ஜில்லுனு ஒரு பனிக்காலம் பராமரிப்பும் பாதுகாப்பும்! ஹெல்த் ஸ்பெஷல், !!

ந ம் ஊரைப் பொருத்தவரை, எப்போதுமே வெயில், வெயில், வெயில்தான். மழைக் காலம், குளிர் காலம் என்று இருந்தாலும் கா...


ம் ஊரைப் பொருத்தவரை, எப்போதுமே வெயில், வெயில், வெயில்தான். மழைக் காலம், குளிர் காலம் என்று இருந்தாலும் காலநிலை மாறி, வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெப்பத்திலும், புழுக்கத்திலும் கழிகின்றன. அதனால், குளிரும் பனியும் நமக்கு ஒரு சுகமான காலம். பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலையில் சில்லிடும் பனிக் காற்றால், இரவு வரை வீடே ஒருவித ஈரப்பதத்துடன் இருக்கும். குளிர்காலம் என்பது நமக்கு மட்டுமல்ல, கிருமிகளுக்கும் கொண்டாட்டமான காலம்தான். இந்த இதமான தட்ப வெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். விளைவு, சாதாரண ஜலதோஷம் தும்மலில் தொடங்கி, காய்ச்சல், சுவாசப் பிரச்னை என ஆரோக்கியம் கெடுவதுடன், நம்மை ஒரேயடியாக முடக்கிப்போட்டுவிடும். அதிலும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, 'பனிக் காலம்’ என்பதே பரிதாபத்துக்குரிய காலம்தான்! உடலின் நீர்ச் சத்தும் சருமத்தின் எண்ணெய்ப்பசையும் குறைவதால், சருமமும் வறண்டு, தோல் சுருங்கி, பொலிவிழந்துபோகும்.
தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக் காலத்தையும், பிணியின்றிக் கடந்துவிடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை எடுத்துக்கொள்வதும், சருமத்தை வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்வதும்தான் குளிர் காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள். உடலைப் பாதுகாக்கும் குறிப்புகளை, மூத்த பொதுமருத்துவர் எஸ். சேதுராமனும், குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுக் குறிப்புகளை, சித்த மருத்துவர் டாக்டர் பத்மபிரியாவும், சருமத்துக்கான இயற்கை அழகுக் குறிப்புகளை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளியும் வழங்கியிருக்கிறார்கள்.
இனி, பனிக் காலம் புத்துணர்ச்சி, பொலிவுடன் அமைய வாழ்த்துக்கள்!
''குளிர் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது, பச்சிளம் குழந்தைகளும் முதியோர்களும்தான். அவர்களைத்தான், முதலில் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்'' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த பொதுநல மருத்துவர் எஸ்.சேதுராமன்.
பனிக் காலப் பிரச்னைகளும் தீர்வும்...
சளி, இருமல், தொண்டைக்கட்டு, தும்மல், தலைவலி, ஆஸ்துமா, உடல்வலி, காது அடைப்பு, சோர்வு, சரும வறட்சி, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், அலர்ஜி போன்ற சகல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத்தொடங்கிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இந்தப் பாதிப்புகள் உடனடியாகத் தொற்றிக் கொள்ளும்.
டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் தொற்றலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு, ஃப்ளூ காய்ச்சல் மிக எளிதாகத் தாக்கலாம். இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஃப்ளூ’ தடுப்பூசி போட வேண்டும். டைஃபாய்டு காய்ச்சல் வர வாய்ப்பு இருப்பதால், முன்னரே அதற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் வரும் முன் காக்கலாம்.
ஏதாவது ஒரு பொருளால் ஏற்கெனவே அலர்ஜி ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. 'சிந்தடிக்’, ஃபர் பொம்மைகள் விளையாடக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் அலர்ஜியை அதிகமாக்கும்.
முடிந்தவரை, வீசிங் வரும் குழந்தைகள் இருக்கும் இடத்தை, தூசி இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கார்ப்பெட், பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது நல்லது. மிக பலமான வாசனைகொண்ட 'பெர்ஃப்யூம்’களைத் தவிர்ப்பதும் அலர்ஜியிலிருந்து காக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, உடைக்கு வெளியே தெரியும் கை, கால் போன்ற பகுதிகளில் கொசு விரட்டும் க்ரீம் தடவி அனுப்பலாம். இதனால் சருமத்துக்கு எந்தத் தீங்கும் இல்லை.
