வெறுப்பெனும் போதை! இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!,
வெறுப்பெனும் போதை! By பிரபா ஸ்ரீதேவன் இந்திய உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். பசுவதை தடுப்பு சட்டமும் அதன் நிழ...
வெறுப்பெனும் போதை!
By பிரபா ஸ்ரீதேவன் இந்திய உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
முன்பு பசி - வயிறு - உணவு என்ற கட்டுரையில் மக்களாட்சி தான் நடக்கிறது. ஆனால் நாம் உண்ணும் உணவே நம்மைப் பிரிக்கிறது, அடையாளம் காட்டுகிறது, உயர்வு தாழ்வு என்கிறது என்று எழுதினேன். அந்த சொற்கள் இத்தனை கோர முகத்துடன் வளைய வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
ஒருவர் திருடி கையும் களவுமாக அகப்பட்டாரென்றால் நாம் காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் நம் கடமை முடிந்தது.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றால் அரசு எதற்கு?
ஒருவர் கொலை செய்தாலும் இதே கடமை, காவல் துறையிடம் புகார் செய்யவேண்டும்.
இ.பி.கோ.வில் சில கொலைகளை தண்டனைக்கு உட்படாதவை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு கொலை செய்தவரை நாம் அடித்து கொன்ற பின் அந்த கொலை தற்காப்புக்காக செய்தது என்று தெரியவந்தால் அவர் உயிர் திரும்புமா? அதற்காக தான் இந்திய தண்டனை சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் சட்டம் எல்லாம் இருக்கிறது. பசுவைக் கொன்றாலும் இதே முறை தான். சட்டம் பார்த்துக் கொள்ளும்.
நம் அரசியல் சாசனம் ஷரத்து 48 சொல்கிறது பசுவதையைப் பற்றி, பெருங்காயத்தைப் பற்றி அல்ல என்று கூறுவது என் செவியில் விழுகிறது. நம் அரசியல் சாசனத்தை இயற்றும் நேரத்தில் (24 நவம்பர் 1948) நடந்த வாதங்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பசு வளர்ப்பு அவசியம். நான் மதத்தின் பெயரால் கேட்கவில்லை. நம் நாட்டின் பொருளாதார அவசியத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
பசு பாதுகாப்பு என்பது மதம் சார்ந்தது மட்டுமல்ல, அது நம் பொருளாதார, கலாசார பிரச்னையும்கூட. எங்களுக்கு தெரியும் எங்கள் மதம் பசுவைக் கொல்லலாம் என்று தான் சொல்கிறது, ஆனால், கொன்று தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.
புனித குரான் "லா இக்ரபா ஃபித் தின்' என்கிறது. ஆகையால் மதத்தின் பெயரால் நாங்கள் எதையும் வலுக்கட்டாயமாக சொல்ல மாட்டோம்.
என்ன செய்வது? இஸ்லாமியர்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். ஏழைகள் ஆட்டிறைச்சி வாங்கமுடியாது. அது விலை அதிகம். ஆகையால் எப்பொழுதாவது அவர்கள் வேறு வழி இல்லாமல் மாட்டிறைச்சி உண்கிறார்கள்.
இப்படி ஆழ்ந்த வாதத்திற்கு பின் தான் அந்த ஷரத்தை அந்த அவை ஏற்கிறது.
இப்பொழுது நம் நாட்டில் சில மாநிலங்களில் பசுவதை சட்டம் அமலுக்கு வந்
துள்ளது.
ஹரியாணா பசுவதை தடுப்பு சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3-இல் இருந்து 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை என்று இருக்கிறது, குஜராத்தில் ஆயுள் தண்டனை கொடுக்கலாம் என்று சட்டத்தை மாற்றி இருக்கிறார்கள். வேறு எந்த மாநிலமும் பசுவதைக்கு இதைவிடக் கடுமையான தண்டனை விதித்ததாகத் தெரியவில்லை.
அப்பொழுது இந்த குற்றம் புரிந்தார்கள் என்று சொல்லி எப்படி ஒருவர் உயிரை எடுக்க முடியும்?
வன்முறை பற்றியும் ஆயுதம் ஏந்துதல் பற்றியும் ஒரு கதை சொல்கிறேன்.
இது சீதை ராமனுக்கு சொன்ன கதை.
"சுள்ளி எப்படி தானே தீ பற்றிக் கொள்கிறதோ அப்படி ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டாலே வன்முறை பற்றிக் கொள்ளும்.
முன்பொரு நாள் ஒரு முனிவர் காட்டில் வசித்து வந்தார். அவர் தூய்மையானவர். அவர் தவத்தை கெடுப்பது என்று இந்திரன் முடிவு செய்தான். அந்த முனிவரின் ஆசிரமத்திற்கு ஒரு படை வீரன் வேடத்தில் கையில் ஒரு வாளேந்தி வந்தான்.
