30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி! 30 நாள் 30 வகை சமையல்!!

    'ஹெ ல்த் இஸ் வெல்த்’ என்பது முது மொழி மட்டுமல்ல... முழு முதல் உண்மையும்கூட! விட்டமின்கள், நார்ச்சத்து...

  
'ஹெல்த் இஸ் வெல்த்’ என்பது முது மொழி மட்டுமல்ல... முழு முதல் உண்மையும்கூட! விட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச் சத்து என உடலுக்கு தேவையான சத்துக்களை, அட்சய பாத்திரம் போல, அள்ள அள்ளக் குறையாமல் வழங்குவது காய்கறிகள்தான். இந்த இணைப்பிதழில் முழுக்க முழுக்க காய்கறிகளைப் பயன்படுத்தி... ருசியான, சத்துமிக்க ரெசிபிகளை வழங்கும் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி,
 ''உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்... பல்வேறு உடல் நலக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் காய்கறிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். எண்ணெய், காரம் இரண்டையும் முடிந்த அளவு குறைத்துள்ளேன். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் உடல் எனும் வங்கியில் ஆரோக்கியம் எனும் செல்வம் டெபாசிட் ஆகிக்கொண்டே இருக்கும்'' என்று அக்கறையும், அன்பும் பொங்கி வழியும் விதத்தில் கூறுகிறார்.
வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி
தேவையானவை:வெண்டைக்காய் - கால் கிலோ, வெல்லம் - 50 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், 3 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கலாம்.
குறிப்பு:  வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றது.

வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் - 2, வெண்டைக்காய் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
அலங்கரிக்க: பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பாதி அரைபட்டதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை புளிக்கவிடவும். பிறகு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இரண்டு கரண்டி மாவை விட்டு, தேவைப்பட்டால் ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருட்களால் அலங்கரித்து சுட்டெடுத்தால்... வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை தாயார். இதனைத் திருப்பிப் போடத் தேவையில்லை.
குறிப்பு: இது, மூளை நன்கு வேலை செய்ய உதவுவதுடன், பெரியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை சரிசெய்யும்.

வெண்டைக்காய் ஃப்ரை
தேவையானவை:வெண்டைக்காய் - கால் கிலோ, கடலை மாவு - 6 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், அரிசி மாவு, மைதா மாவு - தலா 2 டீஸ்பூன்,  சோள மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை நடுத்தரமான அளவில் நறுக்கவும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுடன் வெண்டைக்காயை சேர்த்து, சிறிதளவு நீர் சேர்க்கவும். எண்ணெயைக் காய வைத்து, 4 டீஸ்பூன் சூடான எண்ணெயை வெண்டைக்காய் கலவையில் விட்டு நன்கு கலக்கவும். இந்தக் கலவையை காயும் எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: குழந்தைகள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இது, அவர்களின் அறிவாற்றலை அதிகரிக்க வைக்கும்.

கறிவேப்பிலை பொடி
தேவையானவை: உருவிய கறிவேப்பிலை - 2 கப், எண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: கறிவேப்பிலையை நன்கு கழுவி, ஈரம்போக நிழலில் உலரவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கறிவேப்பிலையை  மொறுமொறுப்பாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். மீதியுள்ள எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். பிறகு, இதனுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, நைஸாகப் பொடிக்கவும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். இந்தப் பொடி, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட ஏற்றது.
குறிப்பு:  கறிவேப்பிலை, தலைமுடியின் கருமைக்கும், வளர்ச்சிக்கும் உதவும்.

புதினா  கொத்தமல்லி துவையல்
தேவையானவை: புதினா தழை, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாகப் பொடிக்கவும். மீதியுள்ள எண்ணெயில் புதினா, கொத்தமல்லியை லேசான தீயில் வதக்கவும். கொரகொரப்பாக அரைத்த பொடியை தேங்காயுடன் சேர்த்து... வதக்கிய புதினா, கொத்தமல்லி மற் றும் புளி சேர்த்து நைஸாக அரைக்கவும்.
குறிப்பு: இது பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும், ஈறுகளின் உறுதிக்கும் உதவும்.

