'கோ 5' 'மசால் வேலி': ஆடு, மாடுகளின் 'அல்வா'
தமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 'கறப்பது கால் படி; உதைப்பது பல்லுப்போ...
போதுமான சத்தான தீவனம் கிடைக்காததால் பசு மாடுகளின் பால் கறவை குறைந்து விட்டது. கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் பலர் விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கால்நடைகளுக்கான தீவன பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மதுரை மாவட்டம் நரியம்பட்டியை சேர்ந்த பட்டதாரி விவசாயி பி.பூமிநாதன்.
இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கால்நடை தீவன ரகத்தை சேர்ந்த 'கோ 5' மற்றும் 'மசால் வேலி' ஆகிய பசுந்தீவனம் வளர்க்கிறார்.
தினமும் தேவைக்கு ஏற்ப பசுந்தீவனத்தை வயலில் இருந்து அறுவடை செய்து பசுக்கள், ஆடுகளுக்கு கொடுப்பதால், அவற்றை விரும்பி உண்ணும் பசுக்கள் பால் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. கோடையில் தீவன பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
பூமிநாதன் கூறியதாவது: மதுரையில் முதல் முறையாக ஒரு ஏக்கரில் 'கோ 5' பசுந்தீவனம் விளைவிக்கிறேன். கரும்பு போல் தோற்றம் கொண்ட 'கோ 5' தீவனம் கால்நடைகளின் 'அல்வா' என அழைக்கப்படுகிறது.
இனிப்பு சுவை அதிகம் இருப்பால் கால்நடைகள் விரும்பி உண்ணும். அனைத்து சத்துக்களும் பொதிந்து கிடப்பதால் கறவை மாடுகளுக்கு பால் சுரப்பு அதிகரிக்கிறது.
பத்து பசுக்கள், ஐந்து கன்றுகளுக்கு தீவனம் வாங்கினால் கட்டுபடியாகாது. 'கோ 5' தீவனம் ஆண்டு முழுவதும் பயனளிக்கிறது. விதை கரனை ஒன்று ஒரு ரூபாய். விரும்பி கேட்போருக்கு தருகிறேன்.
ஆடுகள் விரும்பி உண்ணும் 'மசால் வேலி' எனும் பசுந் தீவனம் ஒரு ஏக்கரில் வளர்க்கிறேன். மசால் வேலி செடிகள் நாட்டு கருவேல செடிகள் போல் தோற்றம் கொண்டிருக்கும். விதைகள் கடினமாக இருக்கும். எனவே விதைகளை கொதிக்கும் வெண்ணீரில் சிறிது நேரம் ஊற விட வேண்டும். பின் உலர்த்தி நிலத்தில் பாவி விளைவிக்கலாம்.
40வது நாளில் இருந்து பல ஆண்டுகள் வரை பலன் தரும். புரதச்சத்து மிகுந்திருப்பதால் ஆடுகள் உடல் பருமனில் பெருத்தும் ஆரோக்கியமாகவும் வளரும் என்றார். செலவு குறைவு; வரவு அதிகம்.
கொட்டில் முறை ஆடு வளர்ப்போருக்கு மசால் வேலி ஒரு வரப்பிரசாதம் என்றார். தொடர்புக்கு 98421 79980.
Post a Comment