட் கொடைகளுக்கு உண்மையில் நாம் நன்றி செலுத்துவோராய் ஆக முடியும் எனும் உணர்வு இதய ஆழத்தில் இருந்து பொங்கி எழுகிறது. இறைநம்பிக்கை உறுதிப் படுகிறது.
மனிதவாழ்வு எனும் சக்கரம் இந்த அச்சில் அமைந்தால் எந்தச் சிக்கலுமின்றி அமைதியாகச் சுழன்று கொண்டிருக்கும்;,. உலகில் அன்பும் மகிழ்வும் என்றும் நீடிக்கும் என்பது திண்ணம்.
இந்நூலாக்கப் பணியில் தக்க ஆலோசனைகள் அளித்த அன்பர்களுக்கு உளப்பூர்வமான நன்றியைத் தெரிவிப்பதுடன் அனைவருக்கும் நற்கூலி வழங்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறோம்!
5 - 10 - 1425
அன்புடன்
உனைஸா அபூ காலித் உமரி
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி கேட்கிறோம். பாவமன்னிப்புத் தேடி அவனிடமே மீளுகிறோம். மேலும் நமது மனத்தின் தீங்குகளை விட்டும் நமது தீய செயல்களை விட்டும்; அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ், எவரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை வழிகேட்டில் ஆழ்த்துவோர் யாரும் இல்லை., எவரை வழிகேட்டில் ஆழ்த்துகிறானோ அவருக்கு நேர்வழி காட்டுவோர் யாருமில்லை.
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை., அவன் இணைதுணை இல்லாத ஏகன் என்று சாட்சி சொல்கிறேன். முஹம்மத், அல்லாஹ்வின் அடியார்., தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன்.
முஹம்மத் நபி மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மீதும் சீரான முறையில் அவர்களைப் பின்பற்றியோர் அனைவர் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
நீதியைப் பேணுவதும் ஒவ்வொருவருக்கும் அவரவரது உரிமையைக் கூடுதல் குறைவின்றி வழங்குவதும் இஸ்லாமிய ஷரீஅத்தின் சிறப்பம்சங்களில் உள்ளவையாகும். நீதி செலுத்துதல், நன்மை செய்தல், உறவினர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
நீதி செலுத்துவதற்காகவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். வேதங்கள் அருளப்பட்டன. ஈருலகக் காரியங்கள் நிலைகொண்டிருப்பதும் நீதியைக் கொண்டுதான்.
நீதி என்பது என்ன? ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகளை வழங்குவதும் அவரவருக்குரிய அந்தஸ்தில் அவர்களை அமர்த்துவதும்தான் நீதி என்பது. எனவே உரிமைகளைப் பற்றி முறையாக அறியாத வரையில் அது நிறைவடையாது., உரிமைக்குரியவருக்கு உரிமையை வழங்கவும் முடியாது.
இந்த நோக்கத்தில் தான் இந்நூலை நாம் எழுதியுள்ளோம். இதில் மிக முக்கியமான உரிமைகள் - கடமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மக்கள் அவற்றை அறிந்து முடிந்தவரை செயல்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். அவை பற்றிய சுருக்கமான விளக்கம் வருமாறு:
அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்!
________________________________________
அல்லாஹ்வுக்குரிய இந்த உரிமை தான் உரிமைகளில் எல்லாம் மிக முக்கியமானது., கண்டிப்பானது., மகத்தானது! ஏனெனில் உயர்வுமிக்கவனாகிய அல்லாஹ்வுக்குரியதாகும் இது. அவன் இப்பேரண்டத்தின் படைப்பாளன். மாண்பும் மகத்துவமும் மிக்கவன். எல்லா விவகாரங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்தக்கூடியவன்.
உண்மையானவனும் உண்மையை தெளிவுபடுத்திக் காட்டக்கூடியவனுமாகிய பேரரசனுக்குச் செலுத்த வேண்டிய உரிமையாகும் இது. அவன் நித்திய ஜீவன். (இப் பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவன். இந்த வானங்களும் பூமியும் நிலைகொண்டிருப்பது அவனது உதவி கொண்டுதான். எதார்த்தமான முழு தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பொருளையும் படைத்துச் சீராக வடிவமைத்து பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதியையும் நிர்ணயித்தவன் அவனே.
இது எப்படிப்பட்ட அல்லாஹ்வுக்குரிய உரிமை எனில், முன்பு நீங்கள் எந்த ஒரு குறிப்பிடத்தக்க பொருளாகவும் இல்லாதிருந்தீர்கள்., அத்தகைய ‘இல்லாமையில்’ இருந்து உங்களைப் படைத்தவன் அவன் தான்.
இது எப்படிப்பட்ட அல்லாஹ்வுக்குரிய உரிமை எனில், உங்கள் அன்னையின் வயிற்றில் மூன்று இருள்களின் உள்ளே நீங்கள் சிசுவாக இருந்தபோது, உங்களுக்குத் தேவையான உணவையும் உங்கள் வளர்ச்சிக்கான ஊட்டச் சத்தையும் உங்களிடம் சேர்த்திட எவருக்கும் எந்த சக்தியும் இல்லாதிருந்த சூழ்நிலையில் உங்களுக்கு உண்ண உணவும் உடல் வளர்ச்சிக்கான ஊட்டச் சத்தும் அளித்து உங்கள் மீது அருள்மாரிப் பொழிந்து வளர்த்துப் பரிபாலித்துக் காத்;தவன் அந்த இறைவன் தான்!
நீங்கள் குழந்தையாக இருந்த போது உங்கள் உணவுக்காக அன்னையின் மார்பகங்களில் பால் சுரக்கச் செய்தவன் அவன் தான். அவற்றில் பால் அருந்தும் வழிகாட்டுதலையும் உங்கள் உள்ளுணர்வில் ஏற்படுத்தித் தந்தான். பெற்றோர் இருவரையும் உங்கள் மீது மனம் இரங்கும் வகையில் வசப்படுத்தித் தந்தான். இப்படி எத்தனையோ உதவிகளை அளித்து உங்களை ஆற்றல் மிக்கவராக அவன் உருவாக்கினான்.
ஆம், உங்கள் மீது பேரருட்கொடைகளைப் பொழிந்தான். அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் உங்களுக்கு வழங்கினான். அவற்றிலிருந்து பயன்பெறும் அளவு உங்களைத் தயார்படுத்தவும் செய்தான்!
உங்கள் அன்னையரின் வயிற்றில் இருந்து அல்லாஹ் உங்களை வெளிக்கொணர்ந்தான். நீங்கள் ஏதும் அறியாதிருந்த நிலையில்! செவி மற்றும் பார்வைப் புலன்களையும் சிந்திக்கும் இதயங்களையும் உங்களுக்கு வழங்கினான் - நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக" (16:78)
ஒரு கணம்; அவன் தனது கிருபையை உங்களை விட்டும் தடுத்திருந்தால் நீங்கள் என்றோ அழிந்திருப்பீர்கள். ஒரு விநாடி உங்களை விட்டும் தனது அருளை அவன் நிறுத்தியிருந்தால் நீங்கள் உயிர் பெற்றிருக்கவே முடியாது.
இந்த அளவுக்கு அல்லாஹ் உங்கள் மீது அருளும் கிருபையும் பொழிந்திருக்கும் நிலையில், அவனுக்குச் நீங்கள் செலுத்த வேண்டிய உரிமை இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது! ஏனெனில் அவன் உங்களைப் படைத்து, பல தகுதிகளை உடையவராக உங்களைத் தயார் செய்ததற்கும் பல்வேறு உதவிகளை அளித்தற்காகவும் உங்கள் மீது அவன் பெற்றிருக்கும் உரிமையாகும் இது. அந்த இறைவன் நிச்சயமாக உங்களிடம் கைமாறு எதுவும் கேட்கவில்லை. உணவும் வாழ்வாதாரமும் எது ஒன்றும் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.
ஏதேனும் வாழ்வாதாரம் அளிக்குமாறு நாம் உம்மிடம் கோருவதில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் நல்ல முடிவு இறையச்சத்திற்கே உள்ளது " (20 : 132)
உங்களிடமிருந்து அல்லாஹ் நாடுவது ஒன்றே ஒன்று தான். அதன் நலன் கூட உங்களையே சேர்கிறது. அது தான் இணைதுணையில்லா ஏக இறைவனாகிய அந்த அல்லாஹ்வை நீங்கள் வணங்க வேண்டும் என்பது!
ஜின்னுகளையும் மனிதர்களையும் நான் படைத்தது அவர்கள் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறில்லை. அவர்களிடம் இருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நான் நாடவில்லை. எனக்கு உணவு அளிக்க வேண்டும் என்றும் நாடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் உணவு அளிப்பவன். பேராற்றல் உடையவன். வலிமை மிக்கவன்" (51 :56 - 58)
உங்களிடமிருந்து இறைவன் விரும்புவது என்ன? எவ்வாறு இரட்சித்தலின் ஒவ்வொரு அம்சத்துடனும் உங்களுக்கு அவன் இரட்சகனாக இருக்கிறானோ அவ்வாறே அடிபணிதலின்; நிறைவான கருத்துக்களுடன் அவனுக்கு நீங்கள் அடிபணிந்திட வேண்டும் என்றுதான்; விரும்புகிறான். அவனுக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி, அவன் விலக்கும் தீமைகளை விட்டு விலகி வாழும் நல்லடியாராகவும் (வேதங்கள், தூதர்கள் மூலம்) அவன் அறிவிக்கும் செய்திகளை உண்மையென ஏற்கும் நம்பிக்கையாளராகவும் நீங்கள் திகழ்ந்திட வேண்டும் என்று தான் அவன் விரும்புகிறான்.
அவனுடைய அருட்கொடைகள், இடைவிடாமல் உங்கள் மீது முழுமையாகப் பொழிவதை நீங்கள் காண்கிறீர்கள். அத்தகைய அருட்கொடைகளுக்கு நன்றி மறத்தலைப் பதிலாகக் கொடுப்பதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?
உங்களுக்கு ஓர் உபகாரம் செய்த மனிதருக்கு நீங்கள் நன்றிக் கடன்பட்டிருக்கிறீர்கள் என்றால் அவரது விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட்டு அவருடன் மோதல் போக்கை மேற்கொள்ளவும் பகிரங்கமாக அவருக்கு முரண்பட்டு நடக்கவும் நீங்கள் வெட்கப்படுவீர்கள், இல்லையா?
அவ்வாறெனில் நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு கிருபையும் எந்த இரட்சகன் அருளியதோ துன்பங்கள் உங்களை விட்டும் விலகுவது எந்த இரட்சகனின் கருணையோ அப்படிப்பட்ட மாபெரும் பேருபகாரியான இறைவனுடன் நீங்கள் இப்படி நடந்து கொள்வது முறையாகுமா?
மேலும் உங்களிடம் உள்ள அருட்கொடைகள் யாவும் அல்லாஹ்விடம் இருந்து வந்தவை தாம். பிறகு உங்களுக்கு துன்பம் ஏதும் வந்தால் அவனிடமே நீங்கள் முறையிடுகிறீர்கள்" (16: 53)
அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டுமென எந்த ஓர் உரிமை மனிதர்கள் மீது விதிக்கப்பட்டதோ அது மிகவும் எளிது தான். லேசானது தான்! அதை எவருக்கு அல்லாஹ் இலகுவாக்கினானோ அவரைப் பொறுத்து இலகுவானதே! ஏனெனில் அல்லாஹ் அதில் எவ்வித சிரமத்தையும் நெருக்கடியையும் கஷ்டத்தையும் வைக்கவில்;லை.
மேலும் அல்லாஹ்வின் பாதையில் எவ்வாறு ஜிஹாத் - அறப்போர் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள். அவன் (தனது) பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும் தீனில்- இறைமார்க்கத்தில் உங்களுக்கு எவ்விதமான சிரமத்தையும் அவன் வைக்கவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ்தான், உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்று இதற்கு முன்பும் இ(ந்த வேதத்)திலும் பெயர் சூட்டியுள்ளான்., இந்தத் தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும் நீங்கள் பிற மக்கள் மீது சான்று வழங்குவோராகவும் திகழ வேண்டுமென்பதற்காக! எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள். ஜகாத் கொடுங்கள். மேலும் அல்லாஹ்வை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அவன்தான் உங்கள் பாதுகாவலன். அவன் எத்துணை சிறந்த பாதுகாலவன்., எத்துணை சிறந்த உதவியாளன்" (22 : 78)
எத்துணை சிறந்த கொள்கை இது! சத்தியத்தை நம்புதலும், பயன்மிக்க நற்செயல்களும் எவ்வளவு உயர்வானவை! சிறப்பு மிக்க இந்தக் கொள்கையின் அடிப்படை, இறைவன் மீது அன்பு செலுத்துவதும் அவனுக்குக் கண்ணியம் அளிப்பதும் ஆகும். அதன் நற்பயன் வாய்மையும் உறுதியான நிலைப்பாடுமாகும்.
ஒரு நாளைக்கு ஐவேளை தொழுவது கடமை. இந்தத் தொழுகைகள் மூலம் அடியார்களின் பாவங்களை அல்லாஹ் போக்குகிறான்., அவர்களின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். அவற்றின் மூலம் இதயங்களையும் இவ்வுலக வாழ்வின் நிலைகளையும் போக்குகளையும் சீர்படுத்தவும் செய்கிறான்.
இந்தத் தொழுகைகளை மனிதன் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்., அதுவும் தனது சக்திக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டும் என்று தான் கட்டளையிடப்படு கிறது!
உங்களால் முடிந்த அளவு அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள்" (64: 16)
(நோயாளியாக இந்த) இம்றான் பின் ஹ{ஸைன் (ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "நீர் நின்று தொழும். அதற்கு உம்மால் இயலாவிட்டால் உட்கார்ந்து தொழும். அதற்கும் உம்மால் இயலாவிட்டால் ஒரு பக்கமாகப் படுத்துக் கொண்டு தொழும்" (புகாரி. பாகம்: தொழுகையைச் சுருக்குவது தொடர்பான விஷயங்கள். பாடம்: உட்கார்ந்து தொழுதிட இயலவில்லையானால் ஒரு பக்கமாகப் படுத்துக்கொண்டு தொழட்டும். (1117))
ஜகாத் என்பது உங்கள் செல்வத்திலிருந்து மக்களின் தேவைகளை முன்னிட்டு வழங்கும் சிறிதளவு தொகையாகும். அதனை ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் கடன்பட்டவர்களுக்கும் ஜகாத் பெற்றிட தகுதியுடைய ஏனையோருக்கும் வழங்கிட வேண்டும்.