பொன்னாங்கண்ணிக் கீரை பொரிச்ச குழம்பு
தேவையானவை: பொன்னாங்கண்ணிக் கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - 50 கிராம், சாம்பார் பொடி- 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: வெங்காய வடகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன்.
அரைக்க: துருவிய தேங்காய் - கால் கப், சீரகம் - ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
செய்முறை: பொன்னாங்கண்ணிக் கீரையைச் சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை குழைய வேக வைக்கவும். அரை டம்ளர் நீரில் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், கீரை சேர்த்து வேகவிடவும். வெந்த பருப்பை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துச் சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும். இதனை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும் உபயோகிக்கலாம்.
குறிப்பு: பொன்னாங்கண்ணிக் கீரை, கண் பார்வைக்கும், உடல் பளபளப்புக்கும் உறுதுணை புரியும்.

அகத்திக்கீரை தண்ணிச் சாறு
தேவையானவை: நறுக்கிய அகத்திக்கீரை - 2 கப், தேங்காய்ப் பால் - அரை கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் ஒரு கப் நீர் விட்டு நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, அகத்திக்கீரையையும் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், மிளகுத்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு:  உடலின் குளிர்ச்சித் தன்மையை தக்க வைக்கும். இதனை தினமும் ஒரு கப் வீதம் 4 நாட்கள் அருந்தினால், வாய்ப்புண் குணமாகும்.

பூண்டு  மணத்தக்காளி குழம்பு
தேவையானவை: உரித்த பூண்டு - அரை கப், மணத்தக்காளி வற்றல் - 6 டீஸ்பூன், வெல்லம், புளி - சிறிதளவு, உதிர்த்த வெங்காய வடகம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்து அரைக்க: மிளகு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, சீரகம், தனியா - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நீர் விட்டு நைஸாக அரைக்கவும். புளியைக் கரைத்து... உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூண்டை வதக்கி இதனுடன் சேர்க்கவும். பூண்டு பாதி வெந்ததும் மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் ஆகியவற்றை வறுத்துப் போடவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பை இளம் தாய்மார்கள் (பிரசவித்த பெண்கள்) சாப்பிட... தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். மேலும், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால்... கட்டுப்பாட்டுக் குள் வரும்.

தேங்காய்ப் பால் ஆப்பம்
தேவையானவை: புழுங்கலரிசி - ஒன்றரை கப், பச்சரிசி - அரை கப், ஜவ்வரிசி, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், வெள்ளை உளுந்து - 4 டீஸ்பூன், துருவிய வெல்லம் - 2 கப், மீடியமான தேங்காய் - ஒன்று, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் நைஸாக, கெட்டியாக அரைத்து, 6 மணி நேரம் புளிக்கவிடவும். தேங்காயைத் துருவி நைஸாக அரைத்து, மூன்று முறை பால் எடுத்து, மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கவும். வெல்லத்தை அரைத்த மாவில் சேர்த்து தோசை மாவு பதத்துக்குத் தயார் செய்யவும்.
தவாவை அடுப்பில் வைத்து ஒன்றரை கரண்டி மாவை தோசை போல ஊற்றி, ஓரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒரு மூடியால் மூடி வைக்கவும். 2 நிமிடத்தில் வெந்துவிடும். திருப்பிப் போடக் கூடாது. வெந்த ஆப்பத்தை எடுத்து அதன் மேலே இரண்டு கரண்டி தேங்காய்ப் பாலை விட்டுச் சாப்பிடக் கொடுக்கவும்.
குறிப்பு: தேங்காய்பால் வயிற்றுப் புண்ணை குணமாக்கும்...  வயிற்றுப் பூச்சிகளைக்கூட ஒழிக்கும்.

முட்டைகோஸ்  கேரட் பொரியல்
தேவையானவை: முட்டைகோஸ் - 250 கிராம், கேரட் - 50 கிராம், பயத்தம் பருப்பு - ஒரு கரண்டி, துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 6, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பயத்தம்பருப்பை உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து தாளித்து... நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மெல்லியதாக நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து வதக்கி... சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடத்தில் வெந்துவிடும். பிறகு, வேக வைத்த பயத்தம்பருப்பு, துருவிய கேரட், மஞ்சள்தூளை முட்டைகோஸில் சேர்த்து வதக்கி, தேங்காய் துருவலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: இந்தப் பொரியலைத் தொடர்ந்து சாப்பிட... குடற்புண் குணமாகும்.

