பழைய கார் வாங்குவது லாபமா? எதை வாங்கலாம்? என்ன கவனிக்க வேண்டும்? உபயோகமான தகவல்கள்!!

பழைய கார் வாங்குவது லாபமா? எதை வாங்கலாம்? என்ன கவனிக்க வேண்டும்? யூஸ் பண்ணலாமா? ந கர எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகும் நிலைய...

பழைய கார் வாங்குவது லாபமா?
எதை வாங்கலாம்?
என்ன கவனிக்க வேண்டும்?
யூஸ் பண்ணலாமா?
கர எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், இப்போது கார் என்பது மிகவும் அத்தியாவசியம். புது கார் வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை; காசு இருந்தாலும் பலருக்கு சின்ன கார் வாங்கப் பிடிக்கவில்லை. அதனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஸ்டைலான, அதே சமயம் அதிக வசதிகள்கொண்ட பெரிய கார் வாங்கும் எண்ணம் பரவ ஆரம்பித்திருப்பதுதான், இப்போது யூஸ்டு கார் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. யூஸ்டு கார் வாங்க வேண்டும் என்றால், எங்கே வாங்குவது? யாரை நம்புவது? கார் வாங்கும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? எந்த கார்களை எல்லாம் நம்பி வாங்கலாம்? எந்த கார்களை எல்லாம் தவிர்க்க வேண்டும்? ஏற்கெனவே பயன்படுத்திவரும் பழைய காரை எங்கே, எப்படி, யாரிடம் விற்கலாம்? வாருங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை தேடுவோம்!
 ஏன் பழைய காரை வாங்க வேண்டும்?
 1.5 லட்சம் ரூபாய்க்கு ஆல்ட்டோ வாங்கலாம் என முடிவு செய்துவிட்டு, பழைய கார் ஷோரூம் போனதும் மூன்று லட்சம் ரூபாய்க்கு ஸ்கோடா ஆக்டேவியா காரையே வாங்கலாம் என்று ஆசை கிளம்பும்.
பழைய கார் மார்க்கெட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவந்த கார் தயாரிப்பு நிறுவனங்களே இப்போது, தங்கள் ஷோரூம்களுக்குள்ளேயே யூஸ்டு கார் விற்பனையையும் துவக்கிவிட்டன. பழைய கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருவதுதான் இதற்குக் காரணம். 2017-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பழைய கார் மார்க்கெட் 16 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்கிறார்கள் மார்க்கெட் நிபுணர்கள்.
பழைய காரை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான பதில், புது கார் வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை என்பது மட்டும் அல்ல. அதாவது, நீங்கள் புதிதாக ஒரு காரை வாங்கினால், அதன் மதிப்பு முதல் இரண்டு ஆண்டுகளில்தான் அதிகமாகக் குறையும். உதாரணத்துக்கு, நீங்கள் கடந்த ஆண்டு ஃபோர்டு ஃபிகோ டீசல் ணிஙீ மாடலை 6.42 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பீர்கள். ஆனால், அதே மாடல் இப்போது வெறும் 5 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகும். அதாவது, முதல் ஆண்டு காரின் ஒரிஜினல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறையும். இரண்டாவது ஆண்டு, காரின் மதிப்பில் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் குறைந்துவிடும். மூன்று ஆண்டுகள் பழைய கார் என்றால், அதன் ஆரம்ப விலையில் இருந்து 45 சதவிகிதம் குறைந்துவிடும். நான்கு லட்சம் ரூபாய்க்கு புதிதாக ஹூண்டாய் இயான் வாங்குவதைவிட, அதே விலைக்கு நான்கு ஆண்டுகள் பழைய ஹோண்டா சிட்டி வாங்கலாம் என்பதுதான் லாஜிக்.
அதேபோல், நீங்கள் நான்கு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய ஹோண்டா சிட்டி நல்ல கண்டிஷனில் இருந்தால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விற்கும்போது, எப்படியும் இரண்டு லட்சம் ரூபாய் வரை விலை போகும். ஆனால், புதிய கார் வாங்குவதைவிட பழைய காரை வாங்குவது என்பது மிகவும் சவாலான விஷயம்.
