மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்க, இயற்கையே
உருவாக்கிக் கொடுத்த அருமருந்துகள்தான் மூலிகைகள். பூமி முழுக்க அந்தந்தப்
பகுதியின் தட்பவெப்பம், தாக்கும் நோய்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப, இயற்கையின்
ஏற்பாட்டில் அந்தந்தப் பகுதியில் மட்டுமே சிறப்பாக விளைந்து
கொண்டிருக்கின்றன இந்த மூலிகைகள். இப்படி இயற்கையே அனைத்துக்கும் அற்புதத்
தீர்வுகளை நம்முடனேயே பிறக்க வைத்திருக்கிறது. ஆனால், மனிதனின் ஆசையும்,
வேகமும் இயற்கை மீதான புரிதல்களைத் தடுத்துவிட, வேறு எதையோ நோக்கி நாம்
ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், உண்மை புரிந்து மூலிகைகளின் பக்கம்
கவனத்தைத் திருப்பும்போது... அவற்றைப் பறிப்பதற்குக்கூட தெம்பில்லாமல்
சுருண்டு போய்விடுகிறோம்... வயது காரணமாக!
மூலிகைகள், மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்படவில்லை.
ஆடு, மாடு, நாய், பூனை, கோழி இன்ன பிற ஜீவராசிகளுக்கும் சேர்த்தேதான்
படைக்கப்பட்டுள்ளன. தேவை என்று வரும்போது, காடு, மலை என அவற்றுக்காக அலையக்
கூடாது என்பதற்காகவே... புறக்கடை, வாய்க்கால், வரப்பு, சுடுகாடு,
தெருவோரங்கள்... எனக் காணும் இடங்களில்எல்லாம் மலிந்து கிடக்கின்றன
மூலிகைகள். நோயோடும், ரூபாய் நோட்டோடும் மருத்துவமனை நோக்கி ஓடும்
நோயாளிகளைப் பார்த்து, 'உனக்கான தீர்வு நான்தான். உனது காலடியிலேயே
இருக்கிறேன்’ என அழைக்கின்றன. ஆனால், காலடியில் கிடக்கும் காயகல்பங்களான
மூலிகைகளை விட்டுவிட்டு, மருத்துவமனைகளில் மணிக்கணக்கில் காத்திருந்து,
வந்த நோயை விரட்டுவதற்கு பதிலாக, இலவச இணைப்பாக இன்னும் சில நோய்களையும்
சேர்த்துக் கொண்டு வீடு திரும்புகிறோம்!
மூலிகைகளே முதலுதவிப் பெட்டிகள்!
பொங்கல் பண்டிகையின்போது வீடுகளுக்கு வெள்ளையடித்து,
'காப்புக் கட்டுதல்’ என்ற சடங்கை நடத்துவது வழக்கம். ஆவாரை, கார்த்திகைப்பூ
என்ற சிறுபீளை, வேப்பிலை இந்த மூன்று மூலிகைகளையும் ஒரு கொத்தாகக் கட்டி,
வீட்டு முற்றத்தில் செருகி வைப்பார்கள். ஏன் தெரியுமா? அதுதான் அந்தக்
காலத்தில் முதலுதவிப் பெட்டி. ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு குணமுடையது.
ஆபத்து நேரங்களில் அங்கிங்கு அலையாமல் சட்டென எடுத்துப் பயன்படுத்தவே
'காப்புக் கட்டு’ என்ற பெயரில் பழக்கப்படுத்தினார்கள். காலப்போக்கில் அது
வெறும் சடங்காகிப் போனது... நம் துரதிர்ஷ்டம். அப்படி மறந்து போன மூலிகைகள்
பற்றிய புரிதலை உண்டாக்குவதற்காகவே இங்கே மலர்கிறது 'மூலிகை வனம்’ என்ற
புதிய தொடர். இதழ்தோறும் ஒவ்வொரு மூலிகையின் மணம் உங்கள் நாசிகளை வருடும்.
இனி, செலவில்லாத மருந்து, உங்கள் இல்லத்திலேயே...
ஆவாரை!
புராணங்களில் சொல்வதுபோல் ஏழு கடல், ஏழு மலைகளுக்கு
அப்பால் கிடைப்பதல்ல மூலிகைகள். சாதாரணமாக, நாம் அன்றாடம் கடந்து செல்லும்
பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன.
அந்த வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன்
புன்னகைப்பவை... ஆவாரை. வறண்ட நிலத்தில் தான் வளர்ந்தாலும், மனிதர்களின்
நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை. இந்தச் செடி
இருக்கும் இடங்கள்தான், உண்மையில் ஆரோக்கிய மையங்கள். இருக்கும்
இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலையும் மனித மனதுக்கு, செலவில்லாமல்
கையருகே கிடைக்கும் இதன் அருமை தெரிவதில்லை. மனித சமுதாயத்துக்கு ஆவாரை
அள்ளி அள்ளித் தரும் பலன்கள் சொல்லி மாளாது.
புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல்!
கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் ஆடு, மாடுகளை
மேய்ப்பவர்கள், வெயிலின் சூட்டைத் தவிர்க்க, ஆவாரம் இலைகளை தலையில்
வைத்துக் கட்டிக் கொள்வார்கள். இக்காட்சியை இன்றைக்கும் பார்க்கலாம்.
சூட்டிலிருந்து உடலைக் காத்து குளிர்ச்சியை அளிப்பதில் ஆவாரையின் பங்கு
அலாதியானது. உலகை உலுக்கும் கொடிய நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவு
நோய் இரண்டுக்கும் எதிரான ஆற்றல் கொண்டது, ஆவாரை. அதனால்தான் உலகின் பல
நாடுகளில் கேன்சருக்கான சின்னங்களில் ஆவாரம் பூ இடம் பிடித்திருக்கிறது.
குறிப்பாக, 'கனடா கேன்சர் சொசைட்டி’ சின்னத்தில்இதைத் தெளிவாகப்
பார்க்கலாம். உலகின் பல நாடுகளில் விளையும் ஆவாரையைவிட, நம் மண்ணில்
விளையும் ஆவாரைக்கு ஆற்றல் அதிகம் என்கிறார்கள்.
ஆவாரை நீர்!
இன்றைக்கு தேநீர் அருந்தாமல் நம்மால் இருக்க
முடியவில்லை. அதனால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்தப் பலனும் இல்லை. பணம்
செலவாவதுதான் மிச்சம். ஆனால், அதைவிட ருசியான, மிகமிக செலவு குறைந்த,
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆவாரை நீரைப் பருகிப் பாருங்கள். பிறகு, அதை
மட்டும்தான் பருகுவீர்கள். கையளவு ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து,
வடிகட்டி, அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து அருந்தினால்... உடல்
புத்துணர்ச்சி பெறுவதுடன், சரும நோய்களும் குணமாகும் என்கிறது, சித்த
மருத்துவம்.
'கிரீன் டீ’ என்ற பெயரில் இன்றைக்கு அதிகமாக
விற்பனையாகும் தேநீரை விட, ஆயிரம் மடங்கு அற்புதமானது, ஆவாரை நீர். இது
மட்டுமல்ல... ஆவாரை இலையைப் பறித்து, கல்லில் வைத்து அரை குறையாகத் தட்டி,
தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, கண்களின் வழியே வெளியேறுவதை உணர
முடியும். தலை முடி வளர, உடலை மினுமினுப்பாக்க, உடல் துர்நாற்றத்தைத்
துரத்த... என அனைத்துக்கும் ஆவாரை பயன்படுவதால் இதனை, 'சகலநோய் தீர்க்கும்
சர்வரோக நிவாரணி’ என்கிறார்கள்.
இவ்வளவு அற்புதங்களைச் செய்வதால்தான் 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டோ’ எனச் சொல்லி வைத்தார்களோ நம் முன்னோர்கள்.
இனி, ஆவாரையை ஆராதிப்போம்.
- வலம் வருவோம்...
கிலோ 10 ரூபாய்!
மூலிகைச் செடிகளை வாங்கி விற்பனை செய்து வரும்
விருதுநகரைச் சேர்ந்த கருப்பையா, ''கிராமங்கள்ல காடுகள்ல தானா
முளைச்சிருக்கிற ஆவாரம் பூவை பறிச்சுட்டு வந்து விக்குறத, சிலரு தொழிலா
செய்றாக. காய்ஞ்ச ஆவாரம் பூவை, போன வருஷம் கிலோ 20 ரூபாய்னு வாங்கினோம்.
இப்ப மழையில்லாததால ரொம்ப பேரு இந்தத் தொழில்ல இறங்கிட்டாங்க. அதனால,
வரத்து அதிகமா இருக்கு. கிலோ 10 ரூபாய்க்கு வாங்குறோம். இதை, குளியல் பொடி
செய்றதுக்கும், சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிக்கவும் வாங்கிட்டுப்
போறாங்க'' என்கிறார்.
சர்க்கரை கட்டுக்குள் வரும்!
ஆவாரையின் மகத்துவத்தைப் பேசிய கோயம்புத்தூரைச் சேர்ந்த
சுவாமி சுந்தரானந்தர், ''பூ, காய், இலை, பட்டை, வேர் ஆகிய ஐந்தும்
சேர்ந்ததை 'ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்கிறார்கள்.
இவற்றை சம அளவு எடுத்து,
பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு
வெந்நீர் பருகி வந்தால்... நீரிழிவு, உடல் சோர்வு, நா வறட்சி, தூக்கமின்மை
போன்ற பல நோய்கள் குணமாகும்.
ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் காயவைத்து,
பொடியாக்கி, கஷாயம் செய்து அருந்தி வந்தால்... சர்க்கரை கட்டுக்குள் வரும்.
ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை ஆகிய நான்கையும்
சமஅளவு எடுத்து அரைத்து, முழங்காலுக்கு கீழே பூசி வந்தால்... நீரிழிவு
நோயால் பாதிக்கப்பட்ட கால்பகுதி உணர்ச்சி பெறும்' என்றார்.
Post a Comment