ராகி-கம்பு ரெசிப்பிக்கள்!

ராகி-கம்பு ரெசிப்பிக்கள்! சி றுதானியங்கள் நம் உடலுக்கு சத்தையும் ஆரோக்கியத்தையும் தருபவை. ஆனால், அவற்றின் அருமை பெருமைகளை சில க...

ராகி-கம்பு ரெசிப்பிக்கள்!
சிறுதானியங்கள் நம் உடலுக்கு சத்தையும் ஆரோக்கியத்தையும் தருபவை. ஆனால், அவற்றின் அருமை பெருமைகளை சில காலங்களாக நாம் மறந்துவிட்டோம். அற்புதமான சிறுதானியப் பட்டியலில் இடம் பிடித்துள்ள ராகி (கேழ்வரகு), கம்பு ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்யப்பட்டிருக்கும் உணவுகளை உங்கள் வீடுகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக சிறுதானிய உணவு வகைகளை இங்கே வழங்குகிறோம்.
ஸ்ப்ரவுட்டட் ராகி மாவு
தேவையானவை: ராகி - 350 கிராம்
செய்முறை:
ராகியை தூசி, கல் போக பார்த்துப் புடைக்கவும். இனி ராகியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் தண்ணீரை ஒரு வெள்ளைத் துண்டில் கொட்டி வடிக்கவும். அதே துணியை மூடி இரண்டு நாட்கள் அப்படியே விடவும். ஒருவேளை க்ளைமேட் சில்லென்று இருந்தால், முளை கட்ட இரண்டு நாட்கள் முளைகட்ட தேவைப்படும். இதுவே க்ளைமேட் சூடாக இருந்தால், ஒரு நாள் இரவு மட்டுமே போதும். முளை கட்டிய ராகியை ஒரு துணியில் சேர்த்து ஈரம் போக ஆற விடவும். அடிப்பகுதி கனமுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ராகியைச் சேர்த்து வாசம் வரும் வரை பதினைந்து இருபது நிமிடம் வறுத்து ஆற விடவும். இதனை மிக்ஸியில் சிறிது சிறிதாக அரைத்து சலித்து வைக்கவும். நைஸான பவுடர் அளவுக்கு வர வேண்டும். இந்த மாவை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் புட்டு, இடியாப்பம், ரொட்டி, லட்டு செய்து கொள்ளலாம்.

ராகி கூழ்
தேவையானவை:

ராகி மாவு - 100 கிராம்
நொய் அரிசி - 25 கிராம்
தண்ணீர் - 3 லிட்டர்
செய்முறை:
ராகி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விடவும். அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். இதில் நொய் அரிசியை சேர்த்துக் கலக்கி விடவும். நொய் அரிசி நன்கு வெந்ததும், ஊற வைத்த ராகிமாவை ஒரு கையால் அரிசியில் மெதுவாக ஊற்றிக் கொண்டே மறுகையால் அடிபிடிக்காமல் பத்து நிமிடம் கிளறவும். பிறகு தீயை முற்றிலும் குறைத்து மூடி போடாமல் இருபது நிமிடம் வேக விடவும். பின்பு அடுப்பை அணைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் புளிக்க விடவும். மறுநாள் பரிமாறும் போது இதனுடன் மோர், சின்ன வெங்காயம் சேர்த்து, ஒரு டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும். நான்- வெஜ் சாப்பிடுபவர்கள் கூழுடன் நெத்திலி மீன் குழம்பு, கருவாடு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