ஆண்டில் ஒரு மாதம் நோன்பு நோற்பது மற்றொரு கடமை. அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
‘’ஒருவர் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் அவர் வேறு நாட்களைக் கணக்கிட்டு நோற்றிட வேண்டும்;" (2: 185)
முதுமை போன்ற இயலாமையினால் நோன்பு நோற்க இயலாதவர் ஒவ்வொரு நாளுக்கும் ஓர் ஏழைக்கு உணவு வழங்கிட வேண்டும்.
சங்கைக்குரிய இறையில்லம் கஅபாவை ஆயுளில் ஒரு முறை ஹஜ் செய்வது சக்தியுள்ளவருக்கு கடமை.
இவை தான் அல்லாஹ்வுக்குச் செலுத்தும் உரிமைகளின் அடிப்படைகள். இவை தவிர, ஜிஹாத் செய்வது போன்று தற்காலிகச் சூழ்நிலைகளை முன்னிட்டு விதிக்கப்படும் கடமைகள் உள்ளன. அநீதிக்குள்ளானவருக்கு உதவி செய்வது போன்று சில காரணங்களை முன்னிட்டு வலியுறுத்தப்படும் கடமைகளும் உள்ளன.
சிந்தித்துப் பாருங்கள்! சகோதரரே! அல்லாஹ்வுக்கு நம் மீதுள்ள இவ்வுரிமைகளை நிறைவேற்றுவது எளிதானது., கூலியோ மிக அபரிமிதமானது. தொடர்ந்து இவற்றை நீங்கள் நிறைவேற்றி வந்தால் இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் பெரும் பாக்கியம் பெற்றுத் திகழ்வீர்கள். மேலும் நரகத்தில் இருந்து ஈடேற்றம் அடைந்து சுவனபதி செல்வீர்கள்.
(மறுவுலகில்) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு சுவனபதியில் நுழைவிக்கப்படுகிறானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன். இவ்வுலக வாழ்வு என்பது ஏமாற்றும் அற்ப இன்பமே தவிர வேறில்லை" (3: 185)
இறைத்தூதருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
________________________________________
இறைத்தூதருக்குரிய உரிமை தான் படைப்பினங்களுக்குச் செலுத்த வேண்டிய உரிமைகளிலேயே மிகவும் மகத்தானது. நபி(ஸல்) அவர்களுக்கு நம் மீதுள்ள உரிமை போன்று வேறு எவருக்கும் நம் மீது உரிமை இல்லை. நபியவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருப்பதுபோன்று வேறு எந்த மனிதருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே) நாம் உம்மைச் சான்று வழங்குபவராகவும் நற்செய்தி அறிவிப்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம். எதற்காகவெனில் (மக்களே!)நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதற்குத்தான்! நீங்கள் அவருக்கு (தூதருக்கு) உறு துணையாக இருப்பதற்காகவும் அவரைக் கண்ணியப் படுத்துவதற்காகவும் தான்" (48:8-9)
ஏனைய எல்லா மனிதர்கள் மீதான அன்பைக் காட்டிலும் நபியின் மீதான அன்புக்கு முன்னுரிமை அளிப்பது கடமை. எந்த அளவுக்கு எனில் ஒரு மனிதன் தனது நலனை விடவும் தன் பிள்ளைகள், பெற்றோர்களை விடவும் நபியின் மீது செலுத்தும் அன்புக்குத் தான் முதலிடம் கொடுத்திட வேண்டும். நபியவர்கள் அருளினார்கள்:
தன் பிள்ளைகளை விடவும், பெற்றோரை விடவும் ஏனைய மக்கள் அனைவரை விடவும் அதிகமாக என் மீது அன்புசெலுத்தாத வரையில் உங்களில் எவரும் நம்பிக்கை யாளராக ஆக முடியாது" (புகாரி, பகுதி: ஈமான். பாடம்: நபி (ஸல்) அவர்களை நேசிப்பது ஈமானைச் சேர்ந்தது. (எண் 15) முஸ்லிம், பகுதி: ஈமான். பாடம்: குடும்பத்தினர், பிள்ளைகள், மக்கள் அனைவரையும் விட அதிகமாக நபி (ஸல்) அவர்களை நேசிப்பது கடமை (எண் 44))
நபி (ஸல்) அவர்களுக்குச் செலுத்தும் உரிமைகளில் மற்றொன்று, அவர்களுக்கு உரிய முறையில் எவ்வித மிகைபாடோ குறைபாடோ இன்றி கண்ணியம் அளிப்பதும் மரியாதை செய்வதும் ஆகும்.
அவர்களின் வாழ்நாளில் அவர்களுக்குக் கண்ணியம் அளிப்பதெனில் அவர்களின் ஸ{ன்னத் நடைமுறைகளுக்கும் அவர்களின் சங்கைக்குரிய ஆளுமைக்கும் கண்ணியம் அளிப்பதாகும்.
அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களுக்குக் கண்ணியம் அளிப்பதெனில் அவர்களின் ஸ{ன்னத் எனும் வழி முறைகளுக்கும் அவர்கள் வழங்கிய சீர்மிகு ஷரீஅத் - சட்டங்களுக்கும் கண்ணியம் அளிப்பதாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் அன்புத் தோழர்கள் அளித்த கண்ணியத்தையும் மரியாதையையும் அறிபவர் அதன் உண்மை நிலையைத் தெரிந்து கொள்வார். சிறப்புக்கும் உயர்வுக்கும் உரிய தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்து தங்கள் மீதான கடமையை நிறைவேற்றினார்கள் என்பதைப் புரிந்து கொள்வார்.
ஹ{தைபிய்யா உடன்படிக்கையின் வரலாற்றில் இந்த உண்மை இடம் பெற்றுள்ளது. அதாவது நபி(ஸல்) அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குறைஷி குலத்தினர் அனுப்பி வைத்த உர்வா பின் மஸ்ஊத் என்பவர் திரும்பி வந்து கூறினார்: "ரோம், பாரசீக, அபீனீனிய மன்னர்களிடம் நான் சென்றுள்ளேன். முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கண்ணியம் அளித்தது போன்று எந்த மன்னருக்கும் அவருடைய தோழர்கள் கண்ணியம் அளிக்க நான் காணவில்லை. அவர், அவர்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதனை நிறைவேற்ற அவர்கள் விரைகிறார்கள். அவர் உளு செய்யும் பொழுது அவர் உளு செய்த நீரைப் பிடிக்கச் சண்டை போடுகிறார்கள். அவர் பேசினால் தங்களது குரல்களை அவரிடத்தில் தாழ்த்துகிறார்கள். அவர்கள் அவரைக் கூர்ந்து பார்ப்பதே இல்லை., அதன் நோக்கம் அவருக்குக் கண்ணியம் அளிப்பதேயாகும்"
இவ்வாறுதான் நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கண்ணியம் அளித்துவந்தார்கள். அதே நேரம் அல்லாஹ்வும் நபியவர்களின் இயல்பில் - மென்மை, இளகிய மனம் போன்ற மிக்க மேலான குண நலன்களையே அமைத்திருந்தான்;. கடுகடுப்பானவராகவும் வன்நெஞ்சராகவும் அவர்கள் இருந்திருந்தால் அவர்களை விட்டும் தோழர்கள் விலகிச் சென்றிருப்பார்கள்.
நபியவர்களுக்கு நம் மீதுள்ள மற்றோர் உரிமை என்னவெனில், கடந்த கால, வருங்கால நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் அறிவித்த செய்திகளை நாம் உண்மைப் படுத்திட வேண்டும். அவர்கள் பிறப்பித்த கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்திட வேண்டும். அவர்கள் விலக்கிய கண்டித்த தீமைகளை விட்டும் நாம் விலகிட வேண்டும். மேலும் அவர்களின் வழிகாட்டல்தான் நிறைவான வழி காட்டல் என்றும் அவர்கள் வகுத்தளித்த ஷரீஅத் சட்டங்கள்தாம் பூரணமானவை என்றும் நம்;புவதுடன் அவற்றை விடுத்து வேறு எந்தச் சட்ட திட்டங்களுக்கும் வாழ்க்கை முறைமைக்கும் நாம் முன்னுரிமை அளிக்கக்கூடாது.
அவ்வாறில்லை. (முஹம்மதே!) உம் இறைவன் மீது சத்தியமாக! இவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர் நீர் அளிக்கும் தீர்ப்பு குறித்து தமது உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு அடிபணியாத வரையில் இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆக முடியாது" (4 : 65) மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே!) கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்., அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவன். பெரும் கிருபையாளன்" (3 : 31)
நபி(ஸல்) அவர்களுக்கு நம் மீதுள்ள உரிமைகளில் இன்னோர் உரிமை என்னவெனில், அவர்கள் வகுத்துத் தந்த ஷரீஅத்திற்கும் வழங்கிய வழிகாட்டலுக்கும் பாதுகாப்பு நல்கிட வேண்டும். நிலைமைகளின் தேட்டத்திற்கு ஏற்ப மனிதன் தன்னிடமுள்ள சக்திகளைப் பயன்படுத்தி இந்தப் பாதுகாப்பை அளித்திட வேண்டும்.
எதிரிகள் ஆதாரங்களை அளித்தும் ஐயங்களை உருவாக்கியும் நபியின் வழிகாட்டல் மீது தாக்குதல் தொடுகிறார்கள் என்றால் நாம் அறிவின் அடிப்படையிலும் எதிரியின் ஆதாரங்களைத் தகர்த்து ஐயங்களை அகற்றுவது கொண்டும் அவற்றின் குழப்பங்களைக் கோடிட்டுக் காட்டுவது கொண்டும் இஸ்லாத்திற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும்.
ஆயுதங்கள் கருவிகளைக் கொண்டும் எதிரிகள் தாக்குதல் தொடுத்தால் ஆயுதங்களின் மூலம் தற்காப்பை மேற்கொள்ள வேண்டும்.
நபியவர்களின் ஷரீஅத்தின் மீதோ அவர்களின் தனிப்பட்ட ஆளுமையின் மீதோ எதிரிகள் தாக்குதல் தொடுத்தால், முஸ்லிம்கள் அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. தக்க பாதுகாப்பு அளிக்க சக்தி பெற்றிருந்தும் பதிலடி கொடுக்காமல் வாளாவிருக்க முடியாது.
பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
________________________________________
பெற்றோருக்குரிய சிறப்பையும் உரிமைகளையும் யாரும் மறுக்க முடியாது. பெற்றோர் இருவரும் தான் பிள்ளையின் வாழ்வுக்குக் காரணம். அவ்விருவருக்கும் பிள்ளையின் மீது அதிக உரிமை உள்ளது. சிறு வயதில் அவனை அவ்விருவரும்தான் பராமரித்துப் பாதுகாத்தனர். அவனது நிம்மதிக்காக அவ்விருவரும் சிரமப்பட்டனர். அவன் தூங்க வேண்டும் என்பதற்காக தங்களது தூக்கத்தைத் தியாகம் செய்தனர்.
குழந்தையாக இருந்த உங்களை, உங்கள் தாய், தனது வயிற்றில் சுமந்திருந்தாள். அப்போது அவளது உணவின் மூலம் தான் -அவளது ஆரோக்கியத்தின் மூலம் தான் நீங்கள் உயிர் வாழ்ந்தீர்கள். இவ்வாறு பெரும்பாலும் ஒன்பது மாதங்கள் கழிந்தன. இதையே இந்த வசனத்தில் அல்லாஹ் இப்படிச் சுட்டிக்காட்டுகிறான்:
அவனது தாய் நலிவுக்கு மேல் நலிவுற்று அவனைத் தனது வயிற்றில் சுமந்தாள்" (31 : 14)
பிறகு அவள் பெரும் சிரமத்தையும் களைப்பையும் துன்பத்தையும் தாங்கிக் கொண்டு இரண்டு வருடங்கள் (குழந்தையாகிய) உங்களுக்குப் பாலூட்டிப் பராமரித்து வளர்க்கிறாள். தந்தையும் அவ்வாறு தான் உங்களை குழந்தைப் பருவம் முதல் நீங்கள் சொந்தக் காலில் நின்று வாழும் காலம் வரைக்கும் சீரோடும் சிறப்போடும் நீங்கள் வளர்ந்து வருவதற்காக ஓடியாடி உழைக்கிறார். உங்களுக்கு கல்வியும் நல்லொழுக்கமும் நல்வழிகாட்டலும் அளிப்பதற்காக ஓய்வின்றி பாடுபடுகிறார். அந்நேரம் உங்களுக்கு நீங்களே நன்மையோ தீமையோ லாபமோ நஷ்டமோ செய்து கொள்ள எந்த சக்தியும் உங்களுக்கு இல்லாதிருந்தது. இதனால் தான் பெற்றோர் இருவருக்கும் நல்லுபகாரம் செய்யும்படி நன்றி செலுத்தும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
மேலும் பெற்றோர் நலன் பேண வேண்டுமென நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டாண்டுகள் பிடித்தன. (எனவே அவனுக்கு அறிவுரை கூறினோம்:) எனக்கு நன்றி செலுத்து., உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. மேலும் என்னிடமே திரும்பி வர வேண்டியுள்ளது என்று" (31:14) மற்றோர் இடத்தில்,
மேலும் தாய் தந்தையரிடம் மிகவும் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளும். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்த நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களைச் சீ என்று கூட கூறாதீர். மேலும் அவர்களைக் கண்டித்துப் பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமான வார்த்தைகளைப் பேசுவீராக. மேலும் பணிவுடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக. மேலும் என் இறைவா! சிறுவயதில் என்னை அவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தது போன்று நீ அவர்கள் மீது கருணை புரிந்திடு என இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக" (17: 23 - 24)
பெற்றோர் இருவருக்கும் நீங்கள் செய்ய வேண்டிய கடமை, அவர்களிடம் நீங்கள் அன்புடனும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். சொல், செயல் ரீதியிலும் நல்லுபகாரம் செய்திட வேண்டும். அவர்களுக்குப் பணம் வழங்கியும் பணிவிடை செய்தும் நல்லுதவி புரிய வேண்டும். அவ்விருவரின் சொல் அல்லாஹ்வுக்குப் பாவமாகவும் உங்களுக்குத் தீங்காகவும் இல்லாதிருக்கும் பட்சத்தில் அதற்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். மேலும் அவ்விருவரிடமும் நீங்கள் கனிவாகப் பேசிட வேண்டும்.
