நீச்சலடிக்க வாரீகளா...! உடற்பயிற்சி!!
நீச்சலடிக்க வாரீகளா...! கை களையே துடுப்பாக்கி, கால்களால் எட்டி உதைத்து அசைந்து மிதந்து செல்லும் நீச்சல் பயிற்சிக்கு ஆசைப்படாதவர்களே இர...
https://pettagum.blogspot.com/2014/05/blog-post_8446.html
நீச்சலடிக்க வாரீகளா...!
கைகளையே
துடுப்பாக்கி, கால்களால் எட்டி உதைத்து அசைந்து மிதந்து செல்லும் நீச்சல்
பயிற்சிக்கு ஆசைப்படாதவர்களே இருக்க முடியாது. கொளுத்தும் கோடையில்
நீருக்குள் தவம் இருக்கச் சொன்னாலும், அத்தனை பேரும் தயார் தான்!
பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு... கோடையின் வெப்பத்தைத்
தணிக்க கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஏரி, குளத்தில் நீச்சலடிப்பர்.
நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் நீச்சல் குளங்களுக்குப் படையெடுப்பர்.
நீச்சல் பற்றி, சென்னை வி.வி. இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் ஸ்விம்மிங் நிறுவனத்தின் பயிற்சியாளர் பாலாஜியிடம் கேட்டோம்.
'இன்றும் கிராம மக்கள், இரும்பு போன்ற உடலமைப்பைப்
பெற்ற காரணமே, விடாது செய்து வரும் நீச்சல் பழக்கம்தான். எல்லாராலும்
எளிதில் செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி இது.
உடற்பயிற்சியில் வயிற்றுக்கு, வலுவான காலுக்கு,
தோள்பட்டைக்கு என்று குறிப்பிட்ட பகுதிக்கு என்று பயிற்சி செய்வோம். ஆனால்,
உடலின் அனைத்து பாகங்களுக்கும் வலு சேர்க்கும் ஆற்றல் நீச்சல் பயிற்சிக்கு
உண்டு.'
நீச்சலில் வகைகள்
நீச்சலில், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக்,
பட்டர்ஃபிளை ஸ்ட்ரோக், ஃப்ரீ ஸ்ட்ரோக் என நான்கு வகைகள் உண்டு. எல்லோராலும்
எளிதில் செய்யக்கூடியதும் பிரஸ்ட் ஸ்ட்ரோக் தான். ஒரு மணி நேரத்துக்கு
மேல் செய்தாலும் அசதி தெரியாது. அதோடு, மூச்சு தொடர்பான பிரச்னைகளுக்கும்
மருந்து இது. பட்டர்ஃபிளை ஸ்ட்ரோக், ஃப்ரீ ஸ்ட்ரோக் போன்றவற்றைச் செய்ய
அதிக ஆற்றல் தேவைப்படும். அதே நேரத்தில், எல்லா வயதினராலும் சுலபமாக இதனைச்
செய்துவிட முடியாது.
பயிற்சிக்கு ஏற்ற இடம்
நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் இடம் இதில் மிகவும்
முக்கியம். நீச்சல் பயிற்சியை ஆறு அல்லது கிணற்றில் மேற்கொள்ளும்போது நீர்
மற்றும் சுற்றுப்புறம் தூய்மையானதாக இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில்
பயிற்சி மேற்கொள்ளும்போது நீச்சல் குளம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா,
ஸ்விம்மிங் கிட் பேக் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இருக்கிறதா
என்பதைக் கவனிக்கவேண்டும்.
பழகப் பழக பயம் போகும்
பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு நன்கு தேர்ந்த நீச்சல்
பயிற்சியாளரா என்பதைக் கவனிக்கவேண்டும். அவரது முழு ஒத்துழைப்புடன்தான்
கற்க முடியும்.
முதல் இரண்டு நாட்கள் பக்க சுவர்களைப் பிடித்தபடியே,
நீச்சல் பழக பயிற்சி அளிப்போம். பயிற்சியாளரின் மேற்பார்வையில், நீச்சல்
பழக வேண்டியது மிகமிக அவசியம். முறையாகக் கற்றுக்கொண்டால், ஒரே வாரத்தில்
நீச்சல் அடிக்கலாம்.
நேரமும்... உணவும்...
