நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் ! - 1
உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர் கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் உன்னை நீயே அறிவாய்! செ...

கே.எஸ்.கமாலுதீன் மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்
உன்னை நீயே அறிவாய்!
சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெரு பிரமாண்டமான கடைகளை அண்ணாந்து பார்க்கும் நம் கிராமத்து இளைஞர்கள், நாமும் அவர்களைப் போல் ஆக முடியுமா என பிரமிக்கிறார்கள். திருபாய் அம்பானியின் வெற்றிக் கதையை வாசித்த எம்பிஏ படிக்கும் சிறு நகரத்து இளைஞர்கள் ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் மாதிரி கம்பெனிகளை நம்மால் தொடங்கி நடத்த முடியுமா என வியக்கிறார்கள்.
ஐ.டி படிப்பைத் தேர்வு செய்த பெரு நகரத்து இளைஞர்கள் பில்கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் போன்று ஆக முடியுமா என கனவு காணுகிறார்கள். இந்த பிரமிப்பும், வியப்பும், கனவும் நிஜம் ஆகாது என்று எப்படிச் சொல்ல முடியும்..? எந்த விதைக்குள் எந்த விருட்சம் என்று எவர் கணிக்க முடியும்..?
சிந்தனைகளில் தரமும், உழைப்பில் உரமும் இருக்குமானால் யார் வேண்டுமானாலும் சூப்பர் பிசினஸ்மேன் ஆகலாம், ஜெயிக்கலாம். இதற்கு முதலில், என்னிடம் பிசினஸ்மேன் ஆகக்கூடிய முழுத் திறனும், தகுதியும் இருக்கிறது என நம்பவேண்டும். அடுத்தது, பிசினஸில் ஜெயிக்க வைக்கும் அத்தனை வித்தைகளையும், சூட்சுமங்களையும் அறிந்து கொள்ள மனக் கண்களை எப்போதும் திறந்தே வைத்திருக்க வேண்டும்.
‘‘படித்தப் படிப்புக்கான வேலை கிடைக்கவில்லை. உழைப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லை; திறமையும் அறிவும் வீணாகிக் கொண்டிருக்கிறது. வயதும் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே செய்யவில்லையே’’ என இன்றைய இளைஞர்கள் நான்கு பேர் கூடினாலே இந்தப் பேச்சுக்கள்தான் அதிகமாக இருக்கும். இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து பெரிதும் கவலைப்படுகின்றனர். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சொந்தமாகத் தொழில் தொடங்குவது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அது உண்மையும்கூட.
ஏன் தொழில் தொடங்க வேண்டும்?
‘ரிச் டாட்... புவர் டாட்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிசினஸ் தொடர்பான புத்தகங்களை எழுதியவர் ராபர்ட் கியாஸ்கி. இவர் இந்த 21-ம் நூற்றாண்டு தொழில்முனைவோர்களுக்கானது என்று குறிப்பிட்டு, அதற்கு ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார். காரணம், இந்த நூற்றாண்டு மனிதர் களில் சொந்தமாகத் தொழில் செய்பவர்களைத் தவிர, பிறர் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்வதில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன.
மிகவும் பரபரப்பாக மாறிவிட்ட இந்த வாழ்க்கை முறை நம்முடைய எதிர்காலத்தை ஒரு நிலையற்ற தன்மைக்குள் வைத்திருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை நிரந்தரமில்லை. நாம் வாங்கும் சம்பளம் நிரந்தரமில்லை. எனவேதான், இன்றைய தலைமுறையினர் அனைவரும் சொந்த மாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அரசு வேலைக்குப் போக வேண்டும் என்பதே எல்லோரது குறிக்கோளாகவும் இருந்தது. ஆனால், இப்போது யாரைக் கேட்டாலும் பிசினஸ் தொடங்க வேண்டும் என்பதே பதிலாக இருக்கிறது.
தொழில் தொடங்கினால், சுதந்திரமாகச் செயல்பட முடியும். நம்முடைய திறமைகளைப் பிறரிடம் நிரூபித்துக் காட்ட வேண்டிய தேவை இல்லை. நாமே அவற்றை நடைமுறைப்படுத்தி முயற்சி செய்து பார்க்கலாம். எல்லையில்லா வளர்ச்சியைச் சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். நம் தேவைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. நம்மை சுற்றி இருக்கும் உலகம் நம்மிடம் அதிகமாக எதிர்பார்க்கிறது. நம் தேவைகளையும், பிறரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற பிசினஸ் நமக்குப் பெரிதாக கைகொடுக்கும்.
அதுமட்டுமல்லாமல், மக்களின் தேவையும் நுகர்வுக் கலாசாரமும் வெகுவாக மாறியிருக்கிறது. இது தொழில் செய்வதற்கான பல்வேறு வாய்ப்பு களையும் இந்த மெகா சந்தையில் உருவாக்கி இருக்கிறது. அந்த வாய்ப்புகள் தொழில்முனை வோர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அடையாளம் காண்பவர்களே தொழில் முனைவோர்களாக ஆகும் பாக்கியம் பெற்றவர்கள்.
