சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை.... 30 வகை முருங்கை சமையல்!
...
https://pettagum.blogspot.com/2013/07/30.html
''சாம்பார்னா, முருங்கைக்காய் சாம்பார்தான்! என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் சப்புக்கொட்டத் தவறுவதில்லை.
சாம்பாருக்கு சுவையூட்டும் முருங்கையில் புரதம், இரும்பு, கால்ஷியம், பொட்டாஷியம், விட்டமின் 'சி' என ஏரளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இதில் டிபன், பச்சடி, ஊறுகாய் என கிட்டத்தட்ட எல்லா சமையல் வகைகளையும் சுவையாகச் செய்யலாம்''
வாருங்கள்... முருங்கை சமையலை ஒரு கை பார்ப்போம்!
|
முருங்கைக்காய் ஊறுகாய்
தேவையானவை: முருங்கைக்காய்
துண்டுகள் - 2 கப், கடுகு - மிளகாய்தூள் கலவை - 3 டேபிள்ஸ்பூன்
(கடுகையும், காய்ந்த மிளகாயையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்து
மிக்ஸியில் அரைக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் -
தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு.செய்முறை: முருங்கைக்காய் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள், கடுகு - மிளகாய்த்தூளைக் கலந்து, மூழ்கும் அளவுக்கு எண்ணெய் விட்டு, 2 (அ) 3 நாட்கள் நன்றாகக் கிளறி விடவும்.
ருசியும் மணமும் அபாரமாக இருக்கும்.
முருங்கைக்காய் அரைத்து விட்ட
சாம்பார்
தேவையானவை: முருங்கைக்காய்
துண்டுகள் - 4, புளி - எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்), கடுகு,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.வறுத்து அரைத்துக்கொள்ள: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - கால் கப், வெந்தயம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். முருங்கைக்காயைப் போட்டு, புளி கரைசலை விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். வெந்ததும் உப்பு, அரைத்த விழுதைப் போட்டு கொதிக்க வைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
முருங்கைக்காய் வத்தக்குழம்பு
தேவையானவை: முருங்கைக்காய்
- 4, சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள்,
பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், புளிக் கரைசல் - ஒரு கப், கறிவேப்பிலை
- சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சாம்பார்பொடியைப் போட்டு வதக்கவும். இதில் முருங்கைக்காயைப் போட்டு, புளி கரைசல் விட்டு கொதிக்க விடவும். முருங்கைக்காய் வெந்ததும் உப்பு சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். மேலாக 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.
மிகவும் ருசியாக இருக்கும் இந்தக் குழம்பு.
முருங்கை கத்தரி குழம்பு
தேவையானவை: முருங்கைக்காய்
- 4, கத்தரிக்காய் - 3, புளி - எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்),
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் -
தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.வறுத்து அரைக்க: மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை: காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, முருங்கைக்காய், கத்தரிக்காயைப் போட்டு மஞ்சள்தூள், புளிக் கரைசலை விட்டு வேக விடவும். வெந்ததும் உப்பு, வறுத்து அரைத்த பொடி போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து, கொதி வந்ததும் இறக்கி, மேலாக நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும்.
குறிப்பு: காய்ந்த மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்து பாலூட்டும் இளம் தாய்மார்களுக்குக் கொடுக்கலாம்.
முருங்கைக்கீரை பொரித்தக் குழம்பு
தேவையானவை:
ஆய்ந்த முருங்கைக்கீரை, வேக வைத்த துவரம்பருப்பு - தலா ஒரு கப், கடுகு,
உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான
அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 3, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப்,
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்றாக அலசி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். வெந்ததும், அரைத்த விழுதைப் போட்டு, வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து, கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
வெங்காயம் முருங்கைக்காய் சாம்பார்
தேவையானவை: தோலுரித்த
சின்ன வெங்காயம், வேக வைத்த துவரம்பருப்பு - தலா கால் கப், முருங்கைக்காய்
துண்டுகள் - 5, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு
டீஸ்பூன், புளிக் கரைசல், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு, கொத்தமள்ளி -
சிறிதளவு அரைக்க: காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, தனியா - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப்.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், முருங்கைக்காயைப் போட்டு வதக்கவும். புளிக் கரைசலை விட்டு, உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதில் அரைத்த விழுது, வேக வைத்த பருப்பை சேர்த்து, கொத்தமல்லி போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
முருங்கைக்காய் கொத்சு
தேவையானவை:
நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகள் - 6, சௌசௌ - 1, தக்காளி - 2,
கத்தரிக்காய் - 3, மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்,
புளிக் கரைசல் - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவுவறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு. காய்ந்த மிளகாய் - 7.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். காய்களைப் பொடியாக நறுக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் புளிக் கரைசலை விட்டு, வறுத்து அரைத்த விழுதையும் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொதித்ததும் இறக்கவும்.
