மிளகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம், கடுகு இவற்றின் பயன்கள்! இயற்கை வைத்தியம்!!
மிளகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம், கடுகு இவற்றின் பயன்கள்! இயற்கை வைத்தியம்!! உலக சரித்திரத்தின் படி, அதிகமாக வெளிநாட்டினவர்களா...
மிளகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம், கடுகு இவற்றின் பயன்கள்! இயற்கை வைத்தியம்!!
இந்தியாவின் வாசனை திரவியங்கள் புகழ் பெற்றவை. உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி, பல உடற்கோளாறுகளுக்கு கை மருந்தாக பயனளிப்பவை. குறிப்பிட்ட வாசனை பொருட்கள் அடங்கிய அஞ்சனம் (அஞ்சறைப்) பெட்டி இல்லாத சமையலறையே கிடையாது எனலாம். இந்த பெட்டியில் அடங்குபவை – மிளகு, சீரகம், பெருங்காயம், கடுகு, வெந்தயம். இவை தவிர மஞ்சள் பொடி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி முதலியனவும் சமையலறையில் இருக்கும் வாசனைப் பொருட்கள். இவற்றினால் சாதாரண உடல் பாதிப்புகளை குறைக்க முடியும்.
மிளகு
இந்தியாவுக்கே உரித்த, இந்தியாவில் தோன்றிய பொருள். மிளகு ஒரு கொடி இனத் தாவரம். இது படர கொழு, கொம்பு, மரம் தேவை. இதன் பழங்களை உலர வைத்து கருமிளகும், வெண்மிளகும் தயாரிக்கப்படுகின்றன. பழுக்காத காய்களை உலர வைத்து கருமிளகும், பழுத்த பழங்களை நனைய வைத்து, மேல் தோலை நீக்கி, வெண் மிளகும் எடுக்கப்படுகின்றன. சரித்திர வரலாற்றின் படி, உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான வாசனை திரவியம் மிளகு. வருடத்திற்கு 75,000 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் விளையும் மிளகுக்கு மதிப்பு அதிகம்.
பயன்கள்
உள்ளுக்கு மருந்தாக – மிளகு காரமும், கைப்பும் நிறைந்திருப்பதால், உள்ளுக்கு சூடு தரும். பசியை தூண்டி ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். உமிழ்நீரை சுரக்க செய்வதால், உணவின் சுவை உணர்வுகளை அதிகப்படுத்தும். எனவே எல்லா வித ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்து.
ஜலதோஷம், இருமல், ஆஸ்த்மா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு மிளகு கஷாயம் நல்லது.
மிளகுப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் குறையும். வெல்லத்தை நீரில் கொதிக்க வைத்து எடுத்து குளிர வைக்கவும். தேனையும், மிளகையும் சேர்த்து கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும். தொண்டை புண்ணுக்கு மிளகுத்தூள், மஞ்சள்தூள், தலா 1/2 தேக்கரண்டி எடுத்து ஒரு கப் பாலில் கலந்து குடிக்கலாம்.
முன் மண்டைத் தலைவலி, நீர்க்கோர்வை இவற்றுக்கு, மிளகு போட்டு காய்ச்சிய எண்ணெய்யை தேய்த்து, குளித்து, புளியில்லா பத்தியத்துடன் இருந்தால் நிவாரணம் கிட்டும்.
சர்மத்தில் ஏற்படும் எரிச்சலுக்கும், சீழ் வடிவதற்கும் மிளகுக் கஷாயம் நல்லது. தோலின் பல அலர்ஜி தடிப்புகளுக்கு மிளகை சாப்பிட்டு வரலாம்.
மிளகு விஷங்களை முறிக்கும்.
குளிருடன் கூடிய ஜுரத்திற்கு, மிளகு கஷாயம் குடித்தால் ஜுரம் தணியும்.