கருணைக்கிழங்கு குருமா
தேவையானவை: கருணைக்கிழங்கு - 200 கிராம், கேரட் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 3 பல், சாம் பார் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: துருவிய தேங்காய் - 6 டீஸ்பூன், சிறிய தக் காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோம்பு, கசகசா - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 4.
செய்முறை: கருணைக்கிழங்கைத் தோல் சீவி, சுத்தம் செய்து, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கேரட் டையும் அதேபோல் செய்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் நீள வாக்கில் நறுக்கவும். அரைக்கக் கொடுத் துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து மேலும் வதக்கி, அரை டம்ளர் நீர் விட்டு காய்கள் குழைந்துவிடாமல் வேக வைக்கவும். வெந்து கொண்டிருக்கும் கலவையில், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால், கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கலாம்.
குறிப்பு: மூலநோய் உள்ளவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

கருணைக்கிழங்கு அல்வா
தேவையானவை:கருணைக்கிழங்கு - கால் கிலோ, சர்க்கரை - 150 கிராம், நெய் - 50 கிராம், பால் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப் பருப்பு - 6, அல்வா பவுடர் (கடைகளில் கிடைக்கும்) - ஒரு சிட்டிகை.
செய்முறை: கருணைக்கிழங்கைத் தோல் சீவி, கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். இதனை பச்சை வாசனை போக நெய்யில் வதக்கி, பாலில் வேகவிட்டு, சர்க்கரை சேர்க்கவும், பிறகு, ஏலக்காய்த்தூள், அல்வா பவுடர் சேர்த்து... சுருள வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகளை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால், நெய்யின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

சுண்டைக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி,  பிஞ்சு சுண்டைக்காய் - தலா ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பூண்டு - 5 பல், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: துருவிய தேங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 2, நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை (சேர்த்து) - அரை கப், தக்காளி - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
வறுத்துப் பொடிக்க: பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு, ஏலக்காய், கிராம்பு எல்லாம் சேர்ந்து - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ள வும். வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக் காய்களை வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து அரை கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்து, பச்சை வாசனை போனதும், சுருள வதக்கி... வறுத் துப் பொடித்த பொடி சேர்த்து இறக்கவும். இதில் வெந்த சாதத்தை போட்டுக் குழைந்து விடாமல் கிளறி, பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் சுண்டைக்காயை இரண்டாகவும் நறுக்கி வதக்கி, வேக வைக்கலாம். வயிற்றுப்பூச்சி மற்றும் குடற்பூச்சிகளை ஒழிக்கும் குணம் சுண்டைக்காயிடம் உண்டு.

சுண்டைக்காய்  நெல்லிக்காய் வதக்கல்
தேவையானவை: பெரிய நெல்லிக் காய் - 8, பிஞ்சு சுண்டைக்காய் - அரை கப், மஞ்சள்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், வெல்லம் - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்.  
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிள காய் - 3, கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: அரை டீஸ்பூன் எண் ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நெல்லிக்காய்களை வதக்கவும் (8 நிமிடத்தில் வதங்கிவிடும்). சூடு ஆறியதும் விதைகளை நீக்கி, ஒவ் வொரு நெல்லிக்காயையும் எட்டாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். இத னுடன் உப்பு, மஞ்சள்தூள், பொடித்த வெல்லம் சேர்க்கவும். பிறகு, வறுத்துப் பொடித்து வைத்ததை சேர்த்து, நெல்லிக்காய், பெருங் காயத்தூள், சேர்த்து, நல்லெண் ணையை விட்டு கிளறி, எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி விடவும்.
குறிப்பு: இது, ஞாபகசக்தி பெருக மிகவும் பயன்படும்.

பீட்ரூட் அசோகா அல்வா
தேவையானவை: பீட்ரூட் - ஒரு கிலோ, சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள், - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, கோவா - 100 கிராம், பயத்தம்பருப்பு - 100 கிராம், கோதுமை மாவு - 5 டீஸ்பூன்.
செய்முறை:  பீட்ரூட்டைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ள வும். இதனை 50 கிராம் நெய்யில் சுருள வதக்கி, ஒரு டம்ளர் நீர் விட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும். பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, குழைவாக வேகவிடவும். கோதுமை மாவையும் வெறும் வாணலியில் வறுத்து பயத்தம்பருப்பில் சேர்த்து வேகவிடவும். பிறகு, சர்க்கரையை சேர்த்து, கோவாவை உதிர்த்துப் போடவும். இடை இடையே நெய் சேர்க்கவும். வேக வைத்த பீட்ரூட்டை இதில் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி னால்... பீட்ரூட் அசோகா அல்வா தயார்.
குறிப்பு:  ரத்தசோகை குணமாகவும், ரத்தம் விருத்தி அடையவும் பீட்ரூட் மிகவும் உதவும்.

