வாருங்கள், இனிமேல் திருப்பிக் கொடுப்போம்!

நே ற்று உங்களை நனைத்த மழை நீர், முன்பொரு காலத்தில் கிளியோபாட்ரா குளித்த நீராக இருக்கலாம். குற்றாலம் அருவியில் சலசலத்துக் கொட்டும் தண்ணீர்...


நேற்று உங்களை நனைத்த மழை நீர், முன்பொரு காலத்தில் கிளியோபாட்ரா குளித்த நீராக இருக்கலாம். குற்றாலம் அருவியில் சலசலத்துக் கொட்டும் தண்ணீர், புதைந்துபோன பூம்புகாரில் சாரலாக வீசியிருக்கலாம். இன்று நீங்கள் பருகும் குடிநீர், நாளை தார் பாலைவனத்தில் சிறு மழையாகப் பொழியலாம். இந்தப் பூமி உருவான தினத்தில் இருந்து இப்போது வரை உள்ள நீரின் அளவு ஒன்றுதான். மழையாக, கடலாக, பெருவெள்ளமாக... அதன் வடிவங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், தண்ணீர் பஞ்சமோ ஒவ்வொரு நாளும் புது வடிவம் எடுக்கிறது. இதற்கு எளிமையான, சாத்தியமான தீர்வு ஒன்றை முன்வைக்கிறார் 'மழை நீர் பொறியாளர்’ கி.வரதராஜன்.  
 ''தண்ணீர் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லாத் தண்ணீரைக் கொடுத்திருக்கிறது. கொடுத்துக் கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை'' என்கிறார் வரதராஜன். மழை நீர் சேகரிப்புக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிற இவரின் வயது 69. இதற்காக, தான் பார்த்துக்கொண்டு இருந்த அரசு வேலையை உதறிவிட்டு, தன் வீட்டையே மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றிய மனிதர். தென்னிந்தியா முழுவதும் 2,014 வீடுகளில் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து அளித் தவர். திருவாரூரில் இருக்கும் வரதராஜனின் வீட்டுக்குள் நுழைந்தால் எங்கெங்கும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள். விதவிதமான அளவு களில், விதவிதமான வடிவங்களில் நீரால்சூழ்ந்து  இருக்கிறது வீடு.
''இந்தத் தண்ணீரைக் குடிங்க...'' என வீட்டு சமையல் அறையில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் பிடித்துத் தருகிறார். அமிர்தம்போல் இருக்கிறது. ''இது ஏழு வருடம் பழைய மழை நீர். இந்த வீட்டில் 1.5 லட்சம் லிட்டர் மழை நீரைச் சேமித்துவைத்து இருக்கிறேன். குடிக்க, சமையல் செய்ய, குளிக்க, துவைக்க... அனைத்துக்கும் இதைத்தான் பயன்படுத்துகிறோம். இதில் இருக்கும் தாது உப்புக்களின் விகிதம், நகரங்களில் விற்கப்படும் 'மினரல் வாட்டர்’ எதிலும் இல்லை. உலக சுகாதார நிறுவனம் 122 நாடுகளில் குடிநீரைப் பற்றி ஆய்வு செய்தது. அதில் இந்தியாவுக்குக் கிடைத்தது 120-வது இடம். அந்த அளவுக்கு நம் ஊர் தண்ணீர் கெட்டுப்போய்விட்டது. நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள தாது உப்புக்களின் கூட்டுத்தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம்தான் இருக்க வேண்டும். இந்தியாவில் இது 1,500 மில்லி கிராமுக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நான் மழை நீரைச் சேகரிக்க ஆரம்பித்த பிறகு, என் வீட்டு நிலத்தடி  நீரில் தாது உப்புக்களின் அளவு 675 மில்லி கிராமாகக் குறைந்திருக்கிறது. இந்தியா 120-வது இடத்தில் இருந்தாலும் என் வீட்டுத் தண்ணீர் முதல் இடத்தில் இருக்கிறது'' எனச் சிரிக்கிறார் வரதராஜன். பொதுப்பணித் துறையில் 36 ஆண்டு கள் பொறியாளராகப் பணிபுரிந்தவர், முழு நேரமாக மழை நீர் பொறியாளராக மாறிய கதை சுவாரஸ்ய மானது.