இட்லி, தோசைக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
முருங்கைக்காய் மசியல்
தேவையானவை: சிறிய
துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் - 6, வேக வைத்த துவரம்பருப்பு - அரை
கப், தேங்காய் துருவல் - கால் கப், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு,
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், கடுகு, மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, முருங்கைக்காயைப் போட்டு சிறிது தண்ணீரில் வேக வைக்கவும். உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தேங்காய் துருவல் போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு, எலுமிச்சைச் சாறு விட்டு வேக வைத்த பருப்பை போட்டுக் கலந்து பரிமாறவும்.
முருங்கைகத்தரி பத்திய பொரியல்
தேவையானவை: நறுக்கிய
முருங்கைக்காய், கத்தரிக்காய் - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா ஒரு
டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, அதில் காய்களைப் போட்டு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். காய்கள் வெந்ததும் உப்பு போட்டு இறக்கவும்.
இந்த பத்திய பொரியலை பிரசவமான பெண்களுக்குக் கொடுக்கலாம்.
முருங்கைக்காய் சாம்பார் சாதம்
தேவையானவை:
முருங்கைக்காய் - 10 (வேக வைத்து, சதைப் பகுதிகளை வழித்து எடுக்கவும்),
சின்ன வெங்காயம், வேக வைத்த துவரம்பருப்பு - தலா கால் கப், மஞ்சள்தூள்,
பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளிக் கரைசல் - கால் கப், கடுகு,
உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 8, உப்பு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். கறிவேப்பிலை, வேக வைத்த பருப்பை சேர்த்து, புளிக் கரைசலை விடவும். முருங்கைக்காய் விழுது, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, சாம்பார் பொடி போட்டுக் கொதிக்க வைத்து, கொத்தமல்லியை சேர்க்கவும். இதில் வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து இறக்கி, சூடாக பரிமாறவும்.
முருங்கைக்காய் ஃபிரைடு ரைஸ்
தேவையானவை: முருங்கைக்காயை வேக வைத்து வழித்த விழுது - ஒரு கப், வேக வைத்த பீன்ஸ், கோஸ், பட்டாணி - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, உதிராக வடித்த சாதம் - 2 கப்.செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்களை வதக்கவும். வடித்த சாதத்தைப் போட்டு, உப்பு, மிளகுதூள் சேர்த்து, முருங்கைக்காய் விழுது போட்டு லேசாக கிளறி இறக்கவும். நார்சத்து நிறைந்த ஃபிரைடு ரைஸ் ரெடி.
முருங்கைக்காய் பிரியாணி
தேவையானவை: முருங்கைக்காயை
வேக வைத்து வழித்த விழுது - ஒரு கப், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்),
மெலிதாக நறுக்கிய பீன்ஸ், கோஸ், பட்டாணி, கேரட் - ஒரு கப், இஞ்சி - பூண்டு
விழுது - அரை டீஸ்பூன், தக்காளிச் சாறு - கால் கப், ஊற வைத்த பாசுமதி
அரிசி - ஒரு கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி -
சிறிதளவு, நெய், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, காய்கறிகளை சேர்க்கவும். லேசாக வெந்ததும் தக்காளிச் சாறை விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து, ஊற வைத்த அரிசியைப் போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். இதில் முருங்கைக்காய் விழுதை சேர்த்து, புதினா, கொத்தமல்லி போட்டு நெய் விட்டுக் கிளறி இறக்கவும்.
பிரமாதமான ருசியில் பிரியாணி ரெடி.
முருங்கைக்காய் பிட்லை
தேவையானவை: முருங்கைக்காய்
துண்டுகள் - 8, பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் - ஒரு கப், மஞ்சள்தூள்,
வேக வைத்த துவரம்பருப்பு - கால் கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு
டீஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: தேங்காய் எண்ணெயில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக விடவும். இதில் அரைத்த விழுதை சேர்த்து, வெந்த துவரம்பருப்பைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லியைப் சேர்க்கவும்.
