''அடுத்த வருடம்
கல்லூரிப் படிப்பை முடிக்கவிருக்கும் நான், ஐ.ஏ.எஸ். தேர்வெழுத
விரும்புகிறேன். சிவில் சர்வீஸ் தேர்வு நிலைகள் மற்றும்
விண்ணப்பித்தலுக்கான அடிப்படைத் தகுதி குறித்து அறிந்துகொள்ள
விரும்புகிறேன். மேலும் அதிக செலவின்றி இந்த தேர்வுகளுக்கு தயாராக
வழியுண்டா? கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்பே இந்த தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்க இயலுமா என்றும் விளக்கம் ப்ளீஸ்..!''
எம்.செந்தில்குமார், சென்டர் டைரக்டர்,‘T.I.M.E’ ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டர், அண்ணாநகர், சென்னை:
''ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட மத்திய குடிமைப்
பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்) தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையமான யு.பி.எஸ்.சி (UPSC) நடத்துகிறது. முதல்நிலை,

முதன்மை,
நேர்முகம் (Preliminary, Main, Interview) என மூன்று நிலைகளில் இதற்கான
தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த மூன்றில் எந்த நிலையில் வெற்றி வாய்ப்பை
இழந்தாலும், தேர்வுகளை முதலில் இருந்துதான் தொடங்கியாக வேண்டும்.
ஜெனரல் ஸ்டடீஸ் (General Studies), ஜெனரல் அப்டிட்யூட்
டெஸ்ட் (General Aptitude Test) என முதல்நிலைத் தேர்வில் மொத்தம் இரண்டு
தாள்கள். முதல் தாளில் தலா 2 மதிப்பெண்கள் என மொத்தம் 100 வினாக்கள்
இருக்கும். இரண்டாவது தாளில் தலா 2.5 மதிப்பெண்கள் என மொத்தம் 80 வினாக்கள்
உண்டு. அதாவது, முதல்நிலைத் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 400. இதில் தவறான
விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. மூன்று தவறான விடைகளுக்கு ஒரு
நெகட்டிவ் மதிப்பெண் என்ற அளவில் அமைந்திருக்கும்.

சிவில்
சர்வீஸ் நடப்பு காலிப்பணிஇடங்களை ஒட்டி முதல்நிலைத் தேர்வில்இருந்து
அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
தேர்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை பொதுவாக
காலிப்பணியிடத்தைப் போல சுமார் 13 மடங்காக இருக்கும். முதன்மைத் தேர்வில்
மொத்தம் 9 தாள்கள். முதலிரண்டு தாள்களான ஆங்கிலம் மற்றும் பிராந்திய
மொழிக்கான தாள்கள் தகுதி மதிப்பெண்ணுக்குரியது. தலா 250 மதிப்பெண்கள் உடைய
இந்த இரண்டு தாள்களில் பெறும் மதிப்பெண்கள், கட் ஆஃப் மதிப்பெண் என்கிற
வகையில் சேராது. ஏனைய 7 தாள்களில் முதலில் வருவது Essay Writing; அடுத்ததாக
General Studies என்பதில் 4 தாள்களும், Optional Subjects என்பதில் 2
தாள்களுமாய் இருக்கும். தாள் ஒவ்வொன்றும் தலா 250 மதிப்பெண்களுக்கானது. ஆக,
இந்த 7 தாள்களுக்கான மொத்த மதிப்பெண்கள் 1750.
காலிப் பணியிடத்தில் 2.3 மடங்காக... தேர்வாளர்கள்
முதன்மைத் தேர்விலிருந்து நேர்முகத் தேர்வை எட்டுவார்கள். இதுவரை பாட
ரீதியாக சோதிக்கப்பட்ட தேர்வாளர்களின் சிந்தனை, முடிவெடுக்கும் ஆற்றல்,
அவர்கள் இந்திய குடிமைப்பணிக்கு பொருந்திப்போகும் திறன் உள்ளிட்டவை, பல
வல்லுநர்களால் நேரிடையாகவே மதிப்பிடப்படும். நேர்முகத் தேர்வுக்கான
மதிப்பெண்கள் 275. இத்துடன் முதன்மைத் தேர்வின் 1750 மதிப்பெண்களையும்
சேர்க்கக் கிடைக்கும் 2025 என்ற மொத்த மதிப்பெண்ணிலிருந்து கட் ஆஃப்
மதிப்பெண் கணக்கிடப்படும். இதன் அடிப்படையில் முதல் ஆயிரம் பேர்களில்
இருந்து, குடிமைப் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும். பாடங்கள்
உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மத்திய தேர்வாணையத்தின் தளத்தை -
www.upsc.gov.in நாடலாம்.