முகமலர்ச்சியுடன் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். முறையான பணிவிடைகளை அவர்களுக்கு அளித்திட வேண்டும். அவ்விருவரின் முதுமை, இயலாமை மற்றும் பலவீனம் ஆகியவற்றால் எந்தச் சிரமத்தையும் உள்ளத்தில் நீங்கள் உணராதிருக்க வேண்டும். அவர்களைப் பெரும் பாரமாக நீங்கள் கருதிடக் கூடாது.
அவ்விருவரின் இன்றைய நிலைமைக்கு எதிர்காலத்தில் நீங்களும் உள்ளாகலாம். இன்று அவ்விருவரும் தாய் - தந்தை என்பது போல் அன்று நீங்களும் தாய் தந்தை ஆகலாம். உங்கள் பெற்றோர் முதுமை பருவத்;தில் உங்களிடம் தங்கியிருப்பது போன்று நீண்ட ஆயுள் உங்களுக்கு எழுதப்பட்டிருந்தால் நீங்களும் முதுமை அடைந்து உங்கள் பிள்ளைகளிடம் தங்கியிருக்கும் நிலைக்கு உள்ளாகலாம். உங்கள் பிள்ளைகளின் அன்பும் அரவணைப்பும் உங்களுக்குத் தேவைப்படலாம்., உங்களது அன்பும் அரவணைப்பும் இப்பொழுது உங்கள் தாய் தந்தையருக்கு தேவை என்பது போன்று!
எனவே நீங்கள் உங்கள் பெற்றோரை அன்புடன் ஆதரித்தால் அதற்கான மகத்தான நற்கூலியும் உங்களுக்கு உண்டு.,அத்துடன் உங்கள் முதுமைக் காலத்தில் உங்கள் பிள்ளைகளின் கவனிப்பும் நல்லாதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய நற்செய்தி மூலம் மகிழ்வு கொள்ளுங்கள்!
ஒருவர் தன் பெற்றோரை நல்ல முறையில் கவனித்தால் அவருடைய பிள்ளைகள் நல்ல முறையில் அவரைக் கவனிப்பார்கள். ஆனால் பெற்றோரை நிந்தித்தால் அவருடைய மக்கள் அவரை நிந்திக்கும் நிலை தான் வரும். செயல் என்னவோ அதற்கேற்ப தான் கூலியும் அமையும். நீங்கள் நடந்து கொள்வது எப்படியோ அப்படியேதான் நடத்தப்படுவீர்கள்!
பெற்றோரின் உரிமைக்கு மிகப் பெரிய, உன்னத உயர் அந்தஸ்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அவனுடைய (தூதரின் உரிமையையும் உள்ளடக்கிய அவனது) உரிமையின்; அடுத்த அந்தஸ்தைத் தாய் தந்தையின் உரிமைக்கு அளித்துள்ளான்.
எனக்கு நன்றி செலுத்துவாயாக. மேலும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக" (31 : 14)
நபிகளார்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதைக் காட்டிலும் பெற்றோரிடம் அன்புடன் நடந்து கொள்வதற்கு முன்னுரிமை அளித்துள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் ஓர் அறிவிப்பில் உள்ளது: "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான அமல் எது? என்று நான் நபியவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேரப்படி தொழுவது. பிறகு எது? என்று மீண்டும் கேட்டேன். பெற்றோருக்குப் பணிவிடை செய்வது என்று கூறினார்கள். ‘பிறகு எது?’ என்று மீண்டும் கேட்டேன். அதற்கு ‘இறை வழியில் ஜிஹாத் செய்வது’ என்று கூறினார்கள்" (புகாரி, பகுதி: தொழுகைக்கான நேரங்கள். பாடம்: நேரப்படி தொழுவதன் சிறப்பு (எண் 527) முஸ்லிம். பகுதி: ஈமான். பாடம்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது சிறந்த அமல் என்பதன் விளக்;;;;கம் எண் 85))
இது, தாய் தந்தைக்குச் செலுத்த வேண்டிய உரிமையின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆனால் பெரும் பாலான மக்கள் இந்த உரிமையைப் பாழாக்கி விட்டார்கள். நிந்தித்தல், உறவைத் துண்டித்தல் என்பது வரை சென்று விட்டார்கள். பெற்றோருக்குத் தன் மீது எந்த உரிமையும் இல்லை என்று சிலர் கருதுவதை நீங்கள் பார்க்கலாம். அவ்விருவரையும் கேவலமாகவும் இழிவாகவும் கருதுகிறார்கள். அவர்களிடம் ஆணவமாக நடந்து கொள்கிறார்கள். இப்படிச் செய்வோர் அதற்கான கூலியை உடனடியாகவோ தாமதமாகவோ நிச்சயம் பெற்றே ஆக வேண்டும்.
பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
________________________________________
பிள்ளைகள் என்பது ஆண் மக்களையும் பெண் மக்களையும் குறிக்கும். பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது அவர்களுக்கு நற்கல்வியும் நல்லொழுக்கமும் அளிப்பதாகும்.
நல்லொழுக்கம் அளிப்பதென்றால் அவர்களின் உள்ளங்களில் தீன் - இறைமார்க்கத்தின் பற்றையும் நற்குணங்களையும் விதைத்து வளர்ப்பதாகும். இந்தத் துறையில் அவர்கள் பெரும் அளவு வல்லமை பெற்றுத் திகழ்வதற்கு அது வழிவகுக்கும்;! அல்லாஹ் கூறுகிறான்:
இறைநம்பிக்கையாளர்களே! மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருளாக இருக்குமே அப்படிப்பட்ட நரக நெருப்பில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" (66 : 6)
நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளரே! தனது கண்காணிப்பின் கீழ் உள்ளவர் பற்றி உங்கள் ஒவ்வொருவரிடமும் விசாரணை செய்யப்படும். ஒரு மனிதன் தன் குடும்பத்தினர் விஷயத்தில் கண்காணிப்பாளன் ஆவான். அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளவர் பற்றி அவனிடம் விசாரணை செய்யப்படும்" (புகாரி. பகுதி: ஜும்ஆ. பாடம்: கிராமங்களில், நகரங்களில் ஜும்ஆ (எண் 893) முஸ்லிம், பகுதி: ஆட்சி அதிகாரம். பாடம்:நீதமிக்க தலைவரின் சிறப்பும் அநீதியாளனின் தண்டனையும் (எண் 1827))
பிள்ளைகள், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதமாக உள்ளனர். மறுமை நாளில் பிள்ளைகள் பற்றி பெற்றோரிடம் விசாரணை செய்யப்படும். இறைமார்க்கக் கல்வியும் நல்லொழுக்கமும் ஊட்டி நற்பயிற்சி அளிப்பதன் மூலம் தான் பிள்ளைகள் தொடர்பான இந்தப் பொறுப்பில் இருந்து பெற்றோர் விடுபடமுடியும். அதன் மூலம் பிள்ளைகளும் நல்லோராக வளர்ந்து வருவர். இம்மையிலும் மறுமையிலும் பெற்றோருக்குக் கண் குளிர்ச்சியாக அமைவர். அல்லாஹ் கூறுகிறான்:
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களையும் இறைநம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் (சுவனத்தில்) நாம் ஒன்று சேர்ப்போம். மேலும் அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்த மாட்டோம்;. ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றின் பேரில் பணயம் வைக்கப்பட்டிருக்கிறான்" (52 : 21)
கடனைத் திருப்பிச் செலுத்தாமல் அடகுப்பொருளை மீட்க முடியாது என்பதுபோல் எந்த மனிதனும் தனது கடமையை நிறைவேற்றாமல் தன்னைத்தானே அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து காத்துக்கொள்ள முடியாது. (மொழிபெயர்த்தோன்))
மனிதன் இறந்துவிட்டால் அவனுக்கும் அவனுடைய அமலுக்கும் தொடர்பு இல்லாமலாகி விடுகிறது,. மூன்றைத் தவிர! நீடித்த நிலையான தர்மம், பயன் அளித்துக் கொண்டிருக்கும் கல்வி, அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் பிள்ளைகள்" (முஸ்லிம். பகுதி: மரணசாஸனம், பாடம்: ஒரு மனிதன் மரணம் அடைந்த பிறகு அவனைச் சென்றடையும் நன்மை (எண் 1631))
பிள்ளைகளுக்கு நற்பயிற்சி அளிப்பதன் நற்பயனாகும் இது. பிள்ளைகள் நற்கல்வி பெற்று நல்ல பண்புகளை உடையவர்களாய் வளர்த்து வந்தால் அது பெற்றோருக்கே நற்பயன் அளிக்கும்., மரணத்திற்குப் பிறகு வரும் வாழ்க்கையிலும் கூட அதன் பயன் நீடிக்கும்!
பெற்றோரில் பெரும்பாலோர் இந்தக் கடமையைச் சாதாரணமாகக் கருதிவிட்டனர்., தங்கள் பிள்ளைகளைப் பாழாக்கிவிட்டனர்., அவர்களை மறந்தே போய் விட்டனர். பிள்ளைகள் விஷயத்தில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் உள்ளனர். பிள்ளைகள் எங்கே போனார்கள்? எப்பொழுது வருவார்கள்? அவர்களின் நண்பர்கள் யார்? யார் யாருடன் அவர்கள் பழகுகிறார்கள்? என்பது பற்றி அவர்கள் விசாரிப்பதே கிடையாது. நன்மையின் பக்கம் அவர்களைத் திருப்புவதில்லை. தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பதில்லை.
ஆச்சரியம் என்னவெனில், இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொத்துகள் மீது அதிக அளவு பேராசை கொண்டிருக்கிறார்கள். அவற்றைப் பாதுகாப்பதிலும் பல்கிப் பெருகச் செய்வதிலும் அவற்றைச்; சீராகப் பராமரிப்பதிலும் வழித்திருந்து ஈடுபாடு கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் அந்தச் சொத்துக்களை பராமரித்துப் பெருகச் செய்வதன் பலன், பெரும்பாலும் அடுத்தவரைச் சென்றடைகிறது என்பதுடனே இப்படிச் செய்கிறார்கள். பிள்ளைகளுக்கோ எந்த முக்கியத்துவமும் அவர்கள் கொடுப்பதில்லை. ஆனால் பிள்ளைகளைப் பேணிப் பாதுகாப்பது தான் மிகவும் ஏற்றமானது. இவ்வுலகிலும் மறுஉலகிலும் அதிகப் பயன் அளிக்கக் கூடியது.
உணவு பானம் அளித்து மகனின் உடலுக்கு ஊட்டம் அளிப்பதும் ஆடைகள் அளிப்பதும் தந்தை மீது கடமை என்பது போல் கல்வி மற்றும் ஈமான் மூலம் அவனது இதயத்திற்கு ஊட்டச்சத்து அளிப்பதும் அவனது ஆன்மாவுக்கு தக்வா (இறையச்சம்) எனும் ஆடையை அணிவிப்பதும் அவர் மீது கடமையாகும். அந்த ஆடை தான் சிறந்ததாகும்.
பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய மற்றோர் உரிமை, மிகைபாடும் குறைபாடுமின்றி நல்லமுறையில் அவர்களுக்காகச் செலவு செய்வதாகும்.
அன்பளிப்புகள், வெகுமதிகள் விஷயத்தில் பிள்ளைகளில் ஒருவரை விட மற்றொருவருக்கு முன்னுரிமை அளிக்காதிருப்பதும் அவர்களின் உரிமைகளில் உள்ளது தான். ஒரு பொருளை ஒருவருக்குக் கொடுத்து விட்டு ஒருவருக்குக் கொடுக்காதிருப்பது கூடாது. நிச்சயமாக அது அநீதியாகும். நீதிக்குப் புறம்பானதாகும். அநீதியாளர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அது மட்டுமல்ல அன்பளிப்பு கிடைக்காத பிள்ளைகளின் உள்ளத்தில் அது வெறுப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கும் பெற்றோருக்கும் பகைமை உருவாகச் செய்யும்.
மக்களில் சிலரைப் பார்க்கலாம். பிள்ளைகளில் ஒருவர் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதிலும் கவனிப்பதிலும் மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் சிறப்புற்று விளங்குவார். அந்த மகன் செய்கிற பணிவிடைக்கும் பராமரிப்புக்கும் கைமாறாக சிறப்பு அன்பளிப்புகளை தந்தை வழங்குவதைக் காணலாம்.
ஆனாலும் ஒரு மகனிடம் உள்ள தனித்தன்மையைக் காட்டிப் பிள்ளைகளிடையே பெற்றோர் காட்டும் பாகுபாட்டை நியாயப்படுத்தக் கூடாது. பெற்றோரை அவர் நன்கு கவனித்துக் கொள்கிறார் என்பதற்காக அவருக்குச் சிறப்பு அன்பளிப்பு வழங்கக்கூடாது. ஏனெனில் பெற்றோரைக் கவனிப்பதற்கான கூலியை அல்லாஹ் வழங்குவான். அது அவனது பொறுப்பில் உள்ளது. மேலும் பெற்றோரை நன்கு கவனித்துக் கொள்ளும் மகனுக்குச் சிறப்பு அன்பளிப்புச் செய்வது தனது பணிவிடை குறித்து அவனை தற்பெருமை கொள்ளச்செய்யும். தனக்கெனத் தனிச் சிறப்பு உள்ளதெனக் கருதுவான். மேலும் அது மற்ற மகனுக்கு வெறுப்பூட்டும். அவன் தொடர்ந்து தந்தையை நிந்தித்துக் கொண்டிருப்பான்.
பின்னர் என்ன நடக்கும் என்பதை நிச்சயமாக நாம் அறியோம். சூழ்நிலைகள் மாறலாம். பெற்றோரை நன்கு கவனிக்கும் மகன் நிந்திப்பவனாக மாறலாம். நிந்திக்கும் மகன் நன்கு கவனிக்கக் கூடியவனாக ஆகலாம். ஏனெனில் மனிதர்களின் இதயங்கள் அல்லாஹ்வின் கைப்பிடியில் உள்ளன. அவன் விரும்புவது போல் அவற்றை அவன் மாற்றிக்கொண்டிருக்கிறான்.