குலுக்கு ரொட்டி
தேவையானவை:
ராகி மாவு - 200 கிராம்
எண்ணெய் - சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை - 25 கிராம்   (பொடி செய்து வைக்கவும்)
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
பாகு செய்ய:
வெல்லம் - 400 கிராம்
தண்ணீர் - 400 கிராம்
செய்முறை:
ராகி மாவையும் உப்பையும் கலந்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு பத்து நிமிடம் தனியாக வைக்கவும். அடுப்பில் தவாவை வைத்து சூடானதும், முற்றிலும் தீயைக் குறைத்து விடவும். இனி பிசைந்த மாவை இரண்டு அல்லது மூன்று உருண்டைகளாகப் பிரித்து ஓர் உருண்டையை எடுத்து தவாவின் நடுவில் வைத்து கைகளால் தட்டி தட்டி தட்டையாக ஆக்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு பிரவுன் நிற புள்ளிகள் வரும் வரை ஐந்து நிமிடம் வேக விடவும். ரொட்டி முக்கால் பதம் வேகவேண்டும். மறுபுறமும் இதேபோல வேகவிட்டு எடுத்து தட்டில் வைக்கவும். இதேபோல மீதம் இருக்கும் உருண்டைகளையும் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
வேகவைத்த ரொட்டிகளை எல்லாம் உடைத்து மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் வெல்லத்தைச் சேர்த்துக் கரைய விடவும். வடிகட்டி மீண்டும் பாகு தண்ணீரை அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து வேக விடவும்.
பாகு பிசுபிசுப்பு பதம் வர ஆரம்பிக்கும் போது உடைத்த ரொட்டித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும். ஏலக்காய்த்தூள், வறுத்த வேர்க்கடலை பொடி தூவி அடுப்பை அணைத்து ஆற விட்டு மூடி போட்டு இரவு மூழுவதும் ஊற விடவும். இதனை ஒரு டப்பாவில் சேர்த்து இரண்டு நாட்கள் வெளியே வைத்து, பின்பு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

குறிப்பு: ரொட்டியை அதிக நேரம் தவாவில் சூடுபடுத்தி வேக விடக்கூடாது. இப்படிச் செய்தால், ரொட்டி இறுக்கமாகி சுவைக்கக் கடினமானதாகி விடும். ஒருவேளை ரொட்டியானது வெல்ல பாகு மொத்தத்தையும் உறிஞ்சிக்கொண்டால், தேவையான அளவு தண்ணீரை ரொட்டியில் விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி, பின்பு இறக்கி சாப்பிடலாம். சத்துமிக்க உணவான இதை குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கலாம்.

ராகி பனானா பிரெட்
தேவையானவை:
ராகி மாவு - 50 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
சின்ன சைஸ் வாழைப்பழம் - 4 (மசித்து வைக்கவும்)
பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
ஜாதிக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்  (விருப்பப்பட்டால் மட்டுமே)
தேன் - கால் டீஸ்பூன்
தயிர் - 100 மில்லி
ஆலிவ் ஆயில் - 50 மில்லி
செய்முறை:
ராகி மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து நன்கு சலித்து வைக்கவும். இந்த மாவுக் கலவையில் உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், ஜாதிக்காய்ப் பொடி சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். தயிரை நன்கு கடைந்து, ஆலிவ் ஆயில், தேன் கலந்து மசித்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் கடையவும். தயிரில் துளி கூட கட்டிகள் இருக்காதவாறு கடையவும். இந்தக் கலவையைப் பிசைந்து வைத்துள்ள மாவோடு சேர்த்துக் கலந்து கட்டிகள் இல்லாமல் நன்கு பிசையவும். பேக்கிங் அவனை 180 டிகிரிக்கு பத்து நிமிடம் ஹீட் செய்யவும். இனி கேக் செய்யும் பேனை எடுத்து அதில் சிறிது எண்ணெய் தடவி, மாவு - தயிர் கலவையை பேனில் ஊற்றி சமமாக்கவும். இதனை பேனின் மத்தியில் உள்ள ரேக்கில் வைத்து கதவை மூடி நாற்பது நிமிடம் வேக விடவும்.

 கேக் வெந்து மேல் பகுதி லேசாக பிரவுன் நிறத்தில் உப்பி வரும் போது, கதவை திறந்து டூத் பிக்கால் கேக் நடுவே குத்திப் பார்க்கவும். டூத் பிக்கில் கேக் ஒட்டாமல் வந்தால், வெந்துவிட்டது என்று அர்த்தம். வெளியே வைத்து ஐந்து நிமிடம் ஆற விடவும். பேன் முற்றிலும் சூடு ஆறியதும், மெதுவாக கேக்கை எடுத்துப் பரிமாறலாம். அல்லது ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம்.

