அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! --- ஹெல்த் ஸ்பெஷல்,
சமீபத்தில் 'ஆர்கைவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசன்ஸ்’ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி பலரையும் அதி...
https://pettagum.blogspot.com/2013/08/blog-post_1376.html
சமீபத்தில் 'ஆர்கைவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசன்ஸ்’ என்ற
பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி பலரையும் அதிர்ச்சி
அடையவைத்துள்ளது. 'நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களின் ஆயுள்
குறையும், சில மணித்துளிகள் உட்காருபவர்களுக்கு ஆயுள் கெட்டி!’ என்பதுதான்
அந்த ஆராய்ச்சியின் முடிவு. அதிக நேரம் உட்கார்ந்தே பணிபுரிவதால் ஏற்படும்
பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில்,
''நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும், வாழ்நாளில்
பாதி நாட்கள் சேரில் உட்கார்ந்து, உங்கள் ஆயுளைக்
குறைத்துக்கொள்ளாதீர்கள்'' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயம்
தொடர்பான பிசியோதெரபிஸ்ட் மற்றும் மறுவாழ்வு சிறப்பு நிபுணரான அமல் மோகன்.
''அதிக
நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.
அலுவலகத்தில் உட்கார்ந்த நிலையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இன்று
அதிகரித்திருக்கிறது. குறைந்தது எட்டு மணி நேரம் சேரில் ஆணி அடித்ததுபோல்
இடைவிடாது உட்கார்ந்து வேலை செய்கின்றனர். இப்படித் தினமும் எட்டு மணி
நேரம் தொடர்ந்து, வாரக்கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது, தசைகளின்
செயல்பாடுகள் குறைந்து, தசைகள் இறுக ஆரம்பிக்கும். அதிகப்படியான கொழுப்பைக்
குறைக்க, தசைகள்தான் 'பவர் ஹவுஸ்’ போன்று செயல்படுகிறது. அதில் பிரச்னை
ஏற்பட்டால் கலோரிகள் சரிவர எரிக்கப்படாது. சுறுசுறுப்பாக ஓடி ஆடும்போதும்,
உடற்பயிற்சி செய்யும்போதும் ஆக்சிஜன் அதிகம் உள்வாங்குவது இயல்பு. ஆனால்,
ஒரே இடத்தில்
எந்தவித அசைவும் இன்றி இருந்தால், கலோரிகள் எரிக்கப்படுவது
குறைந்துவிடும். இதனால் உடலில் குளுகோஸின் அளவில் மாற்றம் ஏற்படும்.
முடிவில் நீரிழிவு நோயில் (டைப் 2 டயாபடீஸில்) கொண்டுவிடும்.
இதையும் கவனிக்காமல் அலட்சியமாக இருந்தால், பிரச்னைகள்
இன்னும் தீவிரமடையும். இப்படியே தொடர்ந்து ஆறு வாரம் உட்கார்ந்திருக்கும்
நேரத்தைக் குறைக்காமல்போனால், உடலில் 'எல்.டி.எல்.’ என்ற கெட்டக் கொழுப்பு
அதிகரிக்கும். உடலில் இன்சுலின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுவதால், 'டிஸ்
லிபிடெமியா’ அல்லது 'ஹைபர் லிபிடெமியா’ போன்ற பிரச்னைகள் ஏற்படவும்
வாய்ப்புகள் உண்டு.
தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் என, தொடர்ந்து ஒரு
வருஷம் வரை நாற்காலியில் உட்காரும்போது, 'ஒபிசிட்டி’ என்ற உடல் பருமன்
பிரச்னை தலைத்தூக்கும். உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட காலம் ஒரே இடத்தில்
இருப்பதால், காலப்போக்கில் 'போன் மேரோ டென்சிட்டி’ என்ற எலும்பின்
உறுதித்தன்மை, ஒரு வருடத்துக்கு ஒரு சதவிகிதம் வரை குறைய ஆரம்பிக்கும்.
உட்கார்ந்த நிலையில், அலுவலகப் பணிகளை முடிக்க
முடியாமல் போகும்போது, கூடவே மன அழுத்தம் ஏற்பட்டு, 'கேட்டகோலமைன்’ என்ற
ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதனால் இதய நோய் வரலாம். 'கரோனரி ஹார்ட்
டிசீஸ்’ என்ற இதய சம்பந்தமான பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு மூல காரணம்,
சர்க்கரை வியாதி அல்லது டிஸ் லிபிடெமியாதான். ஆண்களுக்கு ப்ராஸ்ரேட்
கேன்சர், பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரவும் வாய்ப்புகள்
உள்ளன. கோலன் கேன்சரும் (இரைப்பையில் ஒரு பாகம் - ஒபிசிட்டி
இருப்பவர்களுக்கு அதிகம் வரக்கூடிய நோய்) வருவதாக சமீபத்திய ஆய்வுகள்
தெரிவிக்கின்றன'' என்ற அமல் மோகன், தொடர்ந்து தவறான பொசிஷனில்
உட்கார்ந்தால் 'பாஸ்சர்ஸ் ஸ்கோலியசிஸ்’ என்ற பிரச்னை ஏற்படலாம்.
முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, முதுகு வலி வரலாம். கம்ப்யூட்டர் முன்பு
அதிக நேரம் இருப்பதால், 'ரேடியேட்டிங் பெய்ன்’ (ராடிகலோபதி) என்ற
பாதிப்பும் ஏற்படக்கூடும். மேலும், கால்களை தொங்கவிட்டபடி
உட்கார்ந்திருக்கும்போது, காலில் வீக்கம், வலி, மறத்துப்போதல் போன்றவை
ஏற்படலாம்'' என்கிறார்.
ரிலாக்ஸ் டிப்ஸ்...
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நின்று, சிறிது தூரம் நடக்க வேண்டும்.
உட்கார்ந்தபடியே கால்களுக்கு அசைவு கொடுப்பதுபோல், எளிய பயிற்சிகள் செய்யலாம்.
வீடு மற்றும் அலுவலகத்தில் லிஃப்ட்டில் போகாமல் படிகளைப் பயன்படுத்தலாம்.
கடைத்தெருவுக்கு டூவீலரில் போகாமல், காலார நடக்கலாம்.
அலுவலகத்துக்குள் இன்டர்னல் மெயில் அனுப்புவதற்கு பதில், சிறிய நடை நடந்து கேபினுக்குச் சென்று கைகுலுக்கலாம்.
பிரேக் நேரங்களில் டீ ஆர்டர் பண்ணாமல், பக்கத்தில் இருக்கும் கேன்டீனுக்கு நடந்து சென்று காபி அருந்தலாம்.
Post a Comment