முதியோர்
வயது முதிர்ந்தவர்களுக்கு பனிக் காலம் வந்தாலே, 'எப்போது இந்த சீஸன் முடியும்?’ என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு பாதிப்பின் வீரியம் மிக அதிகம். அதிலும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் மேலும், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். தோல் மிக மெல்லியதாக இருப்பதால், அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போகலாம். எனவே, மெலிந்த தேகத்தினர், குளிர் காலத்தில் அதிகமான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடும் குளிரில் வெளியே போகும்போது, குளிர்ச்சியால் உடல் தாக்குப்பிடிக்க முடியாமல், மயக்கநிலைக்குப் போகக்கூடும். இதற்கு, 'ஹைப்போதெர்மியா’ என்று பெயர். இது, உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்க வேண்டிய அவசரநிலை ஆகும். சிலருக்கு தலைசுற்றல் ஏற்படும்.
சிலருக்கு காலில் வெடிப்பு (Frost bite) ஏற்படும். தோல் மருத்துவரின் அறிவுரையுடன் வெடிப்புக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், இந்தப் பருவத்தில் கூடுமானவரை வெளியே அதிகம் போகக் கூடாது. தூசி இருக்கும் இடங்களில் ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்யும் வேலைகளைத் தவிர்க்கலாம்.
இதய நோய் உள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான குளிரால், இதயத்திலிருந்து 'பம்ப்’ செய்யப்படும் ரத்தத்தின் அளவு (cardiac output) குறையலாம். இதயத்துடிப்பும் சீராக இருக்காது.  
இதயப் பிரச்னை உள்ளவர்கள், குளிர் காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்குப் போகக் கூடாது. அதிகாலையில் வெளியே வருவதால், மாரடைப்பு ஏற்படலாம். பனிக் காலத்தில் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
'ஹைப்போதைராய்டு’ பிரச்னை உள்ளவர்களால் அதிகமான குளிரையோ, வாடைக்காற்றையோ தாங்கிக்கொள்ள முடியாது. முடிந்தவரை, அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வெளியே பனியில் வராமலிருப்பது நல்லது. உடலை எப்போதும் கம்பளி ஆடையால் மூடி கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 காதுகளுக்குள் புகும் குளிர்ந்த காற்றால், காதிலிருந்து முகத்துக்குச் செல்லும் ஏழாவது நரம்பு (Seventh nerve) பாதிக்கப்படலாம். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், 'பெல்ஸ் பால்ஸி’ (Bell’s palsy) எனப்படும் 'முக வாதம்’ வரும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிப்பாக, குளிர் காலத்தில் காதுகளை மறைத்துக்கொள்ள வேண்டும்.
பனிக் காலத்தில் எல்லோருக்குமான பிரச்னை வறண்டுபோகும் சருமம்தான். கை, கால்களில் சருமம் வறண்டுபோய், வெள்ளை வெள்ளையாக இருக்கும். உதடுகள், பாதங்கள்கூட வெடிக்கும். கைக்குழந்தைக்கும் கூட பாதிப்பு இருக்கும். எனவே, குழந்தை முதல் பெரியோர் வரை, பனிக் காலத்தில் சருமத்தை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விவரிக்கிறார் இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.
சருமப் பாதுகாப்பு
குழந்தைகள்:
   ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தலையில் (ஸ்கால்ப்) உள்பகுதியில் அடை அடையாக இருக்கும். பனிக் காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் அரிப்பு, நமைச்சல் தாங்காமல் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். சில குழந்தைகளுக்கு, புருவம், முதுகு மற்றும் முடியிலும் வெள்ளைநிறப் பொடி போல் ஒட்டியிருக்கும். இதைப் போக்க...
வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து வைத்துக்கொண்டு, குழந்தையைக் குளிப்பாட்ட பயன்படுத்தலாம்.
பயத்தம்பருப்பு, வெந்தயம், கடலைப்பருப்பு மூன்றையும் சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் பட்டுப்போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சலித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு, ஒருநாள் விட்டு ஒருநாள், உச்சி முதல் பாதம் வரை இந்தப் பொடியைக் குழைத்து, நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி, மிருதுவான துவாலையால் துடைக்க வேண்டும். இதனால், குழந்தை, எந்தச் சருமப் பாதிப்பும் இன்றி புத்துணர்ச்சியாக இருக்கும்.