அந்த கூர்வாளை இந்திரன் அந்த முனிவரிடம் தற்காப்புக்காக என்று சொல்லி கொடுத்தான். முனிவரும் அந்த வாளைப் பெற்றுக் கொண்டு எங்கு சென்றாலும் அதை தன்னுடன் எடுத்து சென்றார்.
சில நாட்களுக்கு பின் தற்காப்புக்கான ஆயுதம், காய் கிழங்கை வெட்டும் கருவியாக மாறிற்று. பின் முனிவருக்கு தவத்தில் ஆர்வம் குறைந்தது விலங்குகளைக் கொல்லத் தொடங்கினார். வன்முறையில் ருசி வந்தது. படிப்படியாக மனிதரை வெட்டும் கொடூரராக மாறினார்.
இந்திரன் எண்ணம் பலித்தது. ஆயுதத்துடன் ஏற்பட்ட தொடர்பு, எங்கு போய் முடிந்தது? தவத்தில் ஈடுபட்டவர் கொலைகள் பல புரிந்து பாழ் நரகத்தில் வீழ்ந்தார். ஆகையால் ராமா, வில்லேந்தியான நீ காட்டில் இருக்கும் ரிஷிகளைக் காக்கிறேன் என்று சொல்லி உன்னிடம் ஒரு வன்மமும் இல்லாத அரக்கர்களைக் கொல்லாதே' - இது சீதையின் அறிவுரை.
இந்தக் கதை சொல்லும் செய்தி என்ன? வன்முறை ஒரு லாகிரி வஸ்து. அதை ஒரு முறை ருசித்தால் மேலும் மேலும் நுகரத் தூண்டும். ஆகையால் அதை தவிர்ப்பதே சிறந்தது.
ராமாயணம் ஆயிற்று, இப்பொழுது மகாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். அதில் "கொக்கென நினைத்தாயோ கொங்கணவா' கதை தெரியுமா?
ஒரு முனிவர் மரத்தடியில் தவம் செய்கையில் ஒரு கொக்கு அவர் மேல் எச்சமிட்டுவிட்டது. நிமிர்ந்து முறைத்தார். கொக்கு சாம்பல். அவ்வளவு தான் நம் முனிவருக்குக் குஷி தாங்கவில்லை. ஓரு நாள் பிட்சை கேட்டு ஒரு வீட்டுக்கு போனார். அந்த அம்மையார் நிதானமாக அவருடைய குரல் கேட்டு வந்தார்.
முனிவர் அந்த அம்மையாரைப் பார்த்து முறைத்தார். அம்மையார் சாம்பல் ஆகவில்லை. அப்படியே நின்றார், அதோடு இல்லாமல் ஒரு ஏளன புன்னகை வீசி "கொக்கென நினைத்தாயோ கொங்கணவா' என்று வேறு கேட்டார்.
அகங்காரம் ஒடுங்கி முனிவர், "எப்படி உங்களுக்கு கொக்கு கதை தெரிந்தது' என்று கேட்டார். கடமையை செவ்வனே செய்தால் அனைத்தும் சாதிக்கலாம் என்றும், மிதிலை நகரில் இருக்கும் தர்மவியாதன் என்ற கசாப்புக் கடைக்காரரைக் கேட்டால் தரும நெறி பற்றியும் சத்தியத்தை பற்றியும் அகிம்சையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று அந்தப் பெண்மணி சொன்னார்.
மிதிலைக்குச் சென்ற முனிவர் கசாப்புக் கடையை அடைந்தார். அங்கே இறைந்து கிடந்த குருதி மாமிசம் எல்லாவற்றையும் பார்த்து இவரிடம் தர்மத்தை பற்றி தெரிந்து கொள்வோம் என்ற நம்பிக்கையை இழந்தார். எனினும் இத்தனை தொலைவு வந்ததற்கு இவருடன் பேசிவிட்டுப் போகலாம் என்று நினைத்தார்.
அவர் பேசும் முன்பே கசாப்பு கடைக்காரர் அவர் எண்ணத்தை அறிந்து "கடை மூடும் வரை காத்திருங்கள், அந்தப் பெண்மணி சொன்னதுபோல் உங்களுக்கு தர்மம் உபதேசிக்கிறேன்' என்று சொன்னார். முனிவருக்கு அதிர்ச்சி. கேவலம் ஒரு பெண்ணுக்கா ஞானதிருஷ்டி என்று நினைத்தோம். ஆனால் இந்த ஈனத் தொழில் செய்யும் கசாப்பு கடைக்காரர் அதற்கு மேல் இருக்கிறாரே என்று எண்ணியபடி காத்திருந்தார்.