புகாரி, முஸ்லிம் இரண்டிலும் பதிவாகியுள்ளது: நுஅ;மான் பின் பஷீர் அறிவிக்கிறார்கள்: "அவருக்கு, அவருடைய தந்தை பஷீர்பின் ஸஅத், ஒரு அடிமையை அன்பளிப்புச் செய்தார். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் அறிவித்தார். நபியவர்கள் கேட்டார்கள்: ‘உமது பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இது போல் அன்பளிப்புச் செய்தீரா?’ அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். நபியவர்கள் கூறினார்கள்: ‘அப்படியானால் அதை (உமது அன்பளிப்பை) திரும்பப் பெற்றுக் கொள்ளும்" (புகாரி, பாகம்: அன்பளிப்பு. பாடம்: பிள்ளைகளுக்கு அன்பளிப்புச் செய்தல் (எண் 2586) - முஸ்லிம், பாகம்: அன்பளிப்புகள். பாடம்: அன்பளிப்புச் செய்வதில் பிள்ளைகளில் ஒருவருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது வெறுக்கத்தக்கதாகும் (எண் 1623 - 13))
மற்றோர் அறிவிப்பில் உள்ளது: "அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு மத்தியில் நீதமாக நடந்து கொள்ளுங்கள்" (புகாரி, பாகம்: அன்பளிப்பு. பாடம்: அன்பளிப்புக்கு சாட்சி நியமித்தல் (எண்; 2587) முஸ்லிம். முன் சென்ற பாடத்தில்.)
வேறொரு வார்த்தையில் பதிவாகியுள்ளது: "இதற்கு என்னை விடுத்து வேறொருவரை சாட்சியாக்குங்கள். நிச்சயமாக நான் அநீதிக்கு சாட்சியம் அளிக்கமாட்டேன்" (புகாரி. பகுதி: சாட்சியங்கள். பாடம்: அநீதிக்குச் சாட்சியம் அளிக்கக் கூடாது. (எண் 2650) முஸ்லிம். முன் சென்ற பாடத்தில்.)
பிள்ளைகளில் ஒருவரை விட மற்றொருவருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிப்பதை நபியவர்கள் அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்கள். அநீதி செய்வது ஹராம்- தடுக்கப்பட்;டதாகும்.
ஆனால் ஒரு மகனுக்குத் தேவையான பொருளை வழங்கினால் அது மற்றொரு மகனுக்குத் தேவை இல்லை என்றால் அதில் குற்றமில்லை. எடுத்துக்காட்டாக பள்ளிக் கூடத்துப் பொருள்கள் வாங்கிக்கொடுப்பது, சிகிச்சை அளிப்பது, திருமணம் செய்து வைப்பது ஆகியவை ஒரு மகனுக்கு தேவை எனும் நிலையில் அந்த மகனுக்கு மட்டும் அவற்றைச் செய்து கொடுப்பதில் குற்றமில்லை. ஏனெனில் தேவையை முன்னிட்டு வழங்குவதாகும் இது. கட்டாயமாக வழங்கும் செலவுகளின் சட்டம் தான் இதற்கும்;.
உறவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
________________________________________
சகோதரர்கள், சிறிய தந்தையர், மாமாமார்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோரைப் போன்று உறவு முறையில் உங்களுடன் நெருங்கி வரக்கூடிய உறவினரின் உரிமையாகும் இது. ஏதேனும் ஒரு பந்தத்தின் அடிப்படையில் உங்களோடு உறவு கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் இந்த உரிமை உண்டு. உறவின் நெருக்கத்திற்கு ஏற்ப இது அமையும்.
உறவினர்களுக்கு -அவர்களுக்கு உரிய உரிமையை வழங்கிவிடும்" (17 : 26)
மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். உறவினருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்"(4:36)
உறவினருடன் நல்ல முறையில் உறவைப் பேணி வாழ்வது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். உறவின் வலிமை மற்றும் தேவையின் தேட்டத்திற்கு ஏற்ப அந்தஸ்து அளித்திட வேண்டும். சொல், செயல் ரீதியான உதவிகளையும் பொருள் ரீதியான பயன்களை வழங்கிட வேண்டும்., உறவைப் பேணிடவேண்டும். இது ஷரீஅத்தும் பகுத்தறிவும் மனித இயல்பும் விழையும் தேட்டமேயாகும்.
உறவினர்களுடன் இணைந்து வாழும்படி தூண்டக் கூடிய, நல்லார்வம் ஊட்டக்கூடிய நபிமொழிகள் அதிகம் உள்ளன.
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான். அவர்களைப் படைத்து முடித்த போது ‘இரத்த பந்தம்’ எழுந்து அல்லாஹ்வை நோக்கிக் கூறியது: ‘யா அல்லாஹ்! உறவை முறிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுபவனின் இடமாகும் இது. அதற்கு அல்லாஹ் சொன்னான்: ‘ஆம், எவன் உன்னை இணைத்து வாழ்கிறானோ அவனோடு நான் இணக்கமாகிறேன். எவன் உன்னைத் துண்டித்து வாழ்கிறானோ அவனை நானும் துண்டித்து விடுகிறேன். இது உனக்குத் திருப்தி தானே! ‘அதற்கு இரத்த பந்தம், ‘ஆம், நான் திருப்தி கொண்டேன்’ என்று கூறியது. அதற்கு இறைவன் இது தான் உனக்கு உரியது என்றான்’
பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் விரும்பினால் இந்த திருமறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்: (அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று யுத்தம் செய்வதிலிருந்து) நீங்கள் பின்வாங்கிச் சென்றால் பூமியில் மீண்டும் அராஜகம் செய்வீர்கள் என்பதையும் உங்கள் உறவுகளைப் பரஸ்பரம் துண்டித்துக் கொள்வீர்கள் என்பதையும் தவிர வேறெதையும் உங்களிடம் எதிர்பார்க்க முடியுமா, என்ன? இப்படிச் செய்பவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களைச் செவிடர்களாக்கினான். அவர்களின் பார்வைகளையும் குருடாக்கினான்" (47: 22 - 23) (புகாரி பாகம்: நல்லொழுக்கம். பாடம்: பந்துக்களுடன் இணைந்து வாழ்கிறாரோ அவருடன் அல்லாஹ் இணக்கமாகிறான். (எண் 5987) முஸ்லிம், பாகம்: நன்மை செய்தல், இணைந்து வாழ்தல், நல்லொழுக்கங்கள். பாடம்: இரத்த பந்தம், அதன் உறவைத் துண்டிப்பது விலக்கப்படல். (எண்2554))
மேலும் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்;: "எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டாரோ அவர் தனது இரத்த பந்தத்துடன் இணைந்து வாழட்டும்" (புகாரி. பாகம்: நல்லொழுக்கம். பாடம்: விருந்தினரை கௌரவித்தல், தாமே முன் வந்து அவருக்குப் பணிவிடை செய்தல். (எண் 6138))
மக்களில் பெரும்பாலோர் இந்த உரிமையை நிறைவேற்றாமல் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் வரம்பு மீறி நடக்கிறார்கள். சிலர் தன் உறவினரோடு இணைந்து வாழ்வதையே அறியாதிருப்பதை நீங்கள் காணலாம். பணத்தாலோ குணத்தாலோ அந்தஸ்தாலோ எந்தத் தொடர்பும் இன்றி அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாட்கள் மாதங்கள் என காலங்கள் பல கடக்கின்றன. அவர் உறவினர்களைப் பார்ப்பதே இல்லை., சந்திப்பதே இல்லை. ஏதேனும் அன்பளிப்பு செய்து நேசபாசம் வைத்துக் கொள்வதில்லை. இன்ப துன்பங்களில் கலந்து கொள்வதில்லை. ஏதேனும் தேவையை முன்னிட்டும் அவர்களிடம் செல்வதில்லை!
இன்னும் சொல்வதாயின், சில பேர் சொல் அல்லது செயலால் அல்லது சொல் செயல் இரண்டின் மூலமாகவும் உறவினருக்குத் தீங்கு அளிக்கிறாhகள். தூரமானவருடன் குலாவுகிறார்கள். உறவினருடன் பிணங்குகிறார்கள்!
மக்களில் சிலர் உள்ளனர். உறவினர்கள் இணைந்து வாழும் பொழுது இவர்களும் இணைந்து வாழ்வார்கள். அவர்கள் உறவைத் துண்டித்தால் இவர்களும் துண்டித்து விடுவார்கள். இப்படிச் செய்பவன் உண்மையில் உறவை இணைத்து வாழ்பவன் அல்லன். ஓர் உபகாரத்தைப் பெற்றமைக்காக பதிலுபகாரம் செய்கிறான், அவ்வளவுதான்! அது, உறவினர், உறவில்லாதவர் எல்லோருக்கும் கிடைப்பதுதானே! உபகாரத்திற்குப் பதிலுபகாரம் செய்வதென்பது உறவினருக்கு மட்டும் அல்லவே!
எனவே எவன், அல்லாஹ்வுக்காக என்று தூய எண்ணத்துடன் உறவை இணைத்து வாழ்கிறானோ அவன் தான் உண்மையில் உறவைப் பேணிவாழ்பவன். அவர்கள் இணைந்து வருவதையோ விலகிச் செல்வதையோ எதையும் அவன் பொருட்படுத்தமாட்டான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உறவைப் பேணி நடந்தால் பதிலுக்கு உறவைப் பேணுகிறானே அவன் இரத்த பந்தத்தைப் பேணி நடப்பவன் அல்லன். உண்மையில் சொந்த பந்தத்தைப் பேணுபவன் யார் எனில் உறவு முறிந்து போனாலும் உறவைப் பேணிக்காக்கிறானே அவன் தான்" (அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) (புகாரி. பாகம்;: நல்லொழுக்கம். பாடம்: பதிலுக்கு உறவைப் பேணுபவன் பந்தத்ததைப் பேணுபவன் அல்லன். (எண் 5991))
ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் ஒருமனிதர் கேட்டார்: "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவினர் உள்ளனர். நான் அவர்களுடன் இணைந்து வாழத் தான் விரும்புகிறேன்., ஆனால் அவர்கள் தான் எனது உறவைத் துண்டிக்கிறார்கள். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். அவர்களோ எனக்குத் தீங்கிழைக்கிறார்கள். நான் அவர்கள் விஷயத்தில் பொறுமையை மேற்கொள்கிறேன். அவர்களோ என்னுடன் அபத்தமாக நடக்கின்றனர்"
இதனைக் கேட்டதும் நபியவர்கள் சொன்னார்கள்: "நீர் சொல்வது உண்மையெனில் அவர்களின் முகத்தில் கரி பூசியவர் ஆவீர். இந்த நடத்தையை நீர் மேற் கொள்ளும் வரை அவர்களுக்கு எதிராக உமக்கு உதவி செய்யும் ஓர் உதவியாளர் அல்லாஹ்வின் சார்பில் உம்மோடு இருப்பார்" (முஸ்லிம்) (முஸ்லிம். பாகம்: நன்மை செய்தல், இணைந்து வாழ்தல், நல்லொழுக் கங்கள். பாடம்: இரத்த பந்தமும் அதன் உறவைத் துண்டிப்பதும் விலக்கப் படல். (எண் 2558))
உறவினருடன் இணைந்து வாழும் போது, அப்படிப்பட்டவருடன் நிச்சயமாக அல்லாஹ் இவ்வுலகிலும் மறு உலகிலும் இணக்கமாகிறான்., அவருக்குக் கிருபை புரிகிறான்., காரியங்களை அவருக்கு எளிதாக்குகிறான்., துன்பங்களை அகற்றி இன்பம் அளிக்கிறான்! அது மட்டுமல்ல! பந்துக்களுடன் இணைந்து வாழ்வதன் மூலம் குடும்பங்களுக்கு மத்தியில் நெருக்கமும், பரஸ்பர அன்பும் ஒருவர் மற்றவர் மீது இரக்கம் கொள்வதும் இன்ப துன்பங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பதும், அதனால் எற்படும் அக மகிழ்ச்சி போன்ற எல்லா நன்மைகளும் உள்ளன. இவை யாவும் அனுபவப்பூர்வமாக அறியப்பட்ட வையாகும். ஆனால் பந்த முறிவு ஏற்பட்டால், ஒருவரை விட்டும் ஒருவர் விலகிப் போனால் எல்லாவும் தலை கீழாகி தீமைகளாகவே முடியும்!
கணவன் - மனைவியின் உரிமைகள், கடமைகள்
________________________________________
திருமணத்தில் முக்கியமான பல விளைவுகளும் மிகப் பெரிய தேட்டங்களும் உள்ளன. திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் பிணைக்கும் ஓர் ஒப்பந்தமாகும். அவர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் நிறைவேற்ற வேண்டிய அவசியமான உரிமைகளையும் கடமைகளையும் திருமணம் சுமத்துகிறது. அவை முறையே உடல் ரீதியான கடமைகள். கூட்டு வாழ்வு ரீதியான கடமைகள். பொருள் ரீதியான கடமைகள் என உள்ளன.
ஒருவர் மற்றவருடன் நல்ல முறையில் இணைந்து வாழ்வது கணவன் மனைவி இருவர் மீதும் கடமையாகும். தன் மீது கடமையாக உள்ள உரிமையை எவ்வித வெறுப்பும் தட்டிக்கழிப்பும் இன்றி தாராள மனத்துடன் இலகுவாக அளித்திட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்"(4:19)
மற்றோரிடத்தில்,
பெண்களுக்குச் சில கடமைகள் உள்ளது போன்று முறைப்படி அவர்களுக்குச் சில உரிமைகளும் உள்ளன. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு" (2:228)
கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ள உரிமைகளை முறையாகச் செலுத்தினால் அவ்விருவரின் வாழ்க்கை பாக்கியம் மிக்கதாகத் திகழும். இன்பமும் மகிழ்வும் நீடித்திருக்கும். இல்லையெனில் பிணக்கும் பிரிவும் தான் ஏற்படும். அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் துன்பங்கள் தாம் சூழும்.