சிறுதானிய சத்து மாவு
தேவையானவை:
ராகி - 100 கிராம்
கம்பு - 100 கிராம்
சாமை - 100 கிராம்
தினை - 100 கிராம்
குதிரைவாலி - 100 கிராம்
வரகு - 100 கிராம்
சோளம் - 100 கிராம்
சிவப்பரிசி - 50 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
ஏலக்காய் - 6
செய்முறை:
எல்லா பொருட்களையும் கல், தூசி நீக்கி வைக்கவும். எல்லாவற்றையும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும். கருகாமல் வறுக்க வேண்டும். ஒவ்வொரு பொருளும் மெதுவாக வேகமாக என அதன் தன்மையைப் பொறுத்து நாம் வறுக்க வேண்டும். சூடு முற்றிலும் ஆறியதும் மிக்ஸியில் அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும். மேலே சொன்ன அளவுகளை மிக்ஸியிலேயே அரைத்து விடலாம். இதற்கும் கூடுதலாக இருந்தால் மெஷினில் கொடுத்து அரைத்து வைக்கவும். இதில் 1 அல்லது 2 டீஸ்பூன் உப்பு கலந்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். இதை தேவைப்படும் அளவு எடுத்து தண்ணீர் விட்டு கரைத்து வேகவைத்து, குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது உப்பு கலந்து கொடுக்கலாம். இது சிறந்த சத்து உணவாகும்.

ராகி மஸ்ரூம் ஸ்டஃப்டு பன்
தேவையானவை:
கோதுமை மாவு - 100 கிராம்
ராகி மாவு - 75 கிராம்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
சர்க்கரை/தேன்/வெல்லம் - 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் - 100 மில்லி
பால் - 25 மில்லி
ஸ்டஃபிங் செய்ய (மஸ்ரூம் மசாலா தயாரிக்க):
மஸ்ரூம் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
பச்சை குடமிளகாய் - ஒன்றில் பாதி (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து வைக்கவும். இதில் ஈஸ்ட்டைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும். இதை மூடி போட்டு பத்து நிமிடம் பொங்க விடவும். இத்துடன் பாலைச் சேர்த்து நன்கு கலக்கவும். மீண்டும் மூடி போட்டு பத்து நிமிடம் பொங்க விடவும். கோதுமை மாவு மற்றும் ராகி மாவை ஒன்றாக்கி சலித்து வாய் அகன்ற பாத்திரத்தில் வைக்கவும். இதில் பொங்கிய ஈஸ்ட்- பால் கலவையைச் சேர்த்து உப்பு சேர்த்து ஸ்பூனால் மாவை மெதுவாகக் கிளறவும். மாவு ஒட்டும் பதத்துக்கு வந்ததும், சிறிது மாவை தூவிப் பிசைந்து உருட்டி சிறிது எண்ணெய் தடவவும். அவனில் வைக்கும் பவுலில் சிறிது எண்ணெய் தடவி, அதில் மாவை வைத்து ஒரு கிச்சன் டவலால் மாவை மூடி சூடான இடத்தில் இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும்.

மஸ்ரூம் மசாலா தயாரிக்க:
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகைச் சேர்த்து வெடித்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போனதும், மஸ்ரூம், குடமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலாத் தூள், உப்பு சேர்த்துக் கிளறி குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வேக விடவும். மஸ்ரூம் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து கலவையை நன்கு ஆற விடவும். மூடி வைத்திருக்கும் மாவை திறந்தால் மாவு உருட்டிய சைஸை விட டபுளாக உப்பி இருக்கும்.
மறுபடியும் மாவை கைகளால் நன்கு பிசையவும். இதை நான்கு உருண்டைகளாக தனியாகப் பிரித்து உருட்டவும். சிறிது கோதுமை மாவு தொட்டு உருண்டையை சற்று தடிமனான ரொட்டி வடிவத்துக்கு வட்டமாக தட்டி அதன் நடுவே மஸ்ரூம் கலவையை ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து வைக்கவும். அதிகமாக வைக்க வேண்டாம். இனி மாவை மூடி வட்டமான பந்து போல மெதுவாக உருட்டவும். இதை வெப்பமான இடத்தில் நாற்பது நிமிடம் வைத்து விடவும். இப்படி அனைத்து உருண்டைகளையும் உருட்டி தனியாக வைக்கவும்.