''என் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் கீழப் பழுவூர். அங்கே 'திருக்குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. அதில் தேங்கும் மழை நீர்தான் மொத்தக் கிராமத்துக்கும் குடிநீர். அதைக் குடித்து தான் நான் வளர்ந்தேன். படித்து முடித்து பொதுப்பணித் துறையில் பொறியாளராக   வேலைக் குச் சேர்ந்தேன். திருச்சிதான் எனக்கு தலைமை இடம். கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங் களில் வேலை. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு கிணற்றைத் தேர்வுசெய்து அதன் நீர் மட்டத்தையும் தரத்தையும் தொடர்ச்சியாகப் பரிசோதிப்போம். நாளுக்கு நாள் நீர் மட்டமும் நீரின் தரமும் மோசமாகிக்கொண்டு இருந்தது. அதைச் சரிசெய்வதற் குப் பதிலாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதுடன் எங்கள் வேலை முடிந்துவிடும். மனது கேட்காமல், அந்தந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர்களைச் சந்தித்து, 'உங்க ஊர் தண்ணீர் சரியில்லை. அதைப் பயன்படுத்த வேண்டாம்’ எனச் சொல்வேன். இதனால் எனக்கு எங்கள் அலுவல கத்தில் எதிர்ப்புகள் வந்தன. 'அது உங்கள் வேலை இல்லை. ஆய்வு செய்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்பார்கள். ஆனால் நான், பல்வேறு கிராமங்களுக்கும் சென்று விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்த ஆரம்பித்தேன்.
அப்படிச் செல்லும்போது என் சொந்தச் செலவில்தான் சென்றுவருவேன். யாரிடமும் காசு வாங்க மாட்டேன். எனது வாசிப்பு அனுபவம் மூலம் நிலத்தடி நீர் மாசு மற்றும் குடிநீர் பிரச்னைக்கு மழை நீர் சேகரிப்பே சிறந்த வழி என்று உணர்ந்தேன். இதற்கிடையே கரூர் வட்டம் வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்தில் ஆய்வுசெய்த போது, சாயப்பட்டறைக் கழிவுகளால் நிலத்தடி நீர் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அதைப் பற்றி எடுத்துச் சொல்ல அந்த ஊருக்குப் போய்விட்டு அலுவலகம் திரும்பினால், அனுமதி இல்லாமல் சென்று வந்ததற்காக எனக்கு மெமோ கொடுத்தார்கள். இதனால் கடும் மன உளைச்சல் அடைந்தேன். தொடர்ந்தும் இடையூறுகள். இதற்கு மேலும் இந்த வேலை தேவை இல்லை என்று 2003-ம் ஆண்டில் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டேன். அதில் கிடைத்த 10 லட்ச ரூபாய் பணத்தைச் செலவழித்து என் வீட்டை மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றினேன். அதன் பிறகு, முழு மூச்சாக இதுதான் என் வேலை'' என்கிற வரதராஜன், மழை நீரைச் சேகரித்துவைக்கும் கொள்கலனுக்காக தமிழ்நாடு முழுக்க அலைந்திருக்கிறார்.  
''ராமநாதபுரத்தில் மழை நீரைச் சேகரித்துவைத்து, வருடக்கணக்கில் பயன்படுத்தும் தகவல் கிடைத்தது. நேரில் சென்றால், முதுமக்கள் தாழி போன்ற பெரிய பானையில் மழை நீரைச் சேமிக்கிறார்கள். அதில் தேத்தாங்கொட்டை என்ற ஒரு மரத்தின் கொட்டையை அரைத்து ஊற்றி, இறுக்கமாக மூடிவைத்துவிடுகின்றனர். காற்றோ, வெயிலோ உள்ளே செல்வது இல்லை. பிறகு, தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும்போது அதைப் பயன்படுத்துகின்றனர். கொஞ்சமும் அது கெட்டுப்போவது இல்லை. பிறகு, சென்னையில் 'ஐடியல் வாட்டர் ஸ்டோரேஜ் டேங்க்’ என்ற கன்டெய்னர் கிடைத்தது. அது மழை நீரை சேகரிக்கப் பொருத்தமாகவும் வசதியாகவும் இருந்தது.
மழைத் தண்ணீரில் எல்லாவிதமான மினரல்களும் இருக்கின்றன. கூடுதலாக, பூமியில் உள்ள தண்ணீரில் கிடைக்காத பி 12 வைட்டமினும் ஓசோனும் மழை நீரில் இருக்கிறது. அதனால், மழை நீரை நம்முடைய அன்றாடப் பயன்பாடுகள் அனைத்துக்கும் பயன்படுத்தலாம். இதற்குப் பெரிய செலவு ஆகாது என்பதுடன், வீட்டில் எந்தவித மாற்றத்தையும் செய்ய வேண்டியது இல்லை.
மழை பெய்யும்போது மாடியில் பொழியும் மழை நீர், குழாய்களின் வழியே வந்து நாம் அமைத்துஇருக்கும் தொட்டியில் சேகரிக்கப்படும். அந்தத் தொட்டியின் அடியில் கரி, மணல், சிறு கருங்கல் ஜல்லி ஆகிய மூன்றும் வடிகட்டியாகச் செயல்படும். வடிகட்டி வரும் தண்ணீரை வீட்டின் கீழே ஒரு டேங்கில் சேகரித்துவைக்க வேண்டும். அதில் இருந்து குழாய் மூலம் எடுத்து சமையலுக்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். ஒரு மட்டத்துக்கு மேல் நீர் செல்லும்போது தானாகவே பூமிக்குள் சென்றுவிடும். இப்படித் தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீர் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. என் வீட்டில் 8 வருடங்கள் 10 மாதங்கள், 22 நாட்களாக மழை நீர் இருக்கிறது. தரமாக இருக்கிறது. அதேபோல இந்த நீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்பதும் இல்லை. அப்படியே பயன்படுத்தலாம்.
