தினம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்!
தி னம் ஒரு துவையல்! 30 சைடுடிஷ்! சா ப்பிட அமர்ந்தாலே, சிப்ஸ், ஸ்நாக்ஸ், வத்தல் எனப் பலருக்கும் ஏ...

சிப்ஸ், மிக்ஸர், நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, வீட்டிலேயே மிகச் சுலபமாகச் செய்யக்கூடிய துவையலைச் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது, உணவு உட்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி, போதிய சத்துக்களும் கிடைக்கும்.
சமையல் நிபுணர் லட்சுமி ஶ்ரீனிவாசன், ரெசிப்பிகளைச் சுவைபடச் செய்துகாட்ட, அதன் பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் பிரியங்கா.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகாயைப் போட்டு, சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு டீஸ்பூன் எண்ணெயில், பூண்டு, புளி, வெங்காயம் சேர்த்து, பச்சை வாசனை போக, வதக்க வேண்டும். இவற்றை மிக்ஸியில் போட்டு, உப்பு, வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். விருப்பப்பட்டால், ஒரு டீஸ்பூன் கடுகு தாளித்துச் சேர்க்கலாம்.
பலன்கள்: சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் இருப்பதால், ரத்தசோகை வருவது தடுக்கப்படும். எலும்புகள் உறுதியாகும். குளிர்ச்சியைத் தரும். அனைவரும் சாப்பிட ஏற்றது.
செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு முடக்கத்தான் கீரை, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், புளி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீண்டும் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, அரைத்த தொக்கைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும். ஆறியதும் எடுத்துவைத்தால், ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
பலன்கள்: மூட்டுவலிக்குச் சிறந்த நிவாரணி. வயிற்று உப்புசம் தீரும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலு ஊட்டும். ரத்தசோகையை நீக்கி, புத்துணர்ச்சி தரும்.
தாளிக்க: கடுகு, பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உடைத்த உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய சௌசௌ, காய்ந்த மிளகாய், புளி, மற்றும் தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கி, ஆறவிட வேண்டும். இதை, மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டவும்.
பலன்கள்: கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு புரதமும் கொழுப்பும் இருக்கின்றன. உடலுக்கு நல்ல வலுவைக் கூட்டும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், சிறுநீரகப் பிரச்னையைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம், நல்லெண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய பீர்க்கங்காயைப் போட்டு வதக்க வேண்டும். நீர் வற்றும் வரை காயை வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
இந்தத் துவையல் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட, சுவையாக இருக்கும்.
பலன்கள்: பீர்க்கங்காயில் வைட்டமின் சி, ரிபோஃப்ளோவின் அதிகம். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
தாளிக்க: நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, உடைத்த உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: சிறிது நல்லெண்ணெயில் பூண்டை வதக்கி, துருவிய கேரட், பீட்ரூட், பச்சைமிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்க்க வேண்டும். தொக்கு பதத்துக்கு வரும் வரை இந்த விழுதைக் கிளறி இறக்க வேண்டும்.
பலன்கள்: இரும்பு, பொட்டாசியம், மக்னீஷியம் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பீட்டாகரோட்டின் இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்னை தீரும். சக்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
செய்முறை: கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், குடமிளகாய் சேர்த்து அரைத்து, கறுப்பு உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
பலன்கள்: மூட்டுவலி, வயிற்றுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம் குணமாகும்.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், மொத்தமல்லியை மிக்ஸியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: தேங்காயில் புரதம், நல்ல கொழுப்பு மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. எளிதில் செரிமானம் ஆகும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்துப் பொரிக்கவும். பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு, புளி, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்க வேண்டும். மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும். இதில், அரைத்த பச்சை மிளகாய் விழுது, வெல்லம் சேர்த்து, சுருளக் கிளறி இறக்கவும். வெல்லமும் எண்ணெயும் பச்சைமிளகாயின் காரத்தை மட்டுப்படுத்தி, சுவையையும் மணத்தையும் கூட்டும்.
பலன்கள்: பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. வாய் கசப்பு நீங்கும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானத்துக்கு நல்லது.
தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை: தாளிக்கும் பொருட்களைத் தவிர, மற்ற பொருட்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.
பலன்கள்: தேங்காயில் புரதம் கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. வாயுத் தொடர்பான பிரச்னைகள் வராது. வயிற்றுப்புண்னைப் போக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பழத் தோலைப் போட்டு வதக்கி, தனியே வைக்க வேண்டும். மீதம் உள்ள எண்ணெயில் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாயைச் சிவக்க வறுக்க வேண்டும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து, அரைக்க வேண்டும். தோசை, பிரெட், சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிடலாம்.
பலன்கள்: பொட்டாசியம், வைட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண்களுக்கு நல்லது. கால்சியம் சத்து இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். உடல் குளிர்ச்சியடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் என்பதால், ரத்தசோகை வருவதைத் தடுக்கும்.
தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கொய்யா துண்டுகள், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம் இருப்பதால், சாதத்துக்கு மட்டுமின்றி சப்பாத்தி, சாண்ட்விச், உப்புமா என சகல சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
பலன்கள்: அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. கொத்தமல்லி சேர்ப்பதால், உடலின் நச்சுக்களை நீக்கும். எலுமிச்சைச் சாறு சேர்ப்பதன் மூலம், வைட்டமின் சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறிது, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: கடாயில், ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, இதனுடன், உப்பு, வேகவைத்த நெல்லிக்காய் சேர்த்து அரைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதில் வைட்டமின் சி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. எடை குறையும். ஆஸ்துமா பிரச்னை நீங்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், துருவிய சேனை சேர்த்து நன்றாக வதக்கி, மிதமான தீயில் வேகவிடவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சிவக்க வறுத்து, ஆறியதும், சேனை, வறுத்த உளுந்து, உப்பு, புளி சேர்த்து அரைக்க வேண்டும். சிறிது எண்ணெயில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, ஐந்து முதல் 10 நிமிடங்கள் நன்றாகக் கிளறி எடுக்கவும்.
பலன்கள்: சேனையில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 2, பருப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கத்திரிக்காயில் எண்ணெய் தடவி, ஆங்காங்கே துளைசெய்து (இல்லாவிட்டால் வெடித்துப் பிளந்துவிடும்) தோல் கருகும் வரை அடுப்பில் சுட வேண்டும். பிறகு, தோலை நீக்கி, மசித்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து, கடைசியாகத் தக்காளியை நறுக்கிப் போட்டு, வதக்கி ஆறவிட வேண்டும். உப்பு, மசித்த கத்தரிக்காய் சேர்த்து, மிக்ஸியில் ஒருமுறை சுற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். தாளிக்கும் பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.
குறிப்பு: பெரிய கத்தரிக்காய் கிடைக்காவிட்டால், சிறிய கத்தரிக்காயைப் பயன்படுத்தலாம்.
பலன்கள்: கெட்ட கொழுப்பைக் குறைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. வயிறு நிரம்பிய உணர்வு மேலிடும். இரும்பு, புரதம், வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அனைவரும் சாப்பிடலாம். கத்திரிக்காய் அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
செய்முறை: இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.
பலன்கள்: பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்தது.
தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் - சிட்டிகை.
செய்முறை: வெற்றிலையைப் பொடியாக நறுக்கவும். கடாயில் துவரம் பருப்பு, மிளகாய், சீரகத்தைப் போட்டுச் சிவக்க வறுத்து, வெற்றிலையைச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்க்க வேண்டும். கஞ்சியுடன் இந்தத் துவையல் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
பலன்கள்: வெற்றிலை நல்ல செரிமானத்தைத் தரக்கூடியது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், அயோடின், பொட்டாசியம், நார்ச்சத்து இதில் அதிகம். வயிற்றுப் புண்களை ஆற்றும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகை வராது. எலும்புகள் வலுப்பெறும்.
தாளிக்க: நல்லெண்ணெய் - சிறிதளவு, கடுகு, பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை: இஞ்சித் துருவல், உப்பு, புளி, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
பலன்கள்: இஞ்சி, கொழுப்பு, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்கும். கால்சியம், பாஸ்பரஸ், எலும்புகள் நன்றாக வலுப்பெற உதவும். செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு, இந்தத் துவையல் மிகவும் நல்லது.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்.
செய்முறை: மாங்காய், தேங்காய், உப்பு, பச்சைமிளகாய், மஞ்சள் தூளை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளன. உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள், இந்தத் துவையலை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். சோர்வை நீக்கும். நிறைய நீர்ச்சத்து இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகும்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பரங்கித் துண்டு, உப்பு, புளி சேர்த்து, நன்றாக வதக்கி ஆறவிடவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், இவற்றைத் தனித்தனியே ஒன்றரை டீஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்து, ஆறவிட வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, கடுகு, வெந்தயம் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. வைட்டமின், ஏ, மற்றும் கே இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பெருங்காயம், மிளகாய், வெந்தயம் போட்டுப் பொரித்துக் கொள்ளவும். அதே கடாயில், கறுப்பு உளுந்து, மிளகாய் சேர்த்துச் சிவக்க வறுத்து, வாதநாராயண இலையைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிட வேண்டும். வறுத்த, பொரித்த, வதக்கிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, மிக்ஸியில் கெட்டியாக அரைக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில், கடுகு தாளித்து, துவையலில் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: வாதத்துக்குச் சிறந்த மருந்து. எளிதில் செரிமானம் ஆகும். வாயுத் தொல்லை நீங்கும். மூட்டு வலியைப் போக்கும். புரதம் அதிகம் இருப்பதால், இடுப்பு எலும்புகள், தசைகள் உறுதியாகும். வைட்டமின் சி இருப்பதால், சளி, ஆஸ்துமா தொல்லை இருப்பவர்கள் சாப்பிடலாம்.
