எதையும் புகார் செய்ய புதிய ஆப்! - எடை குறைவு... விலை அதிகம்...!
ரே ஷன் கடையில் எதை வாங்கினாலும் சரியான எடையில் இருப்பதில்லை. பேருந்து பயணங்களின்போது நெடுஞ்சாலை உணவகங்களில் வாங்கும் எதுவும் நியாயமான வில...
தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் ‘சட்டமுறை எடை, அளவு பிரிவு’தான் இந்த மொபைல் ஆப்-ஐ நிர்வகிக்கிறது. இதை மொபைல் போனில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். ஆப் முழுவதுமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. பெட்ரோல் பங்க்கில் ஒரு லிட்டர் என்று சொல்லிவிட்டுக் குறைவாக பெட்ரோல் போடுகிறார்கள், ஷாப்பிங் மாலில் அதிக விலைக்குப் பொருளை விற்கிறார்கள், நெடுஞ்சாலை ஹோட்டலில் சாப்பாடு தரமாக இல்லை என எதைப் பற்றியும் இதில் புகார் செய்ய முடியும்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்வதற்கான லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.mslabs.lmctspublic&hl=en. இந்த ஆப் மட்டுமின்றி, இணையம் மூலமாகவும் உங்களுடைய புகார்களைப் பதிவு செய்யமுடியும். http://tnlegalmetrology.in/ என்ற முகவரியில், உங்கள் ஆப்-ல் கொடுத்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து லாக்-இன் செய்யலாம்.
48 மணி நேரத்தில் நடவடிக்கை!
இந்த ஆப்-ஐ உருவாக்கி, செயல்படுத்திவரும் தமிழக தொழிலாளர் துறையின் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ‘‘பொதுமக்கள் இதில் புகார் தெரிவித்தால், 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்.
‘‘எடை, அளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருள்களுக்கான விதிகள் என இரண்டு சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழ் வரும் புகார்கள் இதில் பதிவு செய்யப்படும். கடைகளில் நீங்கள் வாங்கும் பொருள்களின் எடை, அளவு போன்றவற்றில் தவறு இருந்தாலோ அல்லது MRP விலையை விடவும் அதிகமாக விற்றாலோ இதில் புகார் செய்யலாம். பொட்டலப் பொருள்களுக்கான விதிகளைப் பொறுத்தவரை, ஒரு பொருள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால், யார் அதை பாக்கெட்டில் அடைத்தார், யார் அதைத் தயாரித்தார், யார் அதை இறக்குமதி செய்தார், எப்போது பேக் செய்யப்பட்டது, அதன் எடை எவ்வளவு, அதன் அதிகபட்ச சில்லறை விலை, நுகர்வோர் புகார் செய்வதற்கான எண்கள் என விவரங்கள் அனைத்தும் அந்த பாக்கெட்டின் மீது இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு விஷயம் இல்லை என்றாலோ, அல்லது அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு மாறாக விற்பனை செய்யப்பட்டாலோ, MRP விலையை விடவும் கூடுதலாக விலை வைத்து விற்கப்பட்டாலோ அது சட்டப்படிக் குற்றம். அதுமாதிரியான சமயங்களில் நுகர்வோர் புகார் செய்யலாம்.
மக்கள் பாதிக்கப்படும்போது ஆடியோ, வீடியோ, எழுத்து, ரசீதுகள் என ஏதாவதொரு ஆதாரத்தை இணைத்து, இந்த ஆப் மூலம் புகார் செய்யலாம். ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றால் கூட பிரச்னை இல்லை. நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெளிவாகப் பதிவு செய்தால் கூட போதும்; நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆப் மூலம் பதிவு செய்யப்படும் அனைத்து புகார்களும் அந்தந்த ஏரியாவின் எடை, அளவு சட்ட அதிகாரிகளுக்குச் சென்று சேர்ந்துவிடும். தமிழகத்தில் எடை, அளவு சட்ட அதிகாரிகள் மொத்தம் 433 பேர் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுப்பார்கள். புகார் கொடுத்தவரின் விவரங்கள் எதுவுமே அதிகாரிகளுக்குத் தெரியாது. அதே சமயம் புகார் அளித்தவர்களுக்கு, புகார் பதிவான எண், எப்போது நடவடிக்கை எடுப்பார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்.
வருகின்ற ஒவ்வொரு புகாரையும் தீவிரமாகக் கவனித்து வருகிறோம். உதாரணமாக, ஒரு மார்க்கெட்டில் இருக்கும் ஒரு கடையில், விலை அதிகமாக வைக்கப்பட்டு பொருள்கள் விற்கப்படுகிறது எனப் புகார் வந்தால், அந்த ஒரு கடை மட்டுமின்றி அந்த மார்க்கெட்டில் இருக்கும் மற்ற கடைகளையும் சோதனை செய்கிறோம். சில நாள்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மோட்டல்கள் குறித்துப் புகார்கள் வந்தன. உடனே தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து மோட்டல்களும் சோதனை செய்யப்பட்டு, தவறு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு கடையில் முதலில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் உடனே சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் அதே கடையில் தவறு நடப்பது கண்டறியப்பட்டால், குற்றம் செய்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்படுவார்.
ஆன்லைனில் பொருள் வாங்கினாலும் கூட புகார் செய்யலாம். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்துக்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்” என்றார் அமுதா.
ஆரம்ப வேகம் கடைசிவரை இருப்பதை உறுதி செய்தால், நிச்சயம் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
Post a Comment