விளையாடும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு, முழங்காலில் இருந்து பாதம் வரை வறண்டு போய், அரிப்பெடுக்கும். சொறியும்போது, திட்டுத்திட்டாகக் கறுத்துவிடும். இதைப் போக்க...
ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைக் கால்களில், முட்டி முதல் பாதம் வரை நன்றாகத் தடவி 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சோப் போட்டுக் குளிப்பாட்டி, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். அரிப்பு, சொறி போவதுடன், கறுமையும் மறைந்து சருமத்தின் இயற்கை நிறத்தைத் தரும்.
பாதத்தின் அடிப்பகுதியும் சில குழந்தைகளுக்கு வறண்டு இருக்கும். சூடான பாலில் கடலை மாவைக் குழைத்து, வெதுவெதுப்பான சூட்டில் முழங்கால் முதல் பாதம் வரை தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். கால்களில் வறட்சி மறைந்து, மென்மையாகும்.
டீன் ஏஜ்
சாதாரண காலத்திலேயே பொடுகு பெரும் பிரச்னைதான். அதிலும், குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கு, மிக முக்கியமான காரணமே, இன்றைய பெண்கள் தலையில் எண்ணெயே வைக்காமல் விடுவதுதான். இதனால் தலைக்குள் இருக்கும் சருமம் வறண்டுவிடும்.  
இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் அரை டீஸ்பூன் மிளகு போட்டுக் காய்ச்சி இறக்கவும். எண்ணெய் இளஞ்சூடாக இருக்கும்போதே, தலையில் தடவி, நன்றாக வாரிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் போட்டுக் கரைத்து, தலையில் லேசாகத் தேய்த்து நன்றாக அலசிக் குளிக்க வேண்டும்.
கை, கால்களில் தோல் வறண்டு, லேசாக நகம் பட்டுக் கீறினால்கூட, வெள்ளை வெள்ளைக் கோடுகளாகத் தெரியும்.
இதைப்போக்க... ஏடுடன் இருக்கும் பாலில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு, கரண்டி அல்லது 'விப்பர்’ கொண்டு நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைக் கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் தடவி வைத்திருந்து, சாதாரண சோப் போட்டுக் குளிக்க வேண்டும்.
நடுத்தர வயதினர் (30 முதல் 60)
தோலில் சுருக்கம் அதிகமாகத் தெரியும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களைக்கொண்டு, இந்தச் சுருக்கத்தைப் போக்கலாம். பால், தயிர், வெண்ணெய் என ஏதாவது ஒன்றைச் சிறிதளவு எடுத்து, நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே சுருக்கம் உள்ள கை, கழுத்து, முகம் போன்ற இடங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்துக் குளிக்கலாம். அல்லது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, இரண்டு உள்ளங்கைகளையும் பரபரவெனத் தேய்த்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி வைத்திருந்து, வெறும் தண்ணீர் ஊற்றிக் கழுவலாம். இதனால், பனியால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
இந்த வயதினருக்கு, தேஙகாய்ப்பால் மிகச் சிறந்தது. தலையில் தேய்த்துக் குளித்தால், கேசம் மிருதுவாக இருக்கும். தலையில் அரிப்பு, பொடுகு மறையும். உடம்பில் தேய்த்துக் குளிக்கும்போது, சருமத்தில் சுருக்கம் மறைந்து, பொன்போல மினுமினுக்கும். 
 
60 வயதுக்கு மேல்
சோப் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, தேநீர் தயாரித்த பின் எஞ்சும் தேயிலைத்தூளை, சிறிது தண்ணீர்விட்டு ஊறவைத்து, அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, உடலிலும் தலையிலும் தேய்த்துக் குளிக்கலாம். ரசாயனம் கலக்காத, பேபி ஷாம்பூ அல்லது மைல்டு ஷாம்பூ உபயோகிக்கலாம்.
ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். குளிக்கும்போது, முதலில் உடலில் தண்ணீரை விட்டுக்கொண்டு, பிறகு இந்த எண்ணெய்க் கலவையைத் தேய்க்க வேண்டும். முதியவர்களின் சருமம் மிகவும் வறண்டு இருப்பதால், எண்ணெயை முதலில் தடவக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றிய பின் தடவினால், எண்ணெய் சமமாகப் பரவும். பிறகு, டீத்தூள் தேய்த்துக் குளிக்கலாம்.
கசகசாவை அரைத்துப் பால் எடுத்து, அதை உடலில் தடவிக் குளித்தால் வறட்சியைப் போக்கி மினுமினுக்கும்.