செய்முறை: புளி தவிர, எல்லாவற்றையும் எண்ணெயில் நன்றாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, புளி சேர்த்து அரைக்கவும். கீரை சாப்பிடாதவர்கள்கூட, இந்தத் துவையலை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
பலன்கள்: நீர்ச்சத்து இதில் அதிகம். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வைட்டமின் சி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
செய்முறை: உளுத்தம் பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றைத் தனித்தனியே வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கிழங்குத் துருவலைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதனுடன், வறுத்த பொருட்கள், மீதம் உள்ள அனைத்தையும் சேர்த்து, துவையலாக அரைத்துப் பரிமாறவும்.
பலன்கள்: உடம்பு வலி, மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தரும். சரும வறட்சியைப் போக்கும். மாதவிடாய் நேரத்தில் பெண்கள் உண்ண உடல் வலுவாகும்.
தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பை வறுத்து, பெருங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்து, சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்துமல்லியைப் போட்டு இரண்டு திருப்பு திருப்பிவிட்டு (அதிகம் வதக்க வேண்டாம்), உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்து, துவையலைப் போட்டு நன்றாக வதக்கவும். ஒரு வாரம் வரை கெடாது.
பலன்கள்: வயிற்று உப்புசம் தீரும். செரிமானத்தை அதிகப்படுத்தும். உடலுக்குள் நடக்கும் வளர்சிதை மாற்றக் கழிவுகளை விரைந்து வெளியேற்றும். வயிறு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.
தாளிக்க: நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத் தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு.
செய்முறை: இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் புதினா, கறிவேப்பிலை, மிளகாயைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். இதனுடன், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து, இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கி இறக்க வேண்டும். தேங்காய், பருப்புச் சேர்க்காததால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
பலன்கள்: கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம், இதில் நிறைந்துள்ளன. எளிதில் செரிமானம் ஆகும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். எலும்புகள் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தசோகை இருந்தால், இந்த துவையலை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
தாளிக்க: நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: சிறிது எண்ணெயில் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும். இதை மிக்ஸியில் அரைத்து, கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வயிறு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். இதில் வைட்டமின் சி இருப்பதால், உயர் ரத்த அழுத்தம், வாயுக் கோளாறைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
தாளிக்க: நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து வறுத்து, வெங்காயம், தக்காளி மற்றும் கீரையைச் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும். ஆறியதும், உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றைத் தாளித்துச் சேர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், துளி வெல்லம் சேர்த்து அரைக்கலாம்.
பலன்கள்: முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். கர்ப்பிணிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். கால்சியம், மக்னீஷியம், வைட்டமின் சி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இளம் தாய்மார்கள் சாதத்துடன் பிசைந்து சாப்பிட, தாய்ப்பால் பெருகும்.
செய்முறை: பிரண்டையை வெந்நீரில் போட்டு, ஒரு கொதிவந்ததும் இறக்கி வடிகட்ட வேண்டும். சிறிது எண்ணெயில், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். எள்ளை கடாயில் போட்டு படபடவெனப் பொரியவிட்டு எடுக்க வேண்டும். வடிகட்டிய பிரண்டையைச் சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கி இதனுடன் உப்பு, புளி, வெல்லம் சேர்த்து, வறுத்த எள், பருப்பைக் கலந்து அரைக்க வேண்டும்.
பலன்கள்: ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க பிரண்டை உதவும். புரதம், நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கெட்ட கொழுப்பைக் கரைத்து, வயிறு தொடர்பான பிரச்னையைப் போக்கும். வாய்க்கசப்பை நீக்கும். அனைவரும் சாப்பிட ஏற்றது.
செய்முறை: புளியைத் தவிர மற்ற பொருட்களை நன்றாகச் சிவக்க வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
பலன்கள்: பருப்பில் அதிக அளவு புரதம் உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு நல்ல உணவாக இருக்கும். நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் இதில் இருப்பதால், எலும்புகள் வலுப்பெறும். எளிதில் செரிமானம் ஆகும். உடலுக்கு உறுதியைத் தரும். இதை ‘விரதத் துவையல்’ என்றும் சொல்வார்கள்.
தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெயில் நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன், உப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்க்க வேண்டும்.
பலன்கள்: வைட்டமின் ஏ, சி, இ மற்றும் நார்ச்சத்து, மக்னீஷியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து இதில் அதிகம். வேர்க்கடலை கெட்ட கொழுப்பைக் குறைக்கும். எளிதில் செரிமானம் ஆகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தலைமுடி வளர்வதற்கு உதவும். இதயம் தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கும்.
செய்முறை: 2 டீஸ்பூன் எண்ணெயில் கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் சிவக்க வறுத்து, ஆறவிட்டு அரைக்க வேண்டும். பழைய சாதத்துக்கு ஏற்ற துவையல் இது.
பலன்கள்: அதிகப் புரதச்சத்து நிறைந்த துவையல் இது. எளிதில் செரிமானம் ஆகும். குளிர்ச்சியைத் தர்க்கூடியது. செரிமானக் கோளாறு இருப்பவர்கள், இந்தத் துவையலைச் சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்றுப்புண்ணுக்கு இந்த துவையல் சிறந்தது.
Post a Comment