நவரத்தினக் கற்களாய் மின்னும் மாதுளை முத்துகளைப் பார்த்ததுமே நாவில் நீர் ஊறும். வாயில் போட்டால் சுவை சுண்டி இழுக்கும். மாதுளையின் பழம், பூ, பட்டை அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.
மாதுளம் பழத்தில் இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையானத் தாது உப்புகளும், உயிர்ச் சத்துக்களும் அடங்கி உள்ளன. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை வேகமாகவும் அதிக அளவிலும் அழித்துவிடும். நோய்களை அண்டவிடாமல், ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதில் மாதுளைக்கு நிகர் எதுவும் இல்லை.
இனிப்பு மாதுளம்பழம் சாப்பிட்டால், இதயத்துக்கும் மூளைக்கும் அதிக சக்தியை கொடுக்கும். பித்தத்தைப் போக்கி, இருமலை நிறுத்தும். புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பு, குடற்புண்கள், ரத்தபேதி போன்றவற்றுக்குச் சிறந்த மருந்து. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றும். விதைகளைச் சாப்பிட்டால், நீர்த்துப்போன சுக்கிலம் கெட்டிப்படும். மாதுளை விதை மேகப் பாதிப்பில் இருந்து நிவர்த்தியாக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல், குடலுக்கு வலிமையைத் தரும். ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ஆண்மைக்குறைவை நீக்கும். மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால், விக்கல் உடனே நிற்கும். அதிக தாகம், அடிக்கடி மயக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் மாதுளம் பழம் ஒரு மாமருந்து.

மாதுளம் பழச்சாறில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடல் உஷ்ண நோய்கள் நீங்கி, சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

ஒரு பாத்திரத்தில் மாதுளம் பழச்சாறை விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டுவந்தால், நினைவாற்றல் பெருகும். பற்களும் எலும்புகளும் உறுதிப்படும்.

காலை ஆகாரத்துக்குப் பின் பழச்சாறில் தேன் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து குடித்துவந்தால், உடல் ஆரோக்கியமும் தெம்பும் கூடும். புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

மாதுளம் பழச்சாறை 15 மில்லி அளவு எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மூலம் நீங்கும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து, வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு இரண்டையும் சம அளவு சேர்த்து, ஒரு வேளைக்கு 30 மில்லி வீதம் தினமும் மூன்று வேளை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், மூக்கில் ரத்தம் வழிவது நிற்கும். பெண்களுக்கு அதிக உதிரப்போக்கைப் போக்க, இதே மருந்தை மூன்று தினங்களுக்கு கொடுத்துவந்தால் கட்டுப்படும்.

மாதுளம் பூக்கள், அருகம்புல், மிளகு, சீரகம், அதிமதுரம் எல்லாவற்றையும் சம அளவு சேர்த்து கஷாயம் தயாரித்து, ஒரு வேளைக்கு 30 மில்லி அளவு எடுத்து, சிறிது பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டிப் பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்துப் பாதியாகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். காலை வேளையில் 30 மில்லி அளவு சாப்பிட்டுவந்தால், வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.

மாதுளம் பூச்சாறு 300 கிராம், 200 கிராம் பசு நெய் சேர்த்து சாறு சுண்டும் அளவுக்குக் காய்ச்சி நெய்யை வடித்து தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். தொடர்ந்து இருபது தினங்கள் இந்த நெய்யை இரு வேளையும் சாப்பிட்டுவந்தால், எல்லாவிதமான மூலநோயும் நீங்கும்.

மாதுளம்பழச்சாறுடன் இஞ்சிச் சாற்றை சம அளவு எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் நீங்கும்.

கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் சேர்த்து கலந்து உருட்டுப்பாகுப் பதத்தில் காய்ச்ச வேண்டும். இதில் நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், படை, தேமல் போன்ற தோல் தொடர்பான நோய்கள் விலகும்.
மாதுளம் பழத்தை விதையுடன் சாப்பிடும்போதுதான் முழுப் பலன் கிடைக்கும்.
Post a Comment