பெண்ணிடம் நல்லவிதமாக நடந்துகொள்வது, அவளது நிலையை அனுசரித்துப் போது பற்றியும் பூரணமான நிலை (அவளிடம்) சாத்தியமற்றது என்பது பற்றியும் நிறைய நபிமொழிகள் வந்துள்ளன. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து (கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக்) கொள்ளுங்கள். ஏனெனில் பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேல் பகுதி மிகக் கோணலானது. நீ அதை (பலவந்தமாக நேராக்க முயன்றால் அதை உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே பெண்கள் விஷயத்தில் நல்லவிதமான நடக்க வேண்டும் எனும் என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்" (புகாரி. பகுதி: நபிமார்களின் செய்திகள். பாடம்:ஆதத்தையும் அவருடைய சந்ததிகளையும் படைத்தது. (3331) முஸ்லிம். பகுதி: பாலூட்டுதல். பாடம்: பெண்கள் விஷயத்தில் அறிவுரை கூறுதல் (1468 - 60))
மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: "நிச்சயமாக பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். உனக்கு எந்த வகையிலும் நேர்வழிக்கு வரமாட்டாள். நீ அவள் மூலம் சுகம் அனுபவிக்க வேண்டுமானால் அவளில் கோணல் இருக்கவே தான் அவளைக் கொண்டு நீ சுகம் அனுபவிக்க வேண்டும். அவளை நேராக்கியே தீருவேன் என்று நீ புறப்பட்டால் அவளை முறித்து விடுவாய். அவளை முறிப்பதுதான் அவளை மணவிலக்கு செய்வது என்பது" (ஸஹீஹ் முஸ்லிம். முன் சென்ற பகுதிலேயே வந்துள்ளது. (1468 - 60))
மேலும் நபிகளார்(ஸல்) அவர்கள் அருளினார்கள்;: "ஓர் இறைநம்பிக்கையாளன் இறைநம்பிக்கை கொண்ட பெண்ணை (மனைவியை) கோபிக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவன் வெறுத்தான் எனில் இன்னொரு குணத்தை பொருந்திக் கொள்ளலாம்" (ஸஹீஹ் முஸ்லிம் பகுதி: பாலூட்டுதல் பாடம்: பெண்கள் விஷயத்தில் அறிவுரை கூறுதல் (1469))
இந்த ஹதீஸ்களின் மூலம் தம் சமுதாயத்தினருக்கு நபி (ஸல்) அவர்கள் தரும் வழிகாட்டல் இது தான்: ஒரு கணவன் தன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவளிடம் இலகுவாக உள்ள குணம் எதுவோ அதனையே அவன் பொருந்திக் கொள்வது அவசியம். ஏனெனில் அவள் படைக்கப்பட்டிருக்கும் இயல்பு நிலை என்னவெனில், அவள் பரிபூரணமான நிலையில் இருக்க மாட்டாள் என்பது தான். மாறாக அவளிடம் அவசியம் கோணல் இருக்கத்தான் செய்யும். அவள் படைக்கப் பட்டுள்ள இயல்பான போக்கின்படியே அவளிடம் நடந்து கொண்டாலே தவிர ஒரு ஆண், அவளோடு இன்பமான வாழ்க்கையை மேற்கொள்வது சாத்தியமாகாது.
மேலும் இந்த நபிமொழிகள் மூலம் தெரியவருகிறது: ஒரு பெண்ணிடம் உள்ள நல்ல அம்சங்களையும் கெட்ட அம்சங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவளது ஒரு குணம் வெறுப்புக்குரியது எனில் அவளிடம் பொருந்திக் கொள்கிற மற்றொரு குணத்துடன் அதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வெறுப்பு, கோபம் எனும் கண்ணாடி மூலம் மட்டுமே அவளைப் பார்க்கக் கூடாது.
பெரும்பாலான ஆண்கள் தம் மனைவியிடம் இருந்து முழுமையான பரிபூரணமான நிலையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இது சாத்தியமில்லாததாகும். இதனால்தான் கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் அவர்கள் ஆளாகிறார்கள். மேலும் அவர்களுடைய மனைவியர் மூலம் சுகம் அனுபவிப்பதும் இன்பமாக வாழ்வதும் அவர்களுக்கு சாத்தியமாகாமல் போய் விடுகிறது. சிலN பாது மணமுறிகூட ஏற்பட்டு விடுகிறது.
நபி(ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியது போன்று: "(கோணலாக உள்ள) அவளை நிமிர்த்தியே தீருவேன் என்று நீ பிடிவாதமாக இருந்தால் அவளை முறித்து விடுவாய். அவளை முறித்தல் என்பது தான் மணமுறிவு"
எனவே கணவன் சற்று பாராமுகமாக நடந்து கொள்ள வேண்டும். மனைவியின் ஒவ்வொரு செயல்களையும் துருவி ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது. கண்டும் காணாதது போல் இருந்திட வேண்டும். ஆனால் ஒன்று: தீன் - இறைமார்க்கத்திற்கோ கௌரவத்திற்கோ அது பங்கம் விளைவிக்காதிருக்க வேண்டும்.
கணவனின் கடமைகள்;
________________________________________
உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் அதற்கான செலவுகளுக்குப் பணம் கொடுப்பதும் கணவன் மீதுள்ள கடமைகளாகும். ஏனெனில் அல்லாஹ் கூறியுள்ளான்:
(குழந்தையின் தாயாகிய) அவர்களுக்கு நல்ல முறையில் உணவளிப்பதும் உடைகள் கொடுப்பதும் குழந்தையின் தந்தை மீதுள்ள கடமையாகும்" (2: 233)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முறைப்படி அவர்களுக்கு (மனைவியருக்கு) உணவு, உடை அளிப்பதும் அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளாகும்"
ஒரு தடவை நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செலுத்த வேண்டிய கடமை என்ன? என்று! அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: "நீ உணவு உட்கொண்டால் அவளுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். நீ (புதிய) ஆடைஅணியும் போது அவளுக்கும் அவ்வாறு அணியக் கொடுக்கவேண்டும். அவளை நீ முகத்தில் அடிக்கக் கூடாது. கடின வார்த்தை கூறிக் கண்டிக்க வேண்டுமென்றாலோ பேசாமல் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றாலோ உங்கள் வீட்டினுள் தான் வைத்துக் கொள்ள வேண்டும்" (அபூ தாவூத். பாகம்: திருமணம். பாடம்: மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள். (எண் 2142) இப்னு மாஜா. பாகம்: திருமணம். பாடம்: மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள். எண் 1950) அல்பானிஅவர்கள் மிஷ்காத் நூலுக்கு எழுதிய மேலாய்வில் இதனைக் கூறியுள்ளார். (எண் 2- 972) இதன் அறிவிப்புத் தொடர் ஹஸன் தரத்திலானது.)
மனைவிக்குக் கணவன் செலுத்த வேண்டிய மற்றொரு கடமை என்னவெனில், அவளுக்கும் அவளது சக்களத்திக்கும் மத்தியில் அவன் நீதி செலுத்த வேண்டும்;., அவனுக்கு இரண்டு மனைவியர் இருக்கும் பட்சத்தில்! அவ்விருவரின் செலவீனங்களில், தங்கும் வசதிகளில், இரவைப் பகிர்வதில் வேறு என்னென்ன விஷயங்களில் நீதி செலுத்துவது சாத்தியமோ அவை அனைத்திலும் அவன் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு மனைவியின் பக்கமே முற்றிலும் சாய்வது பெரும் பாவமாகும்.
நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்;: "ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவியர் இருந்து ஒருத்தியைப் புறக்கணித்து விட்டு மற்றொருத்தியின் பக்கம் அவன் சாய்ந்து விட்டால் மறுமைநாளில் ஒரு புஜம் சாய்ந்தவனாகவே அவன் வருவான்" (ஆபூ தாவூத். பாகம்: திருமணம். பாடம்: மனைவியர் மத்தியில் இரவு தங்குவதைப் பங்கீடு செய்வது. (எண் 2133) திர்மிதி. பாகம்: திருமணம். பாடம்: சக்களத்திகள் மத்தியில் சரிசமமாக நடந்து கொள்வது பற்றி வந்துள்ள விஷயங்கள். (எண் 1141) இப்னு மாஜா. பாகம்: திருமணம். பாடம்: மனைவியர் மத்தியில் இரவு தங்குவதைப் பங்கீடு செய்வது. (எண் 1969) ஸஹீஹ{ல் ஜாமிஉ வில் அல்பானி அவர்கள் இந்த நபிமொழியை ஆதாரப்பூர்வமானது என்று கூறியுள்ளார்கள்.)
ஆனால் நீதி செலுத்துவது சாத்தியம் இல்லாத காரியங்களில் அன்பு, மனநிறைவு போன்ற விஷயங்களில் அவன் மீது குற்றமில்லை. ஏனெனில் இது அவனது சக்திக்கு அப்பாற்பட்டவையாகும். அல்லாஹ் கூறுகிறான்:
மனைவியரிடையே முழுக்க முழுக்க நீதமாக நடந்திட நீங்கள் விரும்பினாலும் அது உங்களால் முடியாது"(4:129)
நபி(ஸல்) அவர்கள் எல்லா விஷயங்களிலும் தங்கள் மனைவியரிடையே பங்கிட்டு நீதமாக நடந்து கொள்பவர்களாய் இருந்தார்கள்.
மேலும் இவ்வாறு பிரார்த்தனை செய்பவர்களாகவும் இருந்தார்கள்: யா அல்லாஹ்! இதுதான் என்னால் முடிந்த அளவிலான நான் செய்யும் பங்கீடு. எவற்றின் மீது உனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதோ எனக்கு எந்த அதிகாரமும் இல்லையோ அப்படிப்பட்ட விஷயங்களில் என்னை நீ பழிப்புக்கு உள்ளாக்காதே" (ஆபூ தாவூத். பாகம்: திருமணம். பாடம்: மனைவியர் மத்தியில் இரவு தங்குவதைப் பங்கீடு செய்வது. (எண் 2134) திர்மிதி. பாகம்: திருமணம். பாடம்: சக்களத்திகள் மத்தியில் சரிசமமாக நடந்து கொள்வது பற்றி வந்துள்ள விஷயங்கள். (எண் 1140) இப்னு மாஜா. பாகம்: திருமணம். பாடம்: மனைவியர் மத்தியில் இரவு தங்குவதைப் பங்கீடு செய்வது. (எண் 1971))
ஆயினும் அவன், ஒரு மனைவிக்கு மற்றவளை விடவும் அவளது அனுமதியுடன் முன்னுரிமை கொடுத்தால் அதில் குற்றமில்லை. சௌதா(ரலி) அவர்கள் தமது பங்கிலுள்ள நாளை ஆயிஷா(ரலி) அவர்களுக்கு விட்டுக் கொடுத்த போது நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அவர்களது பங்கிலுள்ள நாளையும் சௌதா விட்டுக் கொடுத்த நாளையும் சேர்த்து அளித்து போன்று! மேலும் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்த நாளில், ‘நாளை நான் எங்கே தங்குவேன்? நாளை நான் எங்கே தங்குவேன்?’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். நபியவர்கள் தமது விருப்பப்படி தங்குவதற்கு அவர்களின் மனைவியர் அனுமதி அளித்தனர். அவ்வாறே ஆயிஷாவின் வீட்டிலேயே நபியவர்கள் தங்கியிருந்தார்கள், மரணம் அடையும் வரையில்! (புகாரி. பாகம்: திருமணம். பாடம்: ஒரு மனிதன் தன் மனைவியரிடம் அனுமதி கேட்டால். (எண் 5217) முஸ்லிம். பாகம்: நபித்தோழர்களின் சிறப்பகள். பாடம்: ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு. (எண் 2443))
மனைவியின் கடமைகள்
________________________________________
மனைவி செலுத்த வேண்டிய கடமைகள் தான் கணவன் செலுத்த வேண்டிய கடமைகளை விட அதிமுக்கிய மானவை. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:
பெண்களுக்குச் சில கடமைகள் உள்ளது போல் பொதுவான நியதிப்படி அவர்களுக்குச் சில உரிமைகளும் உள்ளன., ஆயினும் பெண்களை விட ஆண்களுக்கு ஒரு படி உயர்வு உண்டு (2 : 228)
ஆண் தான் பெண்ணை நிர்வகிப்பவன். அவளது நலன்களை அவன் பேணிடவேண்டும். அவளுக்குக் கல்வியும் நல்லொழுக்கமும் அளித்து நல்வழி காட்டிட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்;: ஆண்கள் தாம் பெண்களை நிர்வகிப்பவர்கள். அதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலரை விடச் சிலருக்கு உயர்வை அளித்துள்ளான் என்பதும் மேலும் ஆண்கள் தங்கள் செல்வத்தில் இருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்" (4 : 34)
கணவனுக்கு மனைவி செலுத்த வேண்டிய கடமைகள் யாதெனில், அல்லாஹ்வுக்கு பாவமாக இல்லாத காரியங்களில் அவள் அவனுக்குக் கீழ்ப்படிந்திட வேண்டும். அவனது இரகசியங்களையும் சொத்துகளையும் அவள் பாதுகாக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டுமென நான் கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு ஸஜ்தா செய்யும்படி மனைவிக்கு கட்டளையிட்டிருப்பேன்"(அபூ தாவூத். பாகம்: திருமணம். பாடம்: மனைவி, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள். (எண் 2140) திர்மிதி. பாகம்: பாலூட்டுதல். பாடம்: மனைவி, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள். (எண் 1159) திர்மிதி அவர்கள் கூறுகிறார்கள்;: இது ஹஸன் ஃகரீப் தரத்திலான ஹதீஸ். ஸஹீஹ{ல் ஜாமிஉ - வில் அல்பானி அவர்கள் இதனை ஸஹீஹான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார். (எண் 5294))
மேலும் சொன்னார்கள்: ஒருவன் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும் போது அவள் அதனை மறுத்தால் அவன், அவள் மீது கோபமுற்ற நிலையில் இரவைக் கழித்தால் விடியும் வரையில் மலக்குகள் அவளை சபிக்கிறார்கள்" (புகாரி. பாகம்: திருமணம். பாடம்: ஒரு பெண் தன் கணவனுடன் படுப்பதை வெறுத்தவளாக இரவைக் கழித்தால். (எண் 5193) முஸ்லிம். பாகம்: திருமணம். பாடம்: ஒரு பெண் தன் கணவனுடன் படுக்கைக்குச் செல்வதை வெறுப்பது விலக்கப்பட்டதாகும். (எண் 1436 - 122))
மனைவியின் மற்றொரு கடமை என்னவெனில், முழுமையாக இன்பம் அனுபவித்தல் அவனுக்குக் கிடைக்காமல் அதனைப் பாழாக்கக்கூடிய எந்த அமலையும் அவள் மேற்கொள்ளக்கூடாது. எந்த அளவுக்கெனில், அவள் மேற்கொள்வது நஃபில் அதிகப்படியான வழிபாடாக இருந்தாலும் சரியே! (அதனை மேற்கொள்ளக் கூடாது) ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்: கணவன் ஊரில் இருக்கும் நிலையில் அவனது அனுமதியின்றி நோன்பு நோற்பது எந்தப் பெண்ணுக்கும் ஹலால் -ஆகுமானது அல்ல. அவனது வீட்டில் அவனது அனுமதியின்றி யாரையும் நடையேற்றுவதும் அவளுக்கு ஆகுமானது அல்ல" (புகாரி. பாகம்: திருமணம். பாடம்: ஒரு பெண் தன் கணவனது வீட்டில் அவனது அனுமதியின்றி யாரையும் அனுமதிக்கக் கூடாது. (எண் 5195) முஸ்லிம். பாகம்: ஜகாத். பாடம்: ஓர் அடிமை தன் எஜமானனின் செல்வத்திலிருந்து செலவு செய்வது பற்றி. (எண் 1026))
ஒரு மனிதன் தனது மனைவியை உவந்து கொள்வதை அவள் சுவனம் செல்வதற்கான காரணங்களில் ஒன்றாக ஆக்கினார்கள் நபியவர்கள். திர்மிதியில் உம்மு ஸல்மா(ரலி) அவர்களது ஓர் அறிவிப்பில் வந்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த ஒரு பெண் -அவளுடைய கணவன் அவளைத் திருப்திகொள்ளும் நிலையில் மரணம் அடைகிறாளோ அவள் நிச்சயம் சுவனம் செல்வாள்" (திர்மிதி. பாகம்: பாலூட்டுதல். பாடம்: ஒரு பெண், கணவனுக்குச் செய்யும் கடமைகள். (எண் 1161) இப்னு மாஜா. பாகம்: திருமணம். பாடம்: ஒரு பெண், கணவனுக்குச் செய்யும் கடமைகள். (எண் 1854) திர்மிதி கூறுகிறார்கள்: இது ஹஸன் ஃகரீப் தரத்திலானது.)
