ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...
சித்தமருத்துவர் கு.சிவராமன்
அஞ்சறைப்பெட்டி,
அந்தக் கால மருத்துவ அறிவியல் நம் கலாசாரத்தோடு ஒட்டிவந்ததன் அடையாளம்!
உடல் பற்றிய அறிவும், தாக்கும் நோயின் குறிகுணத்தையும் நம் மூத்தவர்கள்
தெளிவாக அறிந்து, வரும்முன் காப்பதையும் உணவே மருந்து என உணவில்
மெனக்கிடுவதையும் பண்பாடாக தலைமுறைகளுக்குக் கடத்தியிருந்தனர்.
கைப்பக்குவமான உணவைக்கொண்டும், தோட்டத்தில் எளிய செடி,
கொடிகளைவைத்தும் அவர்கள் அன்று வைத்தியம் செய்த வித்தை, இன்று உலகெங்கும்
பல மருத்துவ மற்றும் அறிவியலாளர்களால் பெரும் வியப்புடன்
பார்க்கப்படுகிறது. இந்த நவீன யுகத்தில், இப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரிய
மருத்துவ அறிவு மெள்ள மெள்ள மறைந்து வருகிறது.
அப்படி மறந்து மறைந்துபோன மருத்துவ அறிவை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியே, இந்தத் தொடர்.
பாரம்பரியத்தின் எச்சமான பாட்டியும், நவீனத்தின்
உச்சமாக இருக்கும் பேத்தியும் நடத்தப்போகும் உரையாடலில் உங்களுக்கான
மருத்துவத் தேடலும் கட்டாயம் கலந்திருக்கும்.
வாழையடி வாழையாய் வலம் வந்த, மறந்துபோன மருத்துவக் குறிப்புகள் இனி, உங்கள் வாரிசுகளுக்கும் வற்றாத ஆரோக்கியத்தைத் தரும்.

''அலாவுதீனோட
அற்புத விளக்கா பாட்டி இது? இந்தப் பழைய பெட்டியை இவ்வளவு பத்திரமா
வெச்சிருக்கே,' என பாட்டி வைத்திருந்த பெட்டியைப் பார்த்து, பேத்தி
கேட்டதும் பாட்டிக்கு முகமெல்லாம் பூரிப்பு.
''இந்தப் பெட்டியைப் பத்திக் கேக்க மாட்டியானு
காத்திட்டிருந்தேன் செல்லம். இது நம்ம மண்ணோட அற்புத வரம். தலைமுறை
தலைமுறையா நாம பாதுகாத்து வந்த நல்வாழ்வுப் பெட்டி.'
'சாப்பாடு தாளிக்கிற சமாசாரம் எல்லாம் வைச்சிருக்கிற பெட்டிதானே இது?'
'ம்ம்... வெறும் தாளிச்ச பொருட்கள் மட்டுமில்லே... அவசரத்துக்கு உதவும் கைமருந்து; அந்தக் கால ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இது.'
''ஓஹோ... அப்போ போன மாசம் பிடிச்ச சளியும் அடுக்குத்
தும்மல் மூக்கடைப்பும் இன்னும் என்னைவிட்டுப் போக மாட்டேங்கிறது.
உன்
அஞ்சறைப்பெட்டி, எனக்கு வைத்தியம் சொல்லுமா பாட்டி?'
''பனிக் காலத்துல அடுக்குத் தும்மல் வர்றது...
மூக்கடைச்சுப்போய் நீர் வழியறது... தலைவலி... முகமெல்லாம் அதப்பாய் வீக்கமா
இருப்பது... இப்படி ஒண்ணா வர்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் அந்தக் காலத்துல
'பீனிசம்’னு சொல்வாங்க. இப்போ யாரைப் பார்த்தாலும், 'சைனஸ், சைனஸ்’னு
சொல்றாங்களே... கிட்டத்தட்ட அதுதான் பீனிசம்.'
''பாட்டி, அது சைனஸ் இல்லை. சைனஸைட்டிஸ்; முக எலும்பில்
உள்ள இயல்பான பதிவுக்கு சைனஸ்னு பெயர். அதுல அழற்சி வந்து நீரேற்றம்
ஏற்பட்டு, சளி சேர்ந்து வதைப்பதுதான் சைனஸைட்டிஸ்.'
'சரி... அந்த சைனஸைட்டிஸ் வந்துட்டா... கொஞ்ச காலம் இனிப்பை மறந்திடணும். பால் கூடவே கூடாது. நீர்க் காய்கறிகளையும் தவிர்த்திடணும்.'
'அது என்ன நீர்க் காய்கறிகள் பாட்டி?'
''எந்தக் காயையெல்லாம் கத்தியால வெட்டறப்ப நீர் அதிகம்
வருதோ, அதெல்லாம் நீர்க் காய்கறிகள்தான். சுரைக்காய், பூசணிக்காய்,
தடியங்காய், தக்காளி, பீர்க்கங்காய் இதையெல்லாம் அதிகம் சாப்பிடக் கூடாது.
ஆசைப்பட்டு ஒரு வேளை சாப்பிட்டாலும், மிளகுத்தூள் தூவித்தான் சாப்பிடணும்.'
''அப்படின்னா, பால்லகூட மிளகு போட்டுச் சாப்பிடலாம்தானே பாட்டி?'
''ரொம்பவும் அவசியம்னு டாக்டர், பால் குடிக்கச்
சொல்லியிருந்தா பரவாயில்லை. மத்தபடி தேவை இல்லைம்மா. அப்படி பால்
சாப்பிடறபட்சத்துல அதில் மிளகு, மஞ்சள்தூள், பனங்கற்கண்டு போட்டுக்
குடிக்கலாம். ஆனா, இன்னொரு விஷயம், அப்பக்கூட ராத்திரி, விடிகாலையில்
சைனஸைட்டிஸ் தொந்தரவு இருக்கிறவங்க பால் சாப்பிடக் கூடாது.'
'சரி பாட்டி... உன் அஞ்சறைப் பெட்டியில இதுக்கு என்ன மருந்து வைச்சிருக்கே?'
''மிளகு இருக்கே...''
''சரி... நான் காலேஜ் போயிட்டு சாயங்காலம் வருவேனாம்...
மிளகு பத்தி முழுத் தகவலும் சொல்லுவியாம்...'' என்று பாட்டிக்கு டாடா
சொல்லிவிட்டுச் சென்றாள்.
Post a Comment