வாழ்வின் அற்புதத்தை அழகாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா! - ஹெல்த்தி வெயிட் லாஸ் டைரி!
அப்போ 90 இப்போ 60 லைக்ஸ் அள்ளும் ஐஸ்வர்யா - ஹெல்த்தி வெயிட் லாஸ் டைரி “90 கிலோ உடல் எடை; அவ்வளவு வசீ...

“நான் ஃபிட்னெஸுக்கு அதிகம் மெனக்கெட்டது இல்லை. சிறுவயதில் இருந்தே கொஞ்சம் பப்ளியா இருந்தாலும் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருந்தது.
கல்லூரியில் இளங்கலை தேர்வு முடிந்த உடன் எனக்குக் கல்யாணம். அதற்குப் பிறகுதான் முதுகலை படித்தேன். அப்போதான் தூர்தர்ஷன்ல இன்டர்ன்ஷிப் செய்தேன். பிறகு, தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் வேலை கிடைத்தது. நல்லபடியாப் போயிட்டிருந்தது வாழ்க்கை.
திடீரென ஒருநாள் கார் விபத்தில் சிக்கினேன். இடது காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. ஏற்கெனவே ஃபிளாட் ஃபூட் (தட்டையான பாதங்கள்) இருந்ததால் கொஞ்சம் எடை கூடினாலே கால் வலிக்கத் தொடங்கிவிடும். சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனத் தெரியவந்தது.
கர்ப்பமாக இருக்கும்போது, உடலுக்குள் ஏற்படும் மாற்றம், ஹார்மோன் மாற்றம், வேலைப் பளு, வலிக்காக எடுத்துக்கொண்ட மருந்துகள் எல்லாம் சேர்ந்து, என்னுடைய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. உடல் எடை தடதடவென அதிகரித்துவிட்டது.
இதற்கிடையே, நல்லபடியாக சுகப்பிரசவமாக ‘சாய் மிருதுளா’ பிறந்தாள். சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. மீண்டும் வேலைக்குச் செல்லமுயற்சி செய்தேன்.
பொதுவாக, டி.வி சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருப்பவர், அழகாக வசீகரமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வு செய்வார்கள். அதுவும், திருமணம் ஆன பெண் என்றால் வேலைக்கு எடுக்கவே யோசிப்பார்கள். எனக்கு கல்யாணம் ஆகி, குழந்தை இருப்பது வேலை கிடைப்பதில் பெரிய தடையாகவே இருந்தது. ஆனால், நான் ஒரு அம்மா. அதே தாய்மை உணர்வோடு, நான் மீடியா துறையில் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். என் குழந்தை பெரியவளாக வளர்வதற்கு முன்பே, நான் ஒரு நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
அதனால், நிகழ்ச்சி தொகுப்பாளராக கடினமாக உழைத்து, நிகழ்ச்சியை வடிவமைத்தேன். முன்னணி சேனல்களில் ‘இவ்வளவு குண்டாக இருக்கும் ஒரு பெண்ணை வைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது. உங்களது கிரியேட்டிவ் கான்செப்ட்களைக் கொடுங்கள், வேறு ஒரு தொகுப்பாளினியை வைத்து நிகழ்ச்சியை நடத்தலாம்’ என்றனர். எனக்கு அதில் சம்மதம் இல்லை.
அறுவைசிகிச்சை முடிந்த பின், ‘குழந்தைத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்’ என்று டாக்டரிடம் சொல்ல, ‘நீ முதலில் சாப்பிடு அப்புறம் வீட்டுக்குப் போகலாம்’ என்றார். மடமடவென இட்லியை மென்று விழுங்க, வலி பின்னி எடுத்தது. எனினும், மறுநாள்தான் என்னை டிஸ்சார்ஜ் செய்தனர்.
நாட்கள் கடந்தும், என் கழுத்தில் செய்த ஸ்டிச்சிங் ஆறவே இல்லை. அது தொற்றாக மாறி வேதனையும் வலியும் அதிகமானது. முன்நெற்றியில் அதிக முடி கொட்டியது. உடல் முழுதும் தடிப்புகள். கால்சியம் சத்துக் குறைவாக இருந்ததால், பல் வலி அதிகமானது. சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை, முதுகு வலி, மூட்டு விலகியதால் முட்டி வலி என எல்லாம் சேர்த்து ஒரே நேரத்தில் என்னைப் பாடாய்ப்படுத்தின. 27 வயதிலேயே என் கேரியர் முடிந்துவிடுமோ எனப் பயந்தேன். ‘இல்லை, இதிலிருந்து வெளியே வர வேண்டும்’ என முடிவு செய்து, முதலில் சித்த மருத்துவரை அணுகி, கழுத்துப் புண் ஆற சிகிச்சை செய்தேன்.
