இயற்கை ஒவ்வொன்றையும் மிகச் சரியாகவே இயக்குகிறது. அதைப் புரிந்துகொள்ள முடியாத மனிதன், இயற்கைக்கு நேர் எதிராக ...
இயற்கை ஒவ்வொன்றையும் மிகச் சரியாகவே இயக்குகிறது.
அதைப் புரிந்துகொள்ள முடியாத மனிதன், இயற்கைக்கு நேர் எதிராக இயங்க
ஆரம்பிக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. இது, நம் உடலுக்கும்
பொருந்தும். ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்த தட்பவெப்பச் சூழலுக்கு ஏற்ப,
மனிதனுக்குத் தேவையான உணவுகளை இயற்கை படைத்திருக்கிறது. உதாரணத்துக்கு,
வெயில் காலத்தில் பதநீர், நுங்கு.
'உள்ளூர் மாடு விலை போகாது’ என்பார்கள். அதுபோல, விலை
குறைவாக உள்ள நம் ஊர் பழங்களை நாம் அதிகம் விரும்பி உண்பது இல்லை.
இன்றைக்கு ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, பட்டர் ஃப்ரூட், மங்குஸ்தான்,
ரங்குட்டான் போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விதவிதமான
பழங்களை, அதிக விலை கொடுத்து வாங்கி உண்கிறோம். இந்தப் பழங்களுக்கு எந்த
வகையிலும் குறையாத சத்துக்கள் கொய்யா, பப்பாளி, சப்போட்டா பழங்களில்
இருக்கின்றன. இது கொய்யாப் பழ சீஸன். 'கொய்யாவைக் கடித்துத் தின்னா... பலன்
அதிகம் பையா!’ எனச் சொல்லிவைத்தனர் நம் முன்னோர். 'ஏழைகளின் ஆப்பிள்’ எனச்
சொல்லப்படும் கொய்யாவில் உள்ள சத்துக்கள் பற்றி, திண்டுக்கல்லைச் சேர்ந்த
இயற்கை மற்றும் யோகா மருத்துவரான சர்மிளா பாலகுரு விளக்கமாகச்
சொல்கிறார்.
'உள்ளூரில் விளையும் பழங்களைச் சாப்பிடுவது கௌரவக்
குறைச்சல் என்று நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். உண்மையில், அனைத்துவிதமான
சமச்சீர் சத்துக்களும் நம் ஊர் பழங்களில் உள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த
அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு ஆகிய இந்த மூன்றும்தான்
இன்றைக்கு இருக்கிற மிக முக்கியமான பிரச்னைகள். இந்த மூன்றுக்குமான
அருமருந்து, கொய்யாப் பழம்தான். சர்க்கரை நோயாளிகள் கொய்யாவைச் சாப்பிடக்
கூடாது என்பார்கள். இது தவறான கருத்து. கனிந்த பழமாகச் சாப்பிடாமல், அரைப்
பழமாகச் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சர்க்கரை அளவைக்
கட்டுப்படுத்தும் ஆற்றல் கொய்யாவுக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தம், இதயப்
படபடப்பு ஆகியவற்றைக் குறைக்கும். இன்றைக்கு இந்தியப் பெண்கள், குழந்தைகள்
மத்தியில் ரத்த சோகை பெருமளவில் உள்ளது. ரத்த சோகையைப் போக்கும் சக்தி,
கொய்யாவில் உள்ளது. கண்ட உணவைச் சாப்பிட்டு, வயிற்றைக்
கெடுத்துவைத்திருக்கிறோம். இதனால் ஏற்படும் செரிமானக் குறைபாட்டைப் போக்க,
கொய்யாப் பழம் சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது
என்பார்கள். ஆனால், அதைவிட மூன்று மடங்கு அதிகமாக கொய்யாவில், வைட்டமின்
சி இருக்கிறது. இதேபோல, கால்சியம் உள்ளிட்ட தாதுப் பொருட்களும் மிக அதிக
அளவு உள்ளன. இதனால், குழந்தைகள் தினமும் கொய்யாவைச் சாப்பிட்டு வந்தால்,
அவர்கள் எலும்பு மற்றும் பற்கள் பலம் அடையும்.
வாழைப்பழத்தில் இருப்பதைவிட பொட்டாசியம் சத்து
கொய்யாவில் கூடுதலாக உள்ளது. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி,
செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்’ ஆப்பிள், மாதுளை,
வாழைப்பழம், திராட்சை அனைத்தையும்விட, கொய்யாவில் அதிகம் இருக்கிறது என்று
ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
தோல் பிரச்னைகளுக்கு தீர்வைத் தரும். மலச்சிக்கலை
நீக்கும். கல்லீரலைப் பலமாக்கும். புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள் கொய்யா மரத்தின் கொழுந்தை தினமும்
மென்று விழுங்கினாலே, கை மேல் பலன் கிடைக்கும். இப்படி எல்லாப்
பிரச்னைக்கும் தீர்வைத்தந்து ஆரோக்கியத்தைக் காக்கும் கொய்யாப் பழத்தை,
'பழங்களின் சூப்பர் ஸ்டார்’ என்கிறார்கள். விலை குறைவாகவும், சத்துக்களின்
பெட்டகமாக இருக்கிற கொய்யாவை அனைவரும் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்''
என்றார்.
Post a Comment