ஆட்சியாளர்கள் - குடிமக்களின் உரிமைகள், கடமைகள்
________________________________________
ஆட்சியாளர்கள் என்போர் முஸ்லிம்களின் காரியங்களுக்குப் பொறுப்பு ஏற்கும் அதிகாரம் உடையோர் ஆவர். எல்லாவற்றையும் உள்ளடக்கும் பொது அதிகாரமாக அது இருக்கலாம். நாட்டின் உயர்நிலை தலைவர் போன்று! அல்லது சிறிய அளவிலான அதிகாரமாக இருக்கலாம். குறிப்பிட்டதொரு நிர்வாகமோ அல்லது பணியோ ஒப்படைக்கப்பட்ட அதிகாரி போன்று!
இத்தகைய ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களுக்கு மக்கள் மீது சில உரிமைகள் உள்ளன. இதேபோல மக்களுக்கும் ஆட்சியாளர்கள் மீது சில உரிமைகள் உள்ளன.
ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய கடமை என்ன வெனில், அவர்கள் மீது அல்லாஹ் சுமத்திய நிர்வாகம் எனும் அமானிதத்தை முறையாக அவர்கள் கவனிக்க வேண்டும். அது தொடர்பான எல்லாப் பொறுப்புகளையும் அவர்கள் ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். மக்களின் நலன் நாடுதல் என்பது தான் அது. இவ்வுலக வாழ்வின் முன்னேற்றத்திற்கும் மறுவுலகின் வெற்றிக்கும் பொறுப்பேற்கக்கூடிய சீரான, செம்மையான பாதையில் மக்களை வழிநடத்திச் செல்லுதல் என்பதும்தான் அது.
‘முஃமின்கள்’ எனும் இறைநம்பிக்கையாளர்களின் பாதையைப் பின்பற்றுவதில்தான் அது அமைந்துள்ளது. அது தான் நபி(ஸல்) அவர்கள் சென்ற பாதை! ஏனெனில் அதில் தான், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அவர்களின் ஆட்சியில் வாழும் மக்களுக்கும் அவர்களது அதிகாரத்தின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் நற்பாக்கியம் உள்ளது.
மேலும் இந்தப் பாதை தான் ஆட்சியாளர்களைக் குறித்து மக்களை அதிகம் அதிகம் மனநிறைவு கொள்ளச் செய்யக்கூடியது. அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தக்கூடியது. அவர்களின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியச் செய்யக்கூடியது. மேலும் ஆட்சியாளர்களிடம் அவர்கள் ஒப்படைத்துள்ள பொறுப்புகளில் அமானிதத்தை பாதுகாக்குமாறு செய்யக்கூடிய வழியும் இதுவே யாகும்.
ஏனெனில் எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து வாழ்கிறாரோ அவரை அல்லாஹ் மக்களை விட்டும் பாதுகாக்கிறான். எவர் அல்லாஹ்வின் விருப்பத்தை நாடி அதற்கேற்ப செயல்படுகிறாரோ அவருக்கு மக்களின் அன்பும் திருப்தியும் உதவியும் கிடைக்கச் செய்வதற்கு அல்லாஹ் பொறுப்பேற்கிறான். ஏனெனில் இதயங்கள் அல்லாஹ்வின் பிடியில் உள்ளன. தன் விருப்பப்படி அவற்றைப் புரட்டுகிறான்.
ஆட்சியாளர்களுக்கு மக்கள் செய்ய வேண்டிய கடமை என்னவெனில், ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றுச் செய்யும் பணிகளில் அவர்களின் நலனை மக்கள் நாடவேண்டும்., அவர்களிடம் கவனக்குறைவு வந்தால் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். சத்தியத்தை விட்டும் அவர்கள் பிறழ்ந்து செல்லும் பொழுது நன்நெறியின் பக்கம் அவர்களை அழைத்திட வேண்டும். அவர்கள் பிறப்பிக்கும் ஆணைகள் பாவமான விஷயங்களாக இல்லை எனில் அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
ஏனெனில் அப்படிச் செய்வதில் தான் ஆட்சியதிகாரமும் சட்டம் ஒழுங்கும் சீர் பெற முடியும். ஆட்சியாளர்களுக்கு எதிராக நடப்பதால், அவர்களோடு முரண்படுவதால் நாட்டில் தான் தோன்றித்தனமான, தன்னிச்சையான போக்கு தான் வளரும். எல்லாமே சீர்கெட்டுத்தான் போகும்!
ஆதனால் தான் தனக்கும் தன் தூதருக்கும் கீழ்ப்படியுமாறும் அதிகாரத்தில் உள்ளோருக்குக் கட்டுப்பட்;டு நடக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் (கீழ்ப்படியுங்கள்)" (4: 59)
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: செவியேற்பதும் கீழ்ப்படிவதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்., அவர்கள் விரும்பக்கூடிய அல்லது வெறுக்கக்கூடிய எதுவானாலும் சரியே! ஆனால் பாவத்தைக் கொண்டு ஏவப்பட்டாலே தவிர! பாவத்தைக் கொண்டு ஏவப்பட்டால் செவியேற்றலும் இல்லை. கீழ்ப்படிதலும் இல்லை" (புகாரி. பாகம்: ஜிஹாதும் வாழ்க்கை வரலாறுகளும். பாடம்: தலைவர் சொல் செவியேற்றல், கீழ்ப்படிதல். (எண் 2955) முஸ்லிம். பாகம்: ஆட்சி யதிகாரம். பாடம்: பாவமல்லாதவற்றில் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவது கடமை, பாவமான காரியத்தில் கீழ்ப்படிவது விலக்கப்பட்டது. (எண் 1839))
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். எல்லோரும் ஓரிடத்தில் தங்கினோம். அப்பொழுது நபியவர்களின் அழைப்பாளர் ஒருவர் அஸ் ஸலாத்து ஜாமிஆ (தொழுகை கூடுகிறது) என்று அறிவிப்புச் செய்தார். உடனே நாங்கள் நபியவர்களின் சமூகத்தில் ஒன்று கூடினோம். நபியவர்கள் கூறினார்கள்:
திண்ணமாக அல்லாஹ் அனுப்பி வைத்த எந்த நபியானாலும் அவர் மீது இது கடமையாக இருந்தது. அதாவது, அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்த நன்மைகள் அனைத்தையும் மக்களுக்கு அவர் அறிவித்துக் கொடுத்திட வேண்டும். அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து தீமைகள் குறித்தும் மக்களை எச்சரிக்கை செய்திட வேண்டும்.
மேலும் நிச்சயமாக உங்களது இந்தச் சமுதாயத்தின் நன்னிலை அதன் ஆரம்ப காலகட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி காலத்திலோ பெரும் துன்பங்கள் ஏற்படும். நீங்கள் வெறுக்கும் பல காரியங்களும் நிகழும். மேலும் ஒன்று மற்றொன்றைத் தோற்கடிக்கும் வகையிலான குழப்பங்கள் தோன்றும்.
அந்தக் குழப்பங்கள் வரும் பொழுது நம்பிக்கையாளன் சொல்வான்: இதோ, எனது அழிவு! என்று! எவர் நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சுவனம் செல்ல விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் மரணத்தைச் சந்திக்கட்டும். தன்னிடம் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறாரோ அப்படியே அவரும் மக்களிடம் நடந்து கொள்ளட்டும்"
மேலும் ஒருவர் இமாம் எனும் தலைவரிடம் கையில் கை பதித்து விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்தால் உள்ளத்தால் அன்பும் செலுத்தினால் முடிந்த வரையில் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கட்டும். இந்நிலையில் வேறொருவர் வந்து அவரிடம் தர்க்கம் செய்து கலகம் விளைவித்தால் அந்த வேறொருவரின் கழுத்தை வெட்டி வீழ்த்தட்டும்;" (முஸ்லிம். பாகம்: ஆட்சியதிகாரம். பாடம்: கலீஃபாக்களிடம் - முதலா மவரிடம் பிறகு மற்றவரிடம் எனும் முறையில் விசுவாசப்பிரமாணம் செய்து கொடுப்பது கடமை. (எண் 1844))
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் நபியே! தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? எங்கள் மீது அமீர்கள் ஆட்சி செலுத்தினால், அவர்களின் உரிமையை எங்களிடம் கேட்கிறார்கள்., அதே நேரத்தில் எங்கள் உரிமையை எங்களுக்குத் தர மறுக்கிறார்கள் என்றால் எங்களுக்கு நீங்கள் தரும் கட்டளை என்ன? என்று கேட்டார். அந்த மனிதரை நபி(ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பிறகு இரண்டாவது முறையும் நபியவர்களிடம் அதே கேள்வியை அவர் கேட்டார். அப்பொழுது நபியவர்கள் சொன்னார்கள்: செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடங்கள். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகள் அவர்கள் மீது உள்ளன. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் உங்கள் மீது உள்ளன" (முஸ்லிம். பாகம்: ஆட்சியதிகாரம். பாடம்: உரிமைகளை மறுத்தாலும் அமீர்களுக்குக் கீழ்ப்படிவது பற்றி (எண் 1846))
ஆட்சியாளர்களுக்கு மக்கள் செய்ய வேண்டிய கடமைகளில் மற்றொன்று அவர்கள் மேற்கொள்ளும் திட்டப் பணிகளில் அவர்களோடு உறுதுணையாக இருக்க வேண்டும்., அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட காரியங்களை நிறைவேற்றும் வகையில் மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். ஒவ்வொருவரும் சமுதாயத்தில் தம் பங்களிப்பையும் பொறுப்பையும் அறிந்திட வேண்டும். அப்பொழுது தான் ஒவ்வொரு காரியமும் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆட்சியாளர்கள் தம் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் ஒத்துழைப்பு நல்க வில்லையானால் எந்தக் காரியமும் முறையாக நடைபெறாது.
அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
________________________________________
இவர் உங்களுக்கு அருகில் குடியிருப்பவர். எனவே நீங்கள் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளீர்கள். அவர் முஸ்லிம் என்பதுடன் குடும்ப ரீதியில் உங்கள் உறவினராகவும் இருந்தால் அவருக்கு மூன்று உரிமைகள் உள்ளன: அண்டை வீட்டின் உரிமை, உறவினர் உரிமை, இஸ்லாத்தின் உரிமை.
அவர் முஸ்லிம்., ஆனால் உறவினர் அல்லர் என்றால் அண்டை வீட்டு உரிமை, இஸ்லாத்தின் உரிமை எனும் இரண்டு உரிமைகள் அவருக்கு உண்டு.
அவர் உறவினர்தான்., ஆனால் முஸ்லிம் இல்லை என்றால் அண்டை வீட்டு உரிமை, உறவின் உரிமை என இரண்டு உரிமைகள் அவருக்குண்டு. அவர் உறவினரும் அல்லர்., முஸ்லிமாகவும் இல்லை என்றால் ஓர் உரிமை அவருக்கு உண்டு. அதுதான் அண்டைவீட்டின் உரிமை. (அபூ பக்ர் பஸ்ஸார் அவர்கள், ஹஸனிடம் இருந்தும் ஹஸன், ஜாபிர் பின் அப்துல்லாஹ்விடம் இருந்தும் அறிவித்துள்ள ஒரு நபிமொழியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதனை இப்னு கஸீர் அவர்கள் 4 : 36 ஆம் வசனத்தின் விளக்க உரையில் கூறியுள்ளார்கள்.)