வேலை முடிந்த பின் தரும வியாதன் முனிவருக்கு தரும நெறி என்றால் என்ன, சத்தியம், அகிம்சை, பற்றின்மை என்றால் என்ன சொல்லுகிறார். இந்த உபதேசம் வியாத கீதை என்று போற்றப்படுகிறது. தருபவர் கசாப்பு கடைக்காரர், பெறுபவர் முனிவர். நம்மைப் புரட்டிப் போடும் இதுபோன்ற பல முத்துக்கள் கிடைக்கும் இம்மகா சமுத்திரத்தில். நாம் அவற்றைத் தெரிந்துக் கொள்ளாமல் குறுகிப் போவது சரியல்ல.
தேசத் தந்தை என்று காந்தியையும் அரசியல் சாசனத்தின் தந்தை என்று அம்பேத்கரையும் போற்றுகிறோம். அவர்கள் பசுவைக் காக்கிறேன் என்ற பெயரில் மனித வதையை மன்னிக்க மாட்டார்கள்.
இதைப் பற்றி காந்தியின் குரலிலேயே இதோ. ஆசிரியர் என்று நான் குறிப்பிடுவது அவரையே.
வாசகர்: பசு பாதுகாப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
ஆசிரியர்: நான் பசுவை மதிக்கிறேன், அதாவது ஒரு வாஞ்சை கலந்த மதிப்பு. இந்தியர்களுக்கு விவசாயத் தொழில் பிரதானம். ஆகையால் பசு நமக்கு முக்கியம். நூறு வழிகளில் நமக்கு பசு பயன் படுகிறது. இதை நம் இஸ்லாமிய சகோதரர்களும் அறிவார்கள்.
நான் பசுவை மதிப்பது போலவே என் சக மனிதனையும் மதிக்கிறேன். அவர் இந்துவோ இஸ்லாமியரோ. பின் பசுவைக் காக்க ஒரு இஸ்லாமியருடன் நான் சண்டை போடுவேனா அல்லது கொல்லுவேனா? அதை செய்தேனென்றால் நான் முஸ்லிமுக்கு மட்டுமல்ல பசுவுக்கும் எதிரியாவேன்.
எனக்குத் தெரிந்த ஒரேவழி என் முஸ்லிம் சகோதரனை அணுகி நாட்டுக்காக பசுவை என்னுடன் சேர்ந்து நீங்களும் காக்கவேண்டும் என்று இறைஞ்சுவேன். அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனில் நான் பசுவை கைவிட்டுவிடுவேன்.
காருண்யம் பொங்கினால் அதைக் காக்க என் உயிரை தருவேன். என் சகோதரன் உயிரை பறிக்க மாட்டேன். இதுவே என் மதத்தின் நெறி...........
சொல்லப்போனால் இந்துக்களின் பிடிவாதம் அதிகரிக்க அதிகரிக்க பசுவதையும் அதிகரித்தது.
என்னைக் கேட்டால் பசுப் பாதுகாப்பு சங்கங்களை நாம் பசுவதை சங்கங்கள் என்று கருதலாம்.... ஒரு இந்து பசுவை வதைத்தால் யார் என்ன செய்வது? பசுவை இரக்கமில்லாமல் குச்சி வைத்து அடிக்கும் இந்துக்களை யார் தடுக்கிறார்கள்?
இறுதியாக ஒன்று சொல்கிறேன். இந்துக்கள் அகிம்சாவாதத்தை நம்புவது உண்மையெனில், அவர்கள் கடமை என்ன? அகிம்சாவாத மதத்தை பின்பற்றுபவர் சக மனிதனைக் கொல்லலாம் என்று எங்கு எழுதி இருக்கிறது?'
இதுதான் அவர் எண்ணங்கள். அன்றே இன்று நடப்பதற்கு பதில் சொல்லிவிட்டார். பசுவைக் கொல்லுங்கள் என்று நான் சொல்லவில்லை.
நம் சகோதரர்களை கொல்லாதீர்கள் அடிக்காதீர்கள் என்று தான் சொல்கிறேன்.
ராமாயணம், மகாபாரதம், மகாத்மா காந்தியின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் மேற்கோள் காட்டிவிட்டேன். இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.
வெறுப்பால் விளையும் வன்முறை ஒரு விஷக் கிருமி. அது காற்றில் எளிதாகப் பரவும் பயங்கரம். அது மற்றவரை மட்டும் அல்ல, ஒரு நாள் நம்மையும் கொல்லும்.
Thanks to Dinamani.com
Post a Comment