வெளி உபயோகத்திற்கு
சர்ம நோய்களுக்கு – மிளகை நீரில் அரைத்து அல்லது எண்ணெய்யுடன் சேர்த்து அரைத்து களிம்பாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
பல் வலி, பல் கூச்சம், ஈறுவலி இவற்றுக்கு மிளகுப் பொடி சிறந்தது. பல் சொத்தையில் மிளகுப் பொடி. மிளகு, வெங்காயம், உப்பு இவற்றை அரைத்து தலையில் புழுவெட்டுள்ள இடத்தில் பூசி வர, அங்கு முடி முளைக்கும்.
சீரகம்
இதன் பெயரை பிரித்தால் – சீர் + அகம் – உடலின் உட்புறத்தை சீராக வைக்கும் என்று பொருள் படும். சீரகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியிருக்கலாம். ஆனால் தொன்று தொட்டு இந்தியாவிலும் சீனாவிலும் பயிரிடப்பட்டு வருகிறது.
சீரகச் செடி ஒரு சிறிய, 1/2 அடி வளரும் செடி. சீரகத்தில் 5 வகைகள் உண்டு. அவை – நற்சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு), கருஞ்சீரகம், காட்டு சீரகம் மற்றும் பளப்பு சீரகம். முதல் இரண்டு வகைகளும் சமையலில் பயன்படுத்தப்படுபவை. அடுத்த இரண்டும் மருந்துகளாக பயனளிப்பவை. கடைசி ரகம் காரம் நிறைந்த வெளிநாட்டு சரக்காகும்.
சீரகத்தின் வீட்டு மருத்துவ உபயோகங்கள்
உள்ளுக்கு – மிளகைப் போலவே வயிற்றை சீரகம் சீராக வைக்கும். பசியின்மை, பிரட்டல், வாந்தி, வயிறு உப்புசம் (கேஸ் – வாய்வு) மலச்சிக்கல், ஏப்பம், வயிற்றுப் பூச்சிகள் இவற்றை போக்கும்.
பசியெடுக்க – சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊற வைத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை பொடியாக்கி தேனுடன் (அ) சர்க்கரையுடன் கலந்து 5 கிராம் தினம் இரு வேளை சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். இதை வாந்தி நிற்கவும் கொடுக்கலாம்.
ஐந்து கிராம் சீரகத்தை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி கஷாயமாக்கவும். இதை வடிகட்டி, வெது வெதுப்பான சூட்டில் குடித்து வந்தால், மலச்சிக்கல் அஜீரணம், வாய்வுத் தொல்லை, இவை விலகும்.
குழந்தை பிறந்த பின், தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க 1/2 டீஸ்பூன் சீரகம் தேன் (அ) வெல்லத்துடன் கொடுத்து வரலாம். வயிற்றுக் கோளாறுகளும் சீராகும். சீரகப் பொடியை பால் (அ) நெய்யுடன் கொடுத்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
ஐந்து கிராம் சீரகத்தால் செய்யப்பட்ட கஷாயத்தை தினம் இருவேளை, 10 நாள் சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட ஜுரம் குறையும்.
குளிர் ஜுரத்தில் ஏற்படும் நடுக்கத்தைப் போக்க 3 கிராம் சீரகத்தை வெற்றிலையில் சுருட்டி வாயில் அடக்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மெல்லவும்.
சீரகத்தை, இஞ்சி, தனியாவுடன் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் தீராத தலை வலியும் தீரும். அளவுகள் சீரகம், தனியா, தலா அரை டீஸ்பூன். இஞ்சி இரு சிறிய துண்டுகள். கஷாயம் தயாரிக்க தண்ணீர் ஒரு டம்ளர்.