சப்பாத்தி, பூரிக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
முருங்கைக்காய் சப்பாத்தி
தேவையானவை: முருங்கைக்காய்
- 8 (வேக வைத்து சதையை வழித்து எடுக்கவும்), கோதுமை மாவு - 2 கப் , பச்சை
மிளகாய் - 6, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, உப்பு, எண்ணெய் -
தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவு, எண்ணெயைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவில் தண்ணீர் விடாமல், அரைத்த விழுதைப் போட்டுப் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இதற்கு சைட் டிஷ்ஷே தேவையில்லை.
முருங்கைக்காய் கட்லெட்
தேவையானவை: வேக
வைத்து வழித்த முருங்கைக்காய் - ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், கோஸ்,
தக்காளி, பேபிகார்ன் - அரை கப். தனியாத்தூள், சீரகம், மிளகாய்த்தூள் - தலா
ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கப்,
கடலை மாவு - கால் கப், அரிசி மாவு - 3 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3
டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போடவும். பிறகு காய்கறிகளைப் போட்டு வதக்கி, தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு உப்பு, முருங்கைக்காய் விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகப் பிசைந்து, கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும். ஒவ்வொன்றாக தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
முருங்கைக்காய் கிரேவி
தேவையானவை: முருங்கைக்காய்
துண்டுகள் - 7, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5, சோம்பு - அரை
டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு வதக்கி, முருங்கைக்காயைப் சேர்த்து வேக விடவும். வெந்ததும் உப்பு, பச்சை மிளகாய் போட்டு, கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு இறக்கவும்.
இட்லி, பூரி, சப்பாத்தி ஏற்ற சைட் டிஷ் இது.
முருங்கைக் கீரை சூப்
தேவையானவை: முருங்கைக்கீரை - ஒரு கப், மிளகுத்தூள், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கீரையை எண்ணெய் விட்டு வதக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இதில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்க விடவும். சோள மாவைக் கரைத்து விட்டு, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
முருங்கைக்காய் சப்ஜி
தேவையானவை:
முருங்கைக்காய் துண்டுகள் - 2 கப், பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக
நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். தக்காளித் துண்டுகளைப் போட்டு, 2 நிமிடங்கள் வதக்கி, முருங்கைத் துண்டுகளைப் போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை கிளறவும்.
சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
முருங்கைக்காய் வடை
தேவையானவை: முருங்கைக்காயை வேக வைத்து வழித்த விழுது - கால் கப், கடலைப்பருப்பு - ஒரு கப் (ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும்), சின்ன வெங்காயம்
- கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி - தேவையான அளவு, அரிசி
மாவு - 3 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை -
சிறிதளவு.செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து வடையாக தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
முருங்கைக்காய் பக்கோடா குருமா
தேவையானவை: முருங்கைக்காயை
வேக வைத்து வழித்த விழுது - கால் கப், கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - 3
டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் -
கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்றரை கப், மிளகாய்த்தூள் - இரண்டரை
டீஸ்பூன், தயிர் - 2 கப், மஞ்சள்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு -
தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, புதினா - சிறிதளவு, தேங்காய்
துருவல் - கால் கப், கசகசா - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1.செய்முறை: கடலை மாவில் வெங்காயம், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, அரிசி மாவு முருங்கைக்காய் விழுது சேர்த்துப் பிசைந்து உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கசகசாவை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, வெங்காயம், இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, தயிர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதில் உருண்டைகளைப் போட்டு நுரைத்து வரும்போது புதினா சேர்த்து இறக்கவும் சப்பாத்தி, புலாவுக்கு பொருத்தமாக இருக்கும் இந்த குருமா.
முருங்கைக்காய் இட்லி
தேவையானவை: முருங்கைக்காய்
- 4 (வேக வைத்து, சதைப் பகுதியை வழிக்கவும்), சோயா பீன்ஸ் - 2 கப், (முதல்
நாள் ஊற வைத்து அரைக்கவும்), கோதுமை ரவை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -
தலா கால் கப், தயிர் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4
(பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: தயிரில் கோதுமை ரவை, அரைத்த சோயா, முருங்கைக்காய் விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, ரவைக் கலவையில் கொட்டி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். இட்லித் தட்டில் மாவை ஊற்றி, 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
இட்லி மிளகாய்பொடியுடன் சாப்பிட, மணமாக இருக்கும் இந்த முருங்கை இட்லி.