அவனை 180 டிகிரிக்கு பத்து நிமிடம் சூடுபடுத்தவும். பேக்கிங் டிரேயில் சிறிது எண்ணெய் தடவவும். இனி ஒவ்வொரு பன்னிலும் பால் நன்கு தடவி பேக்கிங் டிரேவில் வைக்கவும். அவனில் வைத்து 45 நிமிடம் வேக விடவும். பின்பு டிரேவை எடுத்து கூலிங் ரேக்கில் வைத்து பதினைந்து நிமிடம் கழித்து பன்னை எடுத்துப் பரிமாறவும். ஒருவேளை பன்னின் மேல் பகுதி சற்று கடினமாக இருப்பதாக தோன்றினால், அவனின் கதவைத் திறந்து திறந்து ஃபுட் பிரஷ்ஷால் சிறிது எண்ணெயை பன்னின் மேலே தடவி மூடி வேக விட்டு பின்பு எடுத்துப் பரிமாறவும்.

ராகி சோள உப்புமா
புட்டு செய்ய:
ராகி மாவு - 50 கிராம்
சோளம் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் - 50 மில்லி
துருவிய தேங்காய்  - 3 டேபிள்ஸ்பூன்
உப்புமா செய்ய:
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - 2
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சோளத்தைச் சேர்த்து வாசனை வரும் அளவு கருகாமல் வறுத்து ஆற வைக்கவும். இதை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக சூடாக்கவும். சோள மாவு, ராகி மாவு, உப்பு, சேர்த்து, ஸ்பூனால் நன்கு கிளறி விடவும். மாவுக் கலவை  தண்ணீர் பட்டு ஈரமாக இருக்க வேண்டும். மாவைப் பிசைய வேண்டாம். மாவை நாம் என்ன வடிவத்தில் வேண்டுமானாலும், பிடிக்கலாம் என்கிற பதத்துக்குக் கிளறி எடுக்க வேண்டும். இனி புட்டு ஸ்டீமரில் முதலில் ஒரு பங்கு துருவிய தேங்காய், மேலே ஒரு பங்கு புட்டு மாவு சேர்த்து மூடி போடவும். அடுப்பில் குக்கரை வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். குக்கரை மூடி போட்டு விசில் போடும் இடத்தில் புட்டு ஸ்டீமரை வைத்து விடவும். குக்கரில் உள்ள தண்ணீர் சூடாக ஆரம்பிக்கும் போது தீயைக் குறைத்து பத்து நிமிடம் கழித்து புட்டு ஸ்டீமரை எடுத்துத் தனியாக வைக்கவும்.

உப்புமா செய்ய:
புட்டு ஸ்டீமரில் இருந்து புட்டை எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆற விடவும். அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம் வதங்கியதும் உப்பு சேர்த்து புட்டில் கொட்டி கிளறிப் பரிமாறவும்.

ராகி அம்மினி கொழுக்கட்டை (ராகி கொழுக்கட்டை)
கொழுக்கட்டை செய்ய:

ராகி மாவு - 75 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிது
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 25 கிராம்
இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ராகி மாவில் உப்பு சேர்த்து கலந்து ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி, தீயை அதிகப்படுத்தி கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து தண்ணீரை சிறிது சிறிதாக ராகி மாவில் ஊற்றி மரக்கரண்டி அல்லது மர ஸ்பூனால் கட்டி விழாமல் கிளறவும். இதை மூடி போட்டு ஐந்து நிமிடம் தனியாக வைக்கவும். பின்பு கைகளில் எண்ணெய் தடவிகொண்டு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.
அடுப்பில் இட்லி குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டை வைத்து துணி விரித்து, உருட்டியவற்றை தட்டில் வைத்து மூடி போட்டு, பத்து நிமிடம் வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதில் துருவிய தேங்காயைச் சேர்த்து சிறிது வதக்கி, பெருங்காயத்தூள், வேகவைத்த கொழுக்கட்டை (முழுதாக சேர்க்கவும் உதிர்க்க வேண்டாம்), மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மெதுவாகப் புரட்டி இரண்டு நிமிடம் வதக்கவும். அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சத்து மாவு
தேவையானவை:
ராகி - 50 கிராம்
கம்பு - 50 கிராம்
சோளம் - 50 கிராம்
பார்லே (வால் கோதுமை) - 25 கிராம்
பயத்தம் பருப்பு  - 25 கிராம்
உடைத்த கோதுமை  - 2 டேபிள்ஸ்பூன்
ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
பிரவுன் ரைஸ்  - 2 டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை  - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம்  - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை  - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 5
சுக்கு - சிறிதளவு
சர்க்கரை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ராகி, கம்பு, சோளம், உடைத்த கோதுமை, பார்லே (வால் கோதுமை) எல்லாவற்றையும் கல், தூசு நீக்கி தனித்தனியாக எண்ணெய் விடாமல் வாசம் வரும் வரை வறுக்கவும். இதேபோல் ஓட்ஸ், பிரவுன் ரைஸ், ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரிப்பருப்பு, பயத்தம் பருப்பு வேர்க்கடலை, ஏலக்காய், சுக்கு ஆகியவற்றையும் வாசம் வரும் வரை நன்றாக வறுத்து வைக்கவும். வறுக்கும் போது தீயைக் குறைத்து வைத்து வறுக்கவும். ஒவ்வொன்றுக்கும் அதன் தன்மையைப் பொறுத்து நேரம் மாறுபடும். மேலே சொன்னவற்றை எல்லாம் சூடு ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்து காற்றுப் புகாத டப்பாவில் சேர்த்து வைக்கவும். சத்து மாவு கஞ்சி செய்யும் போது தண்ணீரில் மாவைக் கரைத்து வாணலியில் விட்டு, குறைந்த தீயில் வேக விட்டு உப்பு அல்லது சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