பொதுவாக, ஒரு கிரவுண்ட் நிலத்தில் 850 முதல் 1,000 சதுர அடி வரை வீடு கட்டுவார்கள். அதிகபட்சமாக 1,000 சதுர அடி மேற்பரப்புகொண்ட ஒரு வீட்டில் மழை நீர் சேகரிக்க வேண்டும் என்று வைத் துக்கொள்வோம். அந்த வீட்டில் மூன்று பேர் வசிப்பதாகக் கொண்டால், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் எனில், 9 லிட் டர் தேவை. விருந்தின ருக்கு 1 லிட்டர். மொத் தம் ஒரு நாளைக்கு 10 லிட்டர். நம் ஊருக்கு கோடைக் காலம்மூன்று மாதங்கள். மழை கிடைக் காத இந்த நாட்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமிப்பதுதாம் நம் இலக்கு. அப்படி எனில், 3 மாதங்கள் (90 நாட்கள்) என்பதை 100 நாட்களாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம் 1,000 லிட்டர் மழை நீர் சேகரிக்க வேண்டும். இதற்கான கன்டெய்னர் வாங்க 10 ஆயிரமும், இதர செலவுகளுக்கு 6 ஆயிரமும் சேர்த்து மொத்தம் 16 ஆயிரம் செலவாகும். இந்தச் செலவு ஒருமுறை முதலீடுதான். அதுவும் ஒரே வருடத்தில் மழை நீராகத் திரும்பி வந்துவிடும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்தச் செலவும் இல்லாமல் மழை நீரைப் பயன்படுத்தலாம். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வடிகட்டியை மாற்றுவதைத் தவிர, வேறு எந்தப் பராமரிப்புச் செலவும் இல்லை. மின்சார பில்லும் மிச்சமாகும்.
உண்மையில், தொட்டியில் சேகரிக்கும் தண்ணீரின் 10 சதவிகிதத்தைத்தான் நாம் பயன்படுத்துவோம். மீதம் பூமிக்குள்தான் போகும். என் நோக்கமும் கெட்டுப்போன நிலத்தடி நீரை மழை நீரால் சரிசெய்வதுதான். ஆனால், அதை மட்டும் சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதுடன், குடிநீர் பிரச்னைக்கும் இது சரியான தீர்வு என்பதால் இரண்டையும் சேர்த்துச் சொல்கிறேன்'' என்கிற வரதராஜன், பயணிகளின் தாகம் போக்கத் தன் வீட்டு வாசலில் ஒரு மழை நீர் - குடிநீர் தொட்டி வைத்திருக்கிறார். அதுபோலவே திருமணங்கள் போன்ற விழாக்களுக்கும் மழை நீரைக் கொடுக்கிறார்.
''இன்று தண்ணீர், தனியார்மயமாகிவிட்டது. நகரங்களில் கேன் வாட்டரை விட்டால் வேறு வழி இல்லை. ஒவ்வொரு மாதமும் கணிசமான பணம் இதற்கே செலவாகிறது. அந்த கேன் தண்ணீர் சுத்தமாகவும் இருப்பது இல்லை. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்கள் முன்பு யாரேனும் நினைத்துப்பார்த்திருப்போமா? மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும். இந்த பூமியை நாசப்படுத்திய நாம்தான் இதைச் சரிசெய்ய வேண்டும். எத்தனை நாட்களுக்குத்தான் நிலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சிக்கொண்டே இருப்பது? வாருங்கள், இனிமேல் திருப்பிக் கொடுப்போம்!''

Related

உபயோகமான தகவல்கள் 5548464338989332258

Post a Comment

6 comments

Unknown said...

ஐயா!

மிகமிக நல்ல செய்தி சொல்லி இருக்கிறீர்கள்.
'சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம் சொல்லியவண்ணம் செயல்'
என்பதற்கேற்ப செய்து கொண்டும் இருப்பது மிகப்பெறிய சாதனையாகவே தோன்றுகிறது. நன்றி!

MohamedAli said...

Dear Manikka Vasagam sir thanks for your kinds By A.S. Mohamed Ali

Raj said...

malai neer uyir neer nu verum eluthaa eluthina matum pathathu ....ungala mathiri valkaiya valanum...

Raj said...

malai neer uyir neer nu verum eluthaa eluthina matum pathathu ....ungala mathiri valkaiya valanum...

MohamedAli said...

Thanks Raj By Pettagum A.S. Mohamed Ali

Unknown said...

Nice ☁🌩🌧🌦⛈💧💧💧

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item