ஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 7
முடி வளர மூலிகை தைலம்!
சித்த மருத்துவர் கு.சிவராமன்
தலைக்குக் குளிச்சு, கூந்தலை கோதிவிடும் பாட்டியை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஷைலு,
'பாட்டி, பெண்களுக்கும் ஆம்பிளை மாதிரி மீசை வருதே, அதுக்கு வைத்தியம் இருக்கான்னு

கேட்டு நாலு நாளாச்சு... என்னை வெறுப்பேத்தணும்னே, இப்படி முடியை விரிச்சுப் போட்டிருக்கியா?'' என்றாள்.
'அடிப் பொண்ணே... கார் கூந்தல் பெண்ணுக்கு அழகு; அதைக் கட்டிக் காப்பது நம் மண்ணின் அழகு...'
'கைப்பக்குவமா மருந்து சொல்லுன்னா, கவிதை மழையா
கொட்டுறியே. சரி... முதல்ல... தலைபோற பிரச்னை... தலைமுடிதான். அதுக்கு
முதல்ல வைத்தியம் சொல்லு... மீசையைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம்.'
'தலைமுடி வளர, அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. கைப்பக்குவமா தைலம் தயாரிச்சு தலைக்குத் தேய்ச்சாலே போதும்.'
'என்ன பண்ணினா, முடி வளரும்னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் மண்டைய பிச்சுக்கிட்டு இருக்காங்க... நீ ரொம்ப ஈசியா தைலம்னு சொல்லிட்டே'
'முதல்ல முடிவளர்றதுக்கு உடம்பு நல்லா இருக்கணும்.
உணவு
சத்தானதா இருக்கணும். உள்ளமும் நல்லா இருக்கணும். பித்த
உடம்புக்காரர்களுக்கு முடி கொஞ்சம் சீக்கிரமே கொட்டும்; நரைக்கும்.
உடலில்
உஷ்ணம், குடல் புண், வாய்வு, மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இருந்தாலோ,
ஏதாவது வைரஸ் காய்ச்சல் வந்து போனாலோ, தைராய்டு சுரப்பி குறைவு நோய்
இருந்தாலோ முடி கொட்டும்; இளநரையும் வரும். அப்படி இருந்தால் அந்த நோயை
முதல்ல பூரணமாகக் குணப்படுத்தணும்.'
''எனக்கு ஒரு நோயுமில்லை. நல்லாத்தானே இருக்கேன். எனக்கு ஏன் முடி கொட்டுது.'
''சாப்பாட்டில் தினமும் கறிவேப்பிலை சேர்த்துக்கணும்.
காலையில் இரண்டு காய்ஞ்ச அத்திப்பழம், ஒரு பேரீச்சை எடுத்துக்கணும். காலேஜ்
பிரேக்கில் மாதுளை, பப்பாளித் துண்டுகள், மதிய உணவுக்கு முன்னால கொஞ்சம்
ஊறவைச்ச வெந்தயம், சாயங்காலம் காய்ஞ்ச திராட்சை 10 சாப்பிடணும்.
முடியும்
நல்லா வளரும்; போனஸா ரத்தவிருத்தி ஏற்பட்டு மந்த நிலை போய் மூளையும்
சுறுசுறுப்பா இருக்கும்''.
'வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரை எல்லாம் சாப்பிடுறாங்களே...!''
'அவசியமே இல்லை. அப்படியே சாப்பிட்டாலும், அது மறுநாள்
சிறுநீரில் கலந்து கழிப்பறைக்குப் போய் அங்கு வசிக்கிற
கரப்பான்பூச்சிக்குத்தான் டானிக்கா இருக்கும்.
சோகை இருந்தா முடி
கொட்டத்தான் செய்யும். அதுக்கு சித்த மருத்துவரைப் பார்த்து, கரிசாலை
கற்பம், திரிபலா கற்பம், மாதுளை மணப்பாகு, பாவன கடுக்காய் போன்ற
மூலிகைகளில் செய்யற மருந்தை வாங்கிட்டு வந்து, நல்ல தேனில் கலந்து
சாப்பிடாலே போதும். கூடவே, வாரத்துக்கு மூணு நாளாவது கீரை சாப்பிடணும்.
