வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
வாசம்பா கொடுத்த எலுமிச்சம் பழத்தை வாங்கி வாசனை நுகர்ந்த அம்மணி, பந்து போல் தூக்கிப் போட்டுப் பிடித்தாள்.
'' 'எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்ததுபோல...’
போன வாரம், சாலிமங்கலத்துல ஒரு கோயில் பூசைக்குப் போயிருந்தேன் அம்மணி.
அங்க வீட்டுக்கு வீடு எலுமிச்சம் மரம் இருக்கு. அங்கிருந்து எடுத்திட்டு
வந்ததுதான் இது. ஆமா, இந்த சின்ன எலுமிச்சையில அப்படி என்னதான் இருக்கு
அம்மணி?''
’எலுமிச்சம் பழத்தோட, வாசம் ஒண்ணே நம்மள
புத்துணர்ச்சியாக்கிடுமே வாசம்பா. யாரைச் சந்திக்கப் போனாலும்,
எலுமிச்சம்பழத்தோட போனா, அவங்க எந்த மனநிலையில இருந்தாலும், உடனே நம்மகிட்ட
மகிழ்ச்சியா பேசுவாங்க. நெனச்ச காரியம் கைகூடும்னு ஒரு நம்பிக்கைதான்.
தெனமும் உணவாவும், மருந்தாவும், திருஷ்டி கழிக்கவும், மங்கலப் பொருளாகவும், மூலிகையாகவும் எலுமிச்சை இருக்குடி.''
'' 'மூலிகை அறிஞ்சா மூவுலகையும் ஆளலாம்’தானே...''
''சரியாச் சொன்னடீ, அடிக்கிற அனல் காத்துல உஷ்ணக்
கட்டி, மூல உபத்திரவம், பித்தம், தலைச்சுத்தல், சிறுநீர் கழிக்க முடியாமப்
போறது, மலச்சிக்கல், வயித்துப் போக்குன்னு எல்லா பிரச்னையும் வந்திடுதே.
அதுக்கெல்லாம் எலுமிச்சைதான் சர்வரோக நிவாரணி வாசம்பா.
ரெண்டு மூணு நாள் எலுமிச்சைச் சாதத்தைச் சாப்பிட்டு வரலாம். மூல நோய் கட்டுப்படும்.
எலுமிச்சைச் சாறுல மோர், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தைப் போட்டு குடிக்கலாம். உடம்பு குளிர்ச்சியாயிடும்.
சீயக்காயுடன் எலுமிச்சம் பழச் சாறைக் கலந்து தேய்ச்சு
குளிச்சா தலை முடி ஆரோக்கியமா இருக்கும். சித்தம் தெளிய, எலுமிச்சைப்
பழத்தைத் தலையில் தேய்ச்சு குளிச்சாப் போதும். மனசு அமைதியா இருக்கும்டி.
தேள் கொட்டின இடத்துல எலுமிச்சம் பழத் துண்டை வெச்சு தேய்ச்சா, தேள் விஷம்
பட்டுன்னு குறையும்.

எல்லாத்தைக்
காட்டிலும், உடம்பு எடையைக் குறைக்கணும்னு நெனைக்கிறவங்க எலுமிச்சைச்
சாற்றுடன் தேன் கலந்து வெறும் வயித்துல காலையில குடிச்சிட்டு வந்தா எடை
குறைஞ்சிடும். சுறுசுறுப்பா வேலை செய்யமுடியும் வாசம்பா.''
''சரி அம்மணி, வெயில் பட்டு எலுமிச்சம் பழம் சீக்கிரத்துலேயே காஞ்சுப் போயிடுதே. என்ன செய்ய?''
''இப்பதான் வீட்டுக்கு வீடு பிரிஜ்ஜு இருக்கே. பழத்து
மேல தேங்காய் எண்ணெய் தடவி ஐஸ் பெட்டிக்குள்ள வெச்சா போதும். அஞ்சு வாரம்
ஆனாலும் அப்ப பறிச்ச பழம் மாதிரி இருக்கும்டி.
ஆமா, போன வாரம், நம்ம ராசாயி பேத்தியை சென்னையிலேர்ந்து பொண்ணு பார்க்க வந்தாங்களே... பிடிச்சிடுச்சாம்மா?''
''என்னத்த சொல்ல அம்மணி, பார்க்க மறுப்பவன்
பெருங்குருடன்; கேட்க மறுப்பவன் வெறும் செவிடன். ராசாயி பேத்தி, லட்சணமா
இருந்தாலும், முகத்துல பரு வந்த வடு, தேமல் இருக்காம்ல... அதனால, வேணாம்னு
சொல்லிட்டாங்களாம். சீக்கிரத்துலேயே சரியாயிரும்னு சொல்லியும் வேணாம்னு
போயிட்டாங்க. வடுக்களைப் போக்க எலுமிச்சையில வழி இருக்கா அம்மணி?''
''தண்ணீரை நல்லா கொதிக்க வெச்சு, அதுல அரை மூடி
எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு, ஒருநாள் விட்டு ஒருநாள் ஆவி பிடிச்சிட்டு
வந்தா ரெண்டு வாரத்துலேயே மாசு மரு இல்லாம முகம் பளிங்கு மாதிரி மாறிடும்.
பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி
வந்தால் தேமல் மறைஞ்சிடும். கவலைப்படவே வேணாம். ஒரே மாசத்துல
சரியாயிரும்.''
''பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம்
வாய்க்கும் பாக்கியவானுக்குங்கிற மாதிரி ராசாயி பேத்திக்குன்னு ஒருத்தன்
இல்லாமயா போயிடுவான்?''
''எலுமிச்சம் பழத்தைப் பத்தி இன்னும் கேளுடியம்மா...
சொல்றேன். வேகாத வெயிலில்ல வேலை செஞ்சிட்டுவர்றவங்க, ராத்திரி நேரப்
பணியில் தூக்கமில்லாமல் அவஸ்தைப்படறவங்க எலுமிச்சம் பழச்சாற்றுல தண்ணீரைக்
கலந்து நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை குடிச்சிட்டு வந்தா போதும்டி.
நீர்க்குத்தல், நீர் எரிச்சல், வயித்து கடுப்புகூட சரியாயிடும்.''
''அப்ப, 'எத்தைத் தின்னா பித்தம் தெளியும்’னு இருக்காம,
எலுமிச்சைச் சாறு குடிச்சா எல்லா பிரச்னையும் தீருமே. காபி, டீ குடிச்சு
குடிச்சே பித்தம் தலைக்கு ஏறி, என் தலை முடி அத்தனையும் கொட்டிடுச்சு
அம்மணி. சின்ன வயசுல... முடியைப் பார்த்தே மயங்கினவங்க எத்தனைபேர்
தெரியுமா?''
''இப்பவும் கவலைப்படாத... அள்ளி முடிய நெல்லி கைவசம் இருக்கு வாசம்பா...''
ஆச்சர்யத்தில் வாசம்பா விழி விரிய...
நெல்லிக்காயின் புராணம் ஆரம்பமானது.
Post a Comment