10 விதமான ஓட்ஸ் உணவுகள்!
10 விதமான ஓட்ஸ் உணவுகள்! ஓட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனர்ஜியாக இருக்கிறது. ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் உன்னதமான இடத்தைப் பிடித்து மக...

https://pettagum.blogspot.com/2011/06/10.html
10 விதமான ஓட்ஸ் உணவுகள்!
ஓட்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனர்ஜியாக இருக்கிறது. ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் உன்னதமான இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் சீக்ரெட் ஆஃப் எனர்ஜியாக நிற்கிறது. அதற்குக் காரணமே ஓட்ஸால் செய்யப்படும் உணவுகள் சத்தாகவும் சுவையாகவும் இருப்பதுதான்.
அதுவும் டயாபடீஸ்காரர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக விளங்குவதோடு, நம் உடம்பிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி ஆரோக்கியத்தோடு வாழவைக்கிறது. அதுவும், ஓட்ஸை பலவிதமான உணவுகளாக தயார் செய்து அழகாக சாப்பிடலாம்.என்ன சொல்லும்போதே நாக்கில் ஊறுகிறதா? ரெசிப்பிகள் ரெடி! ``பத்து விதமான ஓட்ஸ் உணவுகள் தயார் . ஓட்ஸ்ன்னாவே ஏதோ நோயாளிகள்,டயாபடீஸ் பேஷண்டுகள் சாப்பிடுறதுன்னு சிலர் நெனைச்சுக்கிட்டுருக்காங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்புடுற ஹெல்த் ஃபுட். பேச்சுலர்கள் கூட ஈஸியா தெரிஞ்சுக்கிட்டு வீட்டுல செஞ்சு சாப்பிடலாம். இதோ...
----------------------------------------------------------------------------------
ஓட்ஸ் கேசரி
தேவையான பொருட்கள்
ஓட்ஸ்-100 கிராம், சுகர்-50 கிராம், ஏலக்காய்-2, நெய்-1 டீஸ்பூன், கேசரி பவுடர்-1 பின்ச், கொஞ்சம் முந்திரியும் திராட்சையும்.
செய்முறை
ஓட்ஸை சாதாரண தண்ணீரில் ஓர் ஐந்து நிமிடம் ஊறவைத்து வடிகட்டியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வது ஓட்ஸ் கேசரிக்கு மட்டுமல்ல,செய்யப்போகும் பத்துவிதமான ஓட்ஸ் உணவுக்குமே இதே போன்ற வழிமுறையைக் கடைப்பிடித்துக் கொள்ளவும். ஏனெனில், ஊறவைப்பதால் ஓட்ஸ் அழகாக சாஃப்ட்டாக இருக்கும். ஓட்ஸோடு சுகரையும் ஃபுட்கலரையும் சேர்த்து கடாயில் போட்டு வதக்க வேண்டும். கொஞ்சம் திக் ஆகி வரும்போது நெய், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைத் தூவி இறக்கி விட்டால் போதும் அட... அட... சூடான ஓட்ஸ் கேசரி ரெடி!
--------------------------------------------------------------------------
ஓட்ஸ் பாயசம்
தேவையான பொருட்கள்
தண்ணீர் - 2 டம்ளர், ஓட்ஸ் - கைப்பிடி அளவு, பால் - 1/2 கப், முந்திரி+திராட்சை - 10கிராம், நெய் - 1 டீஸ்பூன், சுகர் - 30 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் சுகருக்கு பதில் சுகர்ஃப்ரீ)
செய்முறை
ஓட்ஸை தண்ணீருடன் கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு சுகரை பாலில் சேர்த்து ஆறவைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரியையும் திராட்சையையும் வறுத்துவிட்டு ஆறவைத்திருக்கும் ஓட்ஸ் பால் கலவையோடு சேர்த்துவிட்டால்... அப்புறமென்ன ஓட்ஸ் பாயசம்தான்.
---------------------------------------------------------------
ஓட்ஸ் ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்-100 கிராம், கேரட்-1, கேப்சிகம் (குடைமிளகாய்)-1, வெங்காயம்-1, மிளகு- 1/2 டீஸ்பூன
செய்முறை:
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கட் பண்ணிய வெங்காயம்,கேரட், குடைமிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்க வேண்டும்.
பிறகு அதோடு மிளகு, உப்பு இரண்டையும் சேர்த்து ஓட்ஸைக் கொட்டிக் கிளறி இறக்கி விடவேண்டும்.சிறிதளவு அஜினோமோட்டோவைக் கலந்து கொள்ளலாம். (உடலுக்குக் கேடு என்று நினைத்தால் தவிர்த்து விடுங்கள்) ஓட்ஸ் ஃப்ரைடு ரைஸ் ஆரோக்கியமாக இருக்கும்.
-----------------------------------------------------------
ஓட்ஸ் உருண்டை
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்-100 கிராம், வெங்காயம்-1/2, பச்சை மிளகாய்-1, கடுகு-1/4 டீஸ்பூன், கருவேப்பிலை-10, பெருங்காயத்தூள்-1/2 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, எண்ணெய்-1 டீஸ்பூன்.
