மாமரம் மாபெரும் வரம்---உபயோகமான தகவல்கள்,
மாமரம் மாபெரும் வரம் முக்கனிகளில் முதற்கனி மா! மாமரத்தின் தாவர இயல் பெயர் மேங்கிஃபெரா இண்டிகா (விணீஸீரீவீயீமீக்ஷீணீ வீஸீபீவீநீண...

மாங்காய் வைட்டமின் 'சி’ நிரம்பியது. மாம்பழம் கரோட்டின் சத்து நிறைந்தது. மா மரத்தின் காய், கனி, துளிர், பிஞ்சு, கொட்டை ஆகியனவும் உணவாகப் பயன்படுகின்றன. மா இலைகள் கால்நடைகளுக்கான நல்ல தீவனம். பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி உதவி விரிவுரையாளர் சு.சுஜாதா, மாமரத்தின் அடி முதல் நுனி வரை உள்ள பாகங்களின் மருத்துவ குணங்களைப் பட்டியல் இட்டார்.
மாம்பூ: உலர்ந்த பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகியன குணமாகும்.
மாம்பிஞ்சு: மாவடு வாய்க் குமட்டலை நீக்கும். பசியைத் தூண்டும்.
மாங்காய்: பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்த சோகையையும் நீக்கும் திறன் கொண்டது. பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும். காயின் தோலைக் கையளவு எடுத்து நெய்விட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். காயின் தோலை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் ரத்த மூலமும் வயிற்றுப்போக்கும் தீரும்.
காம்பு: காம்பில் இருந்து வெளிப்படும் பால், படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
மாம்பழம்: மாம்பழத்தில் வைட்டமின் 'ஏ’ சத்து அதிக அளவில் உள்ளது. மாம்பழம் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தத்தை விருத்தி செய்து கண் பார்வையைத் தெளிவாக்கும். விந்தணுக்களை அதிகப்படுத்தி, உடலை அழகுடன் திகழச் செய்யும்.
பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இவற்றுடன் பழச்சாறு விட்டு அரைத்து, நெய் சேர்த்துக் கொடுத்தால் கடுமையான வயிற்றுப்போக்கும் குணமாகும்.
மாங்கொட்டையின் பருப்பு: பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தூளாக்கி உண்டால் வயிற்றுப்போக்கு, வெள்ளைப்படுதல், அதிகமான ரத்தப்பெருக்கு ஆகியன கட்டுப்படும். பருப்புப் பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து நீருடன் இரவில் உண்டு வந்தால் குடலில் உள்ள உருளைப் புழுக்கள் நீங்கும். வெட்டுக்காயம், தீக்காயம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பருப்பை அரைத்துப் பூசலாம்.
மாம்பிசின்: மாம்பிசினைக் கால்வெடிப்பில் பூசினால் வெடிப்பு குணமாகும். பிசினைப் பழச்சாற்றோடு கலந்து தேமல் படை மீது பூசினால் நன்கு கட்டுப்படும்.
மா மரப்பட்டை: மா மரப்பட்டையுடன் கோரைக்கிழங்கு சேர்த்து அவித்துப் பிழிந்து அதிவிடயம் மற்றும் இலவங்கப் பிசின் சேர்த்துக் குடித்தால் வயிற்றுப்போக்குடன் கூடிய காய்ச்சல் நீங்கும். மாம்பட்டையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் மேக வியாதி, வெள்ளைப்படுதல், விஷக்கடியால் ஏற்படும் வலி ஆகியன குணமாகும். மரப்பட்டையை ஊறவைத்த குடிநீரைக் கொப்பளிக்கப் பல்வலி நீங்கும்.
வேர்ப்பட்டை: வேர்ப்பட்டையை மாந்தளிருடன் சேர்த்துக் காய்ச்சி, வெங்காரத்தூளும் திப்பிலித்தூளும் கலந்து பருக வயிற்றுப்போக்கும் காய்ச்சலும் நீங்கும்.
Post a Comment