ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 16
பித்தத் தலைவலிக்கு சுக்கு கஷாயம்!
டாக்டர் கு.சிவராமன், ஓவியம்: ஹரன்
பாட்டி இன்னைக்கு நான் காலேஜுக்கு லீவு. தலை தெறிக்கிற மாதிரி வலி. ஒரே குமட்டலா வேற வருது.''
''ஓ... இது பித்தத் தலைவலி. எதுக்கு லீவு போடணும்? உடனே
வலி குறையுற மாதிரி கஷாயம் செஞ்சு தாரேன். ஒரு டம்ளர் குடி.
தலைவலி ஓடிடும். நீயும் காலேஜுக்கு ஓடிடலாம்.'
''அப்படி என்ன கஷாயம் பாட்டி?'
''மைக்ரேன்னு சொல்ற இந்தப் பித்தத் தலைவலிக்கு சுக்குக்
கஷாயம்தான் சட்டுனு கேட்கும். இஞ்சியும், சுக்கும் தலைவலியை நீக்குற
மருந்து. சுக்கு அல்லது இஞ்சி, தனியா இரண்டையும் சம பங்கு எடுத்து, தண்ணீரை
விட்டு, கால் பங்கா குறுக்கிக் காய்ச்சி, கூடவே பனைவெல்லம் சேர்த்து 100
மி.லி குடிச்சாப் போதும். தலைவலி, உடனே சரியாயிடும்.'
''பாட்டி பித்தத் தலைவலி ஏன் வருது?'
''பாதித் தலைவலி நம்ம தப்பான பழக்கவழக்கத் தாலேதான்
வருது. நடு ராத்திரி வரைக்கும் தூங்காம, உன்னை மாதிரி செல்போனை
அழுத்திக்கிட்டே இருக்கிறது, தலைக்குக் குளிக்காம 'தண்ணி’ காட்டறது,
எதற்கெடுத்தாலும் டென்ஷன், இதெல்லாம்தான் பித்தத் தலை வலிக்கு முக்கியக்
காரணங்கள் ஏற்கனவே, உனக்கு் சைனசைடிஸ் தலைவலி பற்றிச் சொல்லியிருக் கேன்.
அது மூக்கு ஒழுகி, தும்மலோடு வர்ற தலைவலி. இப்ப நீ அவதிப்படுறது அது
இல்லை.. மைக்ரேன்னு சொல்ற பித்தத் தலைவலி. அதனால், முதல்ல நான் சொன்ன
விஷயத்தைக் கடைப்பிடி... எல்லாம் சரியாயிரும்'
''சரி... இதெல்லாம் செய்ய டைம் ஆகுமே, அப்புறம் நான் எப்படிக் காலேஜ் போறது?''
'அதெல்லாம் டைம் ஆகாது. இஞ்சியைப், பொடிசா நறுக்கி
தண்ணீர் சேர்த்து பொன் நிறமா நீர் வத்தற வரைக்கும் வறுத்துக்கணும். இதே
அளவுக்குச் சீரகத்தையும் வறுத்து எடுத்துக்
கணும். இரண்டையும் சேர்த்த அளவுக்கு வெல்லத்தை எடுத்து உதிர்த்துக்கணும். எல்லாத்
தையும் ஒண்ணா சேர்த்து கலந்து தினமும் காலை
சாப்பாட்டுக்கு பின்னால, அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தா, தலைவலி போறதோட
திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்காது.'
''போன மாசம் எனக்குத் தலைவலி வந்தப்ப, பால்ல ஏதேதோ போட்டுக் காய்ச்சிக் குடுத்தியே பாட்டி. அது என்ன?'
''அதுவா... அது ஒரு டம்ளர் பசும்பாலில் 5 கிராம்
அதிமதுரம், 5 கிராம் பெருஞ்சீரகம், 10 கிராம் பனங்கல்கண்டு... இல்லேன்னா,
வெல்லம் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடா தின மும் குடிச்சிட்டு
வந்தா, தலைவலி மறைஞ்சு போகும். கூடவே சளி, இருமல்கூடச் சரியாகும்.'
''சிலர் தலைவலிக்குத் தைலம் தேய்ச்சுக் குளிக்கிறாங்களே... அது அவசியமா?'
''தலைவலிக்குன்னே சுக்குத் தைலம், கொம்பரக்குத் தைலம்,
குறட்டப்பழத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம்னு சித்த வைத்தியத்துல நிறையத்
தைலங்கள் இருக்கு. இதுல ஏதாவது ஒண்ணைத் தேய்ச்சுக் குளிச்சிட்டு வந்தா
தலைவலி பறந்திடும். எல்லாருக்கும் தைலக்குளியல் சரியா வரும்னு சொல்ல
முடியாது. நாடி பிடிச்சு சொல்ற மருத்துவரைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்.
இப்பல்லாம் சின்னக் குழந்தைக்குக்கூடத் தலைவலி வருது. பார்வைத்திறன்
குறைவுகூடக் காரணமாயிருக்கலாம். கண் மருத்துவரைத் தான் போய்ப்
பார்க்கணும்.'
''குழந்தை இருக்கட்டும்... நம்ம தாத்தாவுக்கும் அடிக்கடி தலைவலி வருதாம். அது உன்னாலதானே?'
''ம்ம்... அவருக்குப் பி.பி இருக்கே. பி.பி கட்டுக்குள்
இல்லைன்னா, தலைவலிதான் முதல் அறிகுறி. அதுவும் குறிப்பா காலையில்
எழுந்ததும் தலை வலிச்சா, முதல்ல ரத்த அழுத்தத்தை 'செக்’ பண்ணிக்கணும். அதுவும் உட்கார்ந்து,
படுத்து, நின்னு ரத்த அழுத்தத்தைப் பரிசோதிச்சாதான், பிரச்னையை சரியா
கண்டுபிடிக்கலாம். அந்தக்கால டாக்ட
ரெல்லாம் அப்படித்தான் பார்ப்பாங்க.'
'சரி பி.பி, தலைவலி ரெண்டுக்கும் சேர்த்து என்ன வைத்தியம் பாட்டி?''
'சரியான மருந்தை மருத்துவர் பரிந்துரை யோட சாப்பிடுவது
முக்கியம். அதோடு, முருங்கைக் கீரை சூப், வெள்ளைத்தாமரை பூ இதழ் உலர்த்திய
பொடி அரை ஸ்பூன் தினசரி எடுத்துக்கலாம்.
கூடவே, 1 லிட்டர் நல்லெண் ணெயில் 3
ஸ்பூன் சீரகம் போட்டுக் காய்ச்சிய எண்ணெயைத் தேய்ச்சு வாரம் இருமுறை
குளிக்கணும். ராத்திரி எந்தத் தடையுமில்லாம, 6 மணி நேரம் தூங்கணும். தினசரி
பிராணாயாமப் பயிற்சி. அதிலும் உயர் ரத்த அழுத்தம்
இருக்கிறவங்க, சீதளி பிராணாயாமம் செய்தா, தலைவலி காணாமலேயே போகும்.
கஷாயம்
கொண்டுவர்றேன்... குடிச்சிட்டு காலேஜுக்குக் கிளம்பு'
''பாட்டி... இன்னிக்கு காலேஜுக்கு கட். இப்ப, சினிமாக்கு ஜூட்!'
1 comment
பயனுள்ள தகவல் தலைவலிக்கு என்ன செய்யலாம் | Thalaivali Treatment Tami
Post a Comment