வெய்யில் கால நீர்ச்சுருக்கு எரிச்சலை போக்க – ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் குடிக்கவும். சிறுநீரக கற்கள் நீங்க சீரகப் பொடியை சர்க்கரையுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
வெளிப்பூச்சுக்கு
சீரகத்தை பொடித்து களிம்பாக்கி முகத்தில் தடவ, முகம் பொலிவடையும். களிம்பை, தோல் வீக்கங்களுக்கும், வலிக்கும் இடங்களிலும் தடவலாம்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் முகத்தை கழுவ, முகம் மாசு மருவின்றி பிரகாசிக்கும். அரிப்பு, நமைச்சல், இவற்றுக்கும் சீரகத் தண்ணீரை ஊற்றி கழுவலாம்.
பெருங்காயம்
பெருங்காய செடிகள் இமயமலை பிரதேசங்களிலும், காஷ்மீரிலும் விளைகின்றன. இதன் பெரிய வேர்கள் மேல் பாகத்தில் 6 அங்குல சுற்றளவு உள்ளவை. பெருங்காய செடி 4 – 5 வருடம் வளர்ந்த பின், இதன் தண்டு மற்றும் வேரையும் கீறி விட்டால் பெருங்காய பிசின் கசியும். அதை எடுத்து மண் பாண்டங்களில் பக்குவப்படுத்தி காய வைத்து கிடைக்கும் பொருள் பெருங்காயம்.
பயன்கள்
பெருங்காயத்தை ஒரு துணியில் கட்டி, வீட்டின் ஒரு மூலையில் கட்டி தொங்க விடுவது பழங்கால பழக்கம். இதன் வாசனை, வியாதிகளை விரட்டும் என்ற நம்பிக்கை.
உள்ளுக்கு
வாயுக் கோளாறுகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்து. நெய்யில் வறுத்து கொடுக்க, பசி எடுக்கும், வயிறு உப்புசம் குறையும். வயிற்று வலி குறையும்.
வாயுத் தொல்லைக்கு ஒரு டம்ளர் மோரில் ஒரு கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி உப்பை கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும். ஜீரண சக்தியை தூண்டும்.
பெருங்காயப் பொடியை எண்ணையில் வறுத்து அதை எலுமிச்சை இலைகளோடு கலந்து விழுதாக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை பெருங்காயம் போக்கும்.
ஆஸ்த்மா, தொடர் இருமல் பாதிப்புக்கு சிறிய அளவு பெருங்காயம், 2 டீஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் வெங்காய சாறு, வெற்றிலைச் சாறு ஒரு டீஸ்பூன் – இவற்றை கலந்து குடிக்கலாம்.
சிறுநீர் சரியாக போகாவிட்டால், 5 கிராம் பெருங்காயத்தை நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டால் சிறுநீர் சுலபமாக பிரியும்.
பெண்களின் மாத சுழற்சி கோளாறுகளை சீர் செய்கிறது.
ஆண்மை குறைபாடுகளுக்கு பெருங்காயம் ஒரு சிட்டிகை எடுத்து தேனுடனும், ஒரு டீஸ்பூன் ஆலமர பிசினுடன் கலந்து காலையில் தினமும் ஒரு தடவை வீதம் 40 நாட்கள் எடுத்து வந்தால் பலன் கிடைக்கும்.
குறிப்பு
வெளிப்பூச்சுக்கு
வாய்வுக் கோளாறு காரணமாக வரும் வயிற்று வலிக்கு – பெருங்காயப் பொடியை தண்ணீரில் கலந்து, சுட வைத்து வயிற்றில் தடவ, வலி குறையும்.
பெருங்காயம் + சுக்கு – சம அளவு எடுத்து, பொடித்து, தண்ணீரில் விட்டு அரைத்துக் கொள்ளவும். இதை சூடாக்கி, இளம் சூட்டில் வலி இருக்கும் மூட்டுப் பகுதிகளில் தடவவும். இதை தொடர்ந்து சில நாட்கள் செய்யவும்.
