வாதத்துக்கு மருந்து உண்டு; பிடிவாதத்துக்கு….?!
தன்னம்பிக்கையுடன் வாழ உடல் ஆரோக்கியமாய் இருப்பதுடன் நல்ல குணங்களும் அவசியம் தேவைப்படுகிறது.
மிகுந்த தன்னம்பிக்கையுடன் திட்டமெல்லாம் தீட்டி,
ஏற்பாடுகள் செய்து, செயல்படச் செல்லும்போது அவரிட் ஒருவர் “நீ வெட்டி
முறித்த மாதிரி தான்” என எதிர்மறையாக கூறிவிட்டால், அச் சொற்கள் அவரது
தன்னம்பிக்கையையே அசைந்துவிடும்.
வாதம் என்பது நம் உடலில் ஓடும் மூன்று பூதங்களில்
ஒன்றான காற்றைக் குறிக்கும் சொல். மற்ற இரண்டு நீரும் வெப்பமும், காற்று
இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. அத்தகைய அத்தியாவசியச்
சிறப்புடையது காற்று. பிடிவாதம் என்ற சொல்லையே இங்கு வாதம் எனக்
குறிப்பிடுகிறோம். பெரும்பாலோனோருக்கு வாயுத்தொல்லை இருக்கும். அதனால்
மிகவும் சிரமப்பட்டு வருவர். அதேபோல்தான் பிடிவாதம் என்ற குணமும்
வாழ்க்கையில் பல சிக்கல்களை உண்டாக்கும்.
பிடிவாதம்
மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் தனது கருத்தே
சரியென வலியுறுத்தி, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற
மனநிலைதான் பிடிவாதம். முதுமொழி ஒன்று உண்டு. “வாதத்துக்கு மருந்து உண்டு;
பிடிவாத்த்துக்கு மருந்து இல்லை” என்று, “பிடித்த முயலுக்கு மூன்றே கால்”
என்று மொழியையும் பிடிவாதம் தொடர்பாய் கிராமப்புறங்களில் கூறுவர். தனது
எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றையுமே எவ்வித மாற்றுக் கருத்தும் கூறாமல்
மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்டாயப்ப படுத்துவர். இதற்கு அவர்களது
சிறு வயது முதலேயான பழக்கம், குடும்பத்தில் அவரது வருமானம் ஆகியவை
காரணமாகும். சில சமயங்களில் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி நிலையை
அடையலாம். ஆனால், சுற்றியிருப்பவர்கள் மத்தியில் இவருக்கு கெட்ட பெயர்
உண்டாகும். இருந்தாலும் தனது தவறை ஏற்காமல், தன் செயலுக்கு நியாயமான
காரணங்களைத் தேடிக் கூறுவர்.
வாதம்
கலந்துரையாடலில் ஒரு வகை விவாதம். தனது கருத்தை
வலியுறுத்திக் கூறுவதே விவாதம். அது உண்மையாகவும் இருக்கலாம்; வேறானதாகவும்
இருக்கலாம். இதனை “சொற்போர்” என்றும், DEBATE என்றும் கூறுவர்.
பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங்களில் இவ்வகையான சொற்போரைக் கேட்கிறோம்.
தமது கருத்தை வலியுறுத்தி பேசும் அணியினர் மாற்றணியினரைத் தாக்கி
அனல்தெளிக்கப் பேசுவர். இறுதியில் நண்பர்களாய் உரையாடிச் செல்வர்.
ஆனால், நடைமுறை வாழ்க்கையில் விளைவு வேறாக இருக்கிறது.
ஒருவர் தவறான ஒரு செய்தியைத் தெரிவிக்கும் போது, நமக்கு அது தவறு எனத்
தெரிந்து சரியானது இது எனக் கூறினால், அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் தான்
கூறுவது சரியெனத்திரும்பக் கூறுவர். ஒரு வழியாக கடைசியில் பல உதாரணங்களுடன்
எடுத்துக் கூறி எல்லோரையும் ஒப்புக்கொள்ளச் செய்து விடலாம். ஆனால், இந்த
விவாத்தத்தின் மூலம் தனி நபருடனான நட்புக்கு பின்னடைவு உண்டாகிவிடும்.
விதண்டாவாதம்
பேச்சு வழக்கில் ஒரு சிலரைக் கூறுவோம். “சரியான
விதாண்டாவாதம்” என்று. பிடிவாதம் என்பது வேறு; விவாதம் என்பது வேறு.
இரண்டுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றே ஆனாலும். பிடிவாதம் நெருங்கியவர்கள்
மத்தியில்தான் செல்லுபடியாகும். விவாதம் என்பது பேச்சுத்திறனை வைத்து,
பொருள் ஞானத்தை வைத்து எங்கும் செல்லுபடியாகும். நியாயத்தை ஏற்றுக்கொள்ள
மறுத்து தனது நிலையிலேயே இருந்து பேசுவதை விதண்டாவாதம் என்று கூறுகிறோம்.
