தாய்மையே அழகு!
தாய்ப்பால் சந்தேகமும் தீர்வும்
‘தாய்ப்பால்’
மனிதர் உணரும் முதல் பசியின் உணவு. முதல் ருசியும் அதுதான். குழந்தை
முதன்முதலில் தனக்கான ஒரு உறவைத் தேடி, உறுதி செய்வது தாய்ப்பாலை அருந்தும்
போதுதான். பாதுகாப்பான உணர்வு, அரவணைப்பு, அன்பு, கருணை போன்ற
பண்புகளையும், தாயின் கதகதப்பிலிருந்து குழந்தை உணரத் தொடங்கும்.
இயற்கையின் படைப்பாகச் சுரக்கும் தாய்ப்பாலில் சத்துக்களோடு, அன்பும்
கலந்து ஊட்டப்படுகிறது. முதன்முறையாக ஒரு தாய் தன்னை முழுமையாக உணரும்
தருணம், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தை பசியாறும்
நிமிடம்தான். குழந்தை பெற்ற வலியை மறந்து, குழந்தையின் பசியைப் போக்கும்
ஒவ்வொரு தாயும் தாய்மையின் சிறந்த உதாரணமே. பேறுகால விடுமுறை முடிந்துகூட
தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் சில பெண்களுக்கு தாய்ப்பாலை
சேகரித்துவைக்கும் சில பிரத்யேக பொருட்கள் வந்துவிட்டன. இந்தக்
கண்டுபிடிப்புகள் ஒருவகையில் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவது
தாய்ப்பால். “பிறந்த ஓர் ஆண்டு வரை குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பால்
புகட்ட வேண்டும். அதிலும், முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே
புகட்ட வேண்டும்” என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். இது
குழந்தையின் உரிமையும்கூட. ஒவ்வொரு ஆண்டும் தாய்ப்பாலின் அவசியம் மற்றும்
முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளும் நோக்கில், ஆகஸ்ட் முதல்
வாரம் உலகத் தாய்ப்பால் விழிப்புஉணர்வு வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த
ஆண்டு, வேலை செய்யும் இடத்திலேயே, குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும்
உரிமை வேண்டும் எனும் மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு
கொண்டாடப்படுகிறது.
இன்று உலக அளவில், 38 சதவிகிதக் குழந்தைகளுக்கு மட்டும்தான் முதல் ஆறு
மாதங்களுக்குத் தாய்ப்பால் முழுமையாகப் புகட்டப்படுகிறது என்கிறது உலக
சுகாதார நிறுவனம். இதை, 2025-ம் ஆண்டுக்குள் 50 சதவிகிதமாக உயர்த்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எளிதில் கிடைக்கக்கூடிய, செரிக்கக்கூடிய உணவாக தாய்ப்பால் இருக்கிறது.
தாய்ப்பாலில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை
ஊட்டச்சத்துக்களும் நிறைவாக உள்ளன. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு
சக்தி மண்டலம் வளர்ச்சி அடைந்திருக்காது. அதனால், தாய்ப்பாலே குழந்தைக்கு
நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.
குழந்தை பிறந்ததும் முதலில் சுரக்கும் வெளிர் மஞ்சள் (பழுப்பு) நிறப்
பாலுக்கு கொலஸ்ட்ரம் (Colostrum) என்று பெயர். அதிக ஊட்டச்சத்து, நோய்
எதிர்ப்பு சக்தி கொண்டதால், கட்டாயம் இதைக் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.
தாய்ப்பாலில் இம்யூனோ குளோபுளின் (Immunoglobulin) என்ற நோய் எதிர்ப்பு
சக்தி உள்ளது. முதல் 10 நாட்களுக்கு இதன் அளவும் அதிகமாக இருக்கும்.
பிறந்த மூன்று மாதங்களில், குழந்தையின் எடையை இரண்டு மடங்கு அதிகரிக்க,
தாய்ப்பாலால் மட்டும்தான் முடியும். குழந்தையின் ஒரு வயது வரை தந்தால்,
அதன் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமானதாக அமையும்.
குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் நீர்ச்சத்து
குறைந்துவிடும். அந்தக் குழந்தைகளுக்கு இன்னும் அதிக அளவில் தாய்ப்பால்
புகட்ட வேண்டும். குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தாலும், தாய்ப்பால்
கொடுப்பதால் ஒன்றும் ஆகாது. குழந்தையைத் தொற்றுகளிடமிருந்தும்
நோய்களிடமிருந்தும் தாய்ப்பால் காக்கும். அம்மாவுக்கும் குழந்தைக்குமான
உறவு மேம்படும். குழந்தை, தன் தாயிடம் பால் குடிப்பதால், அம்மாவின்
அரவணைப்பும் கதகதப்பும் குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரும். குழந்தை
நிம்மதியாகத் தூங்க, உறுதுணையாக இருக்கும்.
தாய்ப்பால் கொடுப்பதில் பெண்களுக்குச் சில சந்தேகங்களும், தவறான கருத்துகளும், தேவையில்லாத பயங்களும் உள்ளன.