இரும்புச்சத்து அதிகமாகும். வயிற்றையும் பதம் பார்க்காது; மலச்சிக்கலும்
வராது. குறிப்பா, முருங்கைக் கீரை முடி வளர்க்கும் கீரை.''
''வாய்க்கு ருசியா சாப்பிடறமாதிரி, ஒரு ரெசிப்பி சொல்லேன்.'
''மாதுளை, பெரிய நெல்லி, தர்பூசணி, பீட்ரூட்
இதையெல்லாம் நறுக்கி, சாறு எடுத்து கொஞ்சம் வெல்லமோ, தேனோ சேர்த்து ஜூஸா
குடிக்கலாம்.
உடல் சூடு தணிஞ்சு குளிர்ச்சியாயிடும். அதில் கால்சியம், தாது
உப்புகள்னு அதிகமான சத்துக்கள் இருக்கு. முடி கொட்டுறதும் ஓரிரு
வாரத்திலேயே நின்னு போய், முடி நல்லா வளரும்டி..'
'முடிக்கும் மனசுக்கும் முடிச்சுப் போட்டு பேசினியே.. அது என்ன?''
''பரபரப்பான பதற்றமான மன நிலையும், தூக்கமின்மையும்தான்
முடி கொட்டறதுக்கு முக்கிய காரணங்கள். முடிஞ்சவரைக்கும் இதைத்
தவிர்க்கணும். மனப்பதற்றம், உளைச்சல் குறைய யோகாசனப் பயிற்சி பெஸ்ட்!''
''ஓகே... ஓகே... தைலம் தயாரிக்கிற முறையைச் சொல்லு... நான் எழுதிக்கணும்.''
'செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ரெண்டு லிட்டர்
வாங்கிக்கணும். வெள்ளைக் கரிசாலை, குமரி கற்றாழை, கீழாநெல்லி, அவுரி இவை
எல்லாத்திலயும் ஒரு படிச்சாறு எடுத்துக்கணும். கூடவே 250 மி.லி.
கறிவேப்பிலை சாறு எடுத்து நல்லா பதமா காய்ச்சிக்கணும்.
முடி வளர மூலிகைத்
தைலம் ரெடி. சூட்டு உடம்பா இருந்தா, கொஞ்சம் நெல்லிக்காய்சாறும்
சேர்த்துக்கலாம். மூக்கடைப்பு சைனஸைடிஸ் இருக்கிறவங்க, இந்த சாறோடு
அகில்கட்டை, சுக்கு போட்டு 500 மி.லி. கஷாயமா செஞ்சு வெச்சுக்கலாம். இந்தத்
தைலம் அதுக்கும் மருந்தாயிடும். இந்த மாதிரி செய்த தைலம் தேய்ச்சு
குளிச்சால், உடலில் பித்தம் தணியும். வயித்து வலியை உண்டாக்கும்
குடல்புண்களையும் கூட சீக்கிரமா ஆற்றிடும்.
சும்மா மேம்போக்கா, தலைக்கு
எண்ணெயை காட்டக் கூடாது; நல்லா தேய்க்கணும். குறைஞ்சது 5 மணி நேரமாவது
தலையில் இந்த எண்ணெய் இருக்கணும். ரொம்பத் தலை பிசுபிசுப்பு இருந்தால்,
சீயக்காய்பொடி தேய்ச்சுக்கலாம்.'' 'மூச்சுவிடாம சொல்லி முடிச்சிட்டியே
பாட்டி. இனி, எனக்கு முடி வளர்றது உன் வைத்தியத்திலதான் இருக்கு'' என்றாள்
ஷைலு கண் சிமிட்டியபடி!
Post a Comment