செய்முறை:
எண்ணெயில் கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டு உப்பை சேர்க்கவும். அதோடு ஊறவைத்த ஓட்ஸை மிக்ஸ் பண்ணி உருண்டையாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதை இட்லி குக்கரில் (சில நிமிடங்கள்) வைத்து எடுத்தால் பார்ப்பதற்கு லட்டு மாதிரி இருக்கும் ஓட்ஸ் உருண்டை சுடச் சுட.
------------------------------------------------------------
ஓட்ஸ் புட்டு
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்-100 கிராம், தேங்காய்-4 பீஸ், சுகர்-50 கிராம், ஏலக்காய்-3
செய்முறை:
ஏலக்காயை நுணுக்கி பொடி செய்து கொள்ளவும். இதனுடன் ஓட்ஸ், துருவிய தேங்காயைச் சேர்த்து மூன்றையும் இட்லி குக்கரில் ஒரு வேக்காடு போட்டு இறக்கி அதோடு சர்க்கரையைத் தூவி ஓட்ஸ் புட்டை பிடாமல் சாப்பிடலாம்.
------------------------------------------------------------------
ஓட்ஸ் பகாலாபாத்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்-100 கிராம், தயிர்-100 கிராம், உப்பு-தேவையான அளவு, கடுகு-1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை-5, பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன், இஞ்சி-1/2 கிராம், பச்சை மிளகாய்-2, எண்ணெய்-1 டீஸ்பூன்.
செய்முறை:
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை வதக்கிய பிறகு இஞ்சியையும் பெருங்காயத்தூளையும் மிக்ஸ் பண்ணிக் கொள்ள வேண்டும். இதில் தயிரைக் கலந்து உப்பையும் மிக்ஸ் பண்ணிவிட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து ஓட்ஸை மிக்ஸ் பண்ணிவிட்டால் ஓட்ஸ் பகாலாபாத்.
---------------------------------------------------------------------
ஓட்ஸ் லெமன்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்-100கிராம், லெமன்-1/2, கடுகு-1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை-5, பச்சைமிளகாய்-2, உப்பு-தேவையான அளவு, எண்ணெய்-1 டீஸ்பூன், பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன், மஞ்சள்-1/4 டீஸ்பூன்.
செய்முறை:
கடுகையும், கறிவேப்பிலையையும் எண்ணெயில் தாளித்துவிட்டு நறுக்கப்பட்ட பச்சை மிளகாயைப் போட வேண்டும். பிறகு லெமனைப் பிழிந்து உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ஆகியவற்றைக் கலந்து ஆற வைக்க வேண்டும். பிறகு ஓட்ஸை பாலோடு மிக்ஸ் பண்ணினால் ஓட்ஸ் லெமன் தயாராகிவிடும்.லெமனுக்குப் பதிலாக புளி கலந்தால் ஓட்ஸ் புளியோதரை, தக்காளி கலந்தால் ஓட்ஸ் தக்காளி என்று விதவிதமாகச் செய்து சாப்பிடலாம்.
----------------------------------------------------------------------
ஓட்ஸ் உப்புமா
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்-100 கிராம், வெங்காயம்-2, கடுகு-1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய்-2, எண்ணெய்-2 டீஸ்பூன், கடலைப்பருப்பு-2 டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை
ரொம்ப சிம்பிள். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக வதக்கிவிட்டு ஓட்ஸைச் சேர்த்துவிட்டால் உடனடி ஓட்ஸ் உப்புமா ரெடி.
-------------------------------------------------------------
ஓட்ஸ் கிரேவி
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 100 கிராம், தக்காளி - 2, வெங்காயம் - 2, அரைத்த இஞ்சி + பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், கர மசாலா - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை எண்ணெயில் போட்டு வதக்கிவிட்டு மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதை ஓட்ஸோடு மிக்ஸ் பண்ணிக் கொண்டு மஞ்சள், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலா, ஆகியவற்றைக் கலந்து விடவும். அதோடு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வரை ஸ்லோவாக கொதிக்க வைத்து புதினா கொத்துமல்லி, கறிவேப்பிலையைத் தூவிவிட்டால் மணக்க மணக்க ஓட்ஸ் கிரேவி.
--------------------------------------------------------------------
ஓட்ஸ் பிஸ்கெட்
தேவையான பொருட்கள்: இதில் மட்டும் ஊற வைக்கப்படாத ஓட்ஸ்-100கிராம், மைதா-50 கிராம், பட்டர் -75 கிராம், சுகர் -75 கிராம், பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன், முழு ஓட்ஸ்-25 கிராம், எசன்ஸ்-1/2
செய்முறை: ஊறவைக்கப்படாத ஓட்ஸையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ள வேண்டும். கலந்து வைக்கப்-பட்ட பேக்கிங் பவுடரையும், மைதாவையும் இதோடு மிக்ஸ் பண்ணினால் பூரி மாதிரி ஒரு தோற்றம் கிடைக்கும்.இதனுடன் எசன்ஸை கலந்துவிட்டு பூரி செய்யும் கட்டையால் (2 இஞ்ச் திக்னஸ்) பிஸ்கட் அளவிற்கு கட் பண்ணி எடுத்து அதன் மேல் முழு ஓட்ஸை தூவினால் சூப்பரான ஓட்ஸ் பிஸ்கெட் டேஸ்டோடு ரெடி.
Post a Comment