இங்கே உங்களைச் சபலப்படுத்த பல காரணிகள் உண்டு. உங்கள் மனதில் 1.5 லட்சம் ரூபாய்க்கு ஆல்ட்டோ வாங்கலாம் என முடிவு செய்திருப்பீர்கள். ஆனால், பழைய கார் ஷோரூம் போனதும் மூன்று லட்சம் ரூபாய்க்கு ஸ்கோடா ஆக்டேவியா காரையே வாங்கலாம் போலிருக்கிறதே என்று ஆசை கிளம்பும். பட்ஜெட்டை முடிவு செய்யாமல், காரின் அழகைப் பார்த்து வாங்கிவிட்டு, பிறகு பராமரிப்பு, மைலேஜ் என பட்ஜெட்டில் பஞ்சர் ஆனவர்கள் அதிகம்.
ஆனால், கொஞ்சம் பொறுமையுடன் தேடினால், பழைய கார் சந்தையில் உங்கள் மனம் விரும்பும் காரை, மிகக் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.‑
பட்ஜெட் முக்கியம்!
நான்கு, ஐந்து ஆண்டுகள் பழைய கார் என்றால், அதை முழுப் பணம் கொடுத்து வாங்குவதுதான் நல்லது. ஃபைனான்ஸில் வாங்கும்போது அதன் வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும்.
பழைய கார்தான் வாங்கப்போகிறேன் என்றதும், முதலில் முடிவு செய்ய வேண்டிய விஷயம், பட்ஜெட். உங்கள் பட்ஜெட்டை முடிவு செய்தபின் அதில் என்னென்ன கார்கள் எல்லாம் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதைத் தேட வேண்டும். செய்தித்தாள் மற்றும் யூஸ்டு கார் இணையதளங்களைப் பார்த்தாலே உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும். உங்கள் பட்ஜெட்டைவிட 50,000 ரூபாய் அதிகம் இருந்தாலும், அந்த கார்களையும் நீங்கள் உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். ஏன் என்றால், டீல் முடியும்போது அதை நீங்கள் 50,000 ரூபாய்க்குக் குறைத்தும் வாங்க முடியும்.
முழுத் தொகை கொடுத்து கார் வாங்க முடியாது, கடனில்தான் கார் வாங்கப்போகிறீர்கள் என்றால், வட்டி விகிதத்தில் கவனமாக இருங்கள். பெரிய கார் வாங்க வேண்டும் என்பதற்காக, அதிக விலைகொண்ட காரை கடனில் வாங்கினால், அதனால் பைசா பிரயோஜனம் இல்லை. உங்களுடைய ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் என்றால், உங்களுடைய ஆண்டுத் தவணை 2.16 லட்சம் ரூபாயைத் தாண்டாமல் இருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, நீங்கள் 2010 மாடல் ஹோண்டா சிட்டி காரை ஐந்து லட்சம் ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஃபைனான்ஸ் மூலம் வாங்கும்போது மாதத் தவணை எப்படியும் 15,000 ரூபாய் வரை வரும். ஹோண்டா சிட்டி பொதுவாக, லிட்டருக்கு 13 கி.மீ மைலேஜ் தரும். மாதத்துக்கு நீங்கள் 1,500 கி.மீ வரை பயன்படுத்துவீர்கள் என்றால், மாதத்துக்கு 8,500 ரூபாய் வரை நீங்கள் பெட்ரோல் நிரப்ப வேண்டியிருக்கும். ஹோண்டா சிட்டி அதிக செலவு வைக்காத கார் என்பதால், ஆண்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக 5,000 ரூபாய் மெயின்டனன்ஸுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக நீங்கள் நான்கு ஆண்டுகள் பழைய காருக்கு ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால், கார் வாங்கும்போது ஒட்டுமொத்தமாக எவ்வளவு செலவாகும் என்று தெளிவாகக் கணக்குப் போட்ட பின்பு காரை வாங்குவது நல்லது.
நான்கு, ஐந்து ஆண்டுகள் பழைய கார் என்றால், அதை முழுப் பணம் கொடுத்து வாங்குவதுதான் நல்லது. ஃபைனான்ஸ் மூலம் வாங்கும்போது அதன் வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும். நீங்கள் நான்கு லட்சம் ரூபாய்க்கு நான்கு ஆண்டுகள் பழைய காரை வாங்கிவிட்டு, அதை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எட்டு லட்சம் ரூபாயாகச் செலுத்துவீர்கள். நீங்கள் எட்டு லட்சம் ரூபாய் கட்டி முடிக்கும்போது, காரின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் கீழே இருக்கும். இதனால், உங்களுக்கு எந்தப் பயனும் இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும்.
