வாகன விபத்தில் பலி, புயலால் கட்டடம் இடிந்து விழுந்தது, டெங்கு காய்ச்சல் பீதி... இப்படி பல செய்திகளைப் படித்துவிட்டு, அடடா என வருத்தம் கொள்கிறோம். இந்த இடர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், இந்த இடர்களால் ஏற்படும் பொருளாதார பாதிப்பிலிருந்து நம்மை, நம் குடும்பத்தைப் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு வகையான இடர்களிலிருந்தும் நம்மை காக்க ஒவ்வொரு தனிநபரும் அதற்கேற்ற பிரத்யேக இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வது அவசியம். என்னென்ன பாலிசிகளை எடுத்துக்கொள்வது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி..!
விபத்துகளால் ஏற்படும் இறப்பு, நிரந்தர ஊனம் (கை, கால், கண் பார்வை இழப்பு) தற்காலிக ஊனம் (கை, கால், எலும்பு முறிவு), ஊனம் ஏற்படும் நாட்களில் நமக்கு வரும் வருமானம் / சம்பள இழப்பு ஆகியவற்றுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் கிடைக்கும். விபத்து என்றால் வாகன விபத்து மட்டுமல்ல, நடந்து செல்லும்போது ஏற்படும் விபத்து, மாடிப்படி, குளியல் அறை போன்றவற்றில் வழுக்கி விழுதல், தீக்காயம், நாய் கடித்தல், பாம்பு கடித்தல், ரயில், சாலை மற்றும் விமான விபத்து போன்ற அனைத்துக்கும் கவரேஜ் உண்டு.
ஆண், பெண் என இரு பாலரும் எந்த வயதினரும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்தவிதமான மருத்துவப் பரிசோதனையும் கிடையாது. கவரேஜ் தொகை ஒவ்வொரு நபரின் மாதச் சம்பளத்திற்கேற்ப மாறுபடும். அதிகபட்சமாக மாதச் சம்பளத்தில் 72 மடங்கு வரை இந்த இன்ஷூரன்ஸ் கவர் எடுத்துக்கொள்ளலாம். கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் நாம் திரும்ப பெற முடியும். அனைவரும் வேலைக்குச் சேர்ந்தவுடன் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பாலிசி இது.
மருத்துவக் காப்பீடு பாலிசி..!
24 மணி நேரம் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்த பாலிசி எடுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இப்பாலிசியை
5 மாத குழந்தை முதல் 70 வயது நபர்கள் வரை எடுக்கலாம். இதில் இரு வகை உண்டு. ஒன்று, தனிநபர் பாலிசி; இரண்டாவது, ஃபேமிலி ஃப்ளோட்டர்.
தனிநபர் பாலிசியில் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களுக்குத் தனித்தனியே கவரேஜ் இருக்கும்.
ஒவ்வொருவரும் அவர்களுக்கு இருக்கும் கவரேஜ் வரை மருத்துவச் செலவு செய்து கொள்ளலாம்.
ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியில் மொத்த கவரேஜ் தொகையை குடும்பத்திலுள்ள யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பாலிசியில் காப்பீடுத் தொகை குறைந்தபட்சமாக
ரூ. 1 லட்சமும், அதிகபட்சமாக ரூ.10லட்சம் வரையும் எடுக்கலாம். இளம்வயதில் மருத்துவச் செலவுகள் அதிகம் இருக்காது என்பதால் குறைந்தளவு கவரேஜ் தொகைக்கு எடுத்துக் கொண்டு, பின்னர் குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் என உறுப்பினர்கள் சேரும்போது எடுக்கலாம். ஒவ்வொரு வருடமும் தவறாமல் கெடுதேதிக்கு முன்பாக பாலிசியைப் புதுப்பிப்பது அவசியம் இல்லையெனில் பாலிசியைத் தொடர்வது தடைபடும்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்..!
குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரின் எதிர்பாராத இறப்பால், அவரை சார்ந்துள்ள குடும்பம் எந்தவித பொருளாதாரப் பாதிப்பையும் அடையாமல் இருக்க எடுக்கப்படுவதுதான் இந்த இன்ஷூரன்ஸ். டேர்ம் இன்ஷூரன்ஸில் பிரீமியம் குறைவு. ஆனால், கிடைக்கும் கவரேஜ் தொகையோ மிக அதிகம்.