வெந்தயம்
வெந்தயம் சிறந்த மருத்துவ பயன்களை உடையது. ஆயிரக்கணக்கான வருடங்களாக சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீரையும் விதையைப் போலவே சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பயனாகிறது. வெந்தய செடியின் விசேஷம் என்னவென்றால் தான் வளர்ந்த பூமிக்கு திரும்பவும் நைட்ரஜன் உரத்தை காத்து வைக்கும் நன்றியுள்ள தாவரம். ஒன்று (அ) இரண்டடி உயரம் வளரும்
பயன்கள்
அ. உள்ளுக்கு நிறைந்த நார்ச்சத்து இருப்பதாலும், இதில் உள்ள லவணசாரம் என்ற பொருளால் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்பதாலும், வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து.
10 (அ) 20 கிராம் வெந்தயத்தை உணவுக்கு 5 (அ) 10 நிமிடங்களுக்கு முன்பு அல்லது உணவுடன் சாப்பிட்டு வர, இரத்த சர்க்கரை அளவு குறையும்.
டயாபடீஸால் ஏற்படும் ஆண்மை குறைவுக்கு – வறுத்து பொடித்த வெந்தயப் பொடி – 2 டீஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், தனியா பொடி – 1 டீஸ்பூன் – சேர்த்து உட்கொள்ளுதல் பயனளிக்கும்.
வெந்தயத்தை முளை கட்டி உபயோகித்தால் பயன்கள் அதிகம். வெந்தயப் பொடியை 2 டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடித்து வருதல் நீரிழிவு நோயாளிக்கு நல்லது.
அசதி, களைப்பு, உடல் வலி, மறைய வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
பசியை தூண்டும்,
வயிறு உப்புசம், வாய்வுக் கோளாறுகளுக்கு வெந்தயப் பொடி, பெருங்காயம் இரண்டிலும் 1/2 தேக்கரண்டி எடுத்து மோரில் கலக்கி குடிக்கலாம்.
உடல் சூடு, உடல் காங்கை குறைய இரவில் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை காலையில் குடித்து வரவும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனைக்கு, மஞ்சள்பொடி கலந்த வெந்தய கஷாயத்தால் கழுவினால் குணமாகும்.
வெந்தய கஷாயம் நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
தொண்டைப்புண், வாய்ப்புண்களுக்கு வெந்தய இலை விதைகளால் செய்த கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளிக்கலாம். தினம் 2 (அ) 3 முறை செய்யலாம்.
பிரசவித்த தாய்மார்களின் தாய்ப்பால் பெருக உதவும் அரிசியில் உளுந்து கலக்காமல், ஆறுக்கு ஒன்று என்ற அளவில் (அரிசி 6 பாகம், வெந்தயம் 1 பாகம்) வெந்தயம் அல்லது தோசை மாவு செய்து புளிக்க வைத்து அதில் தோசை வார்த்து தாய்மார்களுக்கு கொடுப்பது வழக்கம்.
இரண்டு தேக்கரண்டி வெந்தயம் (அ) சிறுகட்டு வெந்தயக்கீரையை அரிசியுடன் சமைத்து சிறிது உப்பு சேர்த்து உண்டு வர, ரத்த சோகை மறையும். உடலில் இரும்புச்சத்து சேரும்.
தூக்கம் வர வெந்தயகீரை சாற்றுடன் (2 டீஸ்பூன்) ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் போது குடிக்கவும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போக – வெந்தயத்தை பொடித்து, சம அளவு வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து சிறு உண்டைகளாக உருட்டி சாப்பிட்டு வர வேண்டும். இதை மாத விளக்கு ஏற்படும் முந்தைய நாட்களிலிருந்து சாப்பிட்டு வர வேண்டும்.
(ஆ) வெளிப்பூச்சுக்கு
இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் விழுதாக அரைத்து தலையில் தடவிக் கொள்ளவும். இதை வாரம் 2 (அ) 3 முறை செய்தால் பொடுகு மறையும்.
உடல் வீக்கம் புண்களுக்கு வெந்தய களிம்பை சிறிது சூடாக்கி தடவினால் வீக்கம் குணமாகும்.