குளிர் காலத்தில் நம் உணவு எப்படி இருக்க வேண்டும், நம் ஆரோக்கியம் தொடர்பாக நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் சென்னை 'பாரம்பரிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்’  சித்த மருத்துவர் பத்மபிரியா.
பனிக் கால உணவும்... ஆரோக்கியமும்
''குளிர் காலம், நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும் காலம். ஆடி மாதத்துக்குப் பிறகு வருவது தட்சிணாயன காலம். அதாவது, வளர்ச்சிக்கான காலம். அதுபோல நம் உடலிலும் நோய்த்தடுப்பு சக்தி கூடியிருக்கும். சித்த மருத்துவத்தில், 'ஜீரண நெருப்பு’ என்று அழைக்கப்படும் செரிமான சக்தியும் குளிர் காலத்தில் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் செரிமான சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நல்ல செரிமான சக்தி இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.
நமது தமிழ் மரபுப்படி, நல்ல விருந்து அல்லது பலமான உணவுகளுடன் தொடர்புடைய பண்டிகைகள் எல்லாமே, குளிர் காலத்தில்தான் வரும். நவராத்திரியில் தொடங்கி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என, குளிர் காலத்தில் வரும் எல்லாப் பண்டிகைகளிலுமே வயிற்றுக்கு பலமான விருந்து இருக்கும். மார்கழியில் பார்த்தால், அதிகாலையிலேயே கோயில்களில் பொங்கல், சுண்டல் என பிரசாதங்கள் விநியோகம் இருக்கும். இப்படி எல்லாமே நம் உடலில் அந்த நேரத்தில் ஜீரண சக்தி அதிகம் இருப்பதால் அதற்கேற்ப நம் மரபில் வழிவழியாக வந்த வழக்கங்கள்தான்.  இந்தப் பருவ காலத்தில், சுற்றுப்புறம் மிகவும் குளிராக இருப்பதால், நம் உடல் தானாகவே ஒரு கதகதப்பை உருவாக்கிக்கொள்ளும். முதியவர்களுக்கு மட்டும் இது கொஞ்சம் சிரமம் தரும் பருவமாக இருக்கும்.
உடலில் உள்ள வறட்சி போக, நல்லெண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம். மிதமான வெயில் அடிக்கும்போது, நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யலாம். உடல் நன்கு புத்துணர்ச்சி அடைந்து, சுறுசுறுப்பாகும். சிலருக்குப் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். இவர்கள், விளக்கெண்ணெயில் மஞ்சள்தூள் கலந்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், குணம் தெரியும். நாட்டு மருந்துக் கடையில் குங்கிலிய வெண்ணெய் என்ற மருந்து கிடைக்கும். அதை வாங்கித் தடவினாலும் நல்ல பலன் தெரியும்.
குளிர் கால உணவுக் குறிப்புகள்:
கிச்சடி, பொங்கல் போன்றவை, குளிர் காலத்துக்கான முழுமையான காலை உணவுகள். இவற்றில் சேர்க்கப்படும் பருப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகு என எல்லாப் பொருள்களுமே இந்தத் தருணத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவப் பொருட்கள். சீக்கிரத்திலேயே செரிக்கும்.
சாதாரணமாக நாம் குடிக்கும் சுக்கு, மல்லிக் காப்பி இந்தக் காலத்துக்கு மிகச் சிறந்த பானம். சுக்கு, மல்லியுடன் இரண்டு மிளகையும் பொடித்துச் சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது. சளி முதல் சகலத்தையும் விரட்டிவிடும்.
கால்வலி, வாதத்தால் ஏற்படுகிறது. வலியால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிது பெருஞ்சீரகம், மிளகு, ஓமம், சீரகம் ஆகியவற்றை எடுத்துப் பொடித்து, அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். கால்வலி குறையும்.
இஞ்சிக்கு வீக்கத்தைக் குறைக்கும் மருத்துவக் குணம் உண்டு. ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருந்தாலும், இஞ்சி சரிசெய்யும். மூட்டுவலி, உடல்வலி இருப்பவர்கள் டீயில் இஞ்சியைத் தட்டிப்போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். சமையலில் நிறைய இஞ்சி சேர்க்கலாம். இதனால் கால் வீக்கம் குறைவதுடன், வலியும் நீங்கும்.