எல்லோராலும் பிசினஸ் செய்ய முடியுமா?
இன்றைய இளைஞர்களில் 35% பேர், படித்து முடித்ததும் ஏதோ ஒரு வேலைக்குப் போய் விடுகின்றனர். 35 சதவிகிதத்தினருக்கு பேர் படித்து முடித்தபிறகு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. இவர்கள் படிக்கும்போது நாம் ஏன் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், எதிர் காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவ தில்லை. இவர்கள் பின்னாட்களில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். 25 சதவிகிதத்தினர் குடும்பத் தொழில்களைப் பார்த்து கொள் கின்றனர். 5% பேர் மட்டுமே படித்து முடித்ததும், சொந்தமாகத் தொழில் செய்ய முடிவெடுக்கின்றனர்.
இதில் வேலை பார்க்கும் 35 சதவிகித இளைஞர்கள், தங்களின் 30 வயதைக் கடக்கும்போதுதான் அவர்களுக்குள்ளும் நாம் ஏன் சொந்தமாகத் தொழில் தொடங்கக் கூடாது என்ற எண்ணம் உண்டாகிறது. அவர்களிலும் சிலர்தான் தாங்கள் வேலை பார்த்த அனுபவத்தை வைத்தும், தங்களின் சுய ஆர்வத்தை வைத்தும் தொழில் தொடங்க முன்வருகிறார்கள். பலரும், செய்யும் வேலையை விட்டுவிட்டு, தொழில் தொடங்கினால் சம்பளமும் போய்விடுமே! தொழிலில் நஷ்டம் வந்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் நினைத்து, அதே வேலையில் இருந்துவிடுகிறார்கள்.
பிசினஸ் தொடங்கப் பணம் அவசியமே. கொஞ்சம் முயற்சித்தால், அதை எளிதில் தயார் செய்துவிட முடியும். தொழில் செய்யப் போகும் நபர், தன்னைத் தயார் செய்து கொள்வதில்தான் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஓர் இடத்தில் வேலை பார்ப்பதும், பிசினஸ் செய்வதும் முற்றிலும் வேறானது. அதேபோல், தொழில் தொடங்குவதற்கு படிப்பு, வயது, மொழி எல்லாம்கூட பெரிய விஷயமே அல்ல. தொழில் செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி இருந்தால், தானாகவே அதற்கான அறிவை நம்மால் எளிதில் பெற்றுவிட முடியும். நாம் தயாரிக்கிற பொருளையோ அல்லது தரும் சர்வீஸையோ மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் நமக்கு வரவே கூடாது. மக்களுக்குத் தேவையான பொருளை அல்லது சர்வீஸை அவர்கள் விரும்பும் விதத்தில் தந்தால், ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்பே இல்லை!
பெரிதாக ஆசைப்படுங்கள்!
பிசினஸ் தொடங்க முடிவு செய்தபின், என்ன பிசினஸ் செய்யப் போகிறோம், எப்படி செய்யப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும். திட்டமிட்டபடி அதனை நடைமுறைப்படுத்த என்னவெல்லாம் வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். பிசினஸ் என்பது பெட்டிக் கடை தொடங்கி நடத்துகிற மாதிரிதான் என்று நினைத்தால், தொழில் செய்யவே நினைக்காதீர்கள். பிசினஸ் என்பது பெரிய விஷயம். அதனை முறைப்படி செய்தாக வேண்டும்.
பிசினஸுக்குப் பெயர் வைப்பதிலிருந்து, அரசிடம் பதிவு செய்வது, முறையாக வரி கட்டி, படிப்படியான வளர்ச்சியை அடைந்து முன்னணி தொழிலதிபராக உயர்வதுதான் பிசினஸ். மற்றவையெல்லாம் பிசினஸ் அல்ல என்பதை முதலில் உணருங்கள். இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை விரும்பும் அணுகுமுறைதான் புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் பிசினஸ்மேன்களிடம் இருக்க வேண்டும்.
பிசினஸ் செய்ய மனதளவில் தயாராகிவிட்டீர்கள் என்றால், வெற்றிகரமாக நீங்கள் முதல்படியைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். அடுத்து...?
அதைப் பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.
(ஜெயிக்கலாம்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளரைப் பற்றி...
கே.எஸ் கமாலுதீன். ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர். பிசினஸ் செய்வதிலும், சர்வதேச அளவில் ஏற்றுமதி தொழில் செய்வதிலும் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமுள்ளவர். நட்சத்திர ஏற்றுமதியாளர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்டவர். இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறு, குறு தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் போன்றவற்றில் தொழில்முனைவோர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறார். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு பிசினஸ் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
Post a Comment