பிசியோதெரப்பிஸ்ட்டிடம் சென்று, ‘எனக்கு சர்ஜரி இல்லாமல் சிகிச்சை சொல்லுங்க’ என்றேன். ‘இப்போதுதான் அறுவைசிகிச்சை நடந்திருக்கு, முதுகு வலி, தசைநார் கிழிவுப் பிரச்னை எல்லாம் இருக்கு. இப்ப உடல் எடை குறைக்க நீங்க பயிற்சி எடுப்பது ரிஸ்க்’ என்றார். எப்படியாவது எடை குறைப்பதில் தீவிரமாக இருந்ததால், ‘காலையும் மாலையும் நடங்க, ஜி.எம் டயட் பின்பற்றுங்க’ என்றார்.
டயட் மற்றும் தீவிரமான நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். டயடின்போது, எந்த உணவைச் சாப்பிட வேண்டாம் எனச் சொல்கிறார்களோ, அதைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே அதிகமாகத் தோன்றும். உணவைச் சாப்பிடுவதற்கான தூண்டுதல் முதல் நாளில் அதிகமாக இருந்தது. அடுத்த நாளில் இருந்து மனதளவில் தயாராகத் தொடங்கினேன். ‘உடல் எடையைக் குறைத்த பிறகு, ஆரோக்கியமும் நிம்மதியும் நமக்குத்தானே என்று பாசிட்டிவ் எண்ணங்களை விதைத்துக்கொண்டேன்.
இந்த டயட்டைத் தொடங்கும்போது சட்சட்டென கோபம், எரிச்சல் போன்ற ‘மூட் ஸ்விங்ஸ்’ அதிகமாக இருந்தது. முதல் நாள் மிகவும் மனச்சோர்வுடன் இருந்தேன். புதிதாக டயட் என்பது மிகவும் கஷ்டம். பசி எடுப்பதுபோல இருக்கும், எவ்வளவு சாப்பிட்டாலும் பசி தீராது. டயட்டை விட்டுவிடலாமா என்ற எண்ணமும் தோன்றியது. ‘உடல் எடை குறைய வேண்டும்’ என மீண்டும் மீண்டும் எனக்குள்ளே சொல்லி, இந்த கஷ்டமான உணர்வுகளைப் போக்கிக்கொண்டேன்.
10 நாட்கள் இந்த டயட்டைப் பின்பற்றி, ஐந்து கிலோ எடையைக் குறைத்தேன். பின் சாதாரணமாக வீட்டில் சாப்பிடக்கூடிய உணவையே சாப்பிட்டேன். காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் என நடந்து, ஜி.எம் டயட் பின்பற்றி, நான்கே மாதங்களில் 30 கிலோ வரை எடை குறைத்தேன். டபுள் எக்ஸல் அளவில் இருந்து ஸ்மால் சைஸுக்கு வந்தேன். 90 கிலோவிலிருந்து 60 கிலோ ஆனேன். கால்சியம் மாத்திரைகள் உட்கொண்டு, எலும்புகளை வலிமையாக்கினேன். தொடக்கத்தில் இருந்த கால்வலி, முதுகு வலி எல்லாம் கொஞ்ச கொஞ்சமாகக் குறைந்தன.
நான் அனுபவித்த இந்த வலி நிறைந்த பயணம், எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்துப் பக்குவப்படுத்தியது. இதுவே, எனக்கு அதிகத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. மீடியாவில் என்னால் பிரமாதமாக வேலைசெய்ய முடியும் என்பதை உணர்கிறேன். எனக்குள் இருந்த என்னை நான் கண்டுபிடித்துவிட்டேன்!”
வாழ்வின் அற்புதத்தை அழகாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா!
ஐஸ்வர்யாவின் 10 நாள் ஜி.எம் டயட் சார்ட்
தர்பூசணியை மட்டும்தான் மூன்று வேளையும் சாப்பிட்டேன்.
காலை மட்டும் ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டேன். மதியம், இரவு வேளையில் உருளைக்கிழங்கைத் தவிர பல வகையான காய்கறிகளை சாலட் செய்தும் வேகவைத்தும் எடுத்துக்கொண்டேன்.
மூன்று வேளையும் உருளைக்கிழங்கைத் தவிர்த்து வேகவைத்த காய்கறிகள், காய்கறி சாலட் மற்றும் வாழைப்பழத்தைத் தவிர்த்து, மற்ற பழங்களை எடுத்துக்கொண்டேன்.
மூன்று வேளையும் வாழைப்பழம் மற்றும் பால். அன்றைக்கு மட்டும் எட்டு வாழைப்பழம் சாப்பிட்டேன். மூன்று கிளாஸ் பால் குடித்தேன்.
பனீர் அல்லது டோஃபு தக்காளி சேர்த்துச் சாப்பிட்டேன்.
கிரில்டு காய்கறிகள், கிரில்டு பனீர், கிரில்டு டோஃபு சாப்பிட்டேன்.
கொஞ்சமாக பிரவுன் அரிசி சாதம், பிரவுன் பிரெட், பழச் சாறுகள், பிடித்தமான காய்கறிகளைச் சாப்பிட்டேன்.
Post a Comment