உணவில் இஞ்சி, கொத்துமல்லி இலை, புதினா இலை, கறிவேப்பிலை போன்றவற்றை அதிகம் சேர்க்கவேண்டும். இவையெல்லாமே சிறந்த வலிநிவாரணிகள்தான்.
பனிக் காலத்தில் பால் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. அப்படிக் குடித்தாலும், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துக் குடிக்கவேண்டும். இதனால் கபத்தின் குணம் குறையும்.
அரிசி, கோதுமைக்குப் பதிலாக, கம்பு, ராகி, பார்லி போன்ற தானியங்களில் கஞ்சி தயாரித்துச் சாப்பிடலாம். ஓட்ஸை விட பார்லி மிகவும் நல்லது.
சில குழந்தைகளுக்கு 'வீசிங்’ எனப்படும் இளைப்பு ஏற்படும். சளித் தொந்தரவும் இருக்கும். துளசியைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது.
பேக்கரி உணவுகளான கேக், பஃப்ஸ், பன் போன்றவை மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த ஸ்நாக்ஸ் கொடுப்பதைத் தவிர்த்து, கொட்டைப் பருப்பு வகைகள் (நட்ஸ்), உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
முளைகட்டிய பயறு சுண்டல், பாசிப்பருப்பில் செய்த லட்டு, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவை சிறந்த ஸ்நாக்ஸ்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், மற்ற செயல்பாடுகளுக்கும் கொழுப்பு மிக அவசியம். எனவே எண்ணெய், நெய் சேர்த்துக்கொள்ளலாம். நெய் போட்டுச் செய்த முறுக்கு, சீடை சாப்பிடத் தரலாம். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடப் பழகிய குழந்தை, 'ஜங்க் ஃபுட்’-ஐ நாடிப் போகாது.  
இந்தப் பருவத்தில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற காய்களை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆனால், பூசணி, வெள்ளரி போன்ற நீர்க்காய்களைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழத்தைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குளிர் காலத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆரஞ்சுப் பழத்துக்கு இதுதான் சீஸன். ஆனால், சளி, ஜலதோஷம் இருப்பவர்கள், ஆரஞ்சைத் தவிர்த்துவிட்டு, நெல்லிக்காய் சாப்பிடலாம். 
பொதுவான பராமரிப்புக் குறிப்புகள்:
பச்சிளம் குழந்தைகளை, காலையிலோ மாலையிலோ குளிப்பாட்டாமல், வெயில் வந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும்.
பச்சிளங் குழந்தைகளின் சருமம் மிக மிருதுவாக இருப்பதால், வறண்டுபோவதுடன், வியர்க்குரு போன்ற சிவந்த தடிப்புகள் (ராஷஸ்) உடலில் தோன்றும். குழந்தைக்கு அரிப்பும் எடுக்கும். இதில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, தரமான மாய்ஸ்சரைஸிங் லோஷன் உபயோகிக்கலாம்.
வீரியமிக்க வேதிப்பொருட்கள் கலக்காத, குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் மென்மையான சோப் உபயோகிக்க வேண்டும்.
கனத்த கம்பளியும், காதுகளை மூடிக்கொள்ளும் மஃப்ளரும் எப்போதும் உடலை மூடியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், காதுகளை மூடிக்கொள்ளவேண்டியது மிக முக்கியம். ஏனெனில், உடலைக் கதகதப்பாக வைத்திருக்க, கிளவுஸ், ஷூஸ், காதுகளை மறைக்கும் தொப்பி அல்லது மஃப்ளர் போன்ற தற்காப்பு உடைகள் அணிவது அவசியம்.
இந்தக் காலத்தில் நாம் தண்ணீர் அதிகம் குடிப்பது இல்லை. இதனால், உடலில் நீர்ச் சத்து குறைந்து, வறட்சி ஏற்படுகிறது. எனவே, வழக்கம்போல தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீருக்குப் பதிலாக வெந்நீர் குடிக்கலாம்.
தலைக்குக் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் வைக்க வேண்டும். குளிப்பதற்கு முன்னர், தேங்காய் எண்ணெய் வைத்துக்கொண்டு, குளிக்கலாம். இதனால் தலையில் உள்ள சருமம் வறண்டு முடி உதிர்வது தடுக்கப்படும். எண்ணெய் வைத்து நன்கு வார வேண்டும்.
உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது சகஜம். இதைப்போக்க, காய்ந்த திராட்சை உதவும். நான்கு, ஐந்து காய்ந்த திராட்சைகளை எடுத்துக்கொண்டு கைகளால் நசுக்கி, அதில் வரும் சாறை உதடுகளில் அழுத்தித் தேய்த்துக்கொண்டால் போதும். பீட்ரூட் சாறு தேய்க்கலாம்.
காலையில் வெளியே கிளம்பும் முன், சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய்யை எடுத்து விரல்களால் உதடுகளில் அழுத்தித் தடவிக்கொள்ளலாம். உதடுகள் வெடிக்காமல் இருப்பதுடன், கருக்காமலும் இருக்கும். நாக்கால் அடிக்கடி உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அப்படிச் செய்வதால் உதடுகள் இன்னும் அதிகமாகக் காய்ந்துவிடும். வெளியே செல்லும்போது, பனிக் காற்றால் உதடுகள் பாதிக்கப்படாமலிருக்க, தரமான 'லிப் கிளாஸ்’ உபயோகிக்கலாம்.
வீட்டுக்குள்ளேயும் வெளியிலும் காலணி அணிந்து நடப்பது நல்லது. இதனால் அலர்ஜி தடுக்கப்படும்.
மூட்டு பிரச்னைக்கு இஞ்சி கஷாயம்
ஒரு துண்டு இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, தண்ணீர் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, தெளியவிடவும். பிறகு, வடிகட்டி, லேசாகச் சுடவைத்து, தேன் சேர்த்து அருந்தினால், குளிரில் வரும் மூட்டுப் பிடிப்புகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும்.
செரிமானக் கோளாறு நீங்க:
அதிமதுரம் 10 கிராம், சித்திரத்தை 10 கிராம், சுக்கு 5 கிராம், கிராம்பு 2, ஏலக்காய் 2 இவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ளவும்.  இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து,  3 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி, சிறிது பனங்கல்கண்டு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து அருந்தலாம். குளிர் காலத்தில் இருமல், ஜலதோஷம் எதுவும் வராது. செரிமானத்துக்கும் நல்லது.
டான்சில்ஸ் தொல்லைக்கு:
சிறு குழந்தைகளுக்கு டான்சில்ஸ் இருந்தால், தொண்டை வலி இருக்கும். 'பூண்டுத் தேன்’ சிறந்த கைமருந்து. பூண்டில் 'கந்தகம்’ உள்ளது. மேலும் இது சிறந்த 'ஆன்டிபாக்டீரியல்’ மற்றும் 'ஆன்டி மைக்ரோபியல்’ பொருளும் கூட.
நாலைந்து பூண்டுப் பல்லை அரைத்து, துணியில் போட்டு, தீயில் காட்டினால் 2, 3 சொட்டு சாறு இறங்கும். இதனுடன் 2, 3 சொட்டுகள் தேன் கலந்து குழைத்து, குழந்தையின் தொண்டையில் தொடர்ந்து தடவி வரவேண்டும். தொண்டைக்கட்டு, தொண்டைவலி எல்லாமே சரியாகும். பெரிய குழந்தைகளுக்கு, பூண்டுப்பற்களை வதக்கி, தேன் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.
ஆஸ்துமா பிரச்னையைக் குறைக்க:
சுலபமாகச் செரிக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு உணவை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
திப்பிலிப்பொடியை வாங்கிவைத்துக்கொண்டு, அதில் அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால், ஆஸ்துமா தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம்.
பனிக் காலத்தில் நம் உணவையும் கொஞ்சம் மாற்றி, உடலை உஷ்ணப்படுத்தும் உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
டாக்டர் பத்மபிரியா வழங்கும்
குளிர் கால 'சூடான’ விருந்து இதோ...!
கொள்ளு பொங்கல்
பச்சரிசி ஒரு கப் என்றால் கால் கப் கொள்ளு எடுத்து வறுத்துக்கொள்ள வேண்டும். அரிசி, கொள்ளு, உப்பு, சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிட்டு எடுக்கவும்.  ஒரு ஸ்பூன் நெய்யில் சிறிது மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்துச் சுடச்சுட சாப்பிட வேண்டும். விருப்பப்பட்டால், முந்திரியை நெய்யில் வறுத்துக் கொட்டிக் கலந்துகொள்ளலாம்.