அல்லாஹ் கூறுகிறான்: மேலும் தாய் தந்தையரிடம் நல்லவிதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டாருடனும் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள்" (4 : 36)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "அண்டை வீட்டாருடன் நல்ல விதமாக நடந்துகொள்ளுமாறு வானவர் ஜிப்ரீல் தொடர்ந்து எனக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்., அவரை வாரிசாக ஆக்கிவிடுவாரோ என்று நான் கருதும் அளவுக்கு (அது இருந்தது)" (நூல்: புகாரி) (புகாரி. பாகம்: நல்லொழுக்கம். பாடம்: அண்டை வீட்டாருடன் நல்லவிதமாக நடப்பதற்கு அறிவுறுத்தப்பட்டவர்கள். (எண் 6015) முஸ்லிம். பாகம்: நன்மை செய்தல், இணைந்து வாழ்தல், நல்லொழுக்கங்கள். பாடம்: அண்டை வீட்டாருடன் நல்லவிதமாக நடக்கவும் நல்லுபகாரம் செய்யவும் அறிவுரை கூறல். (எண் 2624 , 2625))
அண்டை வீட்டாருக்குரிய மற்றோர் உரிமையாதெனில், பொருள், பதவி, பயன்பாடு ஆகியவற்றால் முடிந்த வரையில் அவருக்கு உபாகாரம் செய்திட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
அண்டை வீட்டார்களிலேயே அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்தவர் யாரெனில், எவர் தன் அண்டை வீட்டாரிடம் நல்லவராக உள்ளாரோ அவர் தான்" (திர்மிதி. பாகம்: நன்மை செய்தல், இணைந்து வாழ்தல். பாடம்: அண்டை வீட்டாரின் உரிமை பற்றி. (எண் 1944) அஹ்மத். (எண் 2 - 167) அப்து பின் ஹ{மைத் (எண் 342) திர்மிதி கூறுகிறார்: இது ஹஸன் கஃரீப் தரத்திலானது. ஸஹீஹ{ல் ஜாமிஉ - வில் அல்பானி இதனை ஸஹ{ஹ் என்று கூறியுள்ளார். (எண் 3270))
மேலும் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டாரோ அவர் தன் அண்டைவீட்டாரிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளட்டும்" (புகாரி. பாகம்: நல்லொழுக்கம். பாடம்: அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவன் அண்டை வீட்டாருக்குத் தொல்லை கொடுக்க மாட்டான். (எண் 6019) முஸ்லிம். பாகம்: ஈமான். பாடம்: அண்டை வீட்டாருக்கும் விருந்தினருக்கு கண்ணியம் அளித்தல், மௌன மாக இருக்தல். (எண் 48))
மேலும் கூறினார்கள்: (உணவுக்காக) நீ குழம்பு தயார் செய்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்தி உன் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள்" (முஸ்லிம். பாகம்: நன்மை செய்தல், இணைந்து வாழ்தல், நல்லொழுக் கங்கள். பாடம்: அண்டை வீட்டாருடன் நல்லவிதமாக நடத்தல், அவர்களுக்கு நல்லுபகாரம் செய்தல் பற்றி அறிவுரை கூறல். (எண் 2625. 142))
அண்டை வீட்டாருடன் நல்ல விதமாக நடந்து கொள்வதன் மற்றொரு வகை, விஷேச நாட்களில் அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதாகும். அன்பளிப்புச் செய்வது அன்பை ஏற்;படுத்திப் பகைமையை அகற்றக் கூடியதாகும்.
அண்டைவீட்டாருக்குரிய மற்றோர் உரிமை யாதெனில், சொல் மற்றும் செயல் ரீதியாக அவர்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் இறைநம்பிக்கையாளனாக ஆக மாட்டான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் இறை நம்பிக்கையாளனாக ஆக மாட்டான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் இறைநம்பிக்கையாளனாக ஆக மாட்டான். அப்பொழுது, அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்? என்று தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், எவனது தீமைகளை விட்டும் அவனது அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறவில்லையோ அவன் தான் என்றார்கள்" (புகாரி. பாகம்: நல்லொழுக்கம். பாடம்: எவனது தீமைகளை விட்டும் அவனுடைய அண்டைவீட்டார்கள் பாதுகாப்புப் பெறமாட்டார்களோ அவனது பாவம். (எண் 6061))
மற்றோர் அறிவிப்பில் உள்ளது:"எவனது தீமைகளை விட்டும் அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெற வில்லையோ அவன் சுவனபதி புகமாட்டான்" (முஸ்லிம். பாகம்: ஈமான். பாடம்: அண்டை வீட்டினருக்குத் தொல்லை கொடுப்பது விலக்கப்படுதல். (எண் 46))
எனவே அண்டை வீட்டாருக்குத் தீங்கு செய்து கொண்டு அவர்களை நிம்மதியாக வாழவிடாமல் இருப்பவன் யாரோ அவன் இறைநம்பிக்கையாளனும் அல்லன். அவன் சுவனம் புகவும் மாட்டான்.
இப்பொதெல்லாம் பெரும்பாலான மக்கள் அண்டை வீட்டாரின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அருகில் வாழும் மக்கள், அவர்களின் தீமைகளை விட்டும் நிம்மதியாக வாழ முடிவதில்லை. அண்டை வீட்டாருடன் இவர்கள் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டும் பிளவுபட்டுக் கொண்டும் இருப்பதை நீங்கள் காணலாம். உரிமைகளை அநியாயமாக அபகரிப்பதையும் சொல்லால் செயலால் தொல்லை கொடுப்பதையும் நீங்கள் காணலாம். இவை அனைத்தும் அல்லாஹ் மற்றும் ரஸ_லின் கட்டளைகளுக்கு முரணானவை. முஸ்லிம்கள் பிளவுபட்டு போவதற்கும் அவர்களிடையே பகைமை ஏற்படுவதற்கும் ஒருவரின் கண்ணியத்தை ஒருவர் குலைப்பதற்கும் தான் அது வழிவகுக்கும்.
அனைத்து முஸ்லிம்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்
________________________________________
இந்த உரிமைகள் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளன. பின்வரும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் விவரிக்கப்பட்டுள்ள உரிமைகளும் அவற்றுள் அடங்கும்.
ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்க்கு செலுத்த வேண்டிய உரிமைகள் ஆறு: நீங்கள் அவரை சந்திக்கும் பொழுது ஸாலாம் சொல்ல வேண்டும். அவர் உங்களை அழைத்தால் அதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும். அவர் உங்களிடம் நல்லுரை கேட்டால் நீங்கள் அவருக்கு நல்லுரை நல்கிட வேண்டும். அவர் தும்மினால், அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று புகழ்ந்தால், யர்ஹமு (க்)கல்லாஹ்(அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக) என்று நீங்கள் சொல்ல வேண்டும். அவர் நோயுற்றால்; அவரைச் சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும். அவர் மரணம் அடைந்தால் அவரை நீங்கள் பின் தொடர வேண்டும்" (முஸ்லிம். பாகம்: ஸலாம். பாடம்: ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமை ஸலாமுக்கு பதில் சொல்லுதல். (எண் 2162) இமாம் புகாரி அவர்கள் இதேபோன்ற வாசக அமைப்பில்தான் அறிவித்துள் ளார்கள். ஆறு என்பதற்கு பதில் ஐந்து என்றுள்ளது. பாகம்: ஜனாஸாவின் சட்டங்கள். பாடம்: ஜனாஸாவை அடக்கம் செய்யும் காரியங்களில் கலந்து கொள்ளச் செல்லுதல். (எண் 1240))
இந்நபிமொழியில் பல கடமைகள் விளக்கப்பட்டுள்ளன. முதல் கடமை: ஸலாம் சொல்லுதல். ஸலாம் சொல்வது கண்டிப்பான ஸ{ன்னத் ஆகும். முஸ்லிம்களின் இதயங்கள் இணைவதற்கும் அவர்களிடையே அன்பு மலர்வதற்கும் அதுவே வழிவகுக்கும். நடைமுறை நிகழ்ச்சிகளே இதற்குச் சான்று. இந்த நபிமொழி எடுத்துரைப்பதும் அதுவே.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இறைவிசுவாசம் கொள்ளாத வரையில் சுவனம் செல்லமாட்டீர்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தாத வரை நீங்கள் ஈமான்-நம்பிக்கை கொள்ள மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒன்றை அறிவித்துத்தரட்டுமா? அதனை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துவீர்கள். (ஆம்;) ஸலாம் சொல்வதை உங்களுக்கு மத்தியில் பரவலாக்குங்கள்" (முஸ்லிம். பாகம்: ஈமான். பாடம்: இறைநம்பிக்கையாளர்கள் தவிர வேறு யாரும் சுவனம் செல்லமுடியாது என்பது பற்றியும் இறைநம்பிக்கையாளர் களை நேசிப்பது ஈமானில் சேர்ந்ததாகும் என்பதையும் விளக்குதல். (எண் 54))
நபி(ஸல்) அவர்கள், ஒருவரைச் சந்தித்தால் தாமே முதலில் ஸலாம் சொல்வார்கள். வழியில் சிறுவர்களைக் கண்டால் அவர்களுக்கும் ஸலாம் சொல்வார்கள்.
நபிவழி யாதெனில், சிறுவர்தான், பெரியவருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். குறைந்த நபர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளோருக்கு ஸலாம்; சொல்ல வேண்டும். வாகனத்தில் இருப்பவர் தான் நடந்து வருபவருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். ஆனாலும் இந்த முறையை அதற்குரியவர்கள் பேணிடவில்லையெனில் மற்றவர்கள் அதனை நடைமுறைப்படுத்திட வேண்டும். ஏனெனில் ஸலாம் சொல்லும் முறை பாழாகிவிடக்கூடாது! சிறுவர் ஸலாம் சொல்லவில்லையெனில் பெரியவர் ஸலாம் சொல்லட்டும். குறைவான நபர்கள் ஸலாம் சொல்லவில்லையெனில் அதிக எண்ணிக்கை உடையவர்கள் ஸலாம் சொல்லட்டும். கூலியை அவர்கள் அள்ளிச் செல்லட்டும்!
அம்மார் பின் யாஸிர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவரிடம் மூன்று குணங்கள் ஒன்றிணைந்தால் அவர் ஈமான்- இறைநம்பிக்கையை பரிபூரணமாக்கியவர் ஆவார். மனச்சாட்சிக்கு நியாயமாக நடப்பது, எல்லா மக்களுக்கும் ஸலாம் கூறுவது, நெருக்கடியின் போதும் (இறைவழியில்) செலவு செய்வது"
ஸலாம் சொல்வது ஸ{ன்னத். நபிவழி எனும் பொழுது அதற்கு பதில் ஸலாம் சொல்வது கூட்டுக் கடமையாகும். ஒருவர் பதில் சொல்வது அனைவர் சார்பாகவும் போது மானதாகும். அதாவது ஒரு குழுவினரை நோக்கி ஸலாம் சொல்லப்பட்டால் ஒருவர் மட்டும் பதில் சொன்னால் மற்றவர்கள் சார்பாகவும் அது போதுமானதாகும். திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
மேலும் உங்களுக்கு ஸலாம் (எனும் வாழ்த்து) கூறப்பட்டால் நீங்கள் அதை விட அழகிய முறையில் அல்லது (குறைந்த பட்சம்) அதைப் போன்றாவது பதில் ஸலாம் கூறுங்கள்" (4:86)
ஸலாத்திற்கு பதில் கூறும் பொழுது அஹ்லன்(வ்) வ ஸஹ்லன்ழூ என்று மட்டும் சொன்னால் அது போதுமாகாது. ஏனெனில் அது அதை விடவும் அழகான பதிலாகவோ அதைப் போன்றதாகவோ ஆகாது.அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லப்பட்டால் நீங்கள் வ அலைக்கு முஸ்ஸலாம் என்று தான் சொல்ல வேண்டும். அத்துடன், வ அஹ்லன் என்று சொல்லப்பட்டால் நீங்களும் அதேபோல் வ அலைக்கு முஸ்ஸலாம் என்பதுடன் வ அஹ்லன் என்று கூறலாம். ஏனைய வாழ்த்துச் சொற்களையும் சேர்த்தால் அது மிகச் சிறந்தாகும்.
(ழூ - ஆங்கிலத்தில் புழழன அழசniபெ என்று என்று கூறுவது போன்று அஸ்ஸலாமு அலைக்கும் என்பதுடன் - ஸபாஹ{ல் கைர் (நலன் மிக்க காலைப்பொழுது) என்றும் அஹ்லன் வ ஸஹ்லன் (உள்ளம் விரும்பும் - சொந்த இடத்திற்கே வருகை தந்துள்ளீர்கள்) என்றும் முகமன் கூறும் பழக்கம் அரபுகளிடம் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு எழுதப் பட்டதாகும் இது. (மொழிபெயர்த்தோன்))
இரண்டாவது உரிமை: அவர் உங்களை அழைத்தால் அதற்கு பதில் சொல்லுங்கள். அதாவது விருந்துக்கோ வேறு ஏதேனும் நிகழ்ச்சியை முன்னிட்டோ வீட்டுக்கு உங்களை அழைத்தால் அதனை ஏற்று அங்கு செல்லத் தான் வேண்டும். அழைப்புக்குப் பதில் சொல்வது கண்டிப்பான ஸ{ன்னத் - நபிவழியாகும். ஏனெனில் அதில் -அழைப்பவரின் மனத்தைத் திருப்திப்படுத்தலும் அன்பையும் பாசத்தையும் வரவழைத்தலும் உள்ளன. ஆனால் திருமண விருந்து இதிலிருந்து வித்தியாசமானதாகும். ஏனெனில் அதற்கான அழைப்புக்குப் பதிலளிப்பது கடமையாகும்., அதற்கென உள்ள நிபந்தனைகள் இருக்கும் பட்சத்தில்! ஏனெனில் அது பற்றி நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்:"எவர் அந்த அழைப்பை ஏற்று அதில் கலந்து கொள்ளவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாற்றமாக நடந்தவர் ஆவார்" (முஸ்லிம். பாகம்: திருமணம். பாடம்: விருந்துக்கு அழைப்பவருக்கு பதிலளிக்குமாறு ஏவுதல். (எண் 110) புகாரி இமாம் திருமணம் எனும் பகுதியில் விருந்து அழைப்பைப் புறக்கணித்தவன் அல்லாஹ்வுக்கும் ரஸ_லுக்கும் மாற்றமாக நடந்தவன் ஆவான் எனும் பாடத்தில் இதே கருத்துடன் இந்நபிமொழியை அறிவித்துள்ளார்கள். (எண் 5177))
மேலேசென்ற நபிமொழியில் வரும்"அவர் உங்களை அழைத்தால் அதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும்" எனும் வாசகம் தனக்கு உதவி- ஒத்துழைப்பு நல்குமாறு அவர் அழைப்பதையும் உள்ளடக்கலாம். அதனை ஏற்று அவருக்கு உதவி செய்யுமாறு உங்களுக்குக் கட்டளை இடப்படுகிறது. ஒரு பொருளைச் சுமப்பது அதனை எடுத்துப் போடுவது போன்ற உதவிக்காக உங்களை அவர் அழைத்தால் அதைச் செய்து கொடுக்கும் கடமை உங்களுக்கு உண்டு. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்;: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு ஒரு பகுதி மற்றொரு பகுதியை இணைத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தைப் போன்றாவார்" (புகாரி. பாகம்: அநீதிகள். பாடம்: அநீதிக்குள்ளானவனுக்கு உதவுதல் (எண் 2446) முஸ்லிம். பாகம்: நன்மை செய்தல், இணைந்து வாழ்தல், நல்லொழுக்கங்கள். பாடம்: இறைநம்பிக்கையாளர்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டியும் பரிவுகாட்டியும் உறுதுணையாகவும் வாழ்வது (எண் 2585))
மூன்றாவது உரிமை: அவர் உங்களிடம் அறிவுரை தேடினால் அவருக்கு நீங்கள் அறிவுரை கூறுங்கள். அதாவது அவர் உங்களிடம் வந்து உங்களது அறிவுரையை நாடினால் அவருக்கு அறிவுரை கூறுங்கள். ஏனெனில் இது இறைமார்க்கத்தின் வழிகாட்டலாகும்;.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீன் - இறைமார்க்கம் என்பது அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்திற்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் முஸ்லிம் பொதுமக்கள் அனைவருக்கும் நலன் நாடுவதே ஆகும்" (புகாரி. பகுதி: ஈமான். பாடம்: தீன் என்பது நலம் நாடுவதே எனும் நபிமொழி .... (பக்கம் 35) பதிப்பு: பைத்துல் அஃப்காரித் துவலிய்யா. முஸ்லிம். மதீமுத் தாரி (ரலி) அவர்கள் மூலம் நபிகளார் வரையில். பாடம்: தீன் என்பது நலம் நாடுவதே என்பதன் விளக்கம். (எண் 55))
நல்லுரை கூறும்படி உங்களை அவர் தேடி வரவில்லை எனில் அவர் செய்யப்போகும் காரியத்தில் கேடு அல்லது பாவம் அவருக்கு ஏற்படும் என்றிருந்தால் அவருக்கு நல்லுரை கூறுவது உங்கள் மீது கடமையே, அவர் உங்களிடம் வராவிட்டாலும் சரியே! ஏனெனில் ஒரு தீங்கை வெறுக்கத்தக்க நிலையை முஸ்லிம்களை விட்டு அப்புறப்படுத்தும் பணிகளில் சேர்ந்ததாகும் இது.
