இன்றைய சமையல்! - 6
செஃப் தாமு,
''செஃப்...
நீங்க சொன்னதை அப்படியே செஞ்சு பார்த்த எக்ஸ்பீரியன்ஸ்ல கூடிய சீக்கிரம்
நானும் ஒரு செஃப் ஆகிடுவேன் போல!' என்று அஞ்சனா ராவ் சிரிக்க...
''பெண்களை மிஞ்சின செஃப் இந்த உலகத்திலேயே இல்லை!'
என்று உளப்பூர்வமாக சொன்ன செஃப் தாமு, சனிக்கிழமைக்கான ரெசிபிகளை கடகடவென
சொல்ல ஆரம்பித்தார்...
காலை சிற்றுண்டி: ஆப்பம்
தேவையானவை:
பச்சரிசி - ஒரு டம்ளர், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, வெந்தயம் -
ஒரு டீஸ்பூன், தேங்காய் - கால் மூடி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியை தனியாகவும்... உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை ஒன்றாகவும் எட்டு
மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, ஊற வைத்தவற்றோடு தேங்காயையும் சேர்த்து
அரைத்து, இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்
கொள்ளுங்கள். அடுப்பில் ஆப்பச் சட்டியை வைத்து சூடானதும், எண்ணெய் தடவி,
கரண்டியால் மாவை எடுத்து நடுவில் ஊற்றி, கைகளால் சட்டியை நன்று
சுழற்றுங்கள். மாவு சட்டி முழுவதும் உருண்டு வட்டமாக வரும். உடனே மீண்டும்
அடுப்பில் வைத்து வேகவிட்டு எடுத்தால்... அருமையான மொறுமொறு ஆப்பம் ரெடி.
இதற்கு பொருத்தமான சைட் டிஷ் என்று பார்த்தால் தேங்காய்ப் பால்தான். தக்காளி குருமாவும் தொட்டுச் சாப்பிடலாம்.
தேங்காய்ப் பால்
தேவையானவை: தேங்காய் - அரை மூடி, சுடுநீர் - 2 டம்ளர், ஏலக்காய்த்தூள், சர்க்கரை - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை
சுடுநீர் ஊற்றி அரைத்து, நன்கு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதில் சுவை மற்றும் தேவைக்கேற்ப சிறிதளவு ஏலக்காய்த்தூள் மற்றும்
சர்க்கரையைக் கலந்துவிட்டால்... ஆப்பத்துக்கு அற்புதமான சைட் டிஷ் ரெடி.
தக்காளி குருமா
தேவையானவை:
நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி அளவு, பட்டை, லவங்கம் -
தலா 2, சோம்பு - அரை டீஸ்பூன், தேங்காய் - கால் மூடி, கறிவேப்பிலை - 2
ஆர்க்கு, கசகசா - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய
துண்டு, பூண்டு - 4 பல், முந்திரிப்பருப்பு - 4, மிளகாய்த்தூள் - ஒரு
டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கசகசா மற்றும் முந்திரிப்பருப்பை பத்து நிமிடம் வெந்நீரில் ஊற
வைத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து... தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு,
தோல் சீவிய இஞ்சி சேர்த்து நன்கு மையாக அரைத்து விடுங்கள். கடாயில் எண்ணெய்
ஊற்றி, பட்டை, லவங்கம், சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும். இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி... தேவையான அளவு
தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதோடு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,
தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்த கலவை நன்கு கொதித்து
வரும்போது, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்துவிடுங்கள். நன்கு
வெந்து பச்சை வாசனை போனதும், கறி வேப்பிலை போட்டு இறக்கினால்... ஆப்பத்தோடு
சாப்பிட அருமையான தக்காளி குருமா தயார்.
மதிய சாப்பாடு: கோயில் புளியோதரை
தேவையானவை:
: அரிசி - ஒன்றரை டம்ளர், தண்ணீர் - 5 டம்ளர், காய்ந்த மிளகாய் - 8, தனியா
- 2 கைப்பிடி அளவு, சீரகம், மிளகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் -
சிறிய துண்டு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா ஒரு கைப்பிடி அளவு, புளி -
பெரிய எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் -
ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை:
அரிசியை தண்ணீர் விட்டுக் கழுவவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நன்கு
கொதிக்கும்போது உப்பு மற்றும் அரிசியை சேர்த்து வேக வைத்து வடித்துக்
கொள்ளுங்கள். சாதத்தில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிசிறி, ஒரு
தட்டில் பரப்பி ஆற வையுங்கள். கடாயில் சிறிதளவு நல்லெண் ணெய்யை ஊற்றி,
காய்ந்த மிளகாயைப் போட்டு பொரித்து எடுத்து, உடனே அதனை கைகளால் பொடித்து
சாதத்தின் மேல் தூவிவிடுங்கள். சிறிதளவு எண்ணெயில் தனியா, கடலைப்பருப்பு,
சீரகம், மிளகு ஆகியவற்றை சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி செய்து, சாதத்தில்
தூவிவிடுங்கள். புளியை திக்காக கரைத்து... இதில் மஞ்சள்தூள்,
மிளகாய்த்தூள், தனியாத்தூள், பெருங்காயம் சேர்த்து கரைத்து வைத்துக்
கொள்ளுங்கள். அடி கனமான கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த
மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு வதக்கி, அதில்
புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, இதனை சாதத்தில் கலந்து
பிசிறிவிட்டால்... அற்புதமான டேஸ்ட்டில் கோயில் புளியோதரை வீட்டிலேயே
ரெடியாகிவிடும். இதற்கு உருளைக்கிழங்கு தொக்கு தொட்டுச் சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு தொக்கு
தேவையானவை: உருளைக்கிழங்கு
- கால் கிலோ, நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி - தலா 2
கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு
ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை
உப்பு போட்டு வேக வைத்து தோலுரித்து ஆறாக நறுக்கிக் கொள்ளுங்கள். கடாயில்
எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயத்தை சேர்த்து
வதக்கவும். பிறகு, தக்காளியை சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்
தனியாத்தூள் சேர்த்து தொக்கு போல வதக்குங்கள். இத்துடன் வேக வைத்த
உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி இறக்கவும். புளியோதரைக்கு அருமையான சைட்
டிஷ் ஆக இருக்கும் இந்த தொக்கு.
இரவு உணவு: அடை
தேவையானவை:
பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு டம்ளர், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு -
தலா அரை டம்ளர், பாசிப்பருப்பு - கால் டம்ளர், காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயம் - சிறிய துண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு
ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை:
பச்சரிசி, புழுங்கலரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு,
காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கழுவி, பெருங்காயம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி
நான்கு மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து... பிறகு, அரைத்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயில்
எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அதனை அரைத்து வைத்த மாவோடு
சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இனி, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, ஒரு
கரண்டி அடை மாவை எடுத்து ஊற்றி வேகவிடுங்கள். மறுபக்கம் திருப்பி போட்டதும்
சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுத்தால்... நடுவில் மெத்தென்றும், ஓரங்களில்
க்ரிஸ்பியாகவும் வரும் இந்த அடை.
இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி அருமையான சைட் டிஷ்!
Post a Comment