ராகி சோளம் முறுக்கு

தேவையானவை:

ராகி மாவு - 200 கிராம்
சோள மாவு - 300 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 150 கிராம்
பொட்டுக்கடலை - 50 கிராம்
எள் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
வெஜிடபிள் ஆயில் - பொரிக்க
மிளகாய்த்தூள் - சிறிதளவு  (உங்கள் காரத்துக்கு ஏற்ப)
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் ராகி, சோளம், அரிசி மாவை தனித்தனியாக சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் உளுத்தம் பருப்பைச் சேர்த்து வாசம் வரும் வரை கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும். எள்ளில் சிறிது தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற விடவும். மிக்ஸியில் உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து பொடியாக்கி தனித்தனியாக வைக்கவும். இனி ராகி மாவு, சோள மாவு, அரிசி மாவு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, உப்பு, தண்ணீர் இறுத்த எள், மிளகாய்த்தூள் என அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அடுப்பை அணைத்து இறக்கவும். தேவையான அளவு தண்ணீரை மிதமான அளவு சூடுபடுத்தவும். மாவில் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிருதுவாகப் பிசையவும். பிசையும் போதே ஒரு டேபிள்ஸ்பூன் சுட வைத்த எண்ணெயை விட்டுக் கொள்ளவும். மாவை மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு ஐந்து முதல் பத்து நிமிடம் ஊற விடவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் சிறிது மாவை எடுத்து எண்ணெயில் விட்டால் சுறுசுறுவென சத்தம் வர வேண்டும். அப்போதுதான் எண்ணெய் சரியாக காய்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இனி முறுக்கு அச்சை எடுத்து, அதில் மாவை வைத்து சுருள் சுருளாக வருமாறு அழுத்தி கரண்டியின் பின்புறம் பிழிந்து விடவும்.இனி, பிழிந்த முறுக்கை பிரவுன் நிறம் வரும் வரை இரண்டு புறமும் வேக விடவும். இரண்டு புறமும் முறுக்கு வெந்துவிட்டால் எண்ணெயில் சத்தம் இருக்காது. முறுக்கை எடுத்து கிச்சன் டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் உறிஞ்சி சூடு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது பரிமாறவும்.