மொழியும் பேச்சும்
தங்கள் கருத்தை, எண்ணத்தை வெளிப்படுத்தும் வழிதான்
மொழி. முதலில் உடல் உறுப்புகளின் அசைவைக் கொண்டு (Body Language) தங்கள்
கருத்தை வெளியிட்ட மக்கள், மொழியைப் பயன்படுத்த ஆரம்பித்த பின், சிந்திக்க
ஆரம்பித்தார்கள். சிந்தனையின் வெளிப்பாடுதான் பேச்சாக வெளி வந்தது. தனது
கருத்தைத் தெளிவாக, மற்றவர்கள் புரிந்து கொள்ளுமாறு கூறுவதே சிறந்த
பேச்சு. அதேபோல் மற்றவர்கள் கூறுவதைச் சரியாகக் கவனித்து, உரிய பதில் கூற
வேண்டும். ஆனால் பிடிவாதக்காரர்கட்கு மற்றவர்களது பேச்சைப் பற்றிய கவலையே
கிடையாது. தான் சொல்வதே சரியெனக் கூறுவர். விவாதத்தில் நிலைமை வேறு. பிறர்
என்ன சொன்னார்களோ, அதை ஆதாரத்துடன் மறுத்துப்பேச வேண்டும். இரண்டுக்குமே
அடிப்படை பேச்சாக இருந்தாலும், பிடிவாதத்தில் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரம்
தலைதூக்கி, “இப்படித்தான்” என முடித்துவிடுவர். விவாதங்களில் தங்கள்
புலமையை, ஞானத்தை வெளிக்காட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
தன்னம்பிக்கைக்கு பாதிப்பு
பிடிவாதமும் , விவாதமும் தன்னம்பிக்கையை எவ்வகையில்
பாதிக்கிறது? அடிப்படையில் பிடிவாத குணம் உள்ளவர்கள் தைரியசாலிகள் அல்லர்.
வறட்டு கௌரவம் பார்ப்பவ்கள் எளிதில் கற்பனையாக எதையாவது நினைத்து
வருத்தப்படுவார்கள். தன்னால் இது முடியாது என்ற தன்னம்பிக்கையின்மையை
மறைப்பதற்காகவே ‘பிடிவாதம்’ என்ற வேடத்தை போட்டுக் கொண்டவர்கள். இவரால்
தனித்து எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாததால்தான், பிறரது துணையை
ஆதரவைத் தனது பிடிவாதத்தால் பெற முயற்சிக்கிறார்.
விவாதங்களில் கலந்து கொள்வோர் ஒரு பொருள்
தொடர்பாகப் பல விபரங்களைச் சேகரிக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தனது
கருத்தை மாற்றிக் கொள்ளாமல் உரிய ஆதாரங்களுடன் பேச வேண்டும். இம் மாதிரி
பேசும் போது எதிரில் இருப்பவரை வெற்றி கொள்ளலாம். ஆனால் இருவருக்கும்
இடையிலான நட்புக்கு கேடு உண்டாகும்.
நடைமுறை
பொதுவாக நமது வீடுகளில், பணி புரியும்
அலுவலகங்களில், அல்லது நண்பர்களுடன் உரையாடும்போது இது போன்ற விவாதங்கள்
நடைபெறுகின்றன. குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்துக்கு அதிக அளவு பொருள்
தருபவர் அல்லது அந்தக் குடும்பத்தில் மிக அதிகமாகப் படித்தவர் என்ற
நிலையில் நல்ல கருத்துக்களைப் பிடிவாதமாய் கூறுவதை விட, எல்லோருடைய
கருத்தையும் கேட்ட பின் தனது கருத்தைக் கூறினால் ஏற்றுக்கொள்வார்கள்.
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள்
அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.
அவர்கள் சிறியவர்களானாலும், கல்வியறிவு இல்லாதவர்களாயிருந்தாலும்,
அவர்கட்கும் திறமைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களது கருத்தையும்
கேட்டு ஆலோசிக்க வேண்டும். நான்தான் இங்கு எல்லாமே என்ற தன் முனைப்பை விட
வேண்டும்.பிறரது கருத்துக்கள் தவறு என்றால் விளக்கமாக அவர்களிடம் எடுத்துக்
கூறும் பொறுமை வேண்டும். நல்ல கருத்துக்களைக் கூறுவோர்க்கு பரிசுகள்
வழங்கி உற்சாகப்படுத்தலாம்.
அதேபோல விவாதங்கள் என்று எடுத்துக்கொண்டால், யாருடன்
என்பதை முதலில் அறிய வேண்டும். ஒது நிகழ்ச்சியெனில் ஆணித்தரமாய் பேசத்
தயார் செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் என்றால், பிறர் கூறும் ஏற்க
முடிந்த கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவமும், தவறென்றால் அவர் மனம்
புண்படாமல் தவறு எனக்கூறும் சாந்த நிலையும் பெறவேண்டும்.
பொதுவாகவே தனியே தவறை ஒப்புக்கொள்ளும் நாம், பிறர்
முன்னிலையில் அது சரியென்றே கூறுவோம். இம்மாதிரி சிக்கலான சூழ்நிலைகளை
முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். பல புத்தகங்கள் படிக்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்தால் பிடிவாதமும், விவாதமும் நமக்கு தன்னம்பிக்கையை
குறைக்காது. ஏனெனில் நாம் பிடிவாதத்தை விட்டு விடுவோம். பிறரது உணர்வுகட்கு
மதிப்பு தருவோம். அதனால் நமது தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுடைய
தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க வளமுடன்!
– பன்னீர் செல்வம் ச. ம, source: தன்னம்பிக்கை.நெட்
Post a Comment