குறிப்பு: உதிரப்போக்கு உள்ளவர்கள், அதிக உதிரப்போக்கு நோய்கள் உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்.
கடுகு
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. இது அனைவரும் அறிந்த பழமொழி. கடுகு சிறியதானாலும், உணவிற்கு அது ஊட்டும் மணம், சுவை பெரிது.
கடுகு சிறு செடி வகை, உயரம் 0.5 மீட்டரிலிருந்து 1.3 மீட்டர் வரை இருக்கும். இலைகள் கோள வடிவில், நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். விதைகள் சிறியதாக, உருண்டையாக, சிவப்பு, பழுப்பு, கருநிறங்களில் இருக்கும். இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் பயிரிடப்படுகிறது. கடுகில் மூன்று வகை உண்டு. அவை சிறிய செங்கடுகு (கருங்கடுகு) பெரிய செங்கடுகு, வெண் கடுகு.
சமையலில் கடுகு தாளிதம் செய்வதற்கு இன்றியமையாதது ஒரு வாசனைப் பொருள் தாளிக்கவில்லையென்றால், நமது சாம்பார், ரசம், களி இவை முழுமையான சுவையை பெறாது. கடுகில்லாமல் நம் நாட்டு சமையலைறகள் இருக்காது. கரண்டியில் சிறிது எண்ணையைக் காய்ச்சி, 1 தேக்கரண்டி கடுகு போட்டால், அது வெடித்து காரசாரமான நெடியை வெளிப்படுத்தும். அப்படியே எண்ணையை கடுகுடன் தாளிதம் செய்ய வேண்டிய சாம்பார், ரசம், கறி இவற்றில் கொட்ட வேண்டியது தான்.
ஊறுகாய் போன்றவற்றுக்கும் கடுகு சேர்க்கப்படுகிறது. கடுகிலிருந்து எடுக்கப்படும் கடுகெண்ணை தான் வட இந்தியாவில் முழுக்க முழுக்க சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணை.
பயன்கள்
வெளிப்பூச்சுக்கு – கடுகெண்ணை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.
கடுகை அரைத்து பற்றுப் போட வலிகள் குறையும். ஆனால் எரிச்சல் தொடர்ந்தால் பற்றை அகற்றவும். அதிகமான பற்று கொப்புளங்களை உண்டாக்கும்.
கடுகு ஜீரணத்தை மேம்படுத்தும்.
எனவே அஜீரணத்திற்கு, கடுகு நல்ல மருந்து தான்.
ஆனால் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், பேதியை தூண்டிவிடும்.
சரும நோய்களுக்கு கடுகு நல்ல மருந்து. படர் தாமரை போக, கடுகை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.
ஒரு டீஸ்பூன் கடுகை பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் விக்கல் நீங்கும்.
சித்த வைத்தியத்தில் கடுகு
சித்த வைத்தியம் சொல்லும் கடுகின் குணங்கள்.
வாந்தியுண்டாக்கும்
வெப்பமுண்டாக்கும்
கொப்புள மெழிப்பி
சர்மத்திற்கு வெப்பமூட்டும், அரிப்பை தோற்றிவிட்டு மேலும் தீவிரமான தசை வலிகளை குறைக்கும்.
ஜீரணம் உண்டாக்கும்
சிறுநீர் பெருக்கி
இருமல், மூக்கில் நீர் வடிதல், விக்கல், கோழை, வயிற்றுவலி, கீல்
வாயு, செரியாமை, தலைசுற்றல் இவற்றை போக்கும்.
கடுகின் குறைபாடுகள்
கடுகை பச்சையாக சேர்த்தரைத்த உணவுப் பொருட்கள் வயிற்றில் வேக்காளத்தை உண்டாக்கும். கடுகுக் கீரை ஜீரணத்தை பாதிக்கலாம். இதை தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உபயோகிக்க வேண்டும்
Post a Comment