கேள்வி பதில் ! ஆயுள் காப்பீட்டு ஏஜென்ட்டாவதற்கு அடிப்படைத் தகுதிகள் என்னென்ன?
ஆயுள் காப்பீட்டு ஏஜென்ட்டாவதற்கு அடிப்படைத் தகுதிகள் என்னென்ன? சுரேஷ், திருச்சி ப.லோகநாதன், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் “ஆயுள் காப்பீட்டு ...
சுரேஷ், திருச்சி
ப.லோகநாதன், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்
“ஆயுள் காப்பீட்டு ஏஜென்ட்டாவதற்கு, கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ஐ.ஆர்.டி.ஏ தேர்வுகளில் வெற்றி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.இதுவே நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் எனில், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதிகள் ஆகும். ஆனால், ஒருவர் ஏஜென்ட்டாக வெற்றி பெறுவதற்கு நல்ல மொழி ஆளுமை, சகிப்புத்தன்மை, பாலிசிதாரர்களைப் புரிந்துகொள்வதற்கான திறன் மற்றும் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.”
--------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மாநகராட்சியில், அப்ரூவல் இல்லாமல் தரை தளம் மற்றும் முதல் தளம் (வணிகரீதியில் செயல்படும் கடை) கட்டிக் கொள்ளலாமா?
இஸ்மாயில், பள்ளிக்கரணை
பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்
“சென்னை மாநகராட்சி அல்லது சி.எம்.டி.ஏ-வின் முன்அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டக் கூடாது. சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக உள்ள உதவி ஆணையரிடம் குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 9 மீட்டர் வரை உயரமுடைய கட்டடங்கள் எனில் தரை தளம் + முதல் மாடி கட்டலாம்.அல்லது கார் பார்க்கிங் வசதியுடன் தரை தளம் மற்றும் அதற்கு மேல் 2 மாடிகள் கட்டலாம். வணிக பகுதி எனில், 300 சதுர மீட்டர் பரப்பளவுக்குள் இருக்க வேண்டும். குடியிருப்புப் பகுதி எனில், ஆறு சமையலறைகளுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. இந்த வரம்புக்கு உள்பட்ட கட்டட அனுமதியை உதவி ஆணையர் நிலையில் வழங்குவார்கள். இதற்குமேல் எனில் சி.எம்.டி.ஏ-விடம் விண்ணப்பிக்க வேண்டும்.”
---------------------------------------------------------------------------------------------------------------------------
2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐசிஐசிஐ வெல்த் பில்டர் 2 பாலிசியில் 1,01,000 ரூபாய் முதலீடு செய்தேன். இது ஐந்து ஆண்டுகளுக்கான பாலிசி. ஆனால், ஒரு வருடம் மட்டுமே நான் பணத்தை செலுத்தினேன். இப்போது இந்தப் பணத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து என்னால் எடுக்க முடியுமா?
ஸ்ரீநிவாஸ், திருவானைக்கோயில்
ஆர்.குருராஜன், உதவிப் பொது மேலாளர், இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ்
“பாலிசிதாரர் பிரீமியம் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால், பாலிசியின் நிபந்தனைபடி, அந்தப் பணம் பாலிசி ‘டிஸ்கன்டினுவன்ஸ் ஃபண்டுக்கு (Discontinuance Fund) மாற்றப்படும். இது குறைந்தபட்ச உத்தரவாதமான வருவாயைப் பெற்றுத் தரும். பாலிசிக் காலம் 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு பாலிசியைச் சரண்டர் செய்து, பாலிசி ‘டிஸ்கன்டினுவன்ஸ் ஃபண்டில்’ உள்ள மீதமுள்ள பணத்தை பாலிசிதாரர் எடுத்துக்கொள்ளலாம்.”
---------------------------------------------------------------------------------------------------------------------------
என் வயது 41. மாதம் 15,000 சம்பளம் வாங்குகிறேன். நான் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?
சோமசுந்தரம், கடலூர்
எஸ். ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்
“டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, வருமானமுள்ள அனைவரும் எடுக்கலாம். நீங்கள் மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்குவதால், குறைந்தபட்சமாக 18 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 36 லட்சம் ரூபாய் வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம். தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களான ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் கோட்டக் போன்றவற்றின் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் நன்றாக இருப்பதால், இந்த நிறுவனங்களின் பாலிசி ஒன்றை எடுத்துக்கொள்வது நல்லது.”
----------------------------------------------------------------------------------------------------------------------------
என் அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார். அவருடைய நாமினியாக இருப்பதால், அவரின் அஞ்சல் அலுவலக வைப்புக் கணக்கில் இருந்த 3 லட்சம் ரூபாயை என் கணக்கில் மாற்றினேன். இதற்கு நான் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
கண்ணன், ஈரோடு
கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்
“ஒரு நாமினியாக, அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பெறுவது மூலதன ரசீது ஆகும். இதற்கு வரி செலுத்தத் தேவையில்லை. அதேநேரம், இந்தத் தொகையை டெபாசிட் செய்தால் எதிர்காலத்தில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். நாமினியின் வருமானம், அடிப்படை வருமான வரி வரம்பைத் தாண்டினால் மட்டுமே அவர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்”
Post a Comment