பிஎம்டபிள்யூ, ஆடி கார்களின் மேல் ஆசைகொண்ட பலர், பழைய கார் மார்க்கெட்டில் அந்த கார்களை வாங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுக்கு மேலான கார்களை வாங்கும்போது, இதன் பராமரிப்புச் செலவு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால், பழைய கார் மார்க்கெட்டில் ஆடம்பரக் கார்களைத் தவிர்ப்பது நல்லது.
என்ன கார்?
2001 ஹோண்டா சிட்டி, மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்று வாங்க வேண்டாம். இதன் மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகம் இருக்கும்.
உங்கள் தேவையைப் பொறுத்து என்ன கார் என்பதை முதலில் தேர்ந்தெடுத்துவிடுங்கள். ஐந்து பேர் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய பெரிய செடான் காரா அல்லது எஸ்யுவியா? அதிக மைலேஜ் தரக்கூடிய காரா? உங்கள் தேவை என்ன என்பதை முடிவெடுக்க வேண்டும். இப்போது டீசல் கார்களுக்குத்தான் யூஸ்டு கார் மார்க்கெட்டில் மவுசு அதிகம். அதனால், கொஞ்சம் பெரிய காராகப் போகும்போது டீசல் காரை வாங்குவதே நல்லது. நீங்கள் விற்கும்போது அது நல்ல விலைக்கு விற்பனையாகும்.
ஹோண்டா ஜாஸ் எனக்கு மிகவும் பிடித்த கார் என்பவர்கள், தாராளமாக ஜாஸை வாங்கலாம். பெட்ரோல் கார் என்பதோடு, தற்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டது என்பதால், ஜாஸ் குறைந்த விலைக்கு இப்போது பழைய கார் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதிக இட வசதிகொண்ட, சிறப்பம்சங்கள் அதிகம் உள்ள மிகச் சிறந்த காரான ஜாஸ், எட்டு லட்சம் ரூபாய் விலைக்கு வந்ததே அதன் தோல்விக்குக் காரணம். இது, பழைய கார் மார்க்கெட்டில் வாங்கும்போது 3-4 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் என்பதால், இதனைத் தாராளமாக வாங்கலாம்.
3-5 ஆண்டுகள் ஆன பழைய காரை வாங்குவதுதான் நல்லது. நீங்கள் அடுத்து ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தினாலும் அதிக செலவுகள் இருக்காது. ஆனால், அதற்கு மேற்பட்ட உதாரணத்துக்கு, 2001-ம் ஆண்டு ஹோண்டா சிட்டி மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என்று வாங்க வேண்டாம். இதன் மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகமாக இருக்கும்.
எப்போது வாங்க வேண்டும்?
எப்போதுமே சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கைமாறிய கார் என்றால், அந்த கார்களின் பராமரிப்பு சரியாக இருக்காது!
சில நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளே ஓடிய கார்கள் விற்பனைக்கு வரும். இது நல்ல விலைக்குக் கிடைக்கும்போது, இதை வாங்கலாம். ஆனால், அந்த கார் எதனால் அவ்வளவு சீக்கிரத்தில் விற்பனைக்கு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். கார் வாங்கியவர் வெளிநாடு செல்கிறார் அல்லது பெரிய கார் ஏதும் வாங்க இருக்கிறார் என்பதைத் தாண்டி வேறு விஷயம் எதாவது இருந்தால், காரில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள். சில நேரங்களில் விபத்தில் சிக்கிய கார்கள், வங்கியில் வாங்கிய கடனை ஒழுங்காகச் செலுத்தாத கார்கள் அல்லது மைலேஜ் மிகவும் குறைவாகத் தரும் கார்கள் விற்பனைக்கு வரும். அதனால், இந்தப் புதிய கார்கள் மேல் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட எல்லா கார் ஷோரூம்களிலுமே கடந்த ஆண்டு மாடல் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார்களுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம், சில கார்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை டிஸ்கவுன்ட் கிடைக்கும். இது செம டீல். எந்தத் தேய்மானமும் இல்லாத புதிய காரை ஒரு லட்சம் ரூபாய் விலை குறைத்து வாங்க முடியும். இதில் உள்ள ஒரே மைனஸ், நீங்கள் விற்கும்போது ஒரு ஆண்டு கூடுதல் பழைய காராகச் சொல்ல வேண்டும் என்பதால், ரீ-சேல் மதிப்பு குறையும்.
