கிறிஸ்துமஸ் ரெசிபிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழும் நேரத்தில், அப்போது
சாப்பிட்டு மகிழ முந்திரிக் கொத்து, பிளம் கேக் ஆகிய உணவு வகைகளின்
ரெசிபிகள் இங்கே இடம் பெறுகின்றன...

தமிழகத்தின்
தென் பகுதியிலுள்ள மாவட்டங் களின் பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ்
தினத்தன்று தவறாமல் செய்யப்படும் ஸ்பெஷல்... முந்திரிக் கொத்து! ஆனால்,
இதில் முந்திரி இருக்காது. இந்தப் பகுதியில் திராட்சையை 'முந்திரி’ எனக்
கூறுவது வழக்கம். மலையாளத்திலும் திராட்சையை 'முந்திரி' என்றே
கூறுகிறார்கள். இந்த ரெசிபியை செய்து முடித்த பின், அது பார்ப்பதற்கு
திராட்சை கொத்துபோல் காட்சியளிப்பதால்... இந்தப் பெயர்!
தமிழகம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் வீட்டிலும் இது தவறாமல்
இடம்பெறுவதுதான் சிறப்பு! திருநெல்வேலியைச் சேர்ந்த நேசமணி சோன்ஜா, கடந்த
பத்து வருடங் களாக, உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் நகரத்தில்
குடும்பத்துடன் வசிக்கிறார். அலிகர், முஸ்லிம் பல்கலைகழகத்தின் நர்சிங்
(செவிலியர்) பள்ளியின் ஆசிரியராக இருக்கும் இவர், இங்கே முந்திரிக் கொத்து
ரெசிபியைத் தருகிறார்.
அடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே, அங்கே கேக் நிச்சயம் இடம்பெறும்.
குழந்தைகள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஆவலுடன்
சுவைக்க விரும்பும் கிறிஸ்துமஸ் கேக் வகைககளில், பிளம் கேக் செய்யும்
முறையை இங்கே வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த 'ஹாட் பிரெட்’ நிறுவனத்தின்
தலைமை செஃப் கே.சுந்தர்.
இந்த ரெசிபிகளை செய்து பரிமாறி, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மேலும் குதூகலமாக்குங்க... விஷ் யூ மெர்ரி கிறிஸ்துமஸ்!
பிளம் கேக்
தேவையானவை: மைதா - ஒரு கிலோ, சர்க்கரை - ஒரு கிலோ,
முட்டை - 30, மார்கரைன் (க்ஷிமீரீ திணீt) - ஒரு கிலோ, மிக்ஸட் ஃப்ரூட் - 3
கிலோ (உலர் திராட்சை, டூட்டி புரூட்டி, செர்ரி, முந்திரி, ஜிஞ்சர் சிப்ஸ்,
ஆரஞ்சு பீல், பேரீச்சை, பிக்கிள் ஆப்பிள்), கரம் மசாலா - 10 கிராம், கேரமல்
- 80 கிராம், பேக்கிங் பவுடர் - 10 கிராம், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 100
கிராம், வெனிலா எசன்ஸ் - 10 மில்லி, லெமன் எசன்ஸ் - 5 மில்லி, ஆரஞ்சு
எசன்ஸ் - 5 மில்லி, கிரேப் எசன்ஸ் - 5 மில்லி, பைன் ஆப்பிள் எசன்ஸ் - 2
மில்லி.
செய்முறை: கரம் மசாலா, பேக்கிங் பவுடர் மற்றும்
மைதா... இவை மூன்றையும் தனியாக கலந்து வைக்கவும். கேரமலுடன் எசன்ஸ்களை
தனியே கலந்து வைக்கவும். பிறகு, மார்கரைனையும், சர்க்கரையையும் ஒன்றாகக்
கலக்கி, சர்க்கரை கரையும்வரை முட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து அதனுடன்
சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மிக்ஸட் ஃப்ரூட் மற்றும் மிக்ஸட் ஃப்ரூட்
ஜாமை சேர்க்கவும். கடைசியாக, மூன்று கலவைகளையும் ஒன்றாக்கவும். பிறகு,
'கேக் பேனில்’ வைத்து 'அவன்’-ல் 160 டிகிரி சென்டிகிரேடில் 50-ல் இருந்து
60 நிமிட நேரம் வைத்து எடுத்தால்... பிளம் கேக் ரெடி!
குறிப்பு: கேக் தயாரிப்புக்கான பொருட்கள்... பெரிய மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.
முந்திரிக் கொத்து
தேவையானவை: பச்சைப்பயறு
- 200 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய் 6, மைதா - 100
கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோடா உப்பு - சிறிதளவு, ரீபைண்டு
ஆயில் - அரை லிட்டர், தண்ணீர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து பச்சைப்பயறை மணம்
வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த பயறை பிரஷர் குக்கரில் சேர்த்து
சுமார் ஐந்து விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து
வைக்கவும். இதில், தண்ணீரை முழுமையாக வடித்து விடவேண்டும். ஏலக்காயை
தூளாக்கிக் கொள்ளவும். வெல்லத்தையும் தனியாக இடித்து தூளாக்கிக் கொள்ளவும்.
இந்த மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு இறுக்கமான மாவாக்கிக் கொள்ள
வேண்டும். மைதாவை தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் கட்டியாகிவிடாமல்
கரைத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், சோடா உப்பு மற்றும் உப்பு
ஆகியவற்றை சேர்க்கவும் (இது தோசை மாவு பதத்தில் இருப்பது அவசியம்). பிறகு,
பச்சைப்பயறு மாவு கலவையை, திராட்சை பழங்களின் அளவுக்கு உருண்டைகளாகப்
பிடித்து, தனியாக வைக்கவும்.

பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி, தேவையான அளவுக்கு
காய்ந்ததும், மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும். உருட்டி வைத்திருக்கும்
உருண்டைகளை மூன்று மூன்றாக, அதாவது ஃ எழுத்து வடிவில் சேர்த்துப் பிடித்து,
கரைத்து வைத்துள்ள மைதா மாவில் நனைத்து எடுத்து, கொதிக்கும் எண்ணெயில்
போட்டு பொரிக்கவும். இதை திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சரியாக
வெந்தவுடன் எடுத்தால்... முந்திரிக் கொத்து தயார்! சற்று அதிகமாக சாப்பிட்
டாலும் திகட்டாது என்பது இதன் சிறப்பு அம்சம்.
குறிப்பு: பச்சைப்பயறு உடலுக்கு வலுவைத் தரும் தானியம்
என்பதால், அதை அடிக்கடி உட்கொள்வது நல்லது. முக்கியமாக, வளரும்
குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
Post a Comment