ஐந்து வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் நீச்சல்
கற்கலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என எல்லோரும் நீச்சல்
அடிக்கலாம். காலை, மாலை தான் நீச்சல் பயிற்சிக்கு உகந்த நேரம்.
நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 மணி நேரம் வரையில்கூட
பயிற்சியை மேற்கொள்ளலாம். பயிற்சியை மேற்கொள்வதற்கு முன் வயிறு காலியாக
இருப்பது நல்லது. இல்லையெனில், திரவ உணவுகளுடன் பழங்கள் ஏதாவது
எடுத்துக்கொள்ளலாம். நீச்சல் அடித்த பிறகு, உடனேயே சாப்பிடாமல், சிறிது
நேரம் இடைவெளி விட்டுச் சாப்பிடலாம்.
பயிற்சிக்கு முன்... பின்...
நீச்சல் பயிற்சிக்கு முன், 'வார்ம்அப்’ செய்ய வேண்டும்.
இது, உடம்பு அசதியை நீக்கிப் புத்துணர்ச்சியைத் தரும். அதிலும் குறிப்பாக,
வயதானவர்கள் 'வார்ம்அப்’ செய்வதால், அவர்களுக்குள்ள வலிகள் நீங்கிவிடும்.
நன்கு பயிற்சி பெறாதவர்கள், எங்கு நீச்சல் அடிக்கச் சென்றாலும், ஆழத்துக்குச் செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
பொதுவாக, பயிற்சியாளர் இல்லாமல் அல்லது நீச்சலில் நன்கு
அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லாத இடங்களில் நீச்சல் செய்வதைத் தவிர்த்து
விடவேண்டும்.
நீச்சல் பயிற்சியை முடித்த பிறகு, குளோரின் கலந்த நீர்
உடலில் படிந்து இருக்கும். எனவே, நீச்சல் அடிக்க இறங்குவதற்கு முன்பும்,
பின்பும் ஷவரில் நன்றாகக் குளித்துவிடுவது நல்லது.
நீச்சலினால் நன்மைகள்
மருத்துவர் திருமாவளவன், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட், விழுப்புரம்.
நீச்சல், வேறு எந்தப் பயிற்சியைக் காட்டிலும் இரு மடங்கு கலோரிகளைக்
குறைக்க வல்லது. இது, வெளிஉறுப்புகள் மட்டுமின்றி உள்ளுறுப்புகளையும் பலம்
அடையச் செய்யும்.
உடல்
எடை மற்றும் திறனைப் பொருத்து அரை மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால், 90
முதல் 550 வரை கலோரிகளை எரிக்கலாம். இது, ஒவ்வொரு நீச்சல் வகையை பொருத்து,
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாறுபடும்.
தேவையற்ற உடல் எடையைக் குறைக்கிறது.
பயிற்சியின்போது
நுரையீரலுக்கு நல்ல காற்று கிடைப்பதால், நுரையீரல் நன்கு விரிவடையும். இது
மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு வடிகாலாக இருக்கும்.
உடலின்
அனைத்து பாகங்களும் ஒரே சமயத்தில் பயிற்சி பெறுவதால், இதயம், நுரையீரல்
போன்ற உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டம் பாயும்.
கை,
கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுவதுடன், மூட்டு,
கணுக்கால், கழுத்து, தோள்பட்டை போன்ற இடங்களில் ஏற்படும் வலிகளை நீக்கும்.
அதனால், வயதானவர்களுக்கான சிறந்த உடற்பயிற்சி நீச்சல்.
செரிமான சக்தியைத் தூண்டுவதுடன், அஜீரணக் கோளாறும் நீங்கும். அதோடு, மலச்சிக்கல் பிரச்னையை நீக்கி நன்கு பசியைத் தூண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலங்களில் வரக்கூடிய பிரச்னைகள்கூட, தொடர்ந்து நீச்சல் செய்துவந்தால் சரியாகும்.
முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுவதுடன், உடல் நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை உடையதாக மாறும்.
சருமத்தில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருப்பதால் புத்துணர்ச்சியும் பொலிவும் கூடும்.
சைனஸ், ஆஸ்துமா, வலிப்பு நோய் வரக்கூடியவர்கள், நாள்பட்ட தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீச்சல் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்.
Post a Comment