பழைய கார் மார்க்கெட்டில் கார் வாங்கும்போது, விலையை மட்டும் பார்க்கக் கூடாது. மிக முக்கியமான விஷயம், கார் எப்படிப் பராமரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். மிகச் சரியாகப் பராமரிக்கப்பட்ட காரை வாங்குவதே நல்லது.
அதேபோல, பழைய கார் மார்க்கெட்டில், பெரும்பான்மையாக சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது. இரண்டு மூன்று பேர்களிடம் கைமாறிய கார் என்றால், அந்த காரின் மைலேஜ் குறைவாக இருக்கும் என்பதோடு, பராமரிப்பும் சரியாக இருந்திருக்காது. அதனால், அதைத் தவிர்த்துவிடலாம்.
வீடு பார்ப்பது போலத்தான். 'ஏற்கெனவே இரண்டு பேர் பார்த்துவிட்டார்கள், சாயங்கலாம் ஒருவர் புக் செய்யப் போகிறார்’ என்று சொன்னால், அதற்காக உடனடியாக முடிவெடுத்து, அட்வான்ஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
எங்கே வாங்கலாம்?
டீலர்ஷிப்பில் வாங்குவதால் உள்ள ஒரே நன்மை, சில டீலர்கள் ஒரு ஆண்டு வாரன்டி கொடுக்கிறார்கள். இந்த வாரன்டி மூலம் எதாவது பிரச்னை என்று வந்தால், அவர்கள் சரிசெய்து தருவார்கள்.
பழைய கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை, பழைய கார் ஷோரூம்களைவிட ஆன்லைன் மற்றும் பத்திரிகை விளம்பரங்களில் நேரடியாகவே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு வாங்குவதுதான் நல்லது. பழைய கார் ஷோரூம்களைப் பொறுத்தவரை, அங்கே இருக்கும் காரை நீங்கள் வாங்கினால், காரின் விலையைப் பொறுத்து 8,000 முதல் 20,000 ரூபாய் வரை டீலருக்கு கமிஷன் தர வேண்டியிருக்கும். உங்களுக்கான காரை முடிவு செய்துவிட்ட பின்பு, அங்கே இருக்கும் விற்பனையாளர் உங்கள் முன்பாகவே காரின் உரிமையாளருக்கு காரின் விலை குறித்துப் பேசுவார். அவர் உங்களுக்கு நண்பர் என்பது போலவும், நீங்கள் காரின் குறைகளாகச் சொன்ன விஷயங்களை எல்லாம் அவர் சொல்வார். சேல்ஸ்மேன் நமக்காக இவ்வளவு பேசுகிறாரே என்றெல்லாம் அவரை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு கார் வேண்டும்; அவருக்குக் காசு வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இங்கே நட்பு முக்கியம் இல்லை. அதனால், எப்போதுமே சேல்ஸ்மேன்களுடன் நட்பாகாமல், டீலீல் கவனம் செலுத்துவது நல்லது.
ஆன்லைன் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் நீங்கள் நேரடியாக வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ளும்போது, இந்த கமிஷன் தொகை இருக்காது. மேலும், நேரடியாக நீங்களே வாடிக்கையாளர்களிடம் பேசி, விலையைக் குறைக்க முடியும். தனியாரிடம் காரை வாங்கும்போது, அவர்களின் வீட்டுக்குச் சென்று காரைப் பார்ப்பதுதான் நல்லது. அப்போதுதான் நாளை காரில் பிரச்னை என்று ஏதாவது வந்தால், அவர்களை மீண்டும் நீங்கள் பார்த்துக் கேட்க முடியும். மேலும், ஒரு நம்பகத்தன்மை வருவதற்கும் இது உதவும். சில நேரங்களில் திருட்டு கார்களை சிலர் இணையதளம் மூலம் விற்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
டீலர்ஷிப்பில் வாங்குவதால் உள்ள ஒரே நன்மை என்னவென்றால், சில டீலர்கள் ஒரு ஆண்டு வாரன்டி கொடுக்கிறார்கள். இந்த வாரன்டி மூலம் எதாவது பிரச்னை என்று வந்தால், அவர்கள் சரிசெய்து தருவார்கள். ஆனால், கார் வாங்கும்போதே வாரன்டியில் என்னவெல்லாம் கவர் ஆகும் என்பதைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?
