ஆன்லைன் டேர்ம் பிளான்: 15 நிமிஷத்தில் பாலிசி ரெடி!--இன்ஷூரன்ஸ், -
ஆன்லைன் டேர்ம் பிளான்: 15 நிமிஷத்தில் பாலிசி ரெடி! இ ன்ஷூரன்ஸ் என்றாலே டேர்ம் பிளான்தான் பெஸ்ட்; அதையும் ஆன்லைன் மூலம் எடுப்ப...
இது கம்ப்யூட்டர் யுகம். ரயில் டிக்கெட் வாங்குவது முதல் இ.பி. பில் கட்டுவது வரை கம்ப்யூட்டரின் உதவியோடு இருந்த இடத்தில் இருந்தபடியே செய்து முடிக்கிற காலமிது. சமீப காலமாக ஆன்லைன் மூலம் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவதும் பிரபலமாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், டேர்ம் பிளானை பொறுத்தவரையில் முதிர்வுத் தொகை எதுவும் கிடைக்காது; இறப்பு பலன் மட்டுமே உண்டு. எனவே, பிரீமியம் மற்றும் இழப்பீடு வழங்கும் விகிதத்தை மட்டும் பார்த்துவிட்டு, ஒரு பாலிசியை சுலபமாக எடுத்துவிடலாம்.
இந்த பாலிசியை எடுக்க ஏஜென்டைத் தேடி அலைய வேண்டியதில்லை. தவிர, இந்த பாலிசி மூலம் ஏஜென்டுகளுக்கு கிடைக்கும் கமிஷன் குறைவு என்பதால் இதனை வாங்கித் தர ஏஜென்டுகள் தயங்கவே செய்வார்கள். ஆன்லைன் மூலம் விற்பனையாகும் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் டேர்ம் பிளானின் பங்களிப்பு 90 சதவிகிதமாக இருக்கிறது.
ஆன்லைனில் பிரீமியத் தொகையைத் தெரிந்துகொண்டு, விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து, பணம் செலுத்தி பாலிசி பெற சுமார் பதினைந்து நிமிடமே ஆகிறது. மேலும், ஏஜென்ட் மூலம் எடுக்கப்படும் பாலிசிகளைவிட ஆன்லைனில் எடுக்கப்படும் பாலிசிக்கு சுமார் 30 சதவிகிதம் வரை பிரீமியத் தொகை குறைகிறது.
ஐம்பது லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட டேர்ம் பிளானை ஏஜென்ட் மூலம் வாங்கினால் ஆண்டுக்கு 7,500 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இதே கவரேஜுக்கு ஆன்லைன் மூலம் டேர்ம் பிளான் எடுக்கும்போது 4,550 ரூபாய் பிரீமியம் செலுத்தினாலே போதும். ஏஜென்ட் கமிஷன், இதர நிர்வாக கட்டணங்கள் ஆன்லைன் பாலிசியில் கிடையாது என்பதால் பிரீமியம் குறைவாக இருக்கிறது.
ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் விநியோகத்தில் முன்னணியில் இருக்கும் ஏகான் ரெலிகேர் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி யாதேஷ் ஸ்ரீவஸ்தவாவிடம் ஆன்லைன் டேர்ம் பிளான் இந்தியாவில் எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறது என்று கேட்டோம்.
உங்கள் நிறுவனத்தில் விற்கப்படும் பாலிசிகளில் எவ்வளவு சதவிகித பாலிசிகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது?
''ஆன்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்பதில் ஏகான் நிறுவனம் முதன்மையாகச் செயல்படுகிறது. எங்களது மொத்த பாலிசி விற்பனையில் 25 சதவிகிதம் ஆன்லைன் மூலம் நடக்கிறது.''
ஆன்லைன் டேர்ம் பிளான் பிரீமியம் புதுப்பிப்பது எத்தனை சதவிகிதமாக இருக்கிறது?
''ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட டேர்ம் பிளான்களில் 88% புதுப்பிக்கப்பட்டு வருகிறது.''
ஆன்லைன் மூலம் எடுத்த பாலிசிகளுக்கு கிளைம் வாங்கும்போது பிரச்னை வருமா?
''பிரச்னை ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை. கிளைம் செட்டில்மென்ட் செய்ய தேவையான ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்த ஏழு நாட்களுக்குள் கிளைம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதில் ஏதும் பிரச்னை இருப்பின் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது அருகில் இருக்கும் கிளைகளை அணுகலாம்.''
ஆன்லைன் மூலம் இழப்பீடு கோர முடியுமா?
''தாராளமாக..! எங்கள் இணைய முகவரிக்குச் சென்று, அதில் வாடிக்கையாளர் பற்றிய விவரம் மற்றும் என்ன காரணத்துக்காக கிளைம் தேவை என்பது போன்ற தகவல்களை பதிவு செய்வதன் மூலம் இழப்பீடு கோர முடியும். அடிப்படை விசாரணையை முடித்தபின் கிளைம் தொகை கிடைக்கும்.''
அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் ஆன்லைன் டேர்ம் பிளான் வளர்ச்சி எப்படி இருக்கும்?
''இந்தியாவில் இணையதள பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதன் தொடர்ச்சியாக ஆன்லைன் இன்ஷூரன்ஸ் வளர்ச்சியும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பாலிசிகளை ஆன்லைன் மூலம் தருவதினால் அதிக எண்ணிக்கையில் பாலிசிதாரர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்''.
பிரீமியம் குறைவு, பாலிசி எடுப்பது சுலபம் போன்ற காரணங்களால் பலரும் ஆன்லைன் டேர்ம் பிளானை விரும்பி எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். எளிதாக எடுக்க முடிகிறது என்றாலும், பாலிசி எடுக்கும்முன் அது பற்றிய அனைத்து விவரங்களையும் படித்து தெரிந்துகொள்வது அவசியம்..!
Post a Comment