குறட்டையை நிறுத்தும் சிம்பிள் சிகிச்சை! -- ஹெல்த் ஸ்பெஷல்,
இந்த வேலை சீராக நடந்துகொண்டு இருந்தால்தான் நாம் ‘இருக்கிறோம்’ என்று அர்த்தம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான காற்று, நம் உடலுக்குள் ஊடுருவி உலாவு...
ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸோடு நாம் அம்மாவின் வயிற்றிலிருந்து பிறக்கிறோம். அவற்றில் முதன்முதலாக இயங்கத் தொடங்குபவை சுவாச உறுப்புகள்தான். அதுவரையில் தாயிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை தொப்புள் கொடி மூலமாகப் பெற்று வந்த குழந்தை, தானே சுயமாக மூக்கு வழியே சுவாசித்து, நுரையீரலால் ரத்தத்தை சுத்திகரிக்கத் தொடங்கும்போதுதான் அது தனி மனிதனாகிறது.
உள்ளே நுழைவது ஒரே காற்றுதான். அதில் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு, அவசியமானது, வெளியேற்றப்பட வேண்டியது எனப் பிரித்துப் போட்டு வேலை பார்க்கிறது நம் நுரையீரல். மூக்கில் காற்று நுழைந்தவுடன் அங்குள்ள ரத்தத் தந்துகிகள் காற்றிலுள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி, கார்பன் டை ஆக்ஸைடு போன்ற மாசுகளை வெளியேற்றுகின்றன. காற்று உள்ளே நுழைகிற பாதை, மற்றும் மாசுகள் வெளியேறுகிற பாதை என அந்த இருவழிப்பாதை சீராக இருக்க வேண்டியது அவசியம். அது பாதிப்புக்கு உள்ளாகிறபோதே மூக்கடைப்பு ஏற்படுகிறது. சுவாசப் பாதையில் ஏற்படும் இந்தத் தொற்று, நாள்பட்ட பாதிப்பாகி நுரையீரலை அடையும்போது ஆஸ்துமாவாக மாறுகிறது.
சுவாசக் கோளாறுகள் பெரியவர்களைவிடக் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுவது சகஜம். வெளிக்காற்றில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்க்கும் திறன் குழந்தைகளிடம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்மாமன் மோதிரத்தால் தேனைத் தொட்டு நாக்கில் தடவும் பழக்கம் இருந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீருக்குள் தள்ளி விட்டால்தான் நீச்சல் வரும் என்பது போல, பாக்டீரியாக்களை அறிமுகம் செய்தே நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் முறை இது. வெளிச்சூழலில் இருக்கும் பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் தேனுடன் சேர்ந்து பல்கிப் பெருகி குழந்தையின் ரத்தத்தில் கலக்கும்போது, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டிவிடப் படுகிறது.
அந்நியர்களை எதிர்க்கும் படைவீரர்கள் போல இந்த சக்தி அணிவகுத்து நிற்கிறது. இப்படி அடிக்கடி வெளிக்கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், அவற்றுக்கு உடல் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளே குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வீரியம் மிகுந்ததாக ஆக்குகிறது. இப்படி அடிக்கடி என்ட்ரி கொடுக்கும் கிருமிகளை ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ என்றே சொல்லலாம். அவைதானே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் காரணம்! இன்றோ, பிறந்தவுடனேயே ஆன்டிபயாடிக் மருந்துகளைச் செலுத்துவதால் இந்த ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ அழிக்கப்பட்டு விடுகின்றன. விளைவு... சளி, இருமல், ஜுரம் என்று அடிக்கடி அவதிப்படுவதுதான்.
இதைத் தடுக்க குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை பலமாக்க வேண்டியது அவசியம். எதிர்ப்பு சக்தி இல்லாத மனிதர்கள் எறும்புக்கடிக்குக் கூட பயந்துதான் ஆக வேண்டும். நம் முன்னோர்கள் இயற்கையோடு கை குலுக்கி வாழ்ந்த வாழ்க்கைக்குக் காரணம் அவர்களின் மிதமிஞ்சிய எதிர்ப்பு சக்திதான். நம் உடலில் எதிர்ப்பு சக்திக்காகவே இயங்கும் ‘நல்ல’ உறுப்பு ஒன்று உண்டு. தைமஸ் சுரப்பி என்பார்கள் அதை. நோய்க்கிருமிகள் என்னும் தீவிரவாதிகளுக்கு எதிராக வெள்ளையணுக்களை அனுப்பி போர் செய்யும் கேப்டன் இந்த தைமஸ்தான்.
24 மணிநேரமும் இடை விடாமல் வெளிக்காற்றை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும் நுரையீரலுக்குத்தானே கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம். அதை உணர்ந்துதானோ என்னவோ இயற்கையே இந்த தைமஸ் கேப்டனை நுரையீரலுக்கு அருகே அமைத்துள்ளது. இந்த தைமஸ் சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறது அக்கு மருத்துவம். பிற்காலத்தில் ஆஸ்துமா தாக்காத வண்ணம் இன்றைக்கே நம் குழந்தைகளிடம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும் முறை இது.
குழந்தைகளின் உள்ளங்கை, உள்ளங்கால்களில் நடு விரல் மற்றும் மோதிர விரல்களுக்குக் கீழே உள்ள அக்கு புள்ளிகள், தைமஸ் சுரப்பியைத் தூண்டக் கூடியவை. இந்தப் புள்ளிகளில் தினமும் லேசான அழுத்தம் கொடுத்துவந்தால், பின்னாளில் ஆஸ்துமா தொல்லை ஏற் படாமல் நம் குழந்தைகளை முழுவதுமாகக் காக்கலாம். ஏற்கனவே ஆஸ்துமாவால் அவதிப்படுகிற பெரியவர்களுக்கு உள்ளங்கையிலுள்ள நுரையீரல் புள்ளிகளை விட்டுவிட்டு அழுத்தி வந்தால், கொஞ்ச நாளில் காணாமல் போகும் பிரச்னை.
சுவாசம் தொடர்பான மற்றொரு பரவலான பிரச்னை, குறட்டை. கணவர் குறட்டை விடுகிறார் என்பதற்காக மனைவி விவாகரத்து வாங்குவதெல்லாம் வெளிநாடுகளில் நடக்கிறது. நுரையீரலின் இயக்க சக்தி குறைவதே குறட்டைக்கான முக்கியக் காரணம். அக்குபிரஷரில் நிமிடங்களில் குறட்டையை நிறுத்தி விடலாம். குறட்டை விடுபவர் தூங்கும்போது அவருடைய மூக்கின் கீழுள்ள அக்குப் புள்ளியை லேசாக அழுத்தினால் போதும்... சட்டென நிற்கும் குறட்டை. தொடர்ச்சியாக இப்படிச் செய்து வந்தால் நிரந்தரமாகவே குறட்டையை விரட்டி விடலாம்!
Post a Comment