குளிர்கால நோய் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி? ஹெல்த் ஸ்பெஷல்!
குளிர் காலத்தில், அதிக சிறுநீர் வெளியாவது இயல்பு தான்; சர்க்கரை நோய் பாதிப்பு வந்து விட்டதோ என்ற பயம் வேண்டாம். அதற்காக தண்ணீர் குடிப்பதை ...
1. குளிர்காலத்தில் தோல் சுருங்கி பாதிப்பு ஏற்படுகிறதே?
குளிர் காலத்தில் பனி அதிகம் இருக்கும். இதனால், தோலில் சுருக்கம் ஏற்படும்; தோல் காய்ந்து, உதிரும் நிலை வரலாம். உதடு, தோல்களில், வெடிப்பு, புண் வரும். மலை பிரதேசங்களில், பாதிப்பு அதிகம் இருக்கும். இதற்காக, லிக்விட் பாரபின், கோல்டு கிரீம்களை தடவிக் கொள்ளலாம். இதை வாங்க முடியாதோர், தேங்காய் எண்ணெயை, கை, கால், முகத்தில் தேய்ப்பது நல்லது.
2. மூச்சுத் திணறல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
மூச்சுப் பயிற்சி சரியாக செய்யாதோர், உடல் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், ஆஸ்துமா பாதிப்புள்ளோருக்கு, சுவாச அடைப்பு, இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. திறந்த வெளியில், குளிர் அதிகம் உள்ள பகுதியில், படுப்பதை தவிர்க்க வேண்டும். மப்ளர், ஸ்வெட்டர் மற்றும் கம்பளி உடைகள் பயன்படுத்தலாம். உடல் முழுவதும் மூடும் வகையிலான, ஆடைகள் பயன்படுத்தலாம்; திறந்த வெளியில் படுப்பதை தவிர்க்க வேண்டும்.
3. குளிர்கால பாதிப்பில், ஒற்றைத் தலைவலி வரும் எனச் சொல்லப்படுகிறதே?
பனியில் அதிகம் சுற்றுவோர், தாமதமாக வீட்டுக்கு வருவோருக்கு, குளிர் கால பிரச்னையாக, ஒற்றைத் தலைவலி வரும். பனி விழும் நேரத்தில், வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். தொப்பி, மப்ளர் அணிவது நல்லது. ஒற்றைத் தலைவலி அதிகம் இருந்தாலும், ஒற்றைத் தலைவலி தொடர்ந்தாலும், காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஆலோசனை பெறுவது நல்லது.
4. 'இன்ஹேலர்'அவசியமா?
ஆஸ்துமா பாதிப்புள்ளோருக்கு, நுரையீரலில் சளி தேங்குவதால், இடைவிடாத இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த சமயத்தில், 'இன்ஹேலர்' பயன்படுத்துவது நல்லது. இதனால் உயிருக்கு உடனடி ஆபத்தில்லை என்றாலும், நுரையீரல் பாதிப்புள்ளோர், மாதம் ஒரு முறை, நெஞ்சக மருத்துவரிடம், பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 'அலர்ஜி' தரும் உணவுகளான, தக்காளி, சில வாழைப் பழங்கள், மீன், கருவாடு வகைகளை, சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
5. முதியோருக்கு என்ன பாதிப்பு வரும்?
முதியோருக்கு மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்படும். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம், இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால், 'ஸ்டிரோக்' வர வாய்ப்புள்ளது. ரத்த ஓட்டம் சீராக, நீண்ட துார நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது. கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டாம்.
6. அடிக்கடி சிறுநீர் வெளியேறுகிறதே... சர்க்கரை நோய் அறிகுறியா?
குளிர் காலத்தில் வியர்வை அதிகம் வெளியேறாது; அடிக்கடி சிறுநீர் போக வேண்டிய நிலை வரும். இது இயல்பானது தான். சர்க்கரை நோய் இருக்கும் என்ற அச்சம் வேண்டாம். அதிக சிறுநீர் வெளியேறுவதால், தண்ணீர் குடிப்பதை குறைத்து விடக் கூடாது; அப்படி குறைத்தால் சிறுநீரக பாதிப்பு, கல் அடைப்பு போன்ற பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
7. வேறு ஏதேனும் பாதிப்புகள் வருமா?
குளிர் காலத்தில், மூட்டுக்கள் இறுகி காணப்படும். நடு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கை, கால்கள் மரத்துப் போவது உண்டு. இது இயல்பானது தான்; பயந்து, தேவையில்லாத மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டாம். குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
8. குளிர் காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பது சரியா?
குளிர் காலம் என்பதால், குளிக்காமல் இருப்பது, இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது சரியல்ல. அதனால், தேமல் போன்ற சரும நோய்கள் வர வாய்ப்புள்ளது; தினமும் கட்டாயம் குளிக்க வேண்டும்.
9. ஜன்னலோர பயணத்தால் பாதிப்பு வருமா?
குளிர் காலத்தில் பஸ், ரயில்களில், ஜன்னலோரத்தில் அமர்ந்து செல்வதால், குளிர் காற்று, காதுக்குள் சென்று, நரம்பு வீங்கும். இதனால் வரும் பாதிப்பால், முகத்தின் ஒரு பகுதி, கோணலாக வாய்ப்புண்டு. பிசியோதெரபி, மின் அதிர்வு சிகிச்சை கொடுத்து, சரி செய்ய வேண்டி வரும். இதைத் தவிர்க்க, பஸ், ரயில் பயணத்தின்போது, ஷட்டர்களை மூடிவிடுவதே சிறந்தது.
10. குளிர் காலத்தில் சிலருக்கு, கோபம் அதிகம் வருகிறதே...?
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, குளிர்கால மன எழுச்சி (சீசனலி அபெக்டடு டிஸ்ஆர்டர்) ஏற்பட வாய்ப்புள்ளது. எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே இருப்பர். நான் தான் பெரிய ஆள் என்கிற மாதிரி பேசுவர். எளிதில் மற்றவர்களை புண்படுத்தி விடுவர். கோபத்தின் உச்சத்தில் இருப்பர். அவர்களை கட்டுப்படுத்துவது கடினம். இதுபோன்ற பாதிப்புள்ளோர், மனநல மருத்துவரிடம் சென்று, பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மொத்தத்தில், அளவான சாப்பாடு, முறையான உடற்பயிற்சி, தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் குளியல் மற்றும் போதிய அளவில் துாக்கமும் இருந்தால், குளிர்கால பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.
டாக்டர் எம்.ஆனந்த் பிரதாப்,
நிலைய மருத்துவ அதிகாரி,
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
Post a Comment