அல்சர்... அலட்சியம் வேண்டாம்! ஹெல்த் ஸ்பெஷல்!!
அல்சர்... அலட்சியம் வேண்டாம்! ''சா ஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் சுதாவுக்கு, இரண்டு நாட்களாக வயிறு எரிவதுபோன்று பயங்கர வலி...
https://pettagum.blogspot.com/2014/05/blog-post_384.html
அல்சர்... அலட்சியம் வேண்டாம்!
''சாஃப்ட்வேர்
கம்பெனியில் பணிபுரியும் சுதாவுக்கு, இரண்டு நாட்களாக வயிறு எரிவதுபோன்று
பயங்கர வலி. அலட்சியமாக இருந்ததன் விளைவு, எது சாப்பிட்டாலும் வாந்தி,
வயிற்றை யாரோ இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வு. அடிக்கடி ஹோட்டலில்
சாப்பிடுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவுகளை வெளுத்துக் கட்டியதும்,
கூல்டிரிங்ஸ் குடித்து வந்ததும் தான் இதற்குக் காரணம். அல்சர் நோய்
சுதாவின் வயிற்றைப் பதம் பார்த்துவிட்டது.
வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும்
பிரச்னையாக இருப்பது அல்சர்தான். நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட
பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது'' என்கிற வயிறு மற்றும் குடல் சிறப்பு
மருத்துவர் அசோகன், பலரது வயிற்றைப் பிசையவைக்கும் அல்சர் நோய் வருவதற்கான
காரணங்கள், எப்படி தவிர்க்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார்.
'அல்சர் என்றால் என்ன?'
'தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும்
உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை
வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் (Peptic ulcer) என்கிறோம். காரமான
உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண்
ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது வயிற்றில் வாழும் கெடுதலை
ஏற்படுத்தும் பாக்டீரியா காரணமாக வயிற்றுப் புண் ஏற்படுவதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.'
'அல்சர் ஏன் ஏற்படுகிறது?'
'நாம் உட்கொள்ளும் உணவு செரிப்பதற்காக, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம்
உள்ளிட்ட அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்கள் அதிகமாகச் சுரக்கும்போது
இரைப்பையின் சுவரைப் பாதித்து, புண்ணை ஏற்படுத்திவிடும். காலை, மதியம்,
மாலை நேரத்தில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உணவைத்
தவிர்க்காமல், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது வயிற்றுப் புண்ணுக்கான
வாய்ப்பைத் தவிர்க்கும். ஆஸ்பிரின், ப்ரூஃபின் உள்ளிட்ட வலி நிவாரண
மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தலாம்.'
'அல்சர் என்ன பரம்பரை நோயா?'
'வயிற்றுப் புண்ணை சர்க்கரை நோய் போன்று மரபுரீதியானது
என்று பலரும் நினைக்கின்றனர். இது பரம்பரை நோய் அல்ல. பெரும்பாலும் இது 20
வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகமாகப் பாதிக்கிறது. மேலும் மது அருந்துபவர்கள்
மற்றும் புகைபிடிப்பவர்களுக்கு அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக
அதிகமாக உள்ளது.'
'அல்சரின் அறிகுறிகள் என்ன?'
''முதல் அறிகுறி வலிதான். பற்றி எரிவது போன்ற கடுமையான
வலி வயிற்றில் ஏற்படும். புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படுவதால் இந்த வலி
ஏற்படுகிறது. அடி வயிறு முதல் நெஞ்சுக்கூடு வரையிலான இடத்தில் வலி
ஏற்படலாம். வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகரிக்கும்.
வலி தொடர்ந்து இருக்கும் என்று இல்லை, ஒரு நாள் இருக்கலாம், அடுத்து சில
நாட்களுக்கோ, வாரத்துக்கோ வலி இல்லாமல் இருக்கும். பிற்கு, மீண்டும் வலி
ஏற்படும். தவிர, வாந்தியில் ரத்தம் கலந்து வெளியேறுவது, மலத்தில் ரத்தம்
வெளியேறுவது, குமட்டல் அல்லது வாந்தி, காரணமின்றி உடல் எடை குறைவது,
பசியில் மாறுபாடு போன்றவை ஏற்படலாம்''.
'அல்சர் பாதிப்பை எப்படிக் கண்டறிவது? சிகிச்சை என்ன?'
'மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனே
வயிறு இரைப்பை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். என்டோஸ்கோப்பி மூலமாக
இரைப்பையில் புண் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும். ரத்தப் பரிசோதனை
மூலமாகவும் உறுதிப்படுத்தப் படும். மாத்திரை, மருந்துகளை சரியாக
எடுத்துக்கொள்வதன்மூலம் 90 சதவிகித வயிற்றுப் புண்ணைக்
குணப்படுத்திவிடலாம். சிலருக்கு மாத்திரை மருந்துகள் பயனளிக்காதபோது
அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
சிறுகுடலின் முன்பகுதியில் அல்சர் பாதிப்பு
உண்டானவர்களில் சிலருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி வாந்தி
ஏற்படும். அவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படும். இது மிகவும் கடைசி
நிலையில்தான் மேற்கொள்வார்கள். மிகவும் அரிதாக சிலருக்கு இந்த கிருமியால்
இரைப்பையில் ஓட்டை விழுந்து அமிலம் வெளியேறிவிடும். இவர்களுக்கு உடனடியாக
அறுவைசிகிச்சை செய்யாவிட்டால், மரணம் ஏற்படும்.
வயிற்றுப் புண் பாதிப்பு உள்ளவர்கள் காரமான உணவைத்
தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப் படி மாத்திரைகளை தவறாமல் தினமும்
எடுக்கவேண்டும்.
எல்லா உணவுகளையும் சரியான வேளையில் சரியான முறையில் சாப்பிட்டு வந்தாலே, அல்சரை சமாளிக்கலாம்.'
Post a Comment