கார் வாங்கச் செல்லும் முன்பு, அந்த காரைப் பற்றிய ஒரு புரிதலுடன் சென்றால், காரை விற்பனை செய்பவருக்கு உங்களிடம் கவனமாகப் பேச வேண்டும் என்பது புரியும்.
எப்போதுமே பிரச்னைக்குரிய காரை வாங்க வேண்டாம். அதாவது நீங்கள் காரைப் பார்க்கும்போது ஏ.சி ஓடவில்லை, பவர் ஸ்டீயரிங் வேலை செய்யவில்லை, பவர் விண்டோ வேலை செய்யவில்லை என எதாவது பிரச்னை இருந்து, அந்த காரை அதன் உரிமையாளர் குறைந்த விலைக்கு விற்றாலுமே அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஏ.சி சரிசெய்துகொள்ளலாம் என நீங்கள் வாங்கிய பின்பு, அது அந்தச் செலவோடு முடியாது. தொடர்ந்து பல செலவுகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
* பழைய காரை வாங்கும்போது, மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், ஓடோ மீட்டர் ரீடிங். பெட்ரோல் கார் என்றால், ஆண்டுக்கு பொதுவாக 12,000 கி.மீ வரை அந்த கார் பயணித்திருக்கலாம். டீசல் கார் என்றால், ஆண்டுக்கு 15,000 கி.மீ என்பது ஓகே. இதற்கு மேல் அதிகமாகப் பயணித்திருந்தால், அந்தக் கார் மிகவும் ரஃப்பாக ஓட்டப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். மூன்று ஆண்டுகள் பழைய கார் 50,000 கி.மீ-க்கு மேல் ஓடியிருக்கிறது என்றால், அந்த காரை வாங்காமல் தவிர்ப்பதே நல்லது. மிகவும் குறைவான விலைக்குக் கிடைக்கிறது என்றால் மட்டுமே வாங்கலாம்.
* சர்வீஸ் ஹிஸ்டரி மிகவும் முக்கியம். எப்போதெல்லாம் காரை சர்வீஸ் செய்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை வாங்கிவிடுங்கள். சர்வீஸ் ஹிஸ்டரி இல்லாத கார்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
* ஒரு காரைப் பார்க்கப் போகும் முன்பு மோட்டார் விகடன் அல்லது இணையதளங்களில் அந்த காரின் நிறை, குறைகள் என்னவென்று படித்துவிட்டுச் செல்லுங்கள். அந்த காரின் பவர் என்ன? அது எந்த ஆண்டு மாடல்? அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன என்று ஒரு புரிதலுடன் செல்வது பயன்தரும்.
* டெண்ட், ஸ்கிராட்ச் என ஏதும் இருக்கிறதா என காரின் வெளிப்பக்கத்தை முழுமையாகப் பாருங்கள். காருக்கு அடியில் துருப்பிடித்திருக்கிறதா என்று பார்ப்பது முக்கியம். கார் ரீ-பெயின்ட் செய்யப்பட்டிருக்கிறதா என்றும் கவனியுங்கள்.
* விண்ட் ஷீல்டைக் கவனிப்பது அவசியம். விண்ட்ஷீல்டு உடைந்திருக்கிறதா அல்லது வைப்பர் ஒழுங்காக வேலை செய்யாமல் கீறல் விழுந்திருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம். ஏனென்றால், விண்ட் ஷீல்டின் விலை அதிகம். விண்ட் ஷீல்டை மாற்ற குறைந்தபட்சம் 7,000 ரூபாய் வரை செலவாகும். காரின் பின்பக்க வைப்பர்கள் வேலை செய்கிறதா என்றும் பாருங்கள்.
* டயர்களின் கண்டிஷன் மிகவும் முக்கியம். ஐந்து டயர்களும் நல்ல கண்டிஷனில் இருக்கிறதா? எவ்வளவு கி.மீ ஓடியிருக்கிறது? தேய்மானம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். காரின் ஒரிஜினல் டயர் இல்லாமல், வேறு ஏதும் விலை மலிவான டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றனவா என்றும் பாருங்கள். டயர்களை மாற்ற வேண்டுமானால், குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வரை செலவாகும் என்பதால், இதில் கவனம் தேவை.