கொள்ளு சூப்
ஒரு கைப்பிடி கொள்ளை நான்கைந்து மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து, குக்கரில் தண்ணீர் சேர்த்து, குழைய வேகவைக்கவும். அரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றைப் பொடிக்கவும். வெங்காயம், சிறிய தக்காளி தலா ஒன்று எடுத்து நறுக்கிக்கொள்ளவும்.  இவற்றுடன் நசுக்கிய நாலைந்து பூண்டை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்து நன்கு மசித்துவிட வேண்டும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, மீண்டும் கொதிக்கவைத்து இறக்கி, பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, மேலாக ஒரு ஸ்பூன் நெய்விட்டு, அருந்த வேண்டும்.  
கொள்ளு உடலுக்கு உஷ்ணம் தரும். கொழுப்பைக் கரைக்கும் குணம்கொண்டது. ஆஸ்துமா, சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களுக்கு நல்லது.
மிளகுக் குழம்பு
மிளகு, வெந்தயம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன்,  ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இவை எல்லாவற்றையும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் வறுத்து, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்துவைக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, சீரகம் போட்டுத் தாளித்து, தேவைப்பட்டால் சிறிது பூண்டு போட்டு வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பொடியைப்போட்டு, குழம்பு வற்றி வந்ததும், ஒரு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சூடான சாதத்தில் போட்டுப்பிசைந்து சாப்பிட்டால், சளி, காய்ச்சல் சட்டென மறையும்.  
தனியாப்பொடி
100 கிராம் தனியா, 25 கிராம் சிவப்பு மிளகாய், கிராம்பு 4 அல்லது 5, பட்டை ஒரு துண்டு, தேவைக்கேற்ப உப்பு, சீரகம் ஒரு டீஸ்பூன், மஞ்சள் ஒரு சிறிய துண்டு இவை எல்லாவற்றையும் சிறிது நல்லெண்ணெய் விட்டு, தனித்தனியாக வறுத்து, ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இந்தப் பொடியைப்போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.
செரிமானக் கோளாறுகள் சரியாகும். உடம்புக்கு சூடு தரக்கூடியது. சளி, காய்ச்சல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு, வாய்க்கும் வயிற்றுக்கும் நல்ல உணவு.
கண்டதிப்பிலி ரசம்
10 முதல் 20 கிராம் கண்டதிப்பிலி (நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும்), மிளகு, துவரம்பருப்பு, தலா அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், 2 காய்ந்த மிளகாய், புளி பெரிய நெல்லிக்காய் அளவு.
புளியைக் கரைத்துவைக்கவும். கண்டதிப்பிலி, துவரம்பருப்பு, சீரகம், மிளகு, துவரம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, ஆறவைத்து கொரகொரப்பாக அரைத்து, புளித்தண்ணீரில் போட்டுக் கரைத்துக் கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சூடாகக் குடிக்கலாம். சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.
உடம்புவலி, காய்ச்சல், மூட்டுவலி, ஜலதோஷம் எல்லாவற்றுக்கும் சிறந்த நிவாரணி.
முடக்கத்தான் தோசை
ஒரு கப் முடக்கத்தான் கீரையைக் கழுவி, நன்கு மைய அரைத்துக்கொள்ளவும். 2 கப் அரிசியை ஊறவைத்து உப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம்சேர்த்து அரைக்கவும். காரம் தேவைப்பட்டால் அரைக்கும்போது 10 மிளகு சேர்த்து அரைக்கலாம். அரிசி மாவுடன், அரைத்த கீரை விழுதைச் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் வைத்திருந்து தோசையாக ஊற்றி, சட்னியுடன் சாப்பிடலாம்.
மூட்டுவலி, முழங்கால்வலி, உடம்புவலி என எல்லா வலிகளையும் போக்கும் அற்புதமான உணவு இது.
இஞ்சித் தொக்கு
20 கிராம் இஞ்சியைத் தோல் சீவி, துருவி, துளி எண்ணெய்விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் மல்லி (தனியா), 4 மிளகாய் சேர்த்து வதக்கவும். ஒரு டீஸ்பூன் தேங்காயையும் வறுத்துக்கொள்ளவும். தனியா, மிளகாய், தேங்காய் மூன்றையும் அரைத்துக்கொள்ளவும். சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது, தேங்காய், மல்லி, மிளகாய் அரைத்த விழுது, இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பொங்கிவரும்போது, துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
இந்தக் குளிருக்கு இதமான உணவு இஞ்சி. அஜீரணம், வலிகளைப் போக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2596006062263459408

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item