வாழைப்பழம்  திராட்சை கஸ்டர்ட்
தேவையானவை: வாழைப்பழம் - 3, காய்ந்த திராட்சை - 4 டீஸ் பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: ஒரு கரண்டி பாலை மிதமாக சூடாக்கி, கஸ்டர்ட் பவுடரைக் கரைத்துக் கொள்ளவும். மீதி பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி, கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை சேர்த்துக் கலக்க வும். ஓரிரு நிமிடங்களில் குழம்புப் பதம் வந்ததும் இறக்கிவிடவும். இதனை ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவிடவும். வாழைப்பழத்தை நறுக்க வும். ஃப்ரிட்ஜில் இருந்து பால் கல வையை எடுத்து அதில் வாழைப்பழம். காய்ந்த திராட்சை சேர்த்துக் கலக்கவும். குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதனை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.
குறிப்பு: இது மலச்சிக்கலுக்கு கை கண்ட மருந்து. மலச்சிக்கல் உள்ள போது இதனை அருந்தினால்... உட னடி நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழம்  பேரீச்சம்பழம் பாயசம்
தேவையானவை: வாழைப்பழம் - 6, பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - அரை கப், வெல்லம் - 100 கிராம், மில்க்மெய்ட் - 4 டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு கரைத்து, வடிகட்டவும். அதனுடன் ஒரு டம்ளர் நீர் விட்டு பாகு வைக்கவும். மில்க்மெய்டை அதில் ஊற்றி, இரண்டுமாகச் சேர்ந்து வந்ததும், முதலில் நறுக்கிய பேரீச்சம் பழத்தை சேர்த்து, பிறகு வாழைப் பழத்தையும் சேர்த்து இறக்கவும் (ஒரு கொதி  வந்தாலே போதும். பழங்கள் சூட்டிலேயே வெந்து விடும்). இந்த வாழைப்பழ - பேரீச்சை பாயசத்தை விரும்பாத வர்கள் மிகவும் அரிது.
குறிப்பு: இது, மலச்சிக்கலை யும் நீக்கும்... ரத்த விருத்திக்கும் உதவும்.

சுரைக்காய் மோர்க்குழம்பு
தேவையானவை: நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், கெட்டி மோர் - 2 கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துருவிய தேங்காய் - கால் கப்.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, சீரகம் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சுரைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரைவேக்காடு பதத்துக்கு வேக வைத்து எடுக்கவும். கெட்டி மோரில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கி... உப்பு, சர்க்கரை, அரை டம்ளர் நீர் சேர்த்து அடிபிடிக்காமல் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த சுரைக்காயையும் சேர்த்து நுரை பொங்கி வந்ததும் இறக்கி... தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.
குறிப்பு: இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால்... உடல் இளைக்கும். சுரைக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சுரைக்காய் சப்ஜி
தேவையானவை: சிறிய சதுரங்களாக நறுக்கிய சுரைக்காய் - ஒரு கப், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 3 டீஸ்பூன், நறுக்கிய தக்காளி - 2 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி - பூண்டு - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெந்தயக் கீரை - கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.  
செய்முறை: கடலைப்பருப்புடன் சிறிதளவு உப்பு சேர்த்து குழைந்து விடாதவாறு வேகவிட்டு, தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து... அரை டம்ளர் நீர் விட்டு, சுரைக்காய் துண்டுகளை சேர்த்து வேகவிடவும், முக்கால் பதத்துக்கு வெந்ததும் வெந்தயக்கீரை, வேக வைத்த கடலைப்பருப்பை கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு: இது, உடலை உடல் பருமனைக் குறைப்பது மட்டுமின்றி, சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும்.