தேர்வாளர்களுக்கான
அடிப்படை தகுதியாக குறைந்தது 21 வயது அடைந்திருக்க வேண்டும்; அதிகபட்சமாக
30 வயது முடிந்திருக்கக் கூடாது. சமூகப்பிரிவை ஒட்டி அதிகபட்சமாக எத்தனை
முறை இந்த தேர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் ஒரு வரையறை
இருக்கிறது. OC பிரிவினர் 30 வயதுக்குள் 4 முறை தேர்வெழுதலாம். OBC
பிரிவினருக்கு வயதில் கூடுதலாக 3 ஆண்டுகள் அல்லது தேர்வு எழுதும்
எண்ணிக்கையில் 7 என சலுகை நீட்டிப்பு உண்டு. SC/ST பிரிவினருக்கு தேர்வு
எழுதுவதற்கான எண்ணிக்கையில் வரம்பில்லை. ஆனால், வயது வரம்பு 35. தேர்வு
எழுதும் எண்ணிக்கை, அதிகபட்ச வயது இரண்டில் முதலாவதாக எட்டுவதை கணக்கில்
சேர்த்துக் கொள்வார்கள்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது தகுதியோடு,
பட்டப்படிப்பு இறுதியாண்டு படிப்பவர்கள்கூட விண்ணப்பிக்கலாம். அதேசமயம்,
முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பட்டப்படிப்பு தேறியதற்கான
சான்று இணைத்தாக வேண்டும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளமான இலவச பயிற்சி
மையங்கள் செயல்படுகின்றன. மனித நேய மன்றம் டிரஸ்ட் நடத்தும் பயிற்சி
மையத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு
உண்டு. தமிழக அரசின் சார்பிலும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. அடையாறில்
அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனம் இதற்காக நுழைவுத்தேர்வின்
அடிப்படையில் தகுதி உள்ளவர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குகிறது. முகவரி:
163/1, பி.எஸ் குமாரசாமிராஜா சாலை, ஆர்.ஏ.புரம் (க்ரீன்வேஸ் சாலை),
சென்னை-28. தொ.பே: 044 - 24621475, 24621909. இணையதளம்:
www.civilservicecoaching.com
மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் பல்கலைக்கழக
மானியக்குழுவான யு.ஜி.சி-யின் நிதி உதவியின் கீழ் பாரதியார், பாரதிதாசன்
உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இலவசப் பயிற்சியை வழங்குகின்றன. சில
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் உதவியுடன் இந்த பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன. அந்தந்த மதம் மற்றும் சமூகப்பிரிவு சார்ந்தும் பல்வேறு
சேவை அமைப்புகள் ஆங்காங்கே இலவச பயிற்சிகளை வழங்குகின்றன. ஆன்லைனில்
ஏராளமான இலவச பயிற்சிகள் கிடைக்கின்றன. உதாரணத்துக்கு...
http://mrunal.org/
ஐ.ஏ.எஸ். கனவில் கல்லூரி மாணவப்பருவத்தில் இருக்கும்
உங்களைப் போன்றவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அடிப்படையிலான பள்ளிப்
புத்தகங்களில் பயிற்சி, தி ஹிந்து போன்ற ஆங்கில தினசரிகளை சுலபமாகவும்
விரைவாகவும் வாசித்துக் குறிப்பெடுக்கும் பயிற்சி, பொது அறிவு தலைப்பிலான
புத்தகங்களில் தேர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். இந்தப்
பயிற்சிகள், பிற்பாடு நீங்கள் முழுநேரமாக குடிமைப்பணி தேர்வுக்குத்
தயாராகும்போது மிகவும் கைகொடுக்கும்.''
Post a Comment