டேர்ம் இன்ஷூரன்ஸில் முதிர்வுத் தொகை எதுவும் கிடையாது என்பதால் கவரேஜ் தொகையை முக்கியமாக கவனித்தால் போதும். அந்த வகையில் ஆன்லைன் டேர்ம் பாலிசி எடுப்பது நல்லது. இதில், பிரீமியம் சாதாரணமாக ஏஜென்ட் மூலம் எடுக்கும் பாலிசியைவிட 40% முதல் 60% குறைவாகவே இருக்கும். இதனால் நமக்கு குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும்.
லோன் கவர் டேர்ம் இன்ஷூரன்ஸ்..!
வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டிவரும் வேளையில், கடன் வாங்கிய நபர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினரால் கடனை கட்ட இயலாது. அவ்வாறு கட்ட இயலவில்லை எனில் வங்கி, வீட்டை எடுத்துக்கொள்ளும். இதை தவிர்ப்பதற்கு கடன் வாங்கும்போது, அந்த கடன் தொகைக்கு இணையாக ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது இதன் மூலம் கிடைக்கும் பணப் பலனை கடன் தொகையை கட்டுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் வீடு குடும்பத்தினருக்குச் சொந்தமாகிவிடும். இதைப்போல, கார் கடன் வாங்கும்போதும் இந்த கடன் கவரேஜ் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம்.
தீவிர நோய் பாதிப்பு பாலிசி..!
மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற தீவிர நோய் பாதிப்பு (சிக்ஷீவீtவீநீணீறீமிறீறீஸீமீss) ஒருவருக்கு வந்து, அவர் உயிரோடு இருக்கும்பட்சத்தில் அவரது வருமானம் ஈட்டக்கூடிய திறன் குறையும்; மருத்துவ செலவும் அதிகரிக்கும். இதிலிருந்து நம்மை காக்கவே இந்த கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி.
இதில் மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரக செயல் இழப்பு, இருதய மாற்று சிகிச்சை, பக்கவாதம் போன்ற அதிக செலவு வைக்கும் நோய்களுக்கான பாதிப்புகளுக்கு கவரேஜ் செய்துகொள்ளலாம். பொதுவாக, இளம் வயதில் இதுபோன்ற தீவிர நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் ஒரு நபர் தனது நாற்பது வயது பூர்த்தி அடைந்தவுடன் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். அவருடைய குடும்பத்தில் யாருக்காவது இம்மாதிரியான நோய் பாதிப்பு வந்திருந்தால் தனக்கும் அந்த மாதிரி வர வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப இளவயதிலேயே இந்த பாலிசியை எடுத்துக்கொள்வது நலம்.
ஒருவருக்கு ஏதேனும் தீவிர நோய் பாதிப்பு இருக்கிறது என பரிசோதனை செய்தபிறகு, குறைந்தது முப்பது நாட்கள் உயிரோடு இருந்தால் மட்டுமே அவருக்கு சிகிச்சைக்கான இழப்பீடு தொகை கிடைக்கும். இந்த காப்பீடு தொகை மூலம் அவருடைய மருத்துவ செலவுகள், குடும்பத்திற்கான வருமானம் எல்லாம் செய்து கொள்ளலாம்.
இந்த கிரிட்டிக்கல் இல்னஸ் கவரேஜ் பாலிசியை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது துணை (ரைடர்) பாலிசியாக எடுக்கும் வசதி இருக்கிறது. அதற்கு பிரீமியம் குறைவாக இருக்கும். ஆனால், கவரேஜ் மற்றும் சலுகைகள் குறைவாக இருக்கும். இதற்கு பதில், தனி பாலிசியாக எடுப்பது நல்லது.
வீட்டு உரிமையாளர் பாலிசி..!
வீடு, அலுவலகம் கடை போன்ற சொத்துக் களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்கவே இந்த பாலிசி. தீ, இடி, மின்னல், பூகம்பம், புயல், வெள்ளம், தீவிரவாதத் தாக்குதல் கலவரம் போன்ற இடர்களிலிருந்து காப்பதற்கு பாலிசி எடுக்கலாம். இதற்கான பிரீமியம் குறைவே!
இந்த பாலிசிகளை எல்லாம் எடுத்த ஒருவர் எந்த கஷ்டத்துக்கும் அஞ்சி நிற்க வேண்டிய அவசியமே இல்லை.
1 comment
நல்ல பகிர்வு...
Post a Comment