வாசகிகள் கைமணம்! - வடை... அடை... குருமா... ஆஹா அசத்தல் ரெசிப்பி!
காளான் குருமா தேவையானவை: காளான் - 200 கிராம், பெரிய வெங்காயம், தக்காள...

தேவையானவை: காளான் - 200 கிராம், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (பெரியது), பச்சை மிளகாய் - 3 (கீறவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். காளானைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், பச்சை மிளகாய் தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் காளான் சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடிபோட்டு வேகவிடவும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முத்து அடை
தேவையானவை: சின்ன ஜவ்வரிசி - அரை கப், பாசிப்பருப்பு - கால் கப், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, அரிசி மாவு - 5 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சின்ன ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து, இதனுடன் அரிசி மாவு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர் விட்டு சற்றே கெட்டியாகப் பிசைந்து அடையாகத் தட்டவும். தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு, தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேகவிடவும். அழகிய, சுவையான முத்து அடை ரெடி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சோள வடை
தேவையானவை: வெள்ளை சோளம் - ஒரு கப், சோயா சங்ஸ் (மீல் மேக்கர்) - ஒரு கைப்பிடி அளவு, உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது - வேகவைத்து மசித்துக்கொள்ளவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் (விருப்பப் பட்டால்) - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளத்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து வைக்கவும். மீல் மேக்கரை சுடுநீரில் 3-4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும். சோளம், மீல் மேக்கர் இரண்டையும் தனித்தனியே நீர்விடாமல் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த சோளம், மீல் மேக்கர், மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் (விருப்பப்பட்டால்) சேர்த்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எக்ஸ்பெர்ட் கமெண்ட்ஸ்:
காளான் குருமா:
வெங்காயம், தக்காளியை வதக்கியப்பின் அரைத்துக் குழம்பில் சேர்த்தால் சுவை கூடும்.
சோள வடை:
வெங்காயத்துக்குப் பதிலாக முட்டைக்கோஸைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தும் செய்யலாம்.
முத்து அடை:
அரிசி மாவு இல்லாவிட்டால் அதற்குப் பதிலாக சோள மாவு சேர்த்தும் செய்யலாம்.
Post a Comment