உ லகெங்கிலும் உள்ள தமிழர்கள் உற்சாகம் பீறிட கொண்டாடும் திருநாளான பொங்கல் சமயத்தில் செய்து பரிமாற... ...
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் உற்சாகம் பீறிட
கொண்டாடும் திருநாளான பொங்கல் சமயத்தில் செய்து பரிமாற... சுவை யும்,
மணமும் மிக்க சர்க்கரைப் பொங்கல், கணுக்கூட்டு ரெசிபிகளை வழங்குகிறார்
சமையல் கலை நிபுணர் சீதா சம்பத்.

''பொங்கலன்று
அனைவர் இல்லங்களிலும் செய்யப்படும் சிறப்பு உணவு வகை... சர்க்கரைப்
பொங்கல். இதன் சுவை நாவை மட்டும் அல்ல... உள்ளத்தையும் இனிக்கச் செய்யும்.
அடுத்ததாக... கணுக்கூட்டு. காணும் பொங்கல் (அ) கணுப்பொங்கல் அன்று
செய்வதால் கணுக்கூட்டு என்ற பெயர் வந்தது. அப்போது பெண்கள், உடன்பிறந்த
சகோதரர்கள் நலம் வேண்டி, காக்கைக்கு கணுப்பிடி வைப்பார்கள். சாதத்தில்
மஞ்சள்பொடி சேர்த்து மஞ்சள் நிறத்திலும், சாதத்துடன் சுண்ணாம்பு -
மஞ்சள்பொடி சேர்த்து சிவப்பு நிறத்திலும், வெறும் சாதமாக வெள்ளை
நிறத்திலும் சிறிய உருண்டைகள் செய்வார்கள். இந்த உருண்டைகள் மற்றும் முதல்
நாள் செய்த சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை மஞ்சள் இலையில் போட்டு, குளக்கரை
அல்லது மொட்டை மாடியில் வைப்பார்கள். பிறகு சாமி கும்பிட்டு,
பெரியோர்களிடம் ஆசி பெற்று... தேங்காய் சாதம், புளியோதரை, தயிர்சாதம் போன்ற
கலந்த சாதத்துடன் கணுக்கூட்டை தொட்டு சாப்பிடுவது வழக்கம்.
நாம் கிழங்கு போல பலசாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக கிழங்கை இந்த
கூட்டில் சேர்ப்பதும் வழக்கமாக உள்ளது. இது ஐதீகமும்கூட...'' என்று கூறும்
சீதா, ''பொங்கல் திருநாளில் உங்கள் இல்லங்களில் இன்பம் பொங்கி வழிய இனிய
நல் வாழ்த்துக்கள்'' என்று மனதார வாழ்த்து கிறார்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பொடித்த வெல்லம் -
ஒன்றே கால் கப், பால் - ஒரு லிட்டர், பயத்தம்பருப்பு - கால் கப், நெய் -
கால் கப், முந்திரி - 10, திராட்சை - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை
டீஸ்பூன்.
செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து பாலுடன்
சேர்த்து குழைய வேக வைக்கவும் (அல்லது பால் நன்கு பொங்கி வரும்போது,
சுத்தம் செய்த அரிசி, பருப்பை சேர்த்து குழைய வேக வைக்கலாம்). நன்கு வெந்து
வரும்போது பொடித்த வெல்லத்தைப் போட்டு கலக்கவும். வெல்லம் கரைந்து நன்றாக
கலந்து பச்சை வாசனை போனதும், நெய்விட்டு அடிபிடிக்காது கிளறி இறக்கவும்.
முந்திரி, திராட்சையை நெய்விட்டு வறுத்து, சர்க்கரைப் பொங்கலில்
சேர்க்கவும். இதில் ஏலக்காய்த்தூள் போட்டு கலக்கவும். விருப்பப்பட்டால்,
சிறிதளவு பச்சைக்கற்பூர பொடி சேர்க்கலாம்.
கணுக்கூட்டு
தேவையானவை : பூசணிக்காய், அவரைக்காய், பரங்கிக்காய்,
கத்திரிக்காய், கொத்தவரங்காய், வாழைக்காய், கேரட், சேப்பங்கிழங்கு,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு (எல்லா காய்கறி துண்டுகளும் சேர்த்து) - 300
கிராம், பச்சைப் பட்டாணி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, தனியா - 3
டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் -
அரை மூடி (துருவிக் கொள்ளவும்), கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், புளி -
எலுமிச்சம்பழ அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து
தனியாக வேகவைக்கவும். சேப்பங்கிழங்கை தோல் நீக்கி வேகவிட்டு, 2 துண்டுகளாக
செய்து கொள்ளவும். மற்ற காய்கறிகள், பச்சைப் பட்டாணியை வேக வைத்து
எடுக்கவும். புளி, உப்பு இரண்டையும் சேர்த்து கரைத்து வடிகட்டி அந்த நீரை
ஒரு பாத்திரத்தில் விட்டு, சாம்பார் பொடி சேர்த்து பச்சை வாசனை போக
கொதிக்கவிடவும். வேகவைத்த காய்கறிகள், கிழங்குகள், பச்சைப் பட்டாணி, கீறிய
பச்சை மிளகாய் சேர்க்கவும் (அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்). கடாயில்
எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு வறுத்து, தேங்காய்
சேர்த்து அரைத்து எடுத்து, காய்கறி கலவையில் சேர்த்து மேலும் கொதிக்க
விடவும். சரியான பதம் வந்ததும் இறக்கவும். கடுகு, வெந்தயம்.,
பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி, கறி வேப்பிலை, கொத்தமல்லி கிள்ளிப்
போட்டு கலக்கினால்... கணுக்கூட்டு தயார்!
Post a Comment