முருங்கைக்காய் தொக்கு
தேவையானவை:
முருங்கைக்காயை வேக வைத்து வழித்த விழுது - ஒரு கப், புளிக் கரைசல் -
தேவையான அளவு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - 7, கடுகு, வெந்தயம்,
உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன்.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும். இதில் புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு முருங்கைக்காய் விழுதை சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
தோசை, பூரிக்கு சுவையான சைட் டிஷ் இது.
முருங்கைக்கீரை கட்லெட்
தேவையானவை:
ஆய்ந்த முருங்கைக்கீரை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கடலை மாவு - தலா ஒரு
கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய் - 2 டீஸ்பூன், கோதுமை பிரெட் - 4 (மிக்ஸியில்
பொடிக்கவும்), பொட்டுக்கடலை மாவு - கால் கப், கிராம்புத்தூள், ஆம்சூர்
பவுடர் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கலந்து கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து, கட்லெட்டைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். மிகவும் சத்தான கட்லெட் இது.
முருங்கைக்கீரை அடை
தேவையானவை:
ஊற வைத்த கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை மாவு - கால் கப், 4 மணி நேர ஊறவைத்த
கொள்ளு, முருங்கைக்கீரை - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் -
தேவையான அளவு.செய்முறை: கடலைப்பருப்புடன் கொள்ளு, காய்ந்த மிளகாய், உப்பு, கறிவேப்பிலையை சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொட்டுக்கடலை மாவு, முருங்கைக்கீரையைப் போட்டுக் கலக்கவும்.
தோசைக்கல்லில் அடை மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பி போட்டு, மொறுமொறுவென்று எடுக்கவும்.
முருங்கைக்கீரைபனீர் சப்ஜி
தேவையானவை: முருங்கைக்கீரை,
பொடியாக நறுக்கிய பனீர் - தலா ஒரு கப், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா
ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், ஆம்சூர் பவுடர், சீரகம்,
மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, முருங்கைக்கீரையைப் போட்டு வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு மேலும் வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, ஆம்சூர் பவுடர், பனீர் துண்டுகளை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
உருளைகிழங்கு முருங்கைக்காய் மசலா
தேவையானவை: வேக
வைத்த உருளைக்கிழங்கு - 4, முருங்கைக்காய் வேக வைத்து வழித்த விழுது,
பொடியாக நறுக்கிய தக்காளி - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
- அரை கப், கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.அரைக்க: தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துண்டுகள் - 3, முந்திரி - சிறிதளவு (மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்).
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகத்தைப் போட்டு வெடித்ததும் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும். இதில் வேக வைத்த உருளைக்கிழங்கை உதிர்த்துப் போட்டு, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, முருங்கைக்காய் விழுதை சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
முருங்கைக்காய் சட்னி
தேவையானவை: முருங்கைக்காயை வேக வைத்து வழித்த விழுது - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா அரை கப், பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:
கொத்தமல்லி, பச்சை மிளகாயுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து,
முருங்கை விழுதைப் போட்டுக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு
தாளித்துக் கொட்டவும்.
வித்தியாசமான டேஸ்டில்
இருக்கும் இந்த சட்னி.
முருங்கைக்காய் தேங்காய்ப் பால் கறி
தேவையானவை: முருங்கைக்காய்
- 4 சிறிய துண்டுகள், சோம்புத்தூள் - கால் டீஸ்பூன், வெங்காயம் - 2,
தக்காளி - 3, கெட்டியான தேங்காய்ப் பால் - அரை கப், இரண்டாம் தேங்காய்ப்
பால் - ஒரு கப் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கடுகு, சீரகம் - தலா ஒரு
டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, சோம்புத்தூளை போடவும். வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியில் கெட்டியான முதல் தேங்காய்ப் பாலை விட்டு இறக்கவும்.
முருங்கைக்காய்முருங்கைக்கீரை கூட்டு
தேவையானவை: முருங்கைக்காய்
- 4, முருங்கைக்கீரை - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் -
ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு
டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.அரைக்க: தேங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக விடவும். இதில், முருங்கைக்காய், முருங்கைக்கீரையைப் போட்டு, வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
முருங்கைக்காய் தயிர் பச்சடி
தேவையானவை: வேக
வைத்த முருங்கைக்காய் விழுது - ஒரு கப், தயிர் - அரை கப், தேங்காய்
துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு, எண்ணெய் - தலா ஒரு
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஒரு கிண்ணத்தில் முருங்கைக்காய் விழுதைப் போட்டு உப்பு சேர்த்துக் கலக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
Post a Comment