தாய்ப்பால்
கொடுப்பதால் அழகு போய்விடும் என்ற கருத்து தவறானது. தாயாக இருப்பதே
அழகுதான். ஒரு குழந்தையைச் சுமந்து அதற்குத் தேவையானவற்றை அளித்து, தன்
ரத்தத்தையே பாலாக மாற்றி உணவாகக் கொடுக்கும் ஆற்றல், பெண் இனத்துக்குத்தான்
உண்டு. குழந்தை வயிற்றில் இருக்கும் போது, உடல் எடை கூடியிருக்கும்.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால், எடை குறைந்து மீண்டும் பழைய
கட்டுடலைப் பெறலாம்.

தற்போது,
பாலூட்டும் தாய்மார்களுக்கு எனப் பிரத்யேக உள்ளாடைகளும், ஆடைகளும்
கிடைக்கின்றன. எளிதில் குழந்தைக்குப் பால் கொடுக்க வசதியாக, ஆடைகள்
வடிவமைக்கப்படுகின்றன. இவற்றை அணிவதால் மார்பகங்கள் தளர்வாவது பெருமளவு
தடுக்கப்படும்.

தாய்ப்பாலிலேயே
அதிக அளவு நீர்சத்துக்கள் உள்ளன. எனவே, தனியாக நீர் தரத் தேவை இல்லை.
குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை, தாயிடமிருந்து கிடைக்கும் பாலே
குழந்தைக்குப் போதுமானது. வேறு எந்த உணவும் வேண்டாம் என உலக சுகாதார
நிறுவனம் சொல்கிறது.

குழந்தை
பிறந்த முதல் இரண்டு வயது வரை, தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குறைந்தது
ஒரு வருட காலம் கொடுப்பது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நல்லது. தற்போது,
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, மகப்பேறு விடுமுறைகள் மூன்று மாதங்களே
கொடுக்கப்படுவதால், ஆறு மாதங்கள்கூட தாய்ப்பால் கொடுப்பது இல்லை.
குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதற்காக குறைந்தது ஆறு மாதங்கள்
சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றனர்.

குழந்தைக்கு
மூன்று மாதங்கள் முடிந்துவிட்டதே, இனி குழந்தைக்குக் கஞ்சி கொடுக்கலாமே
எனச் சிலர் குழந்தைக்கு இணை உணவைத் தருகின்றனர். இதுவும் தவறு. குழந்தை
வளர்கிறதே, பசிக்குத் தேவையான பாலைத் தர வேண்டுமே எனும் எண்ணம் மட்டும்
போதும். குழந்தைக்குத் தேவையான பால் சுரந்துகொண்டே இருக்கும். மனரீதியான
எண்ணங்களே உடல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும். இதைத்தான் குழந்தை
அழுதால், பால் சுரக்கும் என்பார்கள்.

குழந்தை
அழுவதைப் பொருத்து, பசியின் தேவையை அறிந்து கொள்ளலாம். இரண்டு முதல்
மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பால் கொடுக்கலாம். அதுவும், 25 நிமிடங்கள்
வரை ஒவ்வொரு முறையும் பொறுமையாகப் பால் கொடுப்பது நல்லது. நீண்ட நேரமாகப்
பால் கொடுக்கும்போது, குழந்தையின் பசி தீர்ந்து, நன்கு தூங்கத்தொடங்கும்.
குழந்தைத் தூங்கும்போது, அதன் வளர்ச்சி நல்லபடியாக நடக்கும்.
தாய்ப்பாலை சேகரிக்கலாம்
ஆறு மாதக் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல்
வரலாம். வேலைக்குப் போகும் பெண்கள், தாய்ப்பாலை, பாட்டிலில் சேகரித்து
ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பாலை, குழந்தைக்குக் கொடுப்பதற்கு இரண்டு மணி
நேரத்துக்கு முன், பால் சேகரித்த பாட்டிலை ஒடும் தண்ணீரில் (Running tap
water) காண்பித்து, குளிர்ச்சியைப் போக்க வேண்டும். ஃப்ரீசரிலிருந்து
எடுக்கப்பட்ட தாய்ப்பாலை, சூடு செய்வதோ மீண்டும் குளுமைப்படுத்துவதோ
கூடாது. ஒருமுறை சேகரித்துவைத்த பாட்டிலைத் திறந்து, குழந்தைக்குக்
கொடுத்துவிட்டால், மீண்டும் மூடி ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.
நிறைய பாட்டில்கள் வாங்கிவைத்து, அதில், ஒருவேளை குழந்தைக்குத்
தேவைப்படுகிற பாலை மட்டும் சேமிக்கலாம். இப்படிச் சேமிக்கும் பாலை,
ஒன்றிரண்டு வாரம் வரை ஃப்ரீசரில்வைத்துப் பயன்படுத்தலாம்.
Post a Comment