அவர் செய்யப்போகும் செயலினால் அவருக்கு எவ்வித் தீங்கோ பாவமோ ஏற்படாது என்றிருந்தால் ஆனாலும் வேறுவிதமாகச் செயல்படுவது தான் அவருக்கு மிகவும் பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் அவருக்கு எதுவும் கூறுவது உங்கள் கடமை இல்லை. அவர் உங்களைத் தேடி வந்து அறிவுரை கேட்டாலே தவிர! அப்படிக் கேட்டு வந்தால் நல்லுரை கூறுவது உங்களுக்கு அவசியமாகும்.
நான்காவது உரிமை: அவர் தும்மினால், அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே) என்று புகழ்ந்தால், யர்ஹமு (க்)கல்லாஹ் (அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக) என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
அவர் தும்மிய போது இறைவனைப் புகழ்ந்ததற்காக அவருக்கு செலுத்தும் நன்றியாகும் இது. ஆனால் தும்மிய பொழுது அல்லாஹ்வை அவர் புகழவில்லை எனில் அவருக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.
தும்மியவர் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அவருக்கு யர்ஹமுகல்லாஹ் என்று பதில் கூறுவது கடமை. பிறகு அதற்கு பதிலளிப்பது தும்மியவர் மீது கடமை. யஹ்தீ(க்) குமுல்லாஹ{ வ யுஸ்லிஹ் பால(க்)கும் (பொருள்: அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக, உங்கள் நிலைமையைச் சீர்படுத்துவானாக) என்று அவர் கூற வேண்டும்.
தொடர்ந்து அவர் தும்மிக் கொண்டிருந்தால் மூன்று முறை அவருக்கு நீங்கள் பதில் அளித்துவிட்டீர்கள் என்றால் நான்காவது முறை அவருக்கு நீங்கள் சொல்லும் பதில் ஆகுபாக்கல்லாஹ் -அல்லாஹ் உமக்கு சுகம் அளிப்பானாக என்பதே. யர்ஹமுகல்லாஹ் என்று நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.
ஐந்தாவது உரிமை: அவர் நோயுற்றுவிட்டால் அவரைச் சந்தித்து நீங்கள் நலம் விசாரிக்க வேண்டும்;. இவ்வாறு நோயாளியைச் சந்தித்து நலம் விசாரிப்பது முஸ்லிம்கள் மீது அவருக்குச் செய்ய வேண்டிய உரிமை ஆகும்.
அதே நேரம் நோயாளிக்கு நீங்கள் உறவினராக, நண்பராக, அண்டை வீட்டாராக இருந்தால் அவரை நீங்கள் சந்தித்து நலம் விசாரிப்பது இன்னும் அவசியமாகும்.
நலம் விசாரித்தல் என்பது நோயாளியின் நிலைமை மற்றும் நோயின் தன்மையைப் பொறுத்து அமைவதாகும். அடிக்கடி அவரைச் சந்திப்பது அவசியம் எனும் நிலை இருக்கலாம் அல்லது ஓரிரு தடவையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றிருக்கலாம். நிலைமைக்கு ஏற்ப அவரைச் சென்று பார்க்க வேண்டும்.
நோயாளியைச் சந்திப்பவர், அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதும் அவருக்காக பிரார்த்தனை செய்வதும் அவருக்கு மன ஆறுதல் ஊட்டுவதும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதும் விரைவில் நோய் குணமாகிவிடும் என்கிற நல்லாதரவை உருவாக்குவதும் ஸ{ன்னத் - நபிவழியாகும். அதுவே ஆரோக்கியத்தையும் நிவாரணத்தையும் ஏற்படுத்தக் கூடிய காரணிகளுள் மிகப் பெரியதாகும்.
தௌபா- பாவமன்னிப்புத் தேடுதலை நினைவூட்டுவது அவசியம். ஆனால் அது அவருக்குப் பீதியை ஏற்படுத்தாத முறையில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அவரிடம் இப்படிக் கூறிட வேண்டும்:
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இப்பிணியில் நீங்கள் நன்மையைச் சம்பாதிக்கலாம். ஏனெனில் நோயின் மூலம் அல்லாஹ் தவறுகளை மாய்க்கிறான். தீமைகளைத் துடைத்தெறிகிறான்.
நீங்கள் முடங்கியிருக்கும் நேரத்தில் அதிகமாக திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, பிரார்த்தனை செய்வது ஆகியவற்றின் மூலம் ஏராளமான கூலிகளை நீங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம்.
ஆறாவது உரிமை: அவர் மரணம் அடைந்தால் அவரை நீங்கள் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். அதாவது அவரை நல்லடக்கம் செய்யும் காரியங்களில் கலந்து கொள்வதற்காக ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்வதென்பது அவருக்குச் செலுத்த வேண்டிய ஓர் உரிமை ஆகும். அல்லாஹ்விடத்தில் அதற்குப் பெரும் கூலி உண்டு.
நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: தொழுகை நடத்தப்படும் வரையில் ஜனாஸா நிகழ்ச்சியில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீறாத் நன்மை உண்டு. ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரையில் கலந்து கொள்பவருக்கு இரு கீறாத் நன்மை உண்டு. அப்பொழுது நபியவர்களிடம் கீறாத் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்;: பிரமாண்டமான இரண்டு மலைகளைப் போன்ற கூலியாகும்" (புகாரி. பாகம்: ஜனாஸாவின் சட்டங்கள். பாடம்: அடக்கம் செய்யும் வரையில் எதிர்பார்த்திருப்பவன். (எண் 1325) முஸ்லிம். பாகம்: ஜனா ஸாவின் சட்டங்கள். பாடம்: ஜனாஸா தொழுகை தொழுவது, அடக்கம் செய்வதில் கலந்து கொள்வதன் சிறப்பு. (எண் 945))
ஏழாவது உரிமை: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டி கடமைகளில் ஒன்று அவருக்குத் தொல்லை தராதிருப்பதாகும். ஏனெனனில் முஸ்லிம்களுக்குத் தீங்கிழைப்பது பெரும் பாவமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: மேலும் இறைநம்பிக்கைகொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே - யார் துன்பம் கொடுக்கிறார்களோ அவர்கள்; பெரும் அவதூறையும் பெரும் பாவத்தையும் தங்கள் மீது சுமந்து கொள்கிறார்கள்" (33:58)
பெரும்பாலும் நடைபெறுவது என்னவெனில் எவர் தன் சகோதரர் மீது தீங்கு நிகழக் காரணமாக இருக்கிறாரோ அவரை மறுமைக்கு முன்னர் இவ்வுலகிலேயே நிச்சயம் அல்லாஹ் பழிவாங்கி விடுகிறான்;.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒருவருக்கு ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! ஒருவருக்கு ஒருவர் (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாக இருங்கள். ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் சகோதரர். எனவே அவருக்கு அநீதி இழைக்கக் கூடாது., அவரை ஆதரவின்றி விட்டு விடக் கூடாது. அவரை இழிவாகக் கருதக்கூடாது. ஒரு மனிதன் தீயவன் என்பதற்கு தன் முஸ்லிம் சகோதரரை இழிவாகக் கருதுவதே போதுமானதாகும். பிற முஸ்லிமின் உயிர், உடமை மற்றும் சுய மரியாதைக்குப் பாதுகாப்பு அளிப்பது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையாகும்" (புகாரி. (சுருக்கமாக) பாகம்: நல்லொழுக்கம். பாடம்: பொறாமை கொள்வதையும் பிணங்கவதையும் தடுத்தல். (எண் 6065) ஹிஜ்ரத் பற்றிய பாடத்திலும் வந்துள்ளது. (எண் 6076) முஸ்லிம். பாகம்: நன்மை செய் தல், இணைந்து வாழ்வது, நல்லொழுக்கங்கள். பாடம்: ஒரு முஸ்லிமுக்கு அநீதி செய்வதும் ஆதரவளிக்காமல் விடுவதும் கேவலப் படுத்துவதும் ஹராம் - விலக்கப்பட்டதாகும். (எண் 2564))
ஒரு முஸ்லிம் தம் சகோதரருக்குச் செலுத்த வேண்டிய உரிமைகள் ஏராளம் உள்ளன. ஆயினும் "ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்" (நூல்: முஸ்லிம்) எனும் நபிமொழி அவை அனைத்தையும் உள்ளடக்கும் ஒருங்கிணைந்த கருத்தாகத் திகழ்கிறது,
எனவே இத்தகைய சகோதரத்துவத்தின் தேட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் தமது சகோதரனுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கச் செய்வதில், அவனுக்குத் தீங்களிக்கும் காரியங்களைத் தவிர்ப்பதில் முஸ்லிம்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.
முஸ்லிமல்லாதாருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
________________________________________
முஸ்லிமல்லாதார் என்றால், அதில் இறைநிராகரிப்பாளர்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் நான்கு வகையில் உள்ளனர். சண்டைக்காரர்கள். பாதுகாப்பு வழங்கப்பட்டவர்கள். ஒப்பந்தக்காரர்கள். அரசின் அனுமதியுடன் வசிப்பவர்கள்.
சண்டைக்காரர்கள்: பாதுகாப்பு மற்றும் தயவு தாட்சண்யம் என்கிற ரீதியில் நம் மீது இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
பாதுகாப்பு வழங்கப்பட்டவர்கள்: அவர்களது அமைதி, பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஒதுக்கப்பட்ட காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது நம்மீது கடமையாகும். அல்லாஹ் கூறியுள்ளான்:
இணைவைப்பாளர்களில் எவரேனும் அடைக்கலம் தேடி உம்மிடம் வந்தால் அப்போது அல்லாஹ்வின் வேதத்தை அவர் செவியுறும் வகையில் அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக. பிறகு அவரை அவரது பாதுகாப்பிடத்தில் சேர்த்துவிடுவீராக" (9 : 6)
ஒப்பந்தக்காரர்கள்: நமக்கும் அவர்களுக்கும் ஒப்பந்தம் நடைபெற்றுள்ள காலம் வரை, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் உடன்படிக்கையை நிறைவேற்றுவது நம்மீதுள்ள கடமையாகும். ஆனால் ஒரு நிபந்தனை: ஒப்பந்தத்தை முறிக்காமல் அதில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டும். மேலும் நமக்கு எதிராக யாருக்கும் அவர்கள் உதவி செய்யக்கூடாது., நமது தீன் - இறை மார்க்கத்தைக் குறைபடுத்தும் வகையில் செயல்படக் கூடாது.
அல்லாஹ் கூறியுள்ளான்:
ஆனால் இணைவைப்பாளர்களில் எவர்களுடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டுப் பின்னர் அவர்கள் (தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதில்) உங்களிடம் எந்தக் குறைபாடும் செய்யாமலும் உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கிறார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அத்தகையோரின் உடன்படிக்கையை உரிய காலம் வரை நிறைவுபடுத்துங்கள். திண்ணமாக அல்லாஹ் இறையச்சம் உள்ளோரை நேசிக்கிறான்" (9:4)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
அவர்களுடன் உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தங்களுடைய சத்தியங்களை முறித்துவிட்டு அவர்கள் உங்களுடைய தீன் - இறைமார்க்கத்தைக் தாக்க முற்பட்டால் இத்தகைய நிராகரிப்பின் தலைவர்களுடன் போர் புரியுங்கள். ஏனெனில் இவர்களின் சத்தியங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை" (9 : 12)
அரசின் அனுமதியுடன் வசிப்பவர்கள்: இந்நான்கு வகையினரில் இவர்கள் தாம் அதிக உரிமைகள் பெற்றவர்கள். ஏனெனில் இவர்கள் முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களின் பாதுகாப்பை பராமரிப்பைப் பெற்று வாழ்கிறார்கள். இந்த உரிமை அவர்கள் செலுத்தும் வரிகளுக்குப் பகரமாகும்.
ஆடைகள் விஷயத்தில் முஸ்லிம்களை விட்டும் அவர்கள் வேறுபட்டிருப்பதும் இஸ்லாத்தில் வெறுக்கப்பட்டிருக்கும் தீமைகளையும் மற்றும் நசரா, சிலுவை போன்று அவர்களது மத அடையாளச் சின்னங்கள் எதையும் அவர்கள் பகிரங்கப் படுத்தாதிருப்பதும் கடமையாகும்.
இஸ்லாமிய அரசின் அனுமதியுடன் வசிக்கும் பிற மதத்தினர் தொடர்பான சட்டங்கள் அறிஞர்களின் நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தையும் இங்கு எடுத்துரைக்க இயலாது.
Post a Comment