ராகி ஹனி பிரெட்
தேவையானவை:
ராகி மாவு - 50 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
டிரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
மிதமான சூடுள்ள தண்ணீர் - 100 மில்லி
மிதமான சூடுள்ள பால் - 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
துண்டுகளாக நறுக்கிய வால் நட் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிதமான சூடுள்ள தண்ணீரில் சர்க்கரையைச் சேர்த்துக் கரைக்கவும். சர்க்கரை முற்றிலும் கரைந்ததும் அதில் ஈஸ்ட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை மூடி பத்து நிமிடம் வைக்கவும். பிறகு இந்தக் கலவையில் பால் சேர்த்து நன்கு கலக்கவும். ராகி மாவு, கோதுமை மாவு இரண்டையும் சலித்து வைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மாவுகளையும், உப்பையும் சேர்த்து கலக்கவும்.  இதில் தேன், வால்நட்டைச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். இனி ஈஸ்ட் கலவையை மாவில் ஊற்றி, ஸ்பூனால் மிக்ஸ் செய்யவும். மாவு தொட்டால் பிசுபிசுப்பாக ஒட்டிக் கொள்ளும் பதம் வந்திருக்கும். கையால் மாவை ஐந்து முதல் பத்து நிமிடம் வரை பிசையவும். இதில் சிறிது கோதுமை மாவைச் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். வாய் அகன்ற பவுலில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை வைத்து கிச்சன் டவலால் மூடி, இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும். பிறகு, திறந்து பார்த்தால் மாவு உருட்டி வைத்த சைஸை விட டபுளாக உப்பியிருக்கும். மறுபடியும் மாவை கைகளால் நன்கு மிருதுவாகப் பிசையவும்.  பேக்கிங் டிரேவில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 40 நிமிடம் வெளியே வைக்கவும். இனி பேக்கிங் அவனை 180 டிகிரி செல்ஷியஸுக்கு பத்து நிமிடம் சூடாக்கவும். மாவு டிரேவை அவனின் உள்ளே அரை மணி நேரம் வைக்கவும். இடையே அவனை திறந்து டூத் பிக்கால் மாவைக் குத்திப் பார்க்கவும். மாவு டூத் பிக்கில் ஒட்டாமல் வந்தால் மாவு வெந்துவிட்டது என்று அர்த்தம். அவனை அணைத்து டிரேவை எடுத்து கூலிங் ரேக்கில் வைத்து ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

ராகி அவல் மிக்ஸர்
தேவையானவை:
ராகி மாவு - 500 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால் அதிகரிக்கவும்)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உருக்கிய நெய் - 1 டேபிள்ஸ்பூன்
இளம் சூடான தண்ணீர் - மாவு பிசைய
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

மிக்ஸர் செய்ய:
பூண்டுப் பல் - 3
வெள்ளை அவல் - 150-200 கிராம்
பொட்டுக்கடலை - 50 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
கறிவேப்பிலை - 50 கிராம்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் (காரத்துக்கு ஏற்ப அதிகரிக்கலாம்)
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ராகி மாவு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து ஆற விட்டு சலித்து வைக்கவும். இத்துடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தண்ணீரை ஊற்றி மிருதுவாகப் பிசையவும். நெய்யை ஊற்றி மீண்டும் மிருதுவாகப் பிசையவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயைக் குறைத்து முறுக்கு அச்சில் மாவைச் சேர்த்து எண்ணெயில் மாவைப் பிழியவும். தீயை உடனே குறைத்து மீண்டும் அச்சை எண்ணெயில் மேல் வட்டமாக பிழியவும். மாவுக் கலவை ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு பிழியவும். அதிகம்  பிழிந்தால் மாவு வேகாது. வெந்தவற்றை கரண்டியால் எடுத்து கிச்சன் டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.

மிக்ஸர் செய்ய:
முறுக்கு சுட்ட அதே எண்ணெயில் அவலைச் சேர்த்து பொரித்து எடுத்துத் தனியாக வைக்கவும். அதே எண்ணெயில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பூண்டு, கறிவேப்பிலையை தனித்தனியாகப் பொரித்து வைக்கவும். இவற்றுடன் முறுக்கையும் சேர்த்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒன்றாகக் கலக்கவும். இதில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

எக் பஜ்ரா ரொட்டி (கம்பு முட்டை ரொட்டி)
தேவையானவை:
கம்பு மாவு - 100 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் - மாவு பிசைய
எண்ணெய் - சிறிதளவு
முட்டை மிக்‌ஸர்:
முட்டை - 2-3
பெரிய வெங்காயம் - 2 (சின்னதாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 (வட்டமாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி, மிருதுவாகும் வரை பீட்டரால் அடித்துக் கலக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து மீண்டும் பீட்டரால் அடித்துக் கலக்கவும். கம்பு, கோதுமை மாவுகளை சலித்து உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரைச் சேர்த்து ரொட்டி பதத்துக்கு மிருதுவாகப் பிசைந்து பத்து நிமிடம் மூடி போட்டு தனியாக வைக்கவும். அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடுபடுத்தவும். இனி மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிரிக்கவும். எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது எண்ணெய் தடவிய வாழை இலையில், மாவு உருண்டையை வைத்து விரல்களால் நன்கு வட்டமாக சற்று தடிமனாக தட்டவும்.
தவாவில் ரொட்டியை வைத்து முட்டைக் கலவையை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து ரொட்டியின் மீது ஸ்பூனால் நன்கு பரப்பி விடவும். ரொட்டியைச் சுற்றியும், மேலேயும் லேசாக எண்ணெயைத் தெளித்து விடவும். இனி ரொட்டியைத் திருப்பி மறுபுறம் வேக விடவும். எண்ணெயைச் சிறிது தெளித்து விடவும். வெந்ததும் எடுத்து பூண்டு சட்னி அல்லது ஆனியன் ரைத்தாவோடு பரிமாறவும்.

