சட்டம் அறிவோம் : ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை ! -- உங்களுக்கு உதவும் சட்டங்கள்
சட்டம் அறிவோம் : ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை ! இ ந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதி...

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதிபேராணைகள். ரிட் மனு ( WRIT ) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணைகள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமாக பயன்படுத்தப்படுவது Habeas corpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை.
ஒருவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தை அணுகி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம்.
காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை கைது செய்யும்போது மட்டுமல்லாமல், யாரேனும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சூழ்நிலையிலும் அவரை உரியவர்களிடம் ஒப்படைக்க கூறி நீதிமன்றத்தில் இந்த ரிட் மனிவை தாக்கல் செய்யலாம். உதாரணமாக, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற்றோருக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து, அந்த பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.. அந்த நேரத்தில் கணவன் என்ற முறையில் தனது மனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் மனு போடலாம். மனுவை விசாரித்து அதில் உண்மை இருப்பின் நீதிமன்றத்தின் முன் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்திருக்கும் நபரை ஒப்படைக்க சொல்வார்கள்.
இந்த மனுக்களை நேரடியாக உயர்நீதிமன்றத்திலும் அல்லது உச்சநீதிமன்றத்திலும் தான் தாக்கல் செய்ய முடியும். மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய முடியாது.
சமீபத்தில் லக்னோவில் சித்தாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹரிபிரசாத் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கியதன் பேரில் சிறையில் இருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி அவர் விடுதலையாக வேண்டும். அவர் மீது வேறு எந்தவித புகாரும் இல்லாதபோதும் உரிய தேதியில் விடுவிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஹரிபிரசாத் ஜூன் ஆறாம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபிரசாத்தை சட்டத்திற்கு புறம்பான வகையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பதற்காக மாவட்ட சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு "ஹரி பிரசாத்தை சட்டத்திற்கு புறம்பான வகையில் இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பதற்கு உங்களது சம்பளத்திலிருந்து நஷ்ட ஈடு வழங்கினால் என்ன?" என கேட்டிருந்தனர். மூன்று வாரத்தில் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உரிய தினத்தில் பதிலளிக்கவில்லை. அதனால் நீதிமன்றம் சிறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை கண்டித்தது. பிறகு ஹரிபிரசாத் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. தனது தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யாததை எதிர்த்து ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை மூலம் விடுதலையானார் ஹரிபிரசாத்.
இது போன்று சட்டத்திற்கு புறம்பான வகையில் ஒருவரை கைது செய்து வைத்திருக்கும் போதும் கூட ரிட் மனு தாக்கல் செய்யலாம். காணாமல் போயிருக்கும் நபரை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகி ரிட் மனு தாக்கல் செய்ய ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை பெரும் துணையாக இருக்கிறது.
Post a Comment