* ரிமோட் கீ என்றால், இரண்டு சாவிகளுமே சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள். ரிமோட் மூலம் டிக்கியைத் திறக்க முடிகிறதா என்றும் பாருங்கள்.
* இருக்கைகள் மற்றும் சீட் பெல்ட்டுகள் சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்று பாருங்கள். சீட் கவர்களை அகற்றிவிட்டுப் பார்ப்பது அவசியம்.
* ஹெட்லைட், பனி விளக்குகள், காரின் உள்ளே இருக்கும் விளக்குகள் மற்றும் ஹார்ன் சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள்.
* பவர் விண்டோ மற்றும் உள்ளே இருந்தபடியே அட்ஜஸ்ட் செய்யும் எலெக்ட்ரானிக் ரியர் வியூ மிரர் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். ரிவர்ஸ் சென்ஸார் அல்லது கேமரா இருந்தால், அந்த வசதிகள் சரியான முறையில் இயங்குகிறதா என்று பார்ப்பது அவசியம்.
* காரின் கன்ட்ரோல்கள் அனைத்தையும் சரியாக செக் செய்யுங்கள். மியூஸிக் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ்-இன் ப்ளக் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள்.
* ஏ.சி, பின்பக்க ஏ.சி, ஹீட்டர் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். ஏ.சி வென்ட்டுகளை ஒழுங்காகத் திறந்து மூட முடிகிறதா என்றும் பாருங்கள். வென்ட்டுகளில் இருந்து ஆயில் வாசனை வந்தால், இன்ஜின் ஆயில் லீக் இருக்கிறது என்று அர்த்தம். இப்போது பல கார்களில் கூல்டு க்ளோவ் பாக்ஸ் வசதி உள்ளது. அதனால், க்ளோவ் பாக்ஸ் கூல் ஆகிறதா என்று பார்ப்பதும் அவசியம்.
* காரின் பானெட்டைத் திறந்து பாருங்கள். இங்கே, எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஆயில் நாற்றம் அல்லது இன்ஜின் பகுதியில் பெரிய அளவில் ஏதாவது ரிப்பேர் செய்யப்பட்டிருந்தால், அது தெரிந்துவிடும். பேட்டரி, அதன் கேபிள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். கார் பேட்டரியை மாற்ற குறைந்தது 5,000 ரூபாய் செலவாகும்.
காரின் கன்ட்ரோல்கள் அனைத்தையும் சரியாக செக் செய்யுங்கள். மியூஸிக் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ்-இன் ப்ளக் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள்.
காருக்கு அடியில் குனிந்து, ஏதேனும் ஸ்கிராட்ச் மற்றும் துருப் பிடித்திருக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள்!
டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள்!
குண்டும் குழியுமான சாலைகள், நெடுஞ்சாலை, நகர நெருக்கடி மிகுந்த சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது காரை ஓட்டிப் பாருங்கள்.
எந்த காரையும், ஓட்டிப் பார்த்து டெஸ்ட் செய்யாமல் வாங்கவே கூடாது. காரின் உரிமையாளர் அல்லது டீலர்ஷிப் சேல்ஸ்மேனோடு காரை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். காரை டெஸ்ட் செய்யும் முன்பு, காரின் கன்ட்ரோல்கள் என்னென்ன என்பதை ஒருமுறைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆட்டோமேட்டிக் காரில் கிளட்ச்சைத் தேடிக்கொண்டிருந்தால், காரின் உரிமையாளர் உங்களை ஒன்றும் தெரியாத ஆசாமி என்று எடை போட்டுவிடுவார்.
* குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது நீங்கள் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகள், நெடுஞ்சாலை, நகர நெருக்கடி மிகுந்த சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் ஓட்டிப் பாருங்கள். காரை ஸ்டார்ட் செய்ததும், கியர் லீவரில் அதிகமாக அதிர்வுகள் ஏற்படுகிறதா என்று பாருங்கள்.
* கியர்களை மாற்றிவிட்டு, கிளட்ச்சை ஃபீல் செய்துபாருங்கள். கிளட்சை அழுத்தி மிதிக்க வேண்டியிருக்கிறதா? காரின் பவர் போதுமானதாக இருக்கிறதா? ஆக்ஸிலரேஷன் சரியாக இருக்கிறதா என்று கவனியுங்கள். 5 அல்லது 6 கியர்களையும் சரியான இடைவெளிகளில் மாற்றி, கியர்கள் எந்தத் தாமதமும் இல்லாமல் ஸ்லாட் ஆகிறதா என்று பாருங்கள்.