பாகற்காய் ரசம்
தேவையானவை: நீட்டு பாகற்காய் - கால் கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, புளி - கொட்டைப்பாக்கு அளவு, கொத்த மல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, வெந்தயம்  - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.  
செய்முறை: பாகற்காயை நீள வாக்கில் நறுக்கி... உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும். பாகற்காய் வெந்து, புளிக் கரைசல் ரசம் பதம் வந்ததும்... தாளிக்கக் கொடுத்துள்ள வற்றை தாளித்து சேர்த்து இறக்க வும். கொத்தமல்லித் தழை தூவ வும். பாகற்காயின் முழுப் பயனும் கிடைக்க வேண்டும் என்றால், இதனை கிண்ணத்தில் ஊற்றிக் குடிக்கலாம். இதை சாதத்துக்கு ரசமாகவும் பயன்படுத்தலாம்.
குறிப்பு: இது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து அருந்த வேண்டிய கைகண்ட மருந்து.

வேர்க்கடலை  தேங்காய்  எள் பொடி
தேவையானவை: வறுத்து, தோல் உரித்த வேர்க்கடலை - ஒரு கப், துரு விய தேங்காய் - கால் கப், வறுத்த எள் - 4 டீஸ்பூன்,  முந்திரிப் பருப்பு - 5, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் எண் ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை வறுக்கவும். தேங்காயை வறுத்து இதனுடன் சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பின்னர், வேர்க்கடலை, எள் சேர்த்து கரகரப்பாகப் பொடிக்கவும். முந்திரியை வறுத்து துண்டுகளாக்கி சேர்த்து... நன்றாக கலந்துவிடவும். இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
உதிர் உதிராக வடித்த சாதத்துடன் தேவையான பொடி சேர்த்து, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண் ணெயில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.
குறிப்பு: உடல் இளைத்தவர்கள் இந்தப் பொடியைத் தினசரி பயன் படுத்தினால், உடல் பருக்கும்.

வாழைப்பூ  முருங்கைக்கீரை துவட்டல்
தேவையானவை: சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப், சுத்தம் செய்த முருங்கைக்கீரை - அரை கப், மோர்  - ஒரு கரண்டி,  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, உளுந்து, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, துருவிய தேங்காய் - 6 டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாழைப்பூவை பொடியாக நறுக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, தக்காளி, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை நீர் விடாமல் கொர கொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், மோர், சிறிதளவு நீர் ஆகியவற்றை சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிடவும். பிறகு, முருங்கைக் கீரையையும் சேர்க்கவும். வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாமாகச் சேர்ந்து வதங்கியதும் இறக்கவும்.
குறிப்பு: இது... கர்ப்பப்பை பலம் பெறவும், கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கவும் உதவும்.

வாழைத்தண்டு கூட்டு
தேவையானவை: வாழைத்தண்டு - 2 துண்டுகள், பயத்தம்பருப்பு - 6 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கெட்டி மோர் - ஒரு கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: தேங்காய் துரு வல் - 6 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ் பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: பயத்தம்பருப்பை குழைய வேகவிடவும். வாழைத் தண்டை நார் எடுத்து, பொடியாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள், மோர் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீரும் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும், வேக வைத்த பயத்தம்பருப்பை சேர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து அதில் சேர்த்து, எல்லா மாகச் சேர்ந்து கூட்டுப் பதம் வந்த தும் இறக்கிவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு: இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால்... சிறுநீரகக் கற்கள் கரையும்.

வாழைத்தண்டு  முள்ளங்கி சாம்பார்
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, துவரம்பருப்பு - 50 கிராம், முள்ளங்கி - 2, சின்ன வெங் காயம் - 4, மஞ்சள்தூள்- சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய கொத்த மல்லித் தழை - 2 டீஸ்பூன், எண் ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.
வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், துருவிய தேங்காய் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: துவரம்பருப்பை குழைய வேகவிடவும். புளியைக் கரைத்து... உப்பு, மஞ்சள்தூள், சாம் பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாழைத்தண்டை நார் நீக்கி வில்லை களாக நறுக்கி சிறிதளவு எண்ணெயில் வதக்கி, கொதிக்கும் புளிக்கரைசலில் சேர்க்கவும். பாதி வெந்ததும், நறுக்கிய முள்ளங்கியையும், சின்ன வெங்காயத் தையும் வதக்கி சேர்க்கவும். காய்கள் வெந்ததும், வெந்த துவரம்பருப்பை சேர்த்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத் துள்ளவற்றை வறுத்துப் பொடித்துச் சேர்த்து... கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைப்பூ பஜ்ஜி
தேவையானவை: சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப் (வாழைப்பூவை நரம்பு நீக்கி, ஒரு ஒரு இதழாக முழுமையாக எடுத்துக் கொள்ளவும்). எண்ணெய் - தேவையான அளவு.
கரைத்துக் கொள்ள: கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை, இட்லி மாவு - 3 டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கரைத்துக் கொள்ளக் கொடுத்தவற்றை நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத் துக்குக் கரைத்துக் கொள்ள வும். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு வாழைப்பூவாக மாவில் முக்கி எடுத்து, பொரித் தெடுக்கவும்.  
குறிப்பு: இட்லி மாவுக் குப் பதில் 2 டீஸ்பூன் காய்ந்த உளுத்தமாவையும் சேர்க்கலாம்.