கம்பு இனிப்புப் பிடி கொழுக்கட்டை
தேவையானவை:
கம்பு - 150 கிராம்
துருவிய கருப்பட்டி - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் - சிறிது (விருப்பப்பட்டால்)
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் கம்பை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். அடுப்பை அணைத்து கம்பை ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக பவுலில் வைக்கவும். இதில் ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துண்டுகள், டிரை ஃப்ரூட்ஸ், கருப்பட்டி சேர்த்து கட்டியில்லாமல் கைகளால் கலக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் சூடான நீரை ஊற்றி, மாவு ஈரமாகி அதை எந்த ஷேப்பில் வேண்டுமானாலும் உடையாமல் உருண்டை பிடிக்கலாம் எனும் பதத்துக்கு தண்ணீர் தெளித்துக் கிளறவும். அதிகமாக தண்ணீரை ஊற்றினால் மாவு சொதசொத என்றாகி விடும். கைகளால் மாவை நீள வடிவத்துக்கு பிடித்து, இட்லித் தட்டில் வைத்து பதினைந்து நிமிடம் வேக வைத்து எடுத்துப் பரிமாறலாம்.

பீட்ரூட் சோள மாவு ரொட்டி
தேவையானவை:

கோதுமை மாவு - 150 கிராம்
சோள மாவு - 50 கிராம்
மீடியம் சைஸ் பீட்ரூட் - 1 (துருவியது)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - மாவு பிசைய
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து அதில் உள்ள ஈரம் வற்றி வெந்தவுடன் இறக்கி ஆற வைக்கவும். கோதுமை மாவு, சோள மாவைச் சலித்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், பீட்ரூட், உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் தேவையான தண்ணீர் விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும். பிறகு மாவை மீடியம் சைஸ் உருண்டைகளாக்கி இைத எண்ணெய் தடவிய தவாவில் வைத்து, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். இதை ரைத்தா மற்றும் ஊறுகாயோடு சேர்த்துப் பரிமாறவும்.

ராகி இனிப்புப் புட்டு
தேவையானவை:
ராகி மாவு - 50 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 25 கிராம்
கருப்பட்டி - 50 கிராம்
சூடான தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ராகி மாவில் ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் சூடான தண்ணீர் விட்டு மாவை உதிரியாகப் பிசையவும். மாவு ஈரமாக இருக்க வேண்டும். புட்டு ஸ்டீமரில் முதலில் தேங்காய்த்துருவல், அதன்மேல் புட்டு மாவை வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து தண்ணீர் விட்டு சூடானதும், மூடி போட்டு விசில் வைக்கும் இடத்தில் புட்டு ஸ்டீமரை வைத்து தீயை மிதமாக்கி பத்து நிமிடம் வேக விடவும். பின்பு ஸ்டீமரை எடுத்து ஆறியதும், புட்டைத் தட்டி கொட்டி உதிரியாக்கி துருவிய கருப்பட்டி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சாமை பயத்தம் பருப்பு முறுக்கு
தேவையானவை:
சாமை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
பொட்டுக்கடலை - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இளம் சூடான தண்ணீர் - மாவு பிசைய
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து பயத்தம் பருப்பைச் சேர்த்து சில நிமிடம் வறுத்து ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். பொட்டுக்கடலையையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். அரிசி மற்றும் சாமை மாவை கடாயில் வாசனை வரும் வரை தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும். இனி இந்த இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து இத்துடன் சிறு பருப்புப்பொடி, பொட்டுக்கடலைபொடி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவு பிசையவும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிப் பிசையவும்.  மாவை மிருதுவாகப் பிசைந்து பத்து நிமிடம் மூடி போட்டு வைக்கவும். அச்சில் மாவைச் சேர்த்து பொரிக்க பயன்படுத்தும் கரண்டியின் பின்புறம் முறுக்காக பிழிந்து எண்ணெயில் இடவும். இருபுறமும் வேக வைத்து எடுத்துப் பரிமாறலாம்.

