ரத்தசோகையை விரட்டும் ரெசிபி! உணவே மருந்து!!
க ண்கள் சோர்ந்து, முகம் வெளுத்து, பலவீனமாக இருக்கும் பெண்களைப் பார்த்ததும், ''ரொம்ப அனீமிக்கா இருக...
https://pettagum.blogspot.com/2014/01/blog-post_3079.html
கண்கள் சோர்ந்து,
முகம் வெளுத்து, பலவீனமாக இருக்கும் பெண்களைப் பார்த்ததும், ''ரொம்ப
அனீமிக்கா இருக்கீங்களே?!'' என்று சொல்வது சகஜம். அந்த அளவுக்குப்
பெண்களைப் பரவலாகப் பாதிக்கும் நோய், ரத்தசோகை (அனீமியா). சமீபத்தில்
இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த ஏழு வீராங்கனைகளுக்கும்
ரத்தசோகை இருந்தது கண்டறியப்பட்டது.
ரத்தசோகையால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கான உணவுகளையும் பட்டியலிடுகிறார் உணவியல் மற்றும் ஊட்டச் சத்து நிபுணர் ஜெ.பி.ஜெயந்தி.
''உடலின் ரத்த உற்பத்திக்கு ஹீமோகுளோபின் மிகவும்
அவசியம். 100 மி.லி ரத்தத்தில் 13 முதல் 15 கிராம் வரை ஹீமோகுளோபின் அளவு
இருக்க வேண்டும். இந்த அளவு 10 கிராமுக்குக் கீழே இருந்தால், ரத்த சோகை
இருக்கிறது என்று அர்த்தம். உணவில் இரும்புச் சத்து குறையும்போது
ரத்தத்தின் அளவும் குறையும். மேலும், பெண்களுக்கு
மாதவிலக்கின்«பாது ஏற்படும் அதிக உதிரப்போக்கும் ரத்தசோகை ஏற்பட ஒரு
காரணம்.
ரத்தசோகை வந்தால், பசி எடுக்காது. எதையும் சாப்பிடப்
பிடிக்காது. படிப்பில் கவனம் செலுத்த முடியாது. ஞாபகசக்தி குறையும். வயிறு
சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். உடல் வளர்ச்சி குறையும். தலைவலி வரும்.
முகம், கண், நாக்கு நகங்கள் வெளிறிப்போகும். தலைமுடி உதிரும். வாய்ப்
புண் வரும்.
இதற்குத் தினமும் நம் உணவில் இரும்புச் சத்து அதிகம்
இருப்பதுபோல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். இரும்புச் சத்து,
உடலில் சரியாக கிரகிக்கப்பட வைட்டமின் சி தேவை. இதற்குத் தினமும் 2
நெல்லிக்காய், 2 அத்திப்பழம் சாப்பிடலாம். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள்,
சோயாபீன்ஸ், உலர் திராட்சை, மாதுளம்பழம், பேரீச்சம்பழம், தர்ப்பூசணிப்பழம்
இவற்றில் இரும்புச் சத்து மிக அதிகம் உள்ளது. இவற்றைத் தினமும்
சேர்த்துக்கொள்வது அவசியம். கம்பு, வரகு, எள், பனைவெல்லம் எல்லாம்
இரும்புச் சுரங்கங்கள். தினமும் ஒரு எள்ளுருண்டை, கம்பு, வரகில் செய்த
கஞ்சி, கிச்சடி வகைகளை சாப்பிடலாம். மேலும், முளைகட்டிய தானியங்களில்
இருந்து கிடைக்கும் சத்துக்களும் இரும்புச் சத்தைக் கிரகிக்க உதவிடும்''
என்றவர், ரத்தசோகையைத் தவிர்க்கும் உணவு ரெசிபிகளை சொல்ல, அவற்றை
செய்துகாட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஷகீதா.
தினை வரகு பணியாரம்
தினை, வரகு, பச்சரிசி, புழுங்கல் அரிசி தலா ஒரு டம்ளர்,
வெந்தயம், உளுந்து தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, எல்லாவற்றையும்
கலந்து சேர்த்து ஊறவைக்கவும். இதை அரைத்து, தேவையான அளவு உப்பு
சேர்க்கவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, இந்த மாவை பணியாரக்குழியில்
ஊற்றிச் சுட்டெடுக்கவும்.
இனிப்பு விரும்புபவர்கள் வெந்தயம், உப்பு தவிர்த்து பனைவெல்லம் சேர்த்துச் செய்யலாம்.
கீரைக் கூட்டு
சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை இதில்
ஏதேனும் ஒரு கீரையை ஆய்ந்து, கழுவி பொடியாக நறுக்கவும். பயத்தம் பருப்பை
வேகவைத்துக்கொள்ளவும். ஒரு தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், 2
பூண்டு பல், சிறிது மஞ்சள்தூள் இவற்றுடன் நறுக்கிய கீரையைச் சேர்த்து
வேகவைக்கவும். வெந்ததும், வேகவைத்த பயத்தம் பருப்பை விட்டு நன்றாகக்
கடைந்து இறக்கவும். கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
இந்தக் கீரைக் கூட்டை தினமும் சாப்பிட்டு வர, ரத்தம் விருத்தியடையும்.
வேர்க்கடலைச் சட்னி
கடாயில் 100 கிராம் வேர்க்கடலையைப் பொன்னிறமாக
வறுத்துக்கொள்ளவும். இதனுடன் துண்டு இஞ்சி, பூண்டு மூன்று பல், தேவையான
அளவு காய்ந்த மிளகாய் வத்தல், புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து
எடுக்கவும். இட்லி, தோசை, தினை பொங்கலுக்கு சைட் டிஷ் சேர்த்துக்கொள்ளலாம்.
சத்துமாவுக் கஞ்சி
100 கிராம் வெல்லத்தை நன்றாகக் கொதிக்கவைத்துப்
பாகுபோல்செய்யவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டுக் கொதித்ததும்,
தேவையான சத்துமாவைப் போட்டு, கட்டியாகாமல் கிளறவும். இதனுடன் பால் மற்றும்
வெல்லப்பாகை சேர்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் ஏலக்காய் சேர்க்கலாம்.
சுட்டீஸ் டிப்ஸ்
குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லேட்டுக்குப் பதிலாக தேனில் நெல்லிக்காயை ஊறவைத்து கொடுக்கலாம்.
தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாதத்தில் பிசைந்துகொடுக்கலாம்.
சாப்பிட்ட பிறகு ஒரு பழம், காலை மற்றும் இரவில் பேரீச்சம்பழம் சேர்த்துப் பால் குடிக்கலாம்.
கருப்பட்டிப் பணியாரம், அவல் உப்புமா, சத்துமாவுக் கஞ்சி என வெரைட்டியாகச் சமைத்துக்கொடுக்கலாம்.
கிஸ்மிஸ் பழத்தை, தண்ணீரில் ஊறவைத்து அந்தச் சாறைக் குடித்தால் நல்லது.
பனை வெல்லம் பொட்டுக்கடலையுடன் நெய் சேர்த்து, உருண்டையாகச் செய்து கொடுக்கலாம்.
இந்த உணவுகளைக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்தசோகை வராமல் தடுக்கும்.
Post a Comment