மிதி பாகற்காய் மசாலா
தேவையானவை: மிதி பாகற்காய் - கால் கிலோ, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம், புளி - கொட்டைப் பாக்கு அளவு, நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக் கொள்ள: உரித்த சின்ன வெங்காயம் - 10, உரித்த பூண்டு - 10 பல், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துருவிய தேங்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 3.
வதக்கிக் கொள்ள: பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புளியைக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, மிதி பாகற்காயையும் சேர்த்து, முக்கால் வேக்காடு பதத்தில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை வதக்கி, அரைத்த விழுது, பாகற்காய் கலவையை சேர்க்கவும். பிறகு, சிறிதளவு உப்பு போட்டு, எல்லாமாகச் சேர்ந்து கொதி வந்ததும், இறக்கி... கொத்தமல்லித் தழையை தூவவும். இது, காக்ரகாய மசாலா என்ற பெயரில் ஆந்திராவில் மிகவும் பிரசித்தி பெற்ற டிஷ் ஆகும்.
குறிப்பு: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

முடக்கத்தான் கீரை தோசை
தேவையானவை: சுத்தம் செய்து, நறுக்கிய  முடக்கத்தான் கீரை - 2 கப், புழுங்கல் அரிசி - ஒரு  கப், உளுந்து - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றுசேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும். அரைத்துக் கொண்டிருக்கும்போதே முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒன்றரை கரண்டி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். பூண்டு மிளகாய்ப் பொடி, இதற்கு தொட்டு சாப்பிட ஏற்றது .
குறிப்பு: 'முடக்கு அறுத்தான்’ என்பதுதான் முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட... கை, கால், மூட்டு வலி குணமாகும்.

கத்திரிக்காய் மசாலா பொரியல்
தேவையானவை: பிஞ்சு கத்திரிக் காய் - கால் கிலோ, பெரிய வெங் காயம் - 2, பூண்டு - 10 பல், தக்காளி - ஒன்று, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை: வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, சற்றுக் கொரகொரப்பாகப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கி... கத்திரிக்காயையும் சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, சிறிதளவு நீர் விட்டு காய் குழைந்துவிடாமல் வேகவிடவும். பிறகு, வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி இறக்கி, மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு:கோடைக்காலத்தில் அம்மை நோய் வராமல் இருக்க இளம் வயதினர் அவசியம் சாப்பிட வேண்டிய பொரியல் இது.

அல்லம் பச்சடி
தேவையானவை: நறுக்கிய இஞ்சி - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, புளி, வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு, நல் லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க: வெந்த யம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வறுத்துப் பொடிக்க கொடுத்தவற்றை வறுத்துப் பொடிக்க வும். இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை புளியுடன் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்ததையும், பொடித்ததையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி எடுத்தால்... அல்லம் பச்சடி தயார்.
குறிப்பு: இதனைச் சாப்பிட்டால்... நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு ஆகியவை குணமாகும்.

ஜிஞ்சர் புலாவ்
தேவையானவை: துருவிய இஞ்சி - 10 டீஸ்பூன், பாசுமதி அரிசி - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் (அ) நெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.  
செய்முறை: பாசுமதி அரிசியை ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவிடவும். வாணலியில் நெய் (அ) எண்ணெய் விட்டு, துருவிய இஞ்சியை வதக்கி, சீரகம் சேர்த்துக் கலந்து, வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்தால்... ஜிஞ்சர் புலாவ் தயார்.
குறிப்பு: பசியெடுக்கவும், சாப்பிட்ட உணவு செரிக்கவும் இஞ்சி கைகொடுக்கும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 3268339256248033099

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item