ஸ்பைஸி சாமைக் கஞ்சி
தேவையானவை:
சாமை - 30 கிராம் (கழுவி முப்பது நிமிடம் ஊற வைக்கவும்)
பயத்தம் பருப்பு - 30 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய கேரட் - 25 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 500 மில்லி
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - கால் டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 100 மில்லி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்)  - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிராம்பு - 2
பட்டை - சிறு துண்டு
கறிவேப்பிலை - 10 - 15
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - சில துளிகள் (விருப்பம்  இருந்தால்)
 கடுகு - அரை டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து பயத்தம் பருப்பைச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

கேரட், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் இறுத்த சாமை, அரைத்த பயத்தம் பருப்பைச் சேர்த்துக் கலக்கவும். மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு இரண்டு விசில் வைத்து வேக விடவும். அடுப்பை அணைத்து குக்கரின் சூடு ஆறியதும் மூடியைத் திறந்து தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கவும்.
மறுபடியும் குக்கரை அடுப்பில் வைத்து தேவையான சூடுபடுத்தி தேவைப்பட்டால் மிளகுத்தூள் அதிகம் சேர்த்து, ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும். கூழ் சூடாக இருக்கும்போதே எலுமிச்சைச்சாறு சில துளிகள் விட்டுச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ரா பனானா அண்ட் பம்ப்கின் மஃபின்
தேவையானவை:
முட்டை - 1
மீடியம் சைஸ் வாழைப்பழம் - 1 (மசித்தது)
பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) - 25 கிராம் (டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்)
மஞ்சள் பூசணி பியூரி - 50 கிராம்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
ராகி மாவு - 75 கிராம்
மைதா - 25 கிராம்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை ஒரு பவுலில் உடைத்து நன்கு அடித்து வைக்கவும். பூசணியின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து தண்ணீர் ஊற்றி,வேக வைக்கவும். பின்பு தண்ணீரை இறுத்து ஆறியதும் மிக்ஸியில் கூழாக அரைக்கவும். இதில் இருந்து 50 கிராம் தனியாக எடுத்து வைக்கவும். இனி முட்டையில் பூசணி பியூரி, சர்க்கரை சேர்த்து மீண்டும் ஹேண்ட் பீட்டரால் நன்கு அடிக்கவும். இதில் மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். கட்டிகள் விழாமல் அடித்துக் கலக்க வேண்டும். இதில் வெனிலா எசன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்து மீண்டும் பீட்டரால் அடித்து தனியாக வைக்கவும். ராகி, மைதாவை சலித்து ஒன்றாக பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவு பசை போன்ற வடிவம் வரும் வரை கலக்கி வைக்கவும். பேக்கிங் அவனை 180 டிகிரி செல்ஷியஸில் பத்து நிமிடம் சூடுபடுத்தவும்.

மஃபின் தட்டுகளின் உள்ளே மஃபின் லைனரை வைத்து, அதன் உள்ளே சிறிது எண்ணெயை ஸ்பிரே செய்யவும். ஒவ்வொரு மஃபின் லைனர் உள்ளேயும் இரண்டு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து வைக்கவும். இனி மஃபின் பேனை அவனின் மிடில் ரேக்கில் வைத்து, 180 டிகிரி செல்ஸியஸில் 15 முதல் 18 நிமிடம் வரை வேக விடவும். இடையே அவனை திறந்து டூத்பிக்கால் மஃபின் நடுவே குத்தி பார்த்தால் மாவு வெந்துவிட்டதா என்பது தெரியும்.  மாவு ஒட்டாமல் வந்தால், மஃபின் வெந்துவிட்டது என்று அர்த்தம். அவனில் இருந்து பேனை எடுத்து கூலிங் ரேக்கில் வைத்து சூடு சுத்தமாக ஆறியதும் மஃபினை பேனில் இருந்து லைனரோடு எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்.

Related

சிறுதானிய உணவுகள் 8960447720752005922

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item