* பிரேக் சரியாகப் பிடிக்கிறதா? பிரேக் பிடிக்கும்போது சத்தம் எதுவும் அதிகமாகக் கேட்கிறதா என்றும் பாருங்கள். காரை மேட்டில் நிறுத்தி ஹேண்ட் பிரேக்கை அழுத்திவிட்டு, கார் சரியாக நிற்கிறதா என்று பாருங்கள்.
* நெடுஞ்சாலையில் காரை ஓட்டும்போது, கார் ஸ்டேபிளாக இருக்கிறதா அல்லது அலைபாய்கிறதா என்று பாருங்கள். அதிக வேகத்தில் செல்லும்போது ஸ்டீயரிங் கிரிப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம்.
பழைய கார் மார்க்கெட்டில்      வாங்கக்கூடிய நல்ல கார்கள்!
ஹூண்டாய் ஆக்ஸென்ட்
1.5 - 2 லட்சம் ரூபாய்க்குள் 2006- 2007-ம் ஆண்டு ஆக்ஸென்ட் கார்கள் கிடைக்கும். இட வசதி அதிகம்கொண்ட, மெயின்டனன்ஸ் செலவுகள் குறைவான கார், ஆக்ஸென்ட். பெரிய கார்தான் என்றாலும் ஆக்ஸென்ட்டில் பவர் விண்டோ, ஏ.சி-யைத் தவிர, பெரிய சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை.
டொயோட்டா கரோலா
2006-2007 மாடல் கரோலா கார்கள் 3 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கின்றன. பிரச்னை இல்லாத இன்ஜின் கொண்ட கார் கரோலா. மெயின்டனன்ஸ் செலவுகளும் குறைவு. இடவசதி அதிகம் என்பதோடு, ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம். இது நகருக்குள் லிட்டருக்கு 10-11 கி.மீ, நெடுஞ்சாலையில் 14-16 கி.மீ மைலேஜ் தரும். இந்த கார் யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்குவது லாபம். ஆனால், சிங்கிள் ஓனர் கார் என்றால் மட்டுமே வாங்குவது நல்லது. சர்வீஸ் ஹிஸ்டரியைப் பார்த்துவிட்டு வாங்குங்கள்.
ஹூண்டாய் வெர்னா
வெர்னாவைப் பொறுத்தவரை, பெட்ரோல் கார்களைத் தவிர்ப்பது நல்லது. டீசல் வெர்னா பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜில் கில்லி. 2006-2007 மாடல் வெர்னா கார் 3.50 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும். ஆனால் 2006-ம் ஆண்டு வந்த முதல் தலைமுறை வெர்னா கார்களில், சஸ்பென்ஷன் மற்றும் பவர் ஸ்டீயரிங்கில் பிரச்னைகள் இருந்தன. அதனால், டீல் பேசும்போது இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும், டீசல் என்பதால், ஒரு லட்சம் கி.மீ தாண்டிய கார்கள்தான் விற்பனைக்குக் கிடைக்கும். அதனால், சர்வீஸ் ஹிஸ்டரியைப் பார்த்து வாங்குங்கள்.
ஹூண்டாய் ஐ10 ஆட்டோமேட்டிக்
நான்கு ஆண்டுகள் பழைய ஐ10 கார்கள் 2.5 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும். இது நகருக்குள் 12 கி.மீ, நெடுஞ்சாலையில் 16 கி.மீ வரை மைலேஜ் தரும். ஆனால், ஐ10-ல் நான்கு பேர் மட்டுமே வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும்.
மாருதி ஆல்ட்டோ
புதிய கார் மார்க்கெட்டில் மட்டும் அல்ல... பழைய கார் மார்க்கெட்டிலும் ஆல்ட்டோ ஹாட் கேக்தான். இரண்டு லட்சம் ரூபாய்க்குள் நல்ல ஆல்ட்டோ காரை வாங்கலாம். ஆனால், சின்ன குடும்பம் என்றால் மட்டுமே இந்த காரை வாங்கலாம். இல்லை என்றாலும் இதே விலைக்கு வேறு நல்ல கார்கள் இருக்கின்றன.
மிட்சுபிஷி லான்ஸர் சிடியா
சிடியா வெர்ஷனாக வெளிவந்த மிட்சுபிஷி லான்ஸர் கார்களை வாங்கலாம். நல்ல கண்டிஷன் சிடியாவும் 3.50 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும். இது நகருக்குள் 9 கி.மீ, நெடுஞ்சாலையில் 13-14 கி.மீ மைலேஜ் தரும். ஆனால், மிட்சுபிஷிக்கு டீலர்ஷிப்புகள் மிகவும் குறைவு என்பதோடு, காரின் இருக்கைகள் மிகவும் உயரம் குறைவாக இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களுக்கு காருக்குள்ளே போவதும், வருவதும் சிரமமாக இருக்கும்.
மாருதி ஸ்விஃப்ட்
நோ-நான்சென்ஸ் கார் என்றே இதைச் சொல்லலாம். பெட்ரோல், டீசல் இரண்டு கார்களுமே யூஸ்டு கார் மார்க்கெட்டில் நல்ல டீலுக்குக் கிடைக்கும். மாருதி கார்களைப் பொறுத்தவரை ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் பாகங்களின் விலை குறைவு என்பதற்காகவே, அதிக அக்கறை இல்லாமல் கார்களை சிலர் பயன்படுத்தியிருப்பார்கள். அதனால், பொதுவாக பழைய கார் மார்க்கெட்டுக்கு வரும் கார்களில் ஏராளமான ஸ்கிராட்ச் மற்றும் டெண்டுகள் இருக்கும். இதைச் சரியாகப் பார்த்து, இதற்கு ஏற்றபடி விலையைக் குறைத்து டீலை முடிப்பதுதான் சாமர்த்தியம்.
ஃபோர்டு ஃபிகோ
ஃபோர்டு ஃபிகோ டீசல்தான் பழைய கார் மார்க்கெட்டில் நம்பர் ஒன் கார். அதிக மைலேஜ் மற்றும் ஸ்டெபிளிட்டியில் சிறந்த கார் ஃபிகோ. ஆனால், குறைந்தபட்சம் 60,000-70,000 கிமீ-க்கு மேல் ஓடிய கார்கள்தான் பழைய கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். இந்தச் சமயத்தில் இன்ஜின், சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றில் சில பாகங்களை மாற்ற வேண்டிவரும். இதனால், அதிக கி.மீ ஓடிய கார் என்றால்,  சர்வீஸ் ஹிஸ்டரியைப் பார்த்து என்ன பாகங்கள் எல்லாம் மாற்றியிருக்கிறார்கள், அடுத்த சர்வீஸில் என்ன எல்லாம் மாற்ற வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வாங்குவது நல்லது.
ஹோண்டா சிவிக்
2008-2009 மாடல் சிவிக் கார்கள் நான்கு லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்குக் கிடைக்கும். பெர்ஃபாமென்ஸ், பாதுகாப்பு, சிறப்பம்சங்கள் அனைத்திலும் சிறந்த கார் சிவிக். ஆனால், இது 'ஞி’ செக்மென்ட் கார் என்பதை நினைவில் இருக்கட்டும். நீங்கள் நான்கு லட்சம் ரூபாய்க்கு காரை வாங்கினாலும், இதன் ஸ்பேர் பார்ட்ஸ் 15 லட்சம் ரூபாய் காருக்கு ஏற்ற வகையிலே இருக்கும்.
தவிர்க்க வேண்டியவை:
மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகம், மைலேஜ் குறைவு, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில்லை போன்ற காரணங்களால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கார்களைத் தவிர்த்தல் நலம்.
மாருதி பெலினோ, ஃபோர்டு எஸ்கார்ட், ஃபியட் சியன்னா,  ஃபியட் பேலியோ, யுனோ, 2004 ஆண்டுக்கு முந்தையை மிட்சுபிஷி லான்ஸர், ஓபல் ஆஸ்ட்ரா,  ஓபல் கோர்ஸா, செவர்லே ஆப்ட்ரா, ஃபோர்டு ஐகான், ஹோண்டா சிஆர்-வி, ஃபோர்டு எண்டேவர், டாடா சியரா, டாடா சஃபாரி.

Related

உபயோகமான தகவல்கள் 